வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சனி, 19 ஜூன், 2021

சிறக்க நின் நாளே - UPSC EXAM TAMIL - புறநானூறு -196

நன்மை செய்தவர்களை வாழ்த்துவதும்

தீமை செய்தவர்களைப் பழிப்பதும் உலக மரபு.

இப்புறப்பாடலில் பாண்டியன் புலவருக்குப் பரிசில் தருவதற்குக் காலம் கடத்திவந்தான். இது முறையன்று என்று புலவர் ஆவூர் மூலங் கிழார்  எடுத்துரைத்து வாழ்த்துகிறார். 

பரிசில் தராமல் காலம் தாழ்த்தியது தமக்கு ஏமாற்றமாக இருந்தாலும். ஏமாற்றுவது பெருங்குற்றமல்லவா, அதனால் அவனும் அவன் குடும்பமும் பாதிக்கப்படக் கூடாது என்று வாழ்த்துகிறார் புலவர்.

பாடல்,

ஒல்லுவது ஒல்லும் என்றலும், யாவர்க்கும்

ஒல்லாது இல் என மறுத்தலும், இரண்டும்,

ஆள்வினை மருங்கின் கேண்மைப் பாலே;

ஒல்லாது ஒல்லும் என்றலும், ஒல்லுவது

இல் என மறுத்தலும், இரண்டும், வல்லே  5

இரப்போர் வாட்டல் அன்றியும், புரப்போர்

புகழ் குறைபடூஉம் வாயில் அத்தை;

அனைத்து ஆகியர், இனி; இதுவே எனைத்தும்

சேய்த்துக் காணாது கண்டனம்; அதனால்,

நோய் இலராக நின் புதல்வர்; யானும்,  10

வெயில் என முனியேன், பனி என மடியேன்,

கல் குயின்றன்ன என் நல்கூர் வளி மறை,

நாண் அலது இல்லாக் கற்பின் வாள் நுதல்

மெல் இயல் குறு மகள் உள்ளிச்

செல்வல் அத்தை; சிறக்க, நின் நாளே! 15

புறநானூறு - 196

திணை பாடாண் திணை; 

துறை பரிசில் கடா நிலை.

பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன் பரிசில் நீட்டித்தானை ஆவூர் மூலங் கிழார் பாடியது.


தம்மால் கொடுக்கமுடியும் பொருளை இயலும் என்று சொல்லிக் கொடுத்தலும்,

யாவர்க்கும் கொடுக்க இயலாத பொருளை, இல்லை என்று சொல்லி மறுத்தலும் ஆகிய இரண்டும் எல்லோருக்கும் இயல்பு.

தன்னால் கொடுக்க முடியாத பொருளை முடியும் என்று சொல்லுதல்,

கொடுக்க முடியும் பொருளை இல்லை என்று சொல்லி மறுத்தலும் ஆகிய இரண்டும் உதவி கேட்போரை மனம் வாடச் செய்யும்.கொடுப்போரின் புகழைக் குறைவுபடச் செய்யும்.

இப்போது நீ பரிசில் தராமல் காலம் தாழ்த்துவதும் அதுபோலத்தான் உள்ளது.  அன்றியும்,

கொடுத்துக் காப்பாற்றுபவரின் புகழை மங்கச்செய்யும் செயலாகும்.

இப்படிக் காத்திருப்பது எம் குடியில் பிறந்தோர்க்குப் புதிதாக உள்ளது.

உன் குழந்தைகள் துன்பமின்றி வாழட்டும். 

நானும் வெயில் என்று நொந்துகொள்ளப்போவதும் இல்லை. 

பனி என்று படுத்திருக்கப்போவதும் இல்லை. எனத் தன் ஏமாற்றத்தை

நாகரீகத்துடன் வெளிப்படுத்துகிறார்.

கல்லைக் குடைந்துவைத்தது போன்றதும் காற்றுத் தடுப்பாக

உள்ளதுமான என் வீட்டுக்குச் செல்கிறேன். 

அங்கே நாணம் அல்லாமல் வேறொரு செல்வமும் இல்லாத ஒளிவீசும் நெற்றியுடன் மெல்லி சாயலைக் கொண்ட என் மனைவியை நினைத்துக்கொண்டு திரும்பிச் செல்கிறேன். 

நீ எனக்குப் பரிசில் தராமல் காலம் தாழ்த்தி தீங்கிழைத்தாய், இருந்தாலும் உன் பிள்ளைகள் நோயின்றி இருக்கட்டும், உன் வாழ்நாள் பெருகட்டும். என வாழ்த்துகிறார். 

சொற்பொருள்

ஆள்வினை - தாளாண்மை, முயற்சி

மருங்கு - பக்கம்

கேண்மை - நட்பு

புரப்போர் - கொடுப்போர்

முனியேன் - வெறுப்படையேன்

மடியேன் - சோம்பியிரேன்

நல்கூர் - வறுமை

நாண் - நாணம், வெட்கம்

உள்ளி - நினைத்து

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக