வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஞாயிறு, 9 அக்டோபர், 2011

வலைப்பதிவுகளின் காவலன்!


ஒவ்வொரு வலைப்பதிவர்களும் தம் வலைப்பதிவைக் காப்பாற்ற எவ்வளவோ போராடிப் பார்க்கிறார்கள். தாக்குநர்கள் (ஹேக்கர்ஸ்) மிக எளிதாக ஒவ்வொரு வலைப்பதிவையும் தாக்கி அழித்துத் தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிடுகிறார்கள்.

திருடாதே பாப்பா திருடாதே...
என்றொரு பழைய திரைப்படப் பாடல் இன்றைய வலைப்பதிவு ஊடகத்துக்குப் பெரிதும் பொருந்துவதாகவே உள்ளது..

மூளை வறட்சி ஏற்பட்டவர்களும்
மனக் குறைபாடு உள்ளவர்களும்
இயலாமை மிகுந்தவர்களும்
தம் திறமையை உணராதவர்களும்தான் அடுத்தவர்கள் எழுத்துக்களைத் தம் எழுத்து எனச் சொந்தம் கொண்டாடிக் கொள்கிறார்கள்.. இவர்களைப் பார்த்து கோபம் வருவதைவிட அவர்களின் நிலைகண்டு வருத்தம் தான் வருகிறது..
என்னோட பதிவைத் திருடிட்டாங்க!
ஓட்டு வாங்கிட்டங்க!
பிரபலமாகிட்டாங்க என்ற வலைப்பதிவர் குரல் எங்கும் கேட்கிறது.


இதற்கு என்னதான் வழி..

  1. பணப்பெட்டிக்குத் திறவுகோல் எவ்வளவு தேவையானதோ அதுபோல வலைப்பதிவுக்கு பயனர் முகவரியும், கடவுச்சொல்லும் அடிப்படைத் தேவை என்பதை உணரவேண்டும்.
  2. வலைப்பதிவின் எச்டிஎம்எல் கோப்பை மாதத்திற்கு ஒரு முறை பதிவிறக்கிப் பாதுகாக்க வேண்டும்.
  3. ப்ளாக்கர் பேக்கப் மென்பொருள் வாயிலாக நாம் இதுவரை எழுதிய கட்டுரைகளை சேமித்து வைக்கலாம்.
  4. முடிந்த வரை நம் கணக்கை நம் சொந்த கணினியில் கையாளலாம். இயலாத சூழலில் வெளியே பிற கணினிகளில் கையாளும்போது, நம் கடவுச் சொல் எங்கும் சேமிக்கப்படுகிறதா என்பதில் கவனமாக இருத்தல் வேண்டும்.
  5. பிற கணினிகளில் உலவும் போது முடிந்தவரை ப்ரைவேட் ப்ரௌசிங்க என்னும் முறையில் கையாள்வது சிறந்தது.
  6. மேலும் வெளி கணினிகளில் உலவி முடித்தபின் வரலாற்றையும், குக்கிகளையும் சுத்தம் செய்துவிடவேண்டும்.

பதிவர்களின் தற்காப்பு முயற்சிகள்.

வலைப்பதிவர்தம் சிந்தனைகள் திருடப்படுவதில் இருந்து தம் கட்டுரைகளைப் பாதுகாத்துக்கொள்ள பல வழிகளைக் கையாள்கிறார்கள்.

1.      சுட்டியின் (மௌசின்) வலது புறத்தைச் செயலிழக்கச் செய்தல்.
2.      சுட்டியின் இடது புறத்தைச் செயலிழக்கச் செய்தல்.
3.      காப்புரிமை பெறும் தளங்களில் சென்று கணக்கை உருவாக்கிக் கொள்தல்.
4.      தம் கருத்துக்கள் எங்கெங்கு திருடப்பட்டுள்ளன என்பதை அறிந்து கொள்ளும் இணையதளங்களின் துணையை நாடுதல்
5.      ஐயா சாமி என்னோட பதிவை எடுத்தா என் பெயரை சொல்லி வெளியிடலாமே என வேறு வழியில்லாமல் திருடர்களிடமே கேட்டல்.
6.      என்னோட பதிவைத் திருடினா இரத்தம் கக்கி சாவ! என பயமுறுத்துதல்.
  
இப்படி பல வழிமுறைகள் வழக்கில் இருந்தாலும்.

பல இணையதளங்களும், சில வலைப்பதிவுகளும் அதில் உள்ள ஒரு எழுத்துக்களைக்கூட நகல் எடுக்க முடியாதபடி உள்ளே ஏதோ தொழில்நுட்ப வசதிகளைக் கையாண்டிருப்பார்கள்..

நான் சில ஆண்டுகளுக்கு முன்னர் இணையத்தில் இதுதொடர்பாக தேடியபோது கிடைத்த தொழில்நுட்ப வசதி இது
எங்கு கிடைத்தது என நினைவில் இல்லை..

அப்படியொரு வசதியைப் பல வலைப்பதிவர்களும் அறியவேண்டும் என்ற நோக்கில் இன்று உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்..

அன்பு நண்பர்களே உங்கள் வலைப்பதிவின் கணக்கில் உள் நுழைந்து..

வடிவமைப்பு (Design) பகுதிக்குச் செல்லுங்கள். அடுத்து,

எச்டிஎம்எல்ஐ திருத்து (EDIT HTML) என்னும் பகுதிக்குச் செல்லுங்கள். அதில்

டிக் Expand Widget Templates

அடுத்து

CTL F அழுத்தினால்

தேடல் பெட்டி வரும் அதில் <head> என்று தேடவும் பின், கீழ்வரும் நிரலை நகல் எடுத்து அதன் கீழே ஒட்டவும்.



<!-- Disable Copy and Paste-->
<script language='JavaScript1.2'>
function disableselect(e){
return false
}
function reEnable(){
return true
}
document.onselectstart=new Function ("return false")
if (window.sidebar){
document.onmousedown=disableselect
document.onclick=reEnable
}
</script>


save template பட்டனை அழுத்தவும். அவ்வளவு தான் இனிமேல் உங்கள் எழுத்துக்களை யாரும் திருடமுடியாது. ஆம் இந்த நிரல்கள் உங்கள் வலைப்பதிவின் சிறந்த காவலனாக செயல்படும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.


(அன்பு நண்பர்களே இந்த நிரல்கள் ஏனோ இடுகையில் உள்ளீடு செய்தும் வெளியே தோன்றவில்லை. அதனால் படமாக்கி வெளியிட்டிருக்கிறேன். நிரல்களை காப்பி செய்வது போல உள்ளீடு செய்யும் நுட்பம் அறிந்தவர்கள் சொன்னால் பெரிதும் மகிழ்வேன்)  


அன்பு நண்பர் அப்துல் பசீத் அவர்கள் எனது இந்த தொழில்நுட்ப 


வினாவுக்கு மின்னஞ்சல் வழியே தெளிவான விளக்கம் கொடுத்தார்.


அவர் பரிந்துரை செய்த இந்த முகவரி பதிவர்களுக்குப் பெரிதும் 


பயன்படுவதாக இருக்கும்.


அன்பருக்கு என் மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சனி, 8 அக்டோபர், 2011

வெள்ளைத்தாள் சொன்னது


கலீ்ல் கிப்ரான் அவர்களின் கவிதைகளும், கதைகளும் படிப்போர் மனதில் ஆயிரம் ஆயிரம் சிந்தனைகளை ஊற்றெடுக்கவைக்கும் தன்மையனவாகும்.. நான் விரும்பிப் படித்த கதை ஒன்று..

பனி போன்ற வெள்ளைத்தாள் ஒன்று சொன்னது..

“நான் தூய்மையாகப் படைக்கப்பட்டேன்!
தூய்மையாக என்றென்றும் இருப்பேன்!
அசுத்தம் என்னைத் தொடமுற்படின்,
அல்லது இருட்டுத் தன்மையால்
நான் துன்பப்டுதலைக் காட்டிலும்,
எரிக்கப்பட்டு வெண்ணிறச் சாம்பலாய்
ஆகிவிடுவேன்.“

எழுது மை இருக்கும் புட்டி
வெள்ளைத் தாள் சொல்வதைக் கேட்டது.

தன் கருப்பு இதயத்தில் அது சிரித்தது.
ஆனால் அதன் அருகே செல்லும்
துணிவின்றி இருந்தது.

பல்வண்ண எழுதுகோல்களும்
வெள்ளைத்தாள் சொன்னதைக் கேட்டன.
அவையும் அதன் அருகில் வரவே இல்லை.

பனிபோன்ற வெள்ளைத்தாள்
எப்போதும் தூய்மையாக கற்புடனேயே இருந்தது.

ஆம் தூய்மையாக கற்புடனேயே

வெற்றுத் தாளாகவே!

புதன், 5 அக்டோபர், 2011

உங்கள் எழுத்துக்களில் நச்சுநிரல் உள்ளதா?


வேர்களைத்தேடி.........
நச்சுநிரல் சோதனை
நம் கணினிக்கு மட்டும் போதுமா??
நம் எழுத்துக்களுக்கு வேண்டாமா??

நம் எழுத்துக்களையும் ஆய்வு செய்வோம்..

மூங்கில்கள் எல்லாம்
மயக்கும் குழலாவதில்லை!

மழைத்துளிகள் எல்லாம்
அழகிய முத்தாவதில்லை!

தீக்குச்சிகள் எல்லாம்
தீபஒளி தருவதில்லை!

ஆயிரம் ஆயிரம் உண்டு இங்கு
அறிவாளிகள்! ஆனாலும்
அவர்களுக்கெல்லாம் வாய்க்கவில்லை
வலையுலகில் தமிழ் எழுதும் வாய்ப்பு!!

இவ்வரிய வாய்ப்பை
நாம் எப்படிப் பயன்படுத்துகிறோம்?

நம் எழுத்துக்களை உற்று நோக்குங்கள்..

              நம் எழுத்துக்கள்...
புல்லாங்குழலா?
முத்தா?
தீப ஒளியா?

அந்தக் காலத்தில் நந்திவர்ம பல்லவன்
எழுத்துக்களில் நச்சுவைத்து
அறம்பாடிக் கொல்லப்பட்டானாம்..

நம் எழுத்துக்களில் நச்சுநிரல் கலந்துள்ளதா
என்று ஆய்வு செய்வோமா??

  நச்சு எழுத்துக்கள்...

எழுத்துப் பிழை, பிறமொழிக் கலப்பு, தவறான சிந்தனை, தவறான வழிகாட்டல், தன்னம்பிக்கையற்ற வார்த்தைகள்....

போன்ற நச்சு நிரல்கள் நம் எழுத்துக்களில் கலந்திருக்கிறதா?
அதனாலென்ன திருத்திக்கொள்வோம்..

            தமிழ் உறவுகளே..

நம் விரல்களுக்குத் தமிழ் மை ஊற்றுவோம்..
தட்டச்சுப்பலகைகள் வழியே
தமிழ் மொழிக்கு வளம் சேர்ப்போம்..


வேறொருவர் கண்டுபிடிப்புக்கெல்லாம்
நாம் தமிழில் பெயர் கண்டு
இயம்பியது போதும்..

இனிமேலாவது
தமிழனின் கண்டுபிடிப்புக்கு
இன்னொருவர் பெயர் வைக்கும்
நிலையை உருவாக்குவோம்..

நம் துறை சார்ந்த
சிந்தனைகளை
படைப்பாக்கத் திறனை
கண்டுபிடிப்புகளை
அனுபவங்களை
இயன்றவரை இனியதமிழில்
பதிவு செய்வோம்!


கலைச் சொல்லாக்கம்.

virus  - நச்சுநிரல்
Antivirus  - எதிர்ப்பு நச்சுநிரல்

நயமான ஊடல்.


பரத்தையரிடமிருந்து மீண்டும் தலைவியிடம் வந்த தலைவன் தம் 


புதல்வனைத் தூக்கி விளையாடினான்..

தலைவனுக்குத் தம் புதல்வனை நீங்கிச் செல்ல மனமும் இல்லை..

பரத்தையர் நினைவையும் அவனால் கைவிடமுடியவில்லை..

பரத்தையரோ தலைவன் வேறு யாருடனும் கூடக் கூடாது என்பதற்காகப் பல 


அணிகளையும் அடையாளமாக அணிவித்து அனுப்பிவைக்கிறாள். இதைப் 


பார்த்து ஊடல் (கோபம்) கொண்ட தலைவி தலைவனை நீ இங்கு 


இருக்கவேண்டாம் பரத்தையரிடமே செல்க என்று கோபமாகச் சொன்னாலும் 


நயமாக அவன் தவறை அவனுக்குப் புரியவைப்பது போலச் சொல்கிறாள்..

அழகான உவமை.

பறவைகள் ஒலிக்கின்ற அகன்ற வயல்! அங்கு,

ஒலிக்கின்ற செந்நெல் இடையிலே தாமரை மலர்ந்திருக்கிறது!

அந்தத் தாமரை மீது முதிர்ந்த கதிர்கள் சாய்ந்திருக்கின்றன!

இக்காட்சியானது புகழ்பெற்ற ஆடுமகளின் அழகிய நெற்றியில்  தாழும்படி 


அழகுடன் செருகி இருந்த “வயந்தகம்“ போல இருந்தது!

இத்தகைய குளிந்த துறையினைக் கொண்ட ஊரனே கேள்...

நயமான ஊடல்.

பரத்தையர் அணிந்த அணிகளோடு இங்கு வந்து நீ எம் புதல்வனைத் 
தூக்கவேண்டாம்...

மணியை ஒத்த அவனது சிவந்த வாயிலிருந்து ஊரும் நீரெல்லாம் உன் மார்பில் அணிந்த சந்தனத்தை அழித்துவிடும். பிறகு உன்னை அனுப்பிய பரத்தை நீ 


வேறு மகளிரோடு கூடினாயோ என்று வருந்துவாள் அல்லவா?

எம் புதல்வனை நீ தழுவுதல் வேண்டாம். அவன் உன் மார்பில் அணியப்பட்ட வடங்களாகிய முத்தாரத்தைப் பிடித்து அறுப்பான். பின்..  உன் பரத்தையர் அவரிட்ட அடையளம் காணாது... உன்னோடு ஊடிவிடுவார்களல்லவா?


எம் புதல்வனை நீ தேடி எடுத்துக்கொள்ளாதபோதும் அவன் உன்னிடம் வருதல் கண்டாலும் அவனைத் தூக்கிக்கொள்ளாதே..

நின் தலையில் வண்டுகள் ஒலிக்கும் மலர்க்கொத்துகள் அணிந்துள்ளாய்! அவன் அம்மாலையை அறுப்பான். உன்னைச் சேர்ந்தவர்கள் யார் என்பதை 


அறிய அடையாளமாக வைத்த மாலை அழகிழந்திருப்பதை அறிந்து அப்பரத்தையர் உன் மீது சினம் கொள்வாள் அல்லவா?


மலர் போல அழகிய கண்களைக் கொண்ட புதல்வனைப் பொய் பல சொல்லிப் பாராட்டி அவனைவிட்டு நீங்காமலும்...

உன் பரத்தையர் உனக்கு அடையாளமாக அணிவித்து அனுப்பிய மாலை, அணிகலன், சந்தனம் உள்ளிட்டவை சிதையாது அவனிடமிருந்து பாதுகாத்தும் உன்னால் இருக்கமுடியாது அதனால் நீ எம் வாயிலில் நிற்காதே..
நின்றால் அவன் உன் அணியைச் சிதைப்பான்...

அதனால் எம் புதல்வனை எம்மிடம் தந்துவிட்டு நீ மீண்டும் பரதையரிடமே செல்வாயாக.....
என்றாள் தலைவி..

பாடல் இதோ..



புள் இமிழ் அகல் வயல் ஒலி செந்நெல் இடைப் பூத்த 
முள் அரைத் தாமரை முழு முதல் சாய்த்து, அதன் 
வள் இதழ் உற நீடி, வயங்கிய ஒரு கதிர், 
அவை புகழ் அரங்கின்மேல் ஆடுவாள் அணி நுதல் 
வகை பெறச் செரீஇய வயந்தகம் போல், தோன்றும்

தகை பெறு கழனி அம் தண் துறை ஊர! கேள்: 
அணியொடு வந்து ஈங்கு எம் புதல்வனைக் கொள்ளாதி; 
மணி புரை செவ் வாய் நின் மார்பு அகலம் நனைப்பதால்; 
'தோய்ந்தாரை அறிகுவேன், யான்' என, கமழும் நின் 
சாந்தினால் குறி கொண்டாள் சாய்குவள் அல்லளோ;

புல்லல் எம் புதல்வனை; புகல் அகல் நின் மார்பில் 
பல் காழ் முத்து அணி ஆரம் பற்றினன் பரிவானான்; 
மாண் இழை மட நல்லார் முயக்கத்தை நின் மார்பில் 
பூணினால் குறி கொண்டாள் புலக்குவள் அல்லளோ; 
கண்டே எம் புதல்வனைக் கொள்ளாதி; நின் சென்னி

வண்டு இமிர் வகை இணர் வாங்கினன் பரிவானால்; 
'நண்ணியார்க் காட்டுவது இது' என, கமழும் நின் 
கண்ணியால் குறி கொண்டாள் காய்குவள் அல்லளோ; 
என ஆங்கு 
பூங் கண் புதல்வனைப் பொய் பல பாராட்டி,


நீங்காய் இகவாய் நெடுங் கடை நில்லாதி; 
ஆங்கே அவர் வயின் சென்றீ அணி சிதைப்பான் 
ஈங்கு எம் புதல்வனைத் தந்து.

கலித்தொகை -79
ஊடற் காலத்தே தலைவி தலைவனைச் செல்க எனக் கூறிவிடுத்தனள். தலைவன், இடமும் காலமும் பற்றி அறிந்து இனிச் செல்லான், உடன் இருப்பான்  என்ற நிலையில் ஊடல் உள்ளத்தால் கூடப் பெறாதாள்  செல்க எனக்கூறி விடுத்து ஆற்றினள்.

பாடல் வழியே..

  1. தலைவன் பரத்தையரிடம் செல்வது சங்ககால வழக்கமாக இருந்தது என்பதையும் அதனைச் சமூகம் தண்டிக்காவிட்டாலும். குடும்பத் தலைவி விரும்பவில்லை என்பதையும் பாடல் சுட்டுகிறது.
  2. தாமரை மலர் மீது நெற்கதிர்கள் தலைசாய்ந்திருப்பது  ஆடுமகளின் நெற்றிச்சுட்டி போல இருந்தது என்ற உவமை மனம் கொள்ளத்தக்கதாக உள்ளது.
  3. தலைவி தலைவன் மீது ஊடல் கொண்டாலும் நயமாகப் பேசும் விதம் தலைவன் தன் தவறை உணர தக்க கருவியாக அமைகிறது.

தமிழ்ச் சொல் அறிவோம்..

  1. இமிழ்தல் – ஒலித்தல்
  2. செரிஇய  - செருகிய
  3. வயந்தகம் – நெற்றிச்சுட்டி
  4. பல்காழ் – பல்வடம் (அணிகலன்)
  5. காய்ககுவள் – வருந்துவள்.
தொடர்பான இடுகைகள்

செவ்வாய், 4 அக்டோபர், 2011

சாலையைக் கடக்கும் பொழுதுகளில்..

ஒவ்வொரு நாளும் நாம் சாலையைக் கடக்கும்போது எத்தனை எத்தனை காட்சிகளைப் பார்க்கிறோம்..


சில மணித்துளிகளே ஆனாலும் பல மணி நேர சிந்தனையைத் தூண்டுவனவாக இந்தக் காட்சிகள் அமைவதுண்டு..


என் மனதில் கேள்வி எழுப்பிய..
என்னைச் சிந்திக்கச் செய்த..


சில காட்சிகள் இங்கே..

முதுகெலும்பு
மூட்டை தூக்கி வாழ்ந்தாலும்
முதுகெலும்போடு
வாழ்கிறேன்!

--000--



மனசு
 குப்பையை
சுத்தம் செய்தாலும்
மனசு அழுக்காய்ப்
போவதில்லை!
எமனின் அழைப்பு..
கடவுளின் குரல்!
பேருந்தின் உள்ளே கடவுள்
நடத்துனர் வடிவில் வந்து..
உள்ளே வா! உள்ளே வா!
என்று அழைக்கிறார்..

வெளியே எமன்
அலைபேசி வடிவில் வந்து..
என்னோடு வா! என்னோடு வா!
என்ற அழைக்கிறார்..

பேருந்தின் உள்ளே ஓடும்
பாடலின் பேரோசையில்

கடவுளின் குரல் கேட்பதில்லை!!

தொடர்புடைய இடுகைகள்