வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

புதன், 30 ஜூன், 2021

ஓர்யான் மன்ற துஞ்சா தேனே - UPSC EXAM TAMIL - குறுந்தொகை - 06

 குறுந்தொகை - 06


திருமணத்திற்கு இடைப்பட்ட காலத்தில் தலைவன் தலைவியைப் பிரிந்த நிலையில் அவன் பிரிவால் தூக்கமின்றி வாடும் தலைவி, தோழியிடம் சொல்லுவதாக இப்பாடல் அமைகிறது.

நெய்தல் 

“நள்ளென் றன்றே யாமம் சொல்லவிந்து

இனிது அடங்கினரே மாக்கள் முனிவு இன்று

நனந்தலை உலகமும் துஞ்சும்

ஓர்யான் மன்ற துஞ்சாதேனே. ”


குறுந்தொகை - 06

பாடியவர் - -பதுமனார்.

வரைவிடை வைத்துப் பிரிந்தவழி ஆற்றாளாகிய தலைமகள் தோழியை நெருங்கிச் சொல்லியது


தலைவனின் நினைவால் உறங்காமல்த் தவிக்கும் தலைவி

நள்ளிரவில் தன் துயரை அறியாது யாவரும் இனிது உறங்குகின்றனர். 

தன்னை எந்நேரமும் வைதுகொண்டிருக்கும் தாயரும் தூங்கினர். 

அவர்கள் தன்னைத் திட்டுவதால் மாக்கள் என்றாள்(விலங்கு)

வசை மொழி கூறாது உறங்குவதால் இனிது அடங்கினர் என்றாள்.

ஓர்யான் மன்றத் துஞ்சாதோளே என்றதால் தன் உயிர்த்தோழியும் தூங்கிவிட்டாள் என்பது புலனாயது. 

நனந்தலை உலகமும் துஞ்சும் என்றதால் உலகில் உள்ள யாவரும் இனிது உறங்கினர் என்று அறியமுடிகிறது.

இவ்வாறு பகை, நட்பு, நொதுமல் என்று யாவரும் உறங்கத் தான் மட்டும் உறங்காமல்த்தவிக்கிறேனே! என்ற ஏக்கம் இந்தப் பாடலில் தெரிகிறது.


சொற்பொருள் விளக்கம்


நள்  - நடு இரவில் தோன்றும் நள் என்ற ஓசை

யாமம் - நடு இரவு

மாக்கள் - விலங்கு 

நனந்தலை - அகன்ற இடம்

மன்ற - உறுதியாக


தொடர்புடைய இடுகை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக