பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான். (972) என்று திருவள்ளுவர் சொல்வதுபோல,
திறமையில்லாதவர்கள் யார்? ஆனால் தமக்குள்ள திறமையை அறியாதவர்களும், அறிந்தும்
வெளிப்படுத்தாதவர்களும் பலர் உண்டு.
பெற்றோரின் திறமை பிள்ளைகளிடம்
இருக்கவேண்டும் என்பது பலரின் எதிர்பார்ப்பு. ஆனால் பெற்றோரிடம் இல்லாத வேறு திறமை,
ஈடுபாடு பிள்ளைகளிடம் இருந்தாலும் அதை ஊக்குவிக்கும், வளர்த்தெடுக்கும்
பக்குவம் பெற்றோருக்கு வேண்டும்.
சவால்கள்
வரும்போதுதான் நாம் நினைத்தே பார்த்திராத திறமைகள் நம்மிடம் மறைந்திருப்பதை நாம்
உணர்வோம்.
மனிதர்களுக்குள் மறைந்துள்ள திறமை வெளிப்பட பெற்றோர்,
ஆசிரியர்கள், நண்பர்கள், சமூகம் என எதுவும் காரணமாகலாம். சில நேரங்களில்
எதிரிகளின் ஏளனமான சொற்கள் கூட ஒருவரின் திறமையை வெளிகொணரும்.
நம் திறமை என்ன என்பதை
அறிந்தால் மட்டும்போதாது. அத்திறமையை நம்பிக்கையுடன் வெளிப்படுத்தவேண்டும். துணிவோடு
செயல்படாத காரணத்தால் உலகில் பல திறமைகள் சிதறிப் போகின்றன.
பிறவித் திறமையை வளர்ப்பதற்காகவே கல்வியறிவு
பயன்படவேண்டும்
என்றார் பிளாட்டோ.
முயற்சியை எவனொருவன் கைவிடுகிறானோ, அப்போதே
அவன் திறமை அவனிடமிருந்து போய் விடுகிறது என்றார் எமர்சன்.
நாம் எதைத் தொடர்ந்து செய்கிறோமோ, அதுவாகவே ஆகிறோம். எனவே, திறமை என்பது ஒரு
செயல் அல்ல அது ஒரு பழக்கம் என்றார் அரிஸ்டாட்டில்
உங்களுடைய ஆற்றலால் தோன்றும்
திறமைகளை பிறர் உணரவில்லையே என்று வருந்தாதீர்கள். அவர்கள்,
உங்களுடைய திறமைகளையும் ஆற்றலையும்
உணரும் அளவிற்கு தொடர்ந்து செயலில் நடந்து காட்டுங்கள்! என்றார் கன்புசியஸ்
போராடும்
வரை வீண் முயற்சி என்று சொல்லும் பலர் வெற்றி பெற்றபின் அதையே விடாமுயற்சி என்று
சொல்வார்கள். அதனால் எல்லோரின் குரலுக்கும் செவிசாய்காதீர்கள்.
மனிதனுடைய முழுத் திறமைகளின் வெளிப்பாடே, உண்மையான
கல்வி என்றார் காந்திஜி
எக்கணமும்
சுறுசுறுப்பாக இருப்பவர்களிடம் திறமைகள் தாமே வந்து ஒட்டிக்கொள்ளும் என்றார்
எரால்ட். ஒருவரின் திறமையைப் பார்த்து பொறாமைப்படுவதாலோ, அல்லது அவர்களைப்போல
உழைப்பதாலோ நாம் அந்தத் திறமையைப் பெற்றுவிடமுடியாது.
தம்
திறமை என்ன என்பதை அறிய முயலவேண்டும். அத்திறமை பலருக்கும் இல்லாத அல்லது உலகம்
அறியாத, திறமையாக இருந்தாலும் அதை வெளிப்படுத்தத் தயங்கக்கூடாது.
உன்னிடமுள்ள திறமை எவ்வளவு சிறிதாக இருந்தாலும்
பயன்படுத்தத் தயங்காதே. இனிய குரல் கொண்ட பறவைகள்தான் பாட வேண்டும் என்றால்
காடு அமைதியாகி விடும் என்பது ஹென்றி வேன்டேக் என்ற அறிஞரின் கருத்து. இக்கருத்தை ஆழ்ந்து நோக்குவோர் தம் திறமையை
வெளிப்படுத்தத் தயங்கமாட்டார்கள்.
கழுகு போன்ற பெரிய பறவைகள் வட்டமிடும்
வானில்தான் சின்னஞ்சிறிய பறவைகளும் சிறகடித்துப் பறக்கின்றன. உயரம் வேறுபடலாம் பறத்தல்
ஒன்றுதான்.
