பொறுப்பு
(Responsibility) மற்றும் கடமை (Duty) ஆகிய இரண்டும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை என்றாலும், அவற்றுக்கு இடையே நுட்பமான
வேறுபாடு உண்டு.
கடமை என்பது,
சமூகம், சட்டம் அல்லது விதிமுறைகளால் நமக்கு வழங்கப்பட்ட
செயல். பொறுப்பு என்பது, ஒரு செயலின் விளைவுகளுக்குத்
தானே முழுமையான பொறுப்பேற்கும் மனநிலை.
கடமை, வெளிப்புறத்தில் இருந்து கட்டாயப்படுத்தப்படுவது
பொறுப்பு மனதிலிருந்து
தானாக எழுவது.
கடமை மீறினால் தண்டனை அல்லது விமர்சனம் தோன்றும்,
பொறுப்பை மீறினால் மனசாட்சி உறுத்தும்,
கடமை என்பது என்ன
செய்ய வேண்டும் என்பதைக் குறிக்கிறது;
பொறுப்பு என்பது
அதை எப்படிப்பட்ட உணர்வோடு செய்கிறோம் என்பதைக் குறிக்கிறது.
தீதும் நன்றும் பிறர் தர வாரா என்று தனிமனிதப் பொறுப்பை உரைத்தார் கணியன் பூங்குன்றனார்.
பொறுப்பை கொடுங்கள்;
அப்போது வலிமையற்றவனும் வலிமை
மிக்கவனாவான், அறிவற்றவனும்
அறிவுடையவனாவான் என்பது விவேகானந்தர் வாக்கு.
சிலர் இயல்பாகவே பொறுப்புணர்ச்சியுடையவர்களாக இருப்பார்கள்,
சிலருக்கு அனுபவத்துக்குப் பின்தான் பொறுப்புணர்ச்சி
வரும்..
சிலர் பொறுப்புணர்வில்லாமலேயே வாழ்வார்கள்.
பொறுப்புணர்ச்சி தான் ஒருவரின் மீதான மதிப்பை
உருவாக்குகிறது.
நேரம் தவறாமை, விதிமுறைகளைப் பின்பற்றுதல், பதவிக்கேற்ற
பொறுப்புணர்ச்சியுடன் பணியாற்றுதல் என வாழ்வின் எல்லா நிலைகளிலும் பொறுப்புணர்வு
யாவருக்கும் தேவை..
சிலர் பொறுப்புகளைத் தாமே எடுத்துக்கொள்வர், சிலர்
கொடுத்தாலும் அதன் மதிப்பை உணர்வதும் இல்லை. அதன் படி நடப்பதும் இல்லை.
வெற்றிகளுக்குப் பொறுப்பேற்பது போல தோல்விகளுக்கும்
பொறுப்பேற்பவர்கள் சிலரே..
குழந்தைகள், நடைபழகும் போது கீழே விழுவது இயல்பு. அவ்வாறு விழுந்து அழும்
குழந்தைகளை அவசரமாக ஓடிச்சென்று தூக்கி அன்பைப் பொழிந்து அக்குழந்தைகளிடம், உன்னை
யார் கீழே விழவைத்தது. இந்தத் தரைதானே இதோ தரையை அடிக்கிறேன் பார், என குழந்தையை
சமாதானப் படுத்தும் பெற்றோர் சிலர் உண்டு. அந்தக் குழந்தை அப்போதே தன் தவறுக்கு
இன்னொருவர் பொறுப்பேற்கவேண்டும் என முடிவு செய்துவிடுகிறதே. குழந்தைகள் தவறு
செய்தபோது அவர்களைத் திட்டாமல் அந்தத் தவறை அவர்களுக்குப் புரியவைக்கும்
பெற்றோர்களால்தான் பொறுப்புணர்வுள்ள பிள்ளைகளை வளர்க்கமுடியும்.
பொறுப்புணர்ச்சி என்பது ஒரு உள்ளுணர்வு..
ஒரு பேருந்துப் பயணத்தில், நடத்துனர் படியின் அருகே நின்று ஏதோ
குறிப்பு எழுதிக்கொண்டிருக்கிறார்.
அதே நேரம்
அவரின் அருகே படியில் இறங்கக் காத்திருந்த பயணி ஒருவர் கவனக்குறைவால் தடுமாறி
படியிலிருந்து சாலையில் விழப்போகிறார், நடத்துனர் கண் இமைக்கும் நேரத்தில் அந்த
பயணியின் கையைப் பிடித்து காப்பாற்றிவிட்டார். பயணச் சீட்டு கொடுப்பது மட்டுமே என்
வேலை என்று கருதாமல் இந்தப் பேருந்தில் வரும் ஒவ்வொரு பயணிகளின் உயிருக்கும் நான் தான்
பொறுப்பு என்ற உள்ளுணர்வு அந்த நடத்துனருக்கு இருந்திருந்தால் மட்டுமே இவ்வாறு
அந்தப் பயணியின் உயிரைக் காத்திருக்கமுடியும்.
சொல்லுவது யாருக்கும் எளிய என்றாலும் சொல்லியவாறு செயலில்
காட்டுவது அரிது. கடமையை மீறுவதற்கான சூழல்களிலும் சிலர் கடமை மீறாமல் சூழ்நிலைகளை
தன்வசப்படுத்துவதுண்டு.
கருமம் சிதையாமல் கண்ணோட
வல்லார்க்கு
உரிமை உடைத்திவ் வுலகு. (குறள் -578)
கடமைக்கும் பொறுப்புக்கும் இடையே
உள்ள தொடர்பையும், அவற்றுக்கு இடையேயான சமநிலையையும் (Balance)
தன் கடமை அல்லது எடுத்துக்கொண்ட செயல் கெட்டுவிடாமல், அதே நேரத்தில் அன்பும் இரக்கமும் கொண்டு செயல்பட வல்லவருக்கு உலகம் உரிமை
உடையது என்றார் திருவள்ளுவர்.
நமக்கு அளிக்கப்பட்ட பணி அல்லது சட்ட திட்டங்களுக்கு உட்பட்டுச் செய்ய
வேண்டிய முதன்மைச் செயலைச் செவ்வனே செய்து முடிப்பது கடமை. கடமையில் எவ்விதத் தொய்வும் அல்லது விதிமீறலும் இருக்கக் கூடாது வெறும்
இயந்திரத்தனமாக விதிகளை மட்டும் பின்பற்றாமல், மனிதநேயத்தோடும், பிறர் நலனைக் கருத்தில் கொண்டும்,
அதன் விளைவுகளை உணர்ந்து செயல்படுவோரே
பொறுப்புணர்வுடையவர்களாவர்.
தனி மனிதப் பொறுப்புகள் சேர்ந்து தான் சமூகப் பொறுப்பாக
வெளிப்படுகிறது.
பல நாடுகளில் குழந்தைகளுக்கு பாடம் கற்பிக்கும் முன், நல்ல
பழக்கவழக்கங்கள், நாட்டின் சட்டதிட்டங்கள், சாலை விதிமுறைகள், சக மனிதர்களிடம்
எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும் என்பதைக் கற்பிக்கின்றனர்.
சட்டதிட்டங்களால் மட்டுமே ஒரு நாடு உயர்வடைவதில்லை.
கடமையை உணர்ந்து அதைப் பின்பற்றும் மக்களால்தான் அந்த நாடு
பெருமை பெறும்.
ஒரு மருத்துவரின் பொறுப்பின்மை உயிரைப்
பறிக்கும்.
ஒரு வழக்கறிஞரின் பொறுப்பின்மை அப்பாவியைத்
தண்டிக்கும்.
ஒரு பொறியாளரின் பொறுப்பின்மை கட்டிடங்களையே தகர்க்கும்.
அதுபோல ஒரு ஆட்சியாளனின்
நடத்தையில் அந்த நாட்டின் மொத்த மக்களின் உயிரும் இருக்கிறது என்பதை ஒவ்வொரு
ஆட்சியாளர்க்கும் உணர்த்தும் விதமாக,
“நெல்லும் உயிர் அன்றே நீரும் உயிர் அன்றே
மன்னன் உயிர்த்தே மலர் தலை உலகம்
அதனால் யான் உயிர் என்பது அறிகை
வேல்மிகு தானை வேந்தர்க்குக் கடனே.” என்று பாடினார் மோசிக்கீரனார்
(புறநா-186)
பரந்த இடத்தைக் கொண்ட உலகம், வேந்தனாகிய உயிரைக் கொண்டுள்ளது.
அதனால் இந்த உலகத்தாருக்கு நெல்லும் உயிரன்று! நீரும் உயிரன்று!
இவ்வுலகிற்கு தானே உயிர் என்பதை அறிந்து அதற்கேற்ப மக்கள் நலனில்
ஆர்வமுடையவனாக இருத்தல் அரசனுக்குக் கடமையாகும்
என்பது இப்பாடலின் பொருள்.
"ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே
என்ற பாடலில் பொன்முடியார், தாய், தந்தை, கொல்லன், அரசன், காளை என ஒவ்வொருவரின் பொறுப்பையும்
எடுத்துரைக்கிறார்.
நள்ளியைப் பரணர் பாடிய புறநானூற்றுப் பாடலில்,
(நள்ளி! வாழியோ நள்ளி! நள்ளென்
மாலை மருதம் பண்ணி காலை
கைவழி மருங்கின் செவ்வழி பண்ணி
வரவு எமர் மறந்தனர் – அது நீ
புரவுக் கடன் பூண்ட வண்மையானே (புறநானூறு -149
கண்டீரக் கோப்பெருநள்ளியை வன்பரணர் பாடியது.)
பாணருக்கு
வறுமை தோன்றாத வண்ணம் “நள்ளி“ கொடை கொடுத்தலால் அவர்கள் தம் கடமையை மறந்து... மாலையில்
மருதப்பண்ணும் காலையில் செவ்வழிப்பண்ணும்
வாசித்தனர். இசைநூல் முறைமையை மறந்தனர்.
பாணர்கள் இவ்வாறு தம் கடமையை மறந்ததற்குக் காரணம் நீதான் எனப்
புலவர் நள்ளியைச் சுட்டுகிறார். நேரடியாகப் பார்த்தல் நள்ளியைக் குறை கூறுவது போல
இருந்தாலும், நள்ளியின் கொடைத் தன்மையின் சிறப்பைப்
போற்றுவதாகவே உள்ளது.
கடமையை மறப்பதும், கடமையை மீறுவதும் பெருமையல்ல
நமது தோல்விகளுக்குப் பிறரைக் குற்றம் சாட்டுவதும்,
சூழ்நிலையைக் குறை சொல்வதும் எளிது;
ஆனால், "என்
வாழ்க்கையின் உயர்வுக்கு நான் மட்டுமே பொறுப்பு" என நாம் என்று உணர்கிறோமோ, அன்றே நமது
வெற்றிப் பயணம் தொடங்குகிறது.
முனைவர் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பி.எஸ்.ஜி கலை அறிவியல்
கல்லூரி
கோயம்புத்தூர்
9524439008

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக