வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திங்கள், 26 செப்டம்பர், 2011

எதிர்பாராத பதில்கள்.



மாணவர்களிடம் பண்பாடு குறித்து உரையாடும்போது கேட்டேன்..
பண்பாடு என்றால் என்ன?? என்று...

சில மாணவர்கள் சரியாகப் பதிலளித்தாலும், ஒரு சில மாணவர்கள் சொன்ன பதில் நான் சற்றும் எதிர்பாராததாக அமைந்தது..

1. ஏதாவது கூட்டமாக இருந்தால் அங்கு என்ன நடக்கிறது என்று எட்டிப் பார்ப்பது நம் பண்பாடு.
2. யாரையாவது திட்டுவது என்றால் மண்ணை வாறித் தூற்றுவது நம் பண்பாடு.
3. தூரத்தில் வரும்போது யாரையாவது திட்டினாலும் அருகே வரும்போது உங்களைப் பற்றிதான் இவ்வளவு நேரம் பெருமையாகப் பேசினேன் என்று கூறுவதுதான் தமிழர் பண்பாடு.
4. கடையில் சாமி கும்பிட்ட பின்னர் சாலையில் தேங்காய் உடைப்பதும் நம் பண்பாடுதான்.
5. யாரும் இறந்துவிட்டால் செத்துப்போயிட்டார் என்று சொல்லாமல் இயற்கை எய்திவிட்டார் என்று நாகரீகமாகச் சொல்வது நம் பண்பாடு என்று எதிர்பாராத பல்வேறு பதில்களை அளித்தார்கள்.

சரி தமிழர் பண்பாடுகள் குறித்து ஒரு பதிவு எழுதலாம் என எண்ணி இன்றைய பதிவைத் தமிழர் பண்பாடுகளை நினைவுபடுத்துவதாக வெளியிடுகிறேன்.

தமிழ் மொழி
தமிழர் அகவாழ்வியல் பண்பாட்டு நெறிகள்
தமிழர் புற வாழ்வியல் பண்பாட்டு நெறிகள்
தமிழர் கட்டிடக் கலை
தமிழர் சிற்பக் கலை
தமிழர் ஓவியக் கலை
தமிழர் நாடகக் கலை
தமிழர் இசைக் கலை
தமிழர் ஆடற்கலை
தமிழர் தற்காப்புக் கலை
தமிழர் யோகக் கலை
தமிழர் தத்துவவியல்
தமிழர் சமயங்கள்
தமிழர் வழிபாட்டு முறை
தமிழர் உணவுக்கலை
தமிழர் ஆடை மரபு


ஏறு தழுவுதல்
தமிழர் திருமண முறை
தமிழர் விளையாட்டுகள்
தமிழர் நம்பிக்கைகள்


மாட்டு வண்டிப் பந்தையம்
தமிழர் கப்பற் கலை
தமிழர் அரசியல்
தமிழர் உழவுமுறை
தமிழர் வணிகமுறை
தமிழர் கல்வி முறை
தமிழர் விருந்தோம்பல்
தமிழர் நாட்டுப்புறப் பாடல்கள்
தமிழர் மருத்துவ முறைகள்
தமிழர் சித்தர் மரபு
தமிழர் நீதி வழங்கும் முறைகள்




என ஒவ்வொன்றிலும் தமிழருக்கென தனித்துவமான பண்பாட்டு மரபுகள் உண்டு.

தமிழர் பண்பாடு குறித்த விக்கிப்பீடியாவின் தொகுப்பைக் காண.

 கிரிக்கெட்டும், டென்னசும் தானா விளையாட்டுக்கள்? தமிழர் பண்பாட்டை அடையாளப்படுத்தும் “36 வகையான பழந்தமிழர் விளையாட்டுக்கள்“

 நம் பண்பாடுகளை நாம் ஏன் தெரிந்துகொள்ளவேண்டும்? “தெரிய வேண்டிய தமிழர் பண்பாடு“

 நேரம் காலம் பார்க்காம எதுவும் செய்யலாமா? “சகுனம் பார்த்த பன்றி“

 “காலத்தை வெல்ல சகுனம் ஒரு தடையல்ல“

பழந்தமிழர் இசையிலும் தனித்துவமான பண்பாடு வளர்த்துவந்தனர். “ பழந்தமிழர் இசைக்கருவிகள்“

 பெண்கள் மலரணிவதில் கூட தமிழர்கள் பண்பாடு வளர்த்தனர். “பெண்களும் மலரணிதலும்“




ஞாயிறு, 25 செப்டம்பர், 2011

இரவலர் வாரா வைகல்!



இல்வாழ்வுக்குப் பொருள் அடிப்படையானது.
பொருள் நாம் இருக்கும் இடம் தேடி வாராது.
பொருள் இருக்கும் இடம் நாடி நாம் தான் செல்லவேண்டும்.
பொருளுக்காக இன்றும் பல ஆடவர்கள் தம் குடும்பத்தைப் பிரிந்து வெளிநாடுகளுக்குச் செல்வது இயல்பாகத்தான் உள்ளது.

அவ்வாறு செல்வோர் தம் குடும்பத்தைப் பிரிந்து செல்லவும், செல்லாமல் இருக்கவும் என்ன காரணம் சொல்கிறார்கள்..?

பிரிந்து செல்வோர்..
  • பொருளின்றி வாழமுடியாது. ஆடம்பரமாக வாழவோ, அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்துவாழவோ பொருள் தேவை.
  • வேறு நாடுகளுக்குச் சென்றால் நம் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும்...

பிரிந்து செல்லாமல் இருப்போர்..

  • என்னதான் பணம் சம்பாதிச்சாலும் நினைத்தவுடன் குடும்பத்தைப் பார்க்கமுடியாதே!
  • பொருள் தேட வெளிநாடு சென்று வந்தால் இளமை தொலைந்துவிடுமே அதை எங்கு தேடுவது?..

இதோ ஒரு அகப்பாடல்...

தலைவன் பொருள் தேடத் தன்னைப் பிரிந்து சென்றுவிடுவானோ என்று அஞ்சுகிறாள் தலைவி. அதனை உணர்ந்து அவளை ஆற்றுப்படுத்துகிறான் தலைவன்.

பாடல் இதோ..

“மெல் இயல் அரிவை! நின் நல் அகம் புலம்ப
நின் துறந்து அமைகுவென் ஆயின் – என் துறந்து
இரவலர் வாரா வைகல்
பல ஆகுக! – யான் செலவுறு தகவே“

இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த தலைவன் பிரிவச்சம் உரைத்தது

குறுந்தொகை -137
பாலை பாடிய பெருங்கடுங்கோ

(தலைவன் தலைவியைப் பிரிய அஞ்சுதலும்
தலைவி தலைவன் பிரிவுக்கு அஞ்சுதலும் “பிரிவச்சம்“ எனப்படும்.)

தலைவியிடம் சொல்கிறான் தலைவன்..

மென்மையான இயல்புடைய அரிவையே..
உன் நல்ல உள்ளம் தனித்து வருந்த உன்னை நீங்கிச் செல்வேனா?
அவ்வாறு சென்றால் உயிர்வாழ்வேனா?
அப்படி உயிர் வாழ்ந்தால்....

“நீண்ட நாட்களுக்கு என்னைத் தேடி இரவலர் வாராமல் போகட்டும்.
நான் இரவலர்க்குத் தானம் செய்ய முடியாது தவிர்த்து வருந்தும் நிலையை அடைவேனாகுக!“ என்று சூளுரைக்கிறான்.

தமிழ்ச் சொல் அறிவோம்.
  1. அரிவை – பெண்களின் பருவங்களில் ஒன்று
  2. அகம் – உள்ளம்
  3. வைகல் – நாள்
  4. தகவு  - தகுதி
  5. செலவு – செல்லுதல்
  6. புலம்ப – தனித்து வருந்த
  7. துறந்து – நீங்கி

பாடல் வழியே.

  1. பிரிவச்சம் என்னும் அகத்துறை விளக்கப்பட்டுள்ளது.
  2. இரவலர்க்கு ஈதல் இல்லறக் கடமைகளுள் ஒன்றாகவும், அவ்வாறு இரவலர் வாராமல் இருத்தலும், அவர்க்கு கொடுக்காத நிலையும் இழுக்காகவும் இவ்வகப்பாடல் அறிவுறுத்திச் செல்கிறது.
  3. இன்றைய வாழ்க்கையோடு இந்த சங்கப்பாடலை ஒப்பிட்டு நோக்கும்போது...
  இன்றைய வாழ்க்கையானது பெரும்பங்கு சுயநலம் நிறைந்ததாக மாறிப்போனதையும்...
   சங்ககால வாழ்க்கை சுயநலத்திலும் பெரும்பங்கு பொதுநலம் கலந்திருந்தமையையும் உணரமுடிகிறது.

சனி, 24 செப்டம்பர், 2011

A Chariot Wheel (புறநானூறு)

அறிவுக்கு மொழி எதுவும் கிடையாது!

தமிழ் மட்டுமே மொழி! பிற மொழிகளில் எதுவுமே இல்லை என்பது அறியாமையுடைய எண்ணமாகும்!

தமிழ் மொழியின செல்வங்களைப் பிற மொழியினர் உணரவும், பிறமொழியின் அறிவுச் செல்வங்களை நாம் உணரவும் நம்மால் முடிந்த வழிவகை செய்தல் வேண்டும்.

என் தமிழ் மொழியின் அறிவுச் செல்வங்களைக் கண்டு பல முறை வியந்து நின்றிருக்கிறேன்!

இதோ வீரம் என்பதற்கான அடையாளமாக ஒரு புறப்பாடல்..

Enemies
take care
when you enter
the battle
and face
our warrior

who is like a chariot wheel
made thought fully over month
by a carpenter
who tosses off eight chariot
in day


களம் புகல் ஓம்புமின், தெவ்விர்! போர் எதிர்ந்து
எம்முளும் உளன் ஒரு பொருநன் வைகல்
எண் தேர் செய்யும் தச்சன்
திங்கள் வலித்த கால் அன்னோனே.


புறநானூறு -87
திணை - தும்பை
துறை - தானை மறம்

அதியமான் நெடுமான் அஞ்சியை ஔவையார் பாடியது.


தானை - படை (படைகளின் வலிமையும் வீரமும் கூறுவது தானை மறமாகும்)

பகைவீர்!
போர்க்களம் புகுதலைத் தவிருங்கள்.
போரை எதிர்நோக்கியவனாக எம்மிடத்தும் ஒருவன் உள்ளான்.
அம்மறவன்,
ஒரு நாளில் எட்டுத் தேர் செய்யும் தச்சன்,
ஒரு மாதம் முயன்று செய்த ஓர் தேர்க்காலுக்கு ஒப்பானவன்!


அதனால் அவனை எதிர்ந்து நீங்கள் அழிந்து போகவேண்டாம் என்று “களம் புகல் ஓம்புமின் என்றார்.

இப்பாடலில் அதியமானின் வீரத்தை படைவீரனின் வீரமாகக் கூறியதால் “தானை மறமானது“

வெள்ளி, 23 செப்டம்பர், 2011

சுடர் வீ வேங்கை !

இயற்கையோடு உறவாடிய காலம் சங்ககாலம் ஆதலால் விலங்குகளின் வாழ்வியலை, அறிவியலடிப்படையிலும், கற்பனையாகவும், நகைச்சுவையாகவும் சங்கப் புலவர்கள் அழகுபட மொழிந்துள்ளனர்.

இதோ ஒரு பதிற்றுப்பத்தில் யானையின் பேதமையால் தோன்றும் நகையைப் பரணர் எவ்வளவு சுவைபடச் சொல்கிறார் என்று பாருங்கள்..

“புணர்புரி நரம்பின் தீம்தொடை பழுனிய
வணர்அமை நல்யாழ் இளையர் பொறுப்பப்
பண்அமை முழவும் பதலையும் பிறவும்
கண்அறுத் தியற்றிய தூம்பொடு சுருக்கிக்
காவில் தகைத்த துறைகூடு கலப்பையர் 5
கைவல் இளையர் கடவுள் பழிச்ச
மறப்புலிக் குழூஉக்குரல் செத்து வயக்களிறு
வரைசேர் பெஎழுந்த *சுடர்வீ வேங்கைப்*
பூவுடைப் பெருஞ்சினை வாங்கிப் பிளந்துதன்
மாஇருஞ் சென்னி அணிபெற மிலைச்சிச் 10
சேஎர் உற்ற செல்படை மறவர்
தண்டுடை வலத்தர் போர்எதிர்ந் தாங்கு
வழைஅமல் வியன்காடு சிலம்பப் பிளிறும்

பதிற்றுப் பத்து -41

தாளத்தோடு கூடியதும் முறுக்கிய நரம்பின் இனிய இசை நிறைவுற்றதும் வளைந்த அமைப்பினையுடையதுமான நல்ல யாழினை இளைய மகளிர் தாங்க,
தன் கண்களிலே இசையமைந்த மத்தளமும்,
ஒருகண் மாக்கிணையும் பிற வாத்தியங்களும்,
மூங்கிலின் கணுக்களை அறுத்து இயற்றப்பட்ட பெருவங்கியமும்,

சேர்த்துக் கட்டிய இளையர்கள் கடவுளை யாழிசைத்து வாழ்த்துகின்றனர்...

அப்பாட்டொலியானது மறமுடைய (வீரம்) புலிக் கூட்டத்தின் குரல் எனக் கருதி வலிமையுடைய ஆண்யானை பக்க மலையைப் பொருந்தி வளர்ந்த ஒளிவிடும் மலர்களையுடைய வேங்கை மரத்தின் அழகிய பெரிய கிளையை வளைத்துப் பிளந்து தம் கரிய பெரிய தலையில் அழகுபெறச் சூடிவருகிறது. அது போர்வீரர்கள் பகைவரை வெற்றிகண்ட பின்னர் ஆரவரித்து மகிழ்வதுபோல இருக்கிறது.


பாடல் வழியே..

1. இசையொலியை புலிக்கூட்டத்தின் ஒலி எனக் கருதிய யானை வேங்கை மரத்தைத் தாக்கும் செயல் படிப்போர் மனதில் நகையை ஏற்படுத்துவதாக உள்ளது.

2.வெற்றிபெற்ற வீரர்களின் செயலோடு ஒப்பிட்டு உரைக்கப்படும் யானையின் செயல் சரியான ஒப்பிடத்தக்க உவமையாக விளங்குகிறது.

தொடர்புடைய இடுகைகள்..

1.சிரிக்காதீங்க (நற்றிணை - புலியெனக் கருதிய யானை வேங்கை மரத்தைத் தாக்கித் தன் தந்தங்கள் சிக்கிக்கொள்ள வருந்தும் காட்சி படிப்போர் மனதில் பேதமை காரணமாக சிரிப்பை வரவழைக்கிறது. )


2.சங்க கால விலங்குகள் (நிழற்படங்களின் தொகுப்பு)

(சங்க இலக்கியத்தில் இடம்பெற்றுள்ள இதுபோன்ற பல நகைச்சுவை தரும் காட்சிகளை,
“சங்க இலக்கியத்தில் நகைச்சுவை என்ற உட்தலைப்பில் தொகுத்துவருகிறேன்)

புதன், 21 செப்டம்பர், 2011

இலக்கியத் திரட்டி

தமிழ் உறவுகளே....

இலக்கியம் வேறு வாழ்க்கை வேறு என்று என்னால் பிரித்துப் பார்க்கமுடியவில்லை.

இலக்கியங்கள் வாழ்க்கையைத்தான் பதிவு செய்கின்றன.

வாழ்வில் வெற்றி பெற்ற அறிஞர்கள் பலரும் சொல்கிறார்கள்...

நான் வாழ்க்கை இலக்கியமாக..

சங்க இலக்கியத்தைப் பின்பற்றிவருகிறேன்..
அற இலக்கியங்களைப் பின்பற்றிவருகிறேன்..
திருக்குறளைப் பின்பற்றி வருகிறேன்..
சிலம்பபைப் பின்பற்றி வருகிறேன்..
கம்பராமாயணத்தைப் பின்பற்றி வருகிறேன்..

என்று..
சமயம் எவ்வாறு மனிதனைப் பக்குவப்படுத்தத் தோன்றியதோ அதுபோலவே இலக்கியங்களும் மக்களைப் பண்படுத்தவே தோன்றின..

அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நாற்பொருளை உரைப்பதே இலக்கு!

இவ்விலக்கை இயம்புவதாலேயே “இலக்கியங்கள்“ என்ற பெயரும் பெற்றன.


இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழையும் சங்கம் வைத்து வளர்த்த பெருமை நம் தமிழுக்கு உண்டு..

முதல், இடை, கடைச் சங்கம்
சமணர் வளர்த்த சங்கம்
பாண்டித்துரைத்தேவர் வைத்த சங்கம்

எனப் பல சங்கம் வைத்து தமிழாய்ந்து நூல்கள் அரங்கேற்றப்பட்டன.

இன்று நான்காம் தமிழான “இணையத்தமிழ்“ மிக விரைவாக இணையப்பரப்பில் உலகுபரவி வளர்ந்து வருவது பெருமகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது.


தமிழ்மணம், இன்லி, தமிழ்வெளி, தமிழ்10, மாற்று, திரட்டி, உலவு எனப் பல வலைப்பதிவுத் திரட்டிகள் இருந்தாலும்...

அவற்றில்..

செய்திகள்
நகைச்சுவை
தொழில்நுட்பம்
படைப்புகள்
இவை போன்ற பகுப்புகளையே காணமுடிகிறது.

“இலக்கியம்“ என்றொரு பிரிவு இருந்தால் இன்னும் நன்றாக இருக்குமே என்று எனக்குத் தோன்றுகிறது.

ஏதோ என்னால் முடிந்தவரை இலக்கியம் சார்ந்த வலைப்பதிவுகளைத் திரட்டி “தமிழ்க்காற்று“ என்ற ஒரு வலைப்பக்கம் உருவாக்கியுள்ளேன். இதில் உங்கள் பதிவுகளும் இடம்பெற்றிருக்கலாம்..


தமிழ் உறவுகளே வாங்க..

தமிழ்க் காற்று வாங்க......