பெரிய யானைகள் வாழும் காடுகளில் தான் சிறிய
எறும்புகளும் வாழ்கின்றன. உருவங்கள் வேறுபடலாம். வாழ்தல் ஒன்றுதான்.
திறமையால் புகழ் பெற்றவர்களைப் பார்த்து
பலரும் அவர்களைப் போல அதே திறமையை வளர்க்கிறேன் என்று வாழ்க்கையைத்
தொலைக்கின்றனர். அவர்களது திறமை உங்களுக்கும் இருக்கலாம். ஆனால் அதைவிட சிறந்த
திறமைகூட உங்களுக்குள் இருக்கலாம். தன்மதிப்பீடு, சுய தேடல் திறமையை
வெளிக்கொணரும் அடிப்படையான அணுகுமுறையாகும்.
கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி
தானு மதுவாகப் பாவித்துத்-தானுந்தன்
பொல்லாச் சிறகைவிரித் தாடினாற் போலுமே
என்று ஔவையார் பாடியதுபோல. போலச்
செய்தல் மட்டும் திறமை அல்ல. தம் திறமையை ஆழ்ந்து தமக்குள் தேடி அறிந்தவர்களே
புகழொடு தோன்றுகிறார்கள்.
அன்றாட வாழ்வில் பல திறமைசாலிகள் தொடர்பில்லாத வேலை
பார்த்துக்கொண்டிருப்பதைக் கண்டிருப்போம். திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பில்லை
என்றோ, குடும்பச்சூழல் அதற்கு இடம்தரவில்லை என்றோ ஏதோவொரு காரணத்தை சொல்லிக்கொண்டு
திறமையை ஒரு எல்லைக்குள் அடைத்துவைத்து அதைக் கடந்து வரமாட்டார்கள்.
நாம் வீடுகளில் வளர்க்கும் செடிகள் கூட சில நேரம் வளராமல்
போகலாம். மலைப்பகுதியில் கற்களுக்கிடையில் என கிடைத்த இடங்களிலெல்லாம் வளரும்
செடிகள், இல்லை என்பதை மட்டும் பட்டியலிடாதே இருப்பதைக் கொண்டு உன் திறமையை
வெளிப்படுத்து என்று நமக்குப் பாடம் கற்பிக்கின்றன..
தொண்டைமான் என்ற மன்னன் அதியமானை எதிர்த்துப்
போரிட எண்ணினான்.
தொண்டைமான்
தன் வீரத்தை அறியாது, அழியப்போகிறானே என்று அதியனுக்கு வருத்தம்.
அதனால், ஔவையாரைத்
தொண்டைமானிடம் தூதாக விட்டான்.
ஔவையாரிடம் தன் படைக்கருவிகளைப் பெருமையுடன்
சுற்றிக்காட்டினான் தொண்டைமான்.
உனது கருவிகள் மாலை சூட்டப்பட்டு
அழகாகக் காட்சியளிக்கின்றன. ஆனால் அதியன் எந்நாளும் போர் புரிவதால் அவனது
படைக்கருவிகள் யாவும் கூர்மையின்றி கொல்லன் களரியில் தான் கிடக்கும் என்று
தொண்டைமானைப் புகழ்ந்தும்,
அதியனை இகழ்ந்தும் பாடினார்.
ஔவை தொண்டமானிடம் சொல்லாமல் சொன்னது,
நீ அதிகம் போர்க்களம்
காணாதவன்....
ஆனால் அதியன் போர்க்களத்தில் தான் எந்நாளும் இருப்பான்... என்பதே..
இப்பாடலில்
தொண்டைமான் படைக்கருவிகளை அழகுபட அடுக்கி வைத்து அழகுபார்த்தது போல பலரும்
தம்மிடம் பல்வேறு திறமைகள் இருந்தும் பயன்படுத்தாமல் வெளிப்படுத்தாமல்
உள்ளனர்.
நாம் அனைவரும் ஒரே அளவு திறமை பெற்றவர்கள் இல்லை. ஆனால், நம் திறமையை வளர்த்துக்கொள்ள ஒரே அளவு
வாய்ப்புகளைப் பெற்றிருக்கிறோம் என்ற அப்துல்கலாம் அவர்களின் சிந்தனையை
உணர்வோம் திறமைகளை நம்பிக்கையுடன்
வெளிப்படுத்துவோம்.
முனைவர் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பி.எஸ்.ஜி கலை அறிவியல்
கல்லூரி
கோயம்புத்தூர்
9524439008

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக