வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திங்கள், 28 ஜூன், 2021

நோம் என் நெஞ்சே - UPSC EXAM TAMIL - குறுந்தொகை - 04

குறுந்தொகை - 4 Kurunthogai

பிரிவு என்பது வாழ்வில் தவிர்க்க இயலாத ஒன்று. 

சில பிரிவுகள் சிலர் நம் மீது கொண்ட அன்பையும், 

சில பிரிவுகள் அவர்கள் மீது நாம் கொண்ட அன்பையும் 

வெளிப்படுத்தும்.

நெய்தல் திணை என்பது இரங்கலும் இரங்கல் நிமித்தமும் ஆகும்.

தலைவனி்ன் பிரிவை எண்ணி ஆற்றாமல் புலம்பும் தலைவியின் 

மனநிலையை இப்பாடல் புலப்படுத்துகிறது.


பிரிவாற்றாமல் வருந்துகின்றாள் என்று கவலையுற்ற

தோழிக்கு,'தலைவன் முன்பு எனக்குக் காட்டிய அன்பை நினைத்து 

ஆற்றினேன் எனத் தலைவி கூறியது.

தலைவன் பிரிவிற்கு ஆற்றாமல் தலைவி வருந்துவாள் எனத் தோழி 

எண்ணி வருந்தினாள். அதனை அறிந்த தலைவி, தோழியிடம் தான் 

வருந்துவது தலைவனின் செயலுக்காக இல்லை. தோழி கூறிய 

சொல்லுக்காகவே என்றாள்.

4. நெய்தல்

நோம்என் நெஞ்சே நோம்என் நெஞ்சே

இமைதீய்ப் பன்ன கண்ணீர் தாங்கி

அமைதற் கமைந்தநங் காதலர்

அமைவிலர் ஆகுதல் நோம்என் நெஞ்சே.


துறை - பிரிவிடை ஆற்றாள் எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது. 

பாடியவர்- காமஞ்சேர் குளத்தார்.  

 குறுந்தொகை - 04


பிரிவு ஆற்றாமல் வரும் கண்ணீர் என்பதால் வெம்மையானதாகக் 

கூறப்பட்டது.  தலைவன் இயற்கைப் புணர்ச்சியின் போது உன்னைப் 

பிரியமாட்டேன் எனத் தலைவியிடம் கூற, 

அவள் அப்போது பிரிவு என்று ஒன்று உண்டு என நினைத்து  உள் 

வெதும்பி இமை தீய்ப்பன்ன கண்ணீர்விட்டாள். 

தலைவன் அவள் கண்ணீரைத் துடைத்து ஆற்றுவித்தான். 

அச்செயலைத் தலைவி இங்கு நினைத்துப் பார்க்கிறாள்.

தலைவன் தன் நெஞ்சத்தில் இருக்கிறான் என ஆற்றியிருந்தாள் 

தலைவி. என்றாலும் தலைவனை அமைவிலர் என அதாவது அவர் 

அன்பிலாதவர் எனத் தோழி சொன்ன கடுஞ்சொல்லை எண்ணித் 

தலைவியின் நெஞ்சம் வருந்தியது. 


என் நெஞ்சம் வருந்துகிறது, என் நெஞ்சம் வருந்துகிறது.

இமைகளைச் சுடும் சூடான என் கண்ணீரைத் துடைத்து, 

எனக்கு ஆதரவாக இருந்த நம் தலைவர் இப்பொழுது என்னுடன்  

இல்லாமல் பிரிந்திருத்தலால், என் நெஞ்சம் வருந்துகிறது.

தலைவனின் பிரிவை ஆற்றாமல் தலைவி வருந்துகிறாள்  எனவும்,

அவர் பிரிவை எண்ணி ஆற்றியிருந்தாலும் அவரைப் பற்றி நீ 

சொன்ன சொல்லை எண்ணி வருந்துகிறேன் எனத் தலைவி 

உரைப்பதாகவும் பொருள் கொள்ளலாம்.


சொற்பொருள் விளக்கம் 

நோம் - நோகும், வருந்தும்

தாங்கி - தடுத்து

அமைதற்கு - ஆற்றியிருப்பதற்கு

இயற்கைப் புணர்சி - தலைவன் தலைவியின் முதல் சந்திப்பு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக