வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வியாழன், 20 ஏப்ரல், 2017

வரிப்புலியே, தமிழ் காக்க எழுந்திரு!

(பாவேந்தர் நினைவுநாள் பதிவு)
ஒண்டமிழ்த்தாய் சிலம்படியின்
முன்னேற்றம் ஒவ்வொன்றும்
உன்முன் னேறற்றம்!
தமிழ் மொழிக்கு ஒரு வளர்ச்சி என்றால் அது உன் வளர்ச்சி!
கண்டறிவாய்! எழுந்திரு நீ!
இளந்தமிழா, கண்விழிப்பாய்!
இறந்தொழிந்த
பண்டை நலம் புதுப்புலமை
பழம்பெருமை அனைத்தையும்நீ
படைப்பாய்! இந்நாள்
இளந்தமிழனே! எழுந்திரு! விழித்துக்கொள்! நம் பழம்பெருமையை மீட்டுருவாக்கு!
தொண்டுசெய்வாய்! தமிழுக்குத்
துறைதோறும் துறைதோறும்
துடித்தெழுந்தே!
தமிழ்மொழியின் பல்வேறு துறைகள் வளர தொண்டு செய்!
உயர்தமிழ்த்தாய் இந்நிலத்தில்
அடைகின்ற வெற்றியெலாம்
உன்றன் வெற்றி!
தமிழ்த்தாய் பெறும் வெற்றியெல்லாம் உனது வெற்றி!

அயராதே! எழுந்திருநீ!
இளந்தமிழா, அறஞ்செய்வாய்!
நாமடைந்த
துயரத்தைப் பழிதன்னை
வாழ்வினிலோர் தாழ்மையினைத்
துடைப்பாய் இந்நாள்
இளந்தமிழா! துடித்தெழு! அறம்செய்! நம் துயரையும், பழியையும், அடிமை நிலையையும் உணர்ந்து அதைத் துடைத்தெறி!
செயல்செய்வாய் தமிழுக்குத்
துறைதோறும் துறைதோறும்
சீறி வந்தே.
தமிழின் எல்லாத் துறைகளையும் வளமாக்கு!
வாழியநீ! தமிழ்த்தாய்க்கு
வரும்பெருமை உன் பெருமை!
வயிற்றுக்கு ஊற்றக்
கூழின்றி வாடுகின்றார்;
எழுந்திருநீ! இளந்தமிழா
குறைதவிர்க்க
நீ வாழ்வாயாக! தமிழ்த்தாய்க்கு வரும் பெருமை உன் பெருமை!
பசியில் வாடுவோர் பலர் அந்த நிலையை நீ தான் மாற்றவேண்டும்!
ஆழநிகர் படைசேர்ப்பாய்!
பொருள்சேர்ப்பாய்! இன்பத்தை
ஆக்குவிப்பாய்!
வலிமையான பெரும்படை சேர்! பொருள் சேர்! இன்பத்தை உருவாக்கு!
ஊழியஞ்செய் தமிழுக்குத்
துறைதோறும் துறைதோறும்
உணர்ச்சி கொண்டே
தொண்டுசெய்! தமிழ் உணர்வுகொண்டே எல்லாத்துறைகளையும் வளப்படுத்து!
உணர்ந்திடுக தமிழ்தாய்க்கு
வருந்தீமை உனக்குவரும்
தீமை அன்றோ!
தமிழ்த்தாய்க்கு ஒரு தீமை என்றால் அது உனக்கும் தானே!
பிணிநீக்க எழுந்திருநீ
இளந்தமிழா, வரிப்புலியே,
பிற்றை நாளுக்
கணிசெய்யும் இலக்கியம் செய்!
அறத்தைச் செய்! விடுதலைகொள்
அழகு நாட்டில்!
பணிசெய்வாய்! தமிழுக்குத்
துறைதோறும் துறைதோறும்
பழநாட்டானே,
நோய் நீக்க எழுந்திரு! இளந்தமிழா! வரிப்புலியே!
எதிர்காலம் பேசும் அழகிய இலக்கியத்தை எழுது! அறம் செய்!
சுதந்திரமாக வாழ்! அழகிய நாட்டில் பணி செய்! தமிழின் எல்லாத்துறைகளிலும்! பழம்பெருமைகொண்ட நாட்டானே அறியாமை நோய்நீக்க எழுந்திரு! இளந்தமிழா! வரிப்புலியே! எழுந்திரு!
எதுசெய்ய நாட்டுக்கே
எனத்துடித்த சிங்கமே!
இன்றே, இன்னே,
புதுநாளை உண்டாக்குத்
தமிழ்காப்பாய் புத்துணர்வைக்
கொணர்வாய் இங்கே
அதிர்ந்தெழுக! தமிழுக்குத்
துறைதோறும் துறைதோறும்
அழகு காப்பாய்
தமிழ்நாட்டுக்கு என்ன செய்யவேண்டும் என்று துடித்த சிங்கமே!
இன்றே! புதுநாளை உண்டாக்கு! தமிழைக் காப்பாய்! புத்துணர்வு கொள்வாய்! அதிர்ந்து எழு! எல்லாத்துறைகளிலும் தமிழால் அழகாக்கு!
இதுதான் நீ செயத்தக்க
எப்பணிக்கும் முதற்பணியாம்
எழுக நன்றே.
இதுதான் நீ செய்யவேண்டிய முதன்மையான பணி எழு நன்றாக!  

4 கருத்துகள்:

 1. பாரதிதாசன் வரிகள்
  நம்மவர் சிந்தனைக்கு
  அருமையானவை

  பதிலளிநீக்கு
 2. தமிழில் கவிதை எழுதிய கவிஞர்கள் ஆயிரமாயிரம்

  தமிழனுக்காய் குரல் கொடுத்த முதல் கவிஞன் பாரதி தாசன்

  அந்த புரட்சி கவிஞன் புகழ் பரப்பும்

  அய்யா இரா .குணசீலன் அவர்கள் வாழ்க பல்லாண்டு

  பதிலளிநீக்கு