வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 16 ஆண்டுகளில் 1600க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சனி, 30 மே, 2020

பக்தி இலக்கியங்களின் தோற்றமும் வளர்ச்சியும்


வணிகமொழி ஆங்கிலம் என்றால், சட்டத்தின் மொழி இலத்தீன் என்றால், இசையின் மொழி கிரேக்கம் என்றால், தத்துவத்தின் மொழி ஜெர்மன், தூதின் மொழி பிரெஞ்சு என்றால் தமிழ் பக்தியின் மொழி என்றார் தனிநாயக அடிகளார்.

சங்க கால வழிபாடு
     சேர, சோழ, பாண்டிர் என மூவேந்தர்கள் ஆண்ட காலத்தை சங்க காலம் என்கிறோம். இக்காலத்தில் எழுந்த இலக்கியங்கள் சங்க இலக்கியங்கள் என அழைக்கப்படுகின்றன. சங்க இலக்கியங்களி முதன்மையனா பாடுபொருள் அகம், புறம் என காதலும் வீரமும் பேசப்படுகிறன்றன. என்றாலும் இயற்கை சார்ந்த வழிபாட்டு முறைகளையும் அவ்விலக்கியங்கள் பதிவுசெய்துள்ளன.

“மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையான் சொல்லவும் படுமே”

என, தொல்காப்பியர் நிலங்களின் பிரிவையும் அவற்றிற்குரிய கடவுளரையும் குறிப்பிட்டு இருக்கின்றார்.
குறிஞ்சிக்கடவுளாக முருகப்பெருமானும், மருதநிலத்துக் கடவுளாக இந்திரனும், நெய்தலில் வருணனையும், பாலை நிலத்தில் கொற்றவையையும், முல்லை நிலத்தில் திருமால் எனப்படும் மாயோனையும் சங்க காலத்தில் மக்கள் வழிபட்டனர் என்பதை இலக்கியங்கள் வழி அறியமுடிகிறது. சங்கப்ப பாடல்களில் சிவன் என்னும் பெயர் இமல்லை. இருந்தாலும் தாழ்சடை பொலிந்த அருந்தவத்தோன், முக்கட் செல்வன், கறை மிடற்று அண்ணல், நீலமணி மிடற்று அண்ணல், முழுமுதல்வன், ஈர்ஞ்சடை அந்தணன், என சிவனைப் பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன

வெள்ளி, 29 மே, 2020

நீதி இலக்கியத்தின் தோற்றமும் வளர்ச்சியும்

            எட்டுத் தொகையும், பத்துப்பாட்டு சங்க கால இலக்கியங்கள் என்பதால் சங்க இலக்கியங்கள் என்றும் 18 நூல்கள் என்பதால் பதிணென் மேற்கணக்கு நூல்கள் எனவும், அழைக்கபடுகின்றன. சங்க மருவிய காலத்தில் தோன்றிய பதினெட்டு நூல்களை சேர்ந்த தொகுதி பதினெண்கீழ்கணக்கு நூல்கள் எனவும் நீதி நூல்கள், அற இலக்கியங்கள் என்றும் அழைக்கிறோம்.
பதினெண் கீழ்கணக்கு நூல்கள்
நாலடி நான்மணி நானாற்ப தைந்திணைமுப்
பால்கடுகம் கோவை பழமொழி மாமூலம்
இன்னிலைய காஞ்சியோ டேலாதி என்பவே
கைந்நிலைய வாம்கீழ்க் கணக்கு.
 மேற்கண்ட தனிப்பாடல் 18 நூல்களையும் நினைவில்கொள்ளத் துணைநிற்கும்.
1 அகநூல்கள்
கார்நாற்பது - ஆசிரியர் – கண்ணங் கூத்தனார்
காலம் - கி.பி. 4ம் நூற்றாண்டு, பாடல்கள் - 40
திணை – அகத்திணை – முல்லைத் திணை, பாவகை - வெண்பா
கட்டமைப்பு
மழைக்காலத்தில் வினைக்காக (பொருள்தேடுதல், போர், தூது) தலைவன் பிரிதல், கார்காலத்தில் திரும்ப வருவேன் என அவன் உரைத்தல், கார்காலம் வருகை, தலைவன் பிரிந்ததிலிருந்து அவன் வரும் வரை கார்காலத்தில் தலைவி அவன் வருகையை எதிர்நோக்கித் தன் மனதை ஆற்றியிருத்தல். ஆகியன பாடலின் கட்டமைப்பாக அமைகின்றன. முல்லைத் திணைக்குரிய இருத்தலும் இருத்தல் நிமித்தமும் என்ற உரிப்பொருளை அடிப்படையாக்கொண்ட அகப்பாடலாக இப்பாடல் திகழ்கிறது
2. ஐந்திணை ஐம்பது - ஆசிரியர் - மாறன்பொறையனார்
காலம் - கி.பி.4ம் நூற்றாண்டு, பாடல்கள் - 50
திணை - ஐந்து அகத்திணைகளும்,
திணைவைப்புமுறை – முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல்
பாவகை - வெண்பா
கட்டமைப்பு
ஐந்திணைகளுக்கும் பத்துப்பாடல்கள் வீதம் 50 பாடல்கள் பாடப்பட்டதால் இவ்வாறு திணையை அடிப்டையாகக் கொண்டு பாடுவது ஐங்குறுநூற்றின் தாக்கம் என்றே கருதமுடிகிறது.
சுனைவாய்ச் சிறுநீரை எய்தாதென் றெண்ணிப்
பிணைமான் இனிதுண்ண வேண்டிக் - கலைமாத்தன்
கள்ளத்தின் ஊச்சும் சுரமென்பர் காதலர்
உள்ளம் படர்ந்த நெறி.
ஆணும் பெண்ணுமான இரு மான்கள் (கலