வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

செவ்வாய், 15 ஜூன், 2021

இல்லறமா? துறவறமா? - UPSC EXAM TAMIL - புறநானூறு -193

            புதிதாகத் திருமணமான மணமக்கள் கோயிலுக்குச் சென்று வந்தனர். வருகின்ற வழியில் ஒரு துறவியைப் பார்த்தனர். 
அந்த மணப்பெண் தன் கணவனிடம் நாம் சென்று அந்தத் துறவியிடம் ஆசிர்வாதம் வாங்கி வரலாம் என்றாள். அவரும் சரி என்று சொல்லி, இருவரும் துறவியைச் சந்தித்து அவர் காலில் விழுந்து எங்களை ஆசிர்வாதம் செய்யுங்கள் ஐயா எனக் கேட்டுக்கொண்டனர். 

பதறிப்போன துறவியோ எழுந்திருங்கள் எழுந்திருங்கள் என் காலில் ஏன் விழுந்தீர்கள் எனக் கேட்டார். அந்த மணமகன் சொன்னார், ஐயா நாங்கள் புதிதாகத் திருமணமானவர்கள் நீங்கள் துறவி. நீங்கள் ஆசி வழங்கினால் எம் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்றே தங்கள் காலில் விழுந்தோம் என்றார். அதைக் கேட்ட துறவி அந்த மணமக்கள் காலில் விழுந்தார். 

பதறிப்போன மணமக்கள் ஐயா தாங்கள் ஏன் எங்கள் காலில் விழுந்தீர்கள் எனக் கேட்டனர்.

அந்தத் துறவி சொன்னார். 

நான் ஒரு துறவி. எல்லாவற்றையும் துறந்து வாழ்ந்துவருகிறேன். இப்படி எல்லாவற்றையும் துறந்து வாழ்வது மிக எளிது. ஆனால் 

எதையும் துறக்காமல் எல்லாவற்றையும் சார்ந்து இல்வாழ்க்கை வாழ்வதே அரிது. என்னை விட நீங்கள்தான் போற்றத்தக்கவர்கள் என்றார் துறவி.

இது கற்பனைக் கதைதான் என்றாலும் நாம் சிந்திக்கவேண்டிய உண்மை என்னவென்றால்.

இல்லறம், துறவறம் என இல்வாழ்க்கை, துறவு வாழ்க்கை இரண்டிலும் அறத்தைக் கடைபிடித்த மரபு நம் தமிழ் மரபு.

இல்லறம் பெரிதா? துறவறம் பெரிதா? என சிந்திக்கத் தூண்டும் ஒரு புறநானூற்றுப் பாடலைக் காண்போம்.

ரங்களே இல்லாத பாலை நிலத்தில் வேடன் மானை வேட்டையாடுவது மிக எளிய செயல். 

இருந்தாலும் அந்த மான் அவன் வேட்டைக்குத் தப்பிப் பிழைத்தாலும் பிழைக்கலாம்.

நானும் இல்வாழ்க்கையைத் துறந்து துறவு வாழ்க்கை வாழ்ந்தாலும் வாழலாம்.

ஆனால் சுற்றத்தோடு கூடி வாழும் இல்வாழ்க்கை அதற்கு அனுமதிக்காது. சுற்றத்தை எப்படி நீங்குவது? 

ஆம் மான் வேடனிடம் மாட்டியது போல சுற்றத்தை விட்டு நீங்குவது இயலாத செயல்.

சுற்றத்துடன் கூடி வாழும் வாழ்க்கை இல்லாதவர்களுக்கே துறவு வாழ்க்கை ஏற்புடைத்தாகும். என ஒருவர் சிந்திப்பதாக இப்பாடல் அமைகிறது. 

பாடல்,

அதள்எறிந் தன்ன நெடுவெண் களரின்

ஒருவன் ஆட்டும் புல்வாய் போல,

ஓடி உய்தலும் கூடும்மன்;

ஒக்கல் வாழ்க்கை தட்கும்மா காலே


புறநானூறு - 193

பாடியவர்: ஓரேருழவர்

திணை: பொதுவியல்

துறை: பொருண்மொழிக் காஞ்சி

இப்பாடல் வழியாக இல்வாழ்க்கை துன்பம் நிறைந்தது என்றாலும் சுற்றத்தார்களை நீங்கி வாழ்வது அரிது என்று சுட்டியதால் சுற்றத்தின் மீதுள்ள அன்பு புலப்பட்டது. சுற்றம் இல்லாதவர்களுக்கே துறவு வாழ்வு சிறந்தது. சுற்றம் உள்ளவர்களுக்கு இல்வாழ்வே சிறந்தது என்ற கருத்து உணர்த்தப்பட்டது.

இப்பாடலைப் பாடியவர் ஓரேருழவர் என்ற புலவர் ஆவார். குறுந்தொகையில் இவர் பாடியதாக ஓர் பாடல் உள்ளது.


சொல்லும் பொருளும்.

அதள்- தோல்

களர் - களர் நிலம்

புல்வாய் - மான்

உய்தல் - பிழைத்தல்

ஒக்கல் - சுற்றம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக