வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திங்கள், 27 ஜூன், 2011

கடமையை மறத்தல்.


ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு.
என்பர் வள்ளுவப் பெருந்தகை.

(வறியவர்க்கு ஈதல் வேண்டும் அதனால் புகழ் உண்டாக வாழ வேண்டும், அப் புகழ் அல்லாமல் உயிர்க்கு ஊதியமானது வேறொன்றும் இல்லை.)

நாடு கொடுக்கும் வள்ளல்களைக் கொண்டிருப்பது சிறப்புதான்!
அதைவிட..
இரவலர் இல்லாத நாடாக அந்நாடு இருத்தல் மிகவும் சிறந்தது!

நாடு மக்களைத் தொழிலாளிகளாக மாற்றலாம்!
சோம்பேறிகளாக மாற்றக் கூடாது!


கொடை (இலவசம்) அளவு கடந்து போனால் மக்கள் தம் கடமை மறந்து போவார்கள்!

இதோ ஒரு கொடை வள்ளலும்.
கடமை மறந்தவர்களும்...


நள்ளி! வாழியோ நள்ளி! நள்ளென்
மாலை மருதம் பண்ணி காலை
கைவழி மருங்கின் செவ்வழி பண்ணி
வரவு எமர் மறந்தனர் – அது நீ
புரவுக் கடன் பூண்ட வண்மையானே

புறநானூறு -149

திணை – பாடாண்
துறை – இயன்மொழி

கண்டீரக் கோப்பெருநள்ளியை வன்பரணர் பாடியது.

காலையில் மருதப்பண்ணும்
மாலையில் செவ்வழிப்பண்ணும் பாடுதல் பாணர் வாழ்வியலாகும்.

பாணருக்கு வறுமை தோன்றாத வண்ணம் “நள்ளி“ கொடை கொடுத்தலால் அவர்கள் தம் கடமையை மறந்து...

மாலையில் மருதப்பண்ணும்
காலையில் செவ்வழிப்பண்ணும் வாசித்தனர். இசைநூல் முறைமையை மறந்தனர்.

பாணர்கள் இவ்வாறு தம் கடமையை மறந்ததற்குக் காரணம் நீதான் எனப் புலவர் நள்ளியைச் சுட்டுகிறார்.

நேரடியாகப் பார்த்தல் நள்ளியைக் குறை கூறுவது போல இருந்தாலும், நள்ளியின் கொடைத் தன்மையின் சிறப்பைப் போற்றுவதாகவே உள்ளது.


பாடல் வழியே


 சங்ககாலத்தில் பாணர்கள் காலையில் மருதப்பண்ணும்
மாலையில் செவ்வழிப்பண்ணும் பாடுவர் என்ற மரபு புலனாகிறது.
 மக்களின் உடல் உழைப்பை மன்னன் கொடை என்ற பெயரால் மறக்கச் செய்தான் என்ற கருத்தும் உற்றுநோக்கி அறியமுடிகிறது.

10 கருத்துகள்:

 1. புறநானூற்றுப் பாடலையும், தற்காலத்தையும் இணைத்து ஒரு அருமையான பதிவு!

  பதிலளிநீக்கு
 2. அட.. நிறைய ரெஃபர் பண்ணியிருக்கீங்க....நைஸ்

  பதிலளிநீக்கு
 3. தம்பீ
  நலமா
  அருமையான எடுத்துக்காட்டு

  ஆனால் அரசியல்வாதிகள் ஓட்டுக்காதானே இதை செய்கிறார்கள்
  இவர்கள் எங்கே திருத்துவார்கள்
  புலவர் சா இராமாநுசம்

  பதிலளிநீக்கு
 4. ஆழமான தேடலும் அகன்ற பார்வையும் கூர்மையான நுண்ணறிவும் கொண்டவர்களே இதுபோன்ற ஒப்பீடுகளைத் தர முடியும்! வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு