வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

செவ்வாய், 29 ஜூன், 2021

தூக்கத்தைத் தொலைத்தவள் -UPSC EXAM TAMIL - குறுந்தொகை - 05


காதலும் ஒரு நோய்தான். வள்ளுவர் இந்நோயை, 

காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி 

மாலை மலரும்இந் நோய் - 1227

என்று உரைப்பார். நெய்தல் திணை சார்ந்த இக்குறுந்தொகைப் பாடலில் தலைவனின் பிரிவால் தூக்கத்தைத் தொலைத்த தலைவியின் புலம்பல் பதிவுசெய்யப்பட்டுள்ளது. 

தலைவனின் பிரிவால் தலைவி வருந்துகிறாள், தலைவியின் நிலையறிந்து தோழி கவலைப்படுகிறாள் , 

பிரிவாற்றாமையால் தான் தூக்கமின்றித் தவிக்கும் கொடுமையைத் தோழிக்கு உரைத்து இக்காமநோயின் கொடுமையைத் தலைவி உரைப்பதாக இப்பாடல் அமைகிறது,

5.நெய்தல்

அதுகொல் தோழி காம நோயே?

வதி குருகு உறங்கும் இன் நிழல் புன்னை

உடை திரைத் திவலை அரும்பும் தீம் நீர்

மெல்லம் புலம்பன் பிரிந்தென

பல் இதழ் உண்கண் பாடு ஒல்லாவே. 


குறுந்தொகை - 05

பிரிவிடை ஆற்றாள் எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.

பாடியவர் - நரிவெரூஉத்தலையார் 

அவன் நீரலை புலம்பும் கடல்சார் புலம்புநிலத் தலைவன். 

அவன் பிரிந்திருக்கிறான் என்று பல இதழ்களைக் கொண்ட தாமரை 

போன்ற மை தீட்டிய   என்  கண்கள் மூட மறுக்கின்றன.

தோழி! காமநோய் என்பது அதுதானோ?

புன்னை மர நிழலில் குருகு மட்டும் உறங்குகிறதே!

உடையும் கடலலைத் திவலை அதன் உடலில் தூவப்பட்டு முத்து முத்தாக 

நிற்கும்போதும் தூங்குகிறதே!

என்று தலைவி தன் தோழியிடம் இவ்வாறு கூறுகிறாள்.


கடற்கரையைச் சார்ந்தும் இனிய நீர் தோன்றும் என்பதை  தீம்நீர் மெல்லம் புலம்பு என்ற சொல் குறிக்கிறது.

குருகு கூட இனிது உறங்கும் நிலத்தில் தான் தலைவனின் பிரிவால் தூக்கமின்றித் தவிக்கின்றேனே எனத் தலைவி உரைக்கிறாள்


சொற்பொருள் விளக்கம்

வதி குருகு - மருத நிலத்திலிருந்து நெய்தல் நிலத்திற்கு வந்து துணையின்றித் தங்கும் குருகு

உடை திரை - கரையை உடைக்கும் அலை

புலம்பு - கடற்கரை

பல் இதழ் - பல இதழ்களைக் கொண்ட தாமரை

பாடு - முகிழ்த்தல்

மெல்லம் புலம்பன் - மென்புலமாகிய நெய்தல் நிலத் தலைவன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக