வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

செவ்வாய், 21 மார்ச், 2017

நேரம் கிடைத்திருந்தால்..

புத்தகம் என்ற சொல்லுக்கு, புத்தி அகம் என்று பொருள் கொள்வது நலம்.
புத்தகம் எழுதுவது என்பது பலருக்கும் கனவு!
அந்தக் கனவு பலருக்கும் கனவாகவே போய்விடும்!
ஏனென்றால் அவர்களுக்குக் கனவுகாண நேரம் கிடைக்கும்!
அதை செயல்படுத்த நேரம் கிடைக்காது!
சிலர் புத்தகம் எழுதுவதற்கென நேரம் ஒதுக்கி எழுதுவதும் உண்டு. சிலர் எண்ணிலடங்கா பக்கங்களை எழுதிக் குவித்துவிடுவதும் உண்டு.
அதனால்தான் நம் முன்னோர்கள் சொன்னார்கள் போலும்..
“ கண்டதைக் கற்றவன் பண்டிதன் ஆவான் ” என்று.
கண்டதை என்றால் கண்ணில் படும் எதையும் என்று பொருள் கொள்வதைவிட பயனற்ற பல நூல்களைக் கண்டு அதில் சிறந்த நூலைக் கண்டு அதைக் கற்றவன் பண்டிதனாவான் எனப் பொருள் கொள்வதே சரியானதாக இருக்கும்.
நேரம் கிடைத்திருந்தால்…
நான் அதைச் செய்திருப்பேன், இதைச் செய்திருப்பேன் என நாம் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு சூழலில் சொல்லியிருப்போம்..
பிரிட்டன் பிரதமர் வின்சென்ட் சர்ச்சில் ஒரு புத்தகம் எழுதியிருந்தார். அந்தப் புத்தகம் 40 பக்கங்களை மட்டுமே கொண்டது. அதைப் படித்த ஒருவர், “ தாங்கள் இந்தப் புத்தகத்தை இன்னும் அதிக பக்கங்களில் எழுதியிருக்கலாமே… நேரம் கிடைக்கவில்லையா?” என்று கேட்டார்.
அதற்கு சர்ச்சில் அவர்கள், “எனக்கு இன்னும் நேரம் கிடைத்திருந்தால் இதையே நான் ஐந்து பக்கங்களில் சுருக்கி எழுதியிருப்பேன்” என்றார்.

இந்த எதிர்பாராத பதில் புத்தகம் எழுத விரும்பும் ஒவ்வொருவருக்கும் தேவையான அறிவுரையாகவே அமைகிறது.
நல்ல பேச்சு என்பது…
சிறந்த வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசுவது மட்டுமல்ல!
எந்த வார்த்தை பேசக்கூடாது என்று உணர்ந்து பேசுவதே!
அதுபோல நல்ல நூல் என்பது..
சிறந்த கருத்தை தேர்ந்தெடுத்துச் சொல்வது மட்டுமல்ல!
தேவையில்லாத கருத்துக்களை எழுதாமல் இருப்பதும் தான்!


எனக்கு மட்டும் நேரம் இருந்திருந்தால் இதை ஐந்தே வரிகளில் சொல்லியிருப்பேன்..!

ஞாயிறு, 19 மார்ச், 2017

மொழி ஞாயிறு!


ஞாலமுதல்மொழி தமிழ்!
திராவிட மொழிகளின்  தாய்மொழி தமிழ்!
ஆரியத்திற்கு மூலமாகவும் விளங்கிய மொழி தமிழ்! என வாதிட்டவர்!
கிரேக்கம், இலத்தீன், சமற்கிருதம் உள்ளிட்டவைகளுக்குத் தன் சொற்கள் பலவற்றை அளித்தது தமிழ் என  நிறுவியவர்!
40 க்கும் மேலான மொழிகளைக் கற்று சொல்லாராய்ச்சி செய்தவர், மறைமலையடிகளார் வழி நின்று தனித்தமிழ் இயக்கத்தை வளர்த்தெடுத்தவர்,
அவர்தான் தேவநேயப் பாவாணர்!
சொல்லாராய்ச்சி முறையில் தமிழின் தொன்மையையும் சிறப்பையும் உலகறியச் செய்தவர்!
தேவமொழியென்று ஏமாற்றித் தமிழ்நாட்டிற் புகுத்தப்பட்ட வடமொழியாலேயே தமிழ்மொழி தாழ்ச்சியடைந்தது,
அதனால் தமிழனும் தாழ்த்தப்பட்டான். எனவே,
தமிழன் மீண்டும் முன்னேற வேண்டுமானால்,
தமிழ்மொழி வடமொழியினின்று விடுதலையடைதல் வேண்டும்” என்று எண்ணினார் பாவாணர்.
இவர் வாழ்வின் திருப்புமுனை,
பாவாணர் ஒருமுறை திருப்பனந்தாள் மடத்திற்குச் சென்றிருந்தார். அங்குப் பாவாணரும் வேறு சில தமிழரும் விடுதித் தாழ்வார அறையில் தங்கியிருந்தனர். பிராமணர்க்கெல்லாம் தங்குவதற்கு உள்ளே அறைகள் கொடுக்கப்பட்டிருந்ததுமல்லாமல், நண்பகல் உணவு பிராமணர்க்கு முதலில் பரிமாறப்பட்ட பின்னரே தமிழர்க்குப் பிற்பகல் மூன்று மணிக்குப் பரிமாறப்பட்டது. காலத்தாழ்வு ஏற்பட்டதைக் குறித்து வினவியபோது, அங்குள்ளோர் அப்போதுதான் பிராமணப் பந்தி முடிந்ததென்று தெரிவித்துள்ளனர். அப்போது, பாவாணர் தமிழர் குமுகாயம் அந்த அளவிற்குத் தாழ்ந்துபோன நிலை கண்டு, மிகுந்த வருத்தமடைந்திருக்கிறார்.

“நாடு தமிழ்நாடு! மடம் தமிழர் மடம்! சமயம் தமிழர் சமயம்! பணம் தமிழர் பணம்!” அங்ஙனமிருந்தும், தமிழன் நாய் போல் நடத்தப்படுவது இன்றும் தொடர்கின்றதென்றால், தமிழனைப் பிராமண அடிமைத் தனத்திலிருந்து மீட்டே ஆக வேண்டுமென்று மனம் குமுறுகின்றார் பாவாணர். தமிழனை மீட்கும் பணியிலும் ஈடுபடுகின்றார்

  “தமிழை வடமொழியினின்றும் தமிழனை ஆரியனிடமிருந்தும் மீட்க வேண்டும். அதற்காகவே ஏறத்தாழ அறுபதாண்டு காலமாக மொழியாராய்ச்சியில் ஈடுபட்டேன். தமிழ் திராவிடத்திற்குத் தாயும் ஆரியத்திற்கு மூலமும் என்ற உண்மையை உலகறியச் செய்ய வேண்டும். இதற்கு மிகுந்த நெஞ்சுரமும் தற்சார்பு மனப்பான்மையும் வேண்டும். இவை பிறர்க்கு இல்லை. இதற்காகவே இறைவன் என்னைப் படைத்தார்” என்று உரைக்கின்றார் பாவாணர்.

வடமொழியினின்று தமிழை மீட்பதே தமது வாழ்க்கைக் குறிக்கோளாகக் கருதி, தமிழ், தமிழர் நலம் காப்பதையே தமது உயிர் மூச்சாகக் கொண்டார் கொண்டு வாழ்ந்த மொழிஞாயிறு பாவாணரின் தமிழ்ப் பணியைப் போற்றுவோம்!
தமிழின் பெருமையை உணர்வோம்!
பிறமொழிகளையும் கற்போம்!
என்றாலும்,
தனித்தமிழில் பேசுவோம்!
தமிழின் பெருமையை உலகறியச் செய்வோம்!



வியாழன், 16 மார்ச், 2017

பில்கேட்சு என்னும் நிரலாளர்!


உலக கோடிசுவரர்கள் பட்டியலில் 12 ஆண்டுகளாக முதலிடம்!
13 வயதில் கணினிக்கான மென்பொருள் எழுதக் கற்றவர்.
மைக்ரோ சாப்ட் நிறுவனத்தை உருவாக்கி ஹார்வர்டு பல்கலைக்கழகப் படிப்பைப் பாதியில் விட்டவர். என்றாலும் அவரது உழைப்பு அவருக்கு அதே பல்கலைக்கழகத்திடமிருந்து  டாக்டர் பட்டத்தைப் பெற்றுத்தந்தது. ஆம் அவர்தான் மைக்ரோ சாப்ட் நிறுவனர் பில்கேட்சு.
இயங்குதளம், ஆபீசு தொகுப்புகள், உலவி, தேடுபொறி என பல துறைகளிலும் இவரின் ஆதிக்கம் இன்றும் தொடர்கிறது. எத்தனை போட்டியாளர்கள் வந்தாலும் காலத்துக்கு ஏற்ப தம் தயாரிப்புகளை வழங்குவதில் சிறந்து விளங்கும் இவரின் திறனே இவர் இத்துறையில் மாபெரும் சாதனையாளராக இருப்பதன் அடிப்படையாக உள்ளது.

1999 ல் இவர், The Road Ahead, Business @ the Speed of Thought என்ற நூலை எழுதினார் 25 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு 60 நாடுகளில் இந்நூல் விற்பனையாகிறது.
1975 ல் ஒவ்வொரு இல்லத்திலும் ஒவ்வொரு மேசையிலும் ஒரு கணினி இருக்கவேண்டும் என ஆசைப்பட்டார் பில்கேட்சு. அவரது கனவின் உயரமே இன்று அவரின் சாதனையின் உயரம்!

இன்று அவரது நிறுவனத்தில், 85 நாடுகளில் 88 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றிவருகிறார்கள்
பள்ளியில் படித்த காலத்தில் கணக்கு மற்றும் அறிவியல் துறையின் மீது அளவுகடந்த ஆர்வமிருந்தது. இருந்தாலும் தந்தையைப் போல வழக்கறிஞராக ஆகவேண்டும் என்பதே அவரின் ஆசையாக இருந்தது.
 13 வயதில் கணினி மீது இவருக்கு ஏற்பட்ட காதலும் இவருக்கு நண்பராக வாய்த்த பால் ஆலன் என்பவரும் இவர் வாழ்வின் திருப்புமுனை எனலாம்.
“பில்கேட்சின் போட்டியாளர்கள் குறிவைப்பது
பெரிய பெரிய நிறுவனங்களை,
ஆனால் பில்கேட்சு குறிவைப்பதே
சராசரி மக்களையும் அவர்களின் தேவையையும்!”
சமூக மாற்றத்தை உற்றுநோக்குதல், மக்களின் தேவையைப் புரிந்துகொள்தல் அதற்கான தீர்வுகளை யாராவது கண்டுபிடிப்பார்கள் என்று காத்திருக்காமல் தாமே அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுதல் என்ற பண்புகளை பில்கேட்சின் வாழ்க்கை தரும் பாடமாக நாம் கொள்ளலாம்.


புதன், 15 மார்ச், 2017

பன்னாட்டுக் கருத்தரங்க அழைப்பிதழ்


தமிழர் ஓவியம் பன்னாட்டுக் கருத்தரங்கம்




செவ்வாய், 14 மார்ச், 2017

இந்தியா – வியப்பளிக்கும் புள்ளிவிவரங்கள்!




வாய்மையே வெல்லும் என்பதுதான் இந்தியாவின் குறிக்கோள். என்றாலும், ஊழல் நிறைந்த நாடுகளின் வரிசையில் இந்தியா முதலிடம். வியட்நாம் இரண்டாம் இடத்தையும், தாய்லாந்து மூன்றாவது இடத்தையும் பெறுகின்றன.

ஒலிம்பிக் போட்டிகளில் எப்போதும் கடைசியில்தான் முதலிடம் பிடிப்போம் என்றாலும், கிரிக்கெட் டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி முதலிடம்.  இரண்டாவது இடத்தில் ஆத்ரேலியாவும் மூன்றாவது இடத்தில் தென்ஆப்பிரிக்காவும் உள்ளன.

சீனா கடைபிடிக்கும் மொழிக்கொள்கை, பொருளாதாரக் கொள்கை, தொழில்நுட்பப் புரட்சி என எதையுமே போட்டியாக நினைக்காதவர்கள் இந்தியர்கள் இருந்தாலும் சீனாவின் மக்கள் தொகையோடு மட்டும் போட்டிபோட்டு வருகிறோம். அதனால்
உலக மக்கள் தொகையில் இரண்டாவது இடம் இந்தியாவுக்கு, சீனா முதலிடத்திலும், அமெரிக்கா மூன்றாவது இடத்திலும் உள்ளன.

போட்டிபோட்டுக்கொண்டு செய்திகளை வழங்கும் தொலைக்காட்சிகள், வானொலிகள், சமூகத் தளங்கள் என அதன் வளர்ச்சிக்கு ஒன்றும் குறையில்லை. என்றாலும்,
பொய்யான செய்திகளை வழங்குவதில் இந்திய ஊடகம் உலக அளவில் இரண்டாவது பிடித்துள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் இடத்தில் ஆஸ்திரேலியா உள்ளது. மூன்றாவது இடத்தில் அயர்லாந்து 

வன்பொருள், மென்பொருள், திறன்பேசி என பெரிதும் நம்  நாட்டின் கண்டுபிடிப்புகள் கிடையாது. என்றாலும்,
இணையப் பயன்பாடுகள் வரிசையில் இரண்டாவது இடத்தில் இந்தியா, முதலிடத்தில் சீனாவும் மூன்றாவது இடத்தில் அமெரிக்காவும் உள்ளன.

ஒருவனுக்கு ஒருத்தி என்போம்! கற்பில் சிறந்தவள் யார் என்று பட்டிமன்றங்கள் வைப்போம் என்றாலும்,
எச்.ஐ.வி. பாதிப்பில் மூன்றாவது இடத்தில் இந்தியா
தென் ஆப்பிரிக்கா முதலிடத்திலும், நைஜீரியா இரண்டாம் இடத்திலும் உள்ளன.


பெண்கள் நாட்டின் கண்கள் என்போம், மங்கையராய் பிறப்பதற்கே மாதவம் செய்திடல் வேண்டும் என்போம், இருந்தாலும், உலகில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத நாடுகள் வரிசையில் இந்தியாவுக்கு நான்காவது இடம் உலகிலேயே பெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாடாக திகழ்வது ஆப்கானிஸ்தான். 2வது இடத்தில் காங்கோவும், 3வது இடத்தில் பாகிஸ்தானும் உள்ளன.


சங்ககாலம் தொடங்கிய ஏறுதழுவுதல் முதல் பல விளையாட்டுகளைக் கொண்ட நாம் கிரிக்கெட் மட்டுமே பெரிதெனக் கொண்டாடுகிறோம். அதனால் ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசையில் உலக அளவில் நான்காவது இடத்தில் இந்தியா. முதலிடத்தில் தென்ஆப்பிரிக்காவும் இரண்டாவது இடத்தில் ஆத்ரேலியாவும் உள்ளன.

·         உலக கால்பந்து அணிகள் தரவரிசையில் 41 வது இடத்தில் இந்தியா, முதலிடத்தில் ஜெர்மனியும், இரண்டாவது இடத்தில் பெல்ஜியமும் உள்ளன.

·         தடுக்கி விழுந்தால் பள்ளிக்கூடங்கள் எழுந்து நடந்தால், கல்லூரிகள், விரைந்து நடந்தால் பல்கலைக்கழகங்கள் என எங்கும் வணிகமான கல்வி இருந்தாலும், எழுத்தறிவில் இந்தியா 233 நாடுகளுள் 168 வது இடத்தில்! 82 விழுக்காடு ஆண்களும் 65 விழுக்காடு பெண்களும் எழுத்தறிவு பெற்றுள்ளனர். இந்தியாவின் மொத்த எழுத்தறிவு 73.8 விழுக்காடு பின்லாந்து, கிரீன்லாந்து உள்ளிட்ட பல நாடுகள் 100 விழுக்காடு பெற்றுள்ளன

உலகின் தலைசிறந்த நாடுகள் பட்டியலில் 81 வது இடத்தில் இந்தியா.

மேற்கண்ட இந்தியா பற்றிய புள்ளிவிவரங்கள் உங்களுக்கு வியப்பளிக்கலாம்.
இந்தியர்களின் பலம் மனிதவளம்,
பலவீனம் அம்மனித வளத்தை நம் நாட்டின் வளர்ச்சிக்குப் பயன்படுத்தாமலிருப்பது.
ஆம் இந்தியா வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் எத்தனை எத்தனை போர்க்களங்கள் எல்லாம் நம் நாட்டின் வளத்துக்கான படையெடுப்புகள்! இன்றும் அந்தப் படையெடுப்புகள் தொடர்கின்றன. அதன் வடிவங்கள் தான் மாறியிருக்கின்றன.

நாம் சுதந்திரம் பெற்றுவிட்டோம் நாம் யாருக்கும் அடிமையில்லை என்று சொல்லிக்கொண்டாலும் இன்னும் நம் நாட்டில் நடப்பது பன்னாட்டு வணிக நிறுவனங்களின் ஆட்சிதான்!

மெக்காலே கல்வி என்றபெயரில் நம் குருகுலக்கல்விமுறையை ஒழித்து தாய்மொழியைப் பறித்து நம்மை இன்னும் ஆங்கில மொழிக்கு அடிமைகளாக, சுயசிந்தனையற்றவர்களாக வைத்திருப்பதில் இருக்கிறது நாம் ஏன் அடிமையானோம் என்ற கேள்விக்கான பதில்!