வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
350வது இடுகை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
350வது இடுகை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 23 மே, 2011

வலைப்பதிவர்களின் நாடித்துடிப்பு (350வது இடுகை)


கடந்த நான்கு ஆண்டுகளாக வலையுலகில் வலம் வந்துகொண்டிருக்கிறேன்.
வலைப்பதிவர்களை,

1. தன்னிறைவுக்காக எழுதுபவர்கள்.
2. பொழுதுபோக்காக எழுதுபவர்கள்.
3. வியாபர நோக்கில் எழுதுபவர்கள்.
4. மக்கள் நலன் கருதி எழுதுபவர்கள்.
எனப் பாகுபாடு செய்யமுடியும்.

நான் எனது தன்னிறைவுக்காவே எழுதிவருகிறேன். நான்கு ஆண்டுகள் சென்றதே தெரியவில்லை. காலம் மிக விரைவாகச் சென்றுவிட்டது.

சங்கத்தமிழ், இணையத்தமிழ் என இரு நிலைகளில் மட்டுமே எழுதிவரும் எனது பதிவையும்...

108 நாடுகளிலிருந்து 58,000 பேர் பார்வையிட்டுள்ளனர்,
383 பேர் பின்தொடர்கின்றனர்,
130 பேர் மின்னஞ்சல் வழி இடுகைகளைப் பெறுகிறார்கள்.

என்றால் உலகம் பரவிய தமிழர்களிடம் தமிழுணர்வு இன்னும் செத்துவிடவில்லை என்பதையே உணர்த்துவதாக உள்ளது.

நான் கடந்துவந்தபாதையில்.

தமிழ்மண நட்சத்திரமாக இருந்தமை
திரட்டி நட்சத்திரமாக இருந்தமை
தமிழ்மண விருது வென்றமை


என எண்ணி எண்ணிப் பெருமிதம் கொள்ளத்தக்க நிகழ்வுகள் பல உள்ளன. இவை வலையுலக நண்பர்கள் என் எழுத்துக்களுக்குத் தந்த வரம்.

ஆரம்ப காலங்களில் தமிழ்மணம், தமிழிஷ் உள்ளிட்ட திரட்டிகளுக்குச் சென்று நண்பர்களின் இடுகைகளை வாசித்து கருத்துரையளித்து, ஓட்டளித்து வருவேன்.

கடந்த சில வருடங்களில் பணிச்சுமை காரணமாக அப்பணியை முழுமையாக மேற்கொள்ள இயலவில்லை.

இடுகைகளை திரட்டிகளில் சேர்ப்பதோடு சரி.
ஆனால் வலையுலக நண்பர்கள் தொடர்ந்து ஓட்டளித்து, கருத்துரையளித்து பலருக்கும் எனது பதிவு சென்றடைய துணைநின்றுள்ளனர். பெயர்களைச் சொன்னால் பக்கம் நீளும் என்பதால் அனைவருக்கும் இவ்வேளையில் மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இதுவரை நான் கண்ட வலைப்பதிவர்களின் மனநிலைகளை வரிசைப்படுத்தியுள்ளேன்.

வலைப்பதிவர்களுக்குப் பிடித்தது.

1. சொந்தமான சிந்தனை.
2. ஆர்வமூட்டும் தலைப்பு, புதிய தகவல்.
3. பிழையற்ற, தெளிவான, எளிய தொடரமைப்பு.
4. தனித்துவமான எழுத்து நடை.
5. அடுத்தவர் தகவலாக இருந்தாலும் நன்றி கூறி வெளியிடுதல்
6. கருத்துரைகளுக்குப் பதிலளித்தல்
7. கருத்துரையளித்த, பின்தொடரும் பதிவர்களின் தளங்களுக்கும் சென்று பார்வையிடுதல் நிறைகளை எடுத்துக்கூறிப் பாராட்டுதல்.
8. குறைகளைக் கூறினாலும் நாகரீகமாகக் கூறுதல்.
9. அழகான தளவமைப்பு.
10. விரைவாகத் திறக்கத்தகக்க வலைப்பக்கம்.
11. கண்களை சோர்வடையச் செய்யாத வலைப்பதிவின் பின்புல வண்ணங்கள், எழுத்தின் வண்ணங்கள்.
12. தொடர்ந்து பதிவிடுதல்.
13. நிகழ்கால சமூகத்தைப் பிரதிபலித்தல்,
14. பழமையான மரபுகளை அடையாளப்படுத்துதல்.
15. நகைச்சுவை, அனுபவம், தொழில்நுட்பம், அரசியல், பொழுதுபோக்கு, கல்வி, இலக்கியம், சிந்தனை, விளையாட்டு என எல்லாவற்றையும் சொல்வதைவிட ஏதோ ஒன்றைக் கூறினாலும் தெளிவாக, தனித்துவத்துடன் சொல்லுதல். எந்த அளவுக்கு வலையுலகை நான் புரிந்துகொண்டேன் என்பதை நண்பர்களே நீங்கள் தான் சொல்லவேண்டும்.

வலைப்பதிவர்களுக்குப் பிடிக்காதது.

1. சுயதம்பட்டம். (தன்னைப்பற்றியே பெருமை பேசுதல்)
2. கருத்துரைப்பெட்டியில் உறுதி செய்யும் எழுத்துக்கள் இருத்தல் (வேர்டு வெரிபிகேசன்)
3. அளவுக்கு அதிகமான அறிவுரை.
4. அடுத்தவர் சிந்தனையை தனது என சொல்லிக்கொள்ளுதல்.
5. ஓட்டுப் போடுங்கள், பின்தொடருங்கள், என மின்னஞ்சல் செய்தல்.
6. நீண்ண்ண்ட பதிவாக இடுதல்.
7. அளவுக்கு அதிகமான வார்த்தைகளின் அலங்காரங்கள்.
8. சுயவிவரமற்ற கருத்துரையாளராக வந்து கருத்துரைத்தல்.
9. பெரும்பாலான வலைப்பதிவர்கள் வைத்திருக்கும் விட்செட்டுகளை, இணைப்புகளையே வைத்திருத்தல்.
10. தொடர் இடுகை என்ற பெயரில் ஏதோ ஒன்றை எழுதச் சொல்லி வற்புறுத்துதல்.
11. இடுகைகளைக் சிறிதுகூடப்படிக்காமல் தொடர்பே இல்லாமல் கருத்துரையளித்தல்.
12. பலரும் சொன்ன பழைய செய்திகளைப் பதிவிடுதல்.
13. பல இடுககைளும், இணைப்புகளும் முகப்புப் பக்கத்தில் இருத்தல்.
14. அதிமேதாவித்தனமான எழுத்துநடை.
15. அடிக்கடி வலையமைப்பையும், பக்கப்பெட்டிகளையும் மாற்றுதல்.


இப்படி இன்னும் பல சொல்லிக்கொண்டே போகலாம். இந்த நான்கு ஆண்டுகளில் எனது ஆர்வம் சிறிதுகூடக் குறையவே இல்லை.

வலைப்பதிவு ஆரம்பித்தபோது எத்தகைய ஆர்வத்துடன் இருந்தேனோ அதைவிடப் பன்மடங்கு ஆர்வமுடையவனாகவே இருக்கிறேன். அதற்குக் காரணம்...




நண்பர்களே நீங்கள் தான்.
நீங்கள் மட்டும் தான்.