வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

புதன், 23 ஜூன், 2021

புகழை விதைப்பவர்கள் - UPSC EXAM TAMIL - புறநானூறு -199நெல்லை விதைத்தால் நெல் விளையும்..

சொல்லை விதைத்தால் சொல் விளையும்..

அன்பை விதைத்தால் அன்பே விளையும்..

அதுபோல புகழை விதைத்தால் புகழ் விளையும்..

புகழை விதைக்கும் பரிசிலர் இயல்பைக் காண்போம்,

இன்மையின்  இன்னாதது யாதெனின் இன்மையின்

இன்மையே இன்னாதது - குறள் - 1041

வறுமையைப் போலத் துன்பமானது எது என வள்ளுவரைக் கேட்டால்

வறுமை கொடியது, வறுமையைப் போல துன்பமானது..

வறுமையே அதைவிடத் துன்பமானது வேறு ஏதும் இல்லை என்கிறார்.


அத்தகைய வறுமையில் உள்ளவர்களின்  நிலையறிந்து உதவுவது மிகப் பெரிய செயல் அல்லவா!

அதிலும்  நான் வள்ளல் நீ இல்லாதவன் நான் உனக்கு உதவுகிறேன்..

என்றெல்லாம் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் இரவலர் உரிமையோடு தம் தேவையை நிறைவு செய்துகொள்ளும் நற்பண்புடன் வள்ளல்கள் கிடைத்துவிட்டால் இரலவலர்களின் வறுமை அவர்களை விட்டு ஓடிவிடும் அல்லவா..


மரங்களை நாடிச் செல்லும் பறவைகள் தாம் செல்லும் இடங்களிலெல்லாம் அதன் விதைகளை விதைத்து அம்மரங்களைப் பல இடங்களிலும் உருவாக்குகின்றன.

அப்பறவைகளைப் போல பரிசில் நாடிச் செல்லும் இரவலர்கள் அந்த வள்ளல்களின் புகழைப் பல இடங்களிலும் விதைத்து அவர்களைப் போல வள்ளல்களை உருவாக்குகின்றனர். 

ஆலமரத்தை நாடும் பறவைகளைப் போன்று வள்ளல்களை நாடும் பரிசிலர் கூட்டத்தின் இயல்பை இப்பாடல் எடுத்துரைக்கிறது.

புலவர் பெரும்பதுமனார் பரிசில் வேண்டிப் பாடுகிறார். யாரிடம் பரிசில் வேண்டுகிறார் என்னும் குறிப்பு கிடைக்கவில்லை.

கடவுள் ஆலத்துத் தடவுச்சினைப் பல்பழம்

நெருநல் உண்டனம் என்னாது, பின்னும்

செலவுஆ னாவே, கலிகொள் புள்ளினம்;

அனையர் வாழியோ இரவலர்; அவரைப்

புரவுஎதிர் கொள்ளும் பெருஞ்செய் ஆடவர் 5

உடைமை ஆகும், அவர் உடைமை;

அவர் இன்மை ஆகும், அவர் இன்மையே.  


புறநானூறு - 199

பாடியவர்: பெரும்பதுமனார்

திணை: பாடாண்

துறை: பரிசில் கடா நிலை


ஒலிக்கும் பறவையினங்கள், பழுத்திருக்கும்  ஆலம்பழம் நேற்று உண்டோமே என்று கடவுள் தன்மையுள்ள அந்த மரத்தைத்தேடி  மறுநாள் வராமல் இருப்பதில்லை,

மீண்டும் மீண்டும் வருவது அப்பறவைகளின் இயல்பு. எத்தனை முறை வந்தாலும் அப்பறவைகளுக்குப் பழம் தருவது ஆலமரத்தின் இயல்பு,

அப்பறவைகளைப் போன்றவர்களே இரவலர்,

அந்த இரவலர்களின் செல்வம் அவரக்ளைக் காக்கும் வள்ளல்களின் செல்வமாகும், அவர்களின் வறுமையும் அவ்வள்ளல்களின் வறுமையே ஆகும்.

ஆலமரத்தில் பறவைகள் உரிமையோடு பழங்களை உண்ணும் அதுபோல வள்ளல்களின் செல்வம் தம் செல்வம் என்றும், தமது வறுமை, தம்மைக் காக்கும் வள்ளல்களின் வறுமையே என்றும் பெரும் பதுமனார் உரைக்கிறார்.

பழங்களை உண்டு செல்லும் பறவைகள் அதன் விதைகளைப் பல இடங்களிலும் விதைப்பதைத்து மரங்களைத் தோற்றுவிக்கும். 

அதுபோல இரவலர்களும் தமக்குப் பரிசில் தந்து காக்கும் வள்ளல்களின் புகழை நாட்டின் பல்வேறு இடங்களிலும் பரப்பி ஆங்காங்கே இவரைப் போன்ற வள்ளல்களைத் தோற்றுவிப்பர்.


சொற்பொருள் விளக்கம்


கடவுள் ஆலம் - தெய்வம் உறையும் ஆலமரம்

சினை - கொம்பு

நெருநல் - நேற்று

செலவு - செல்லுதல்

கலி - ஒலி

புள்ளினம் - பறவையினங்கள்

புரவு - காத்தல்

உடைமை - செல்வம் 

இன்மை - வறுமை 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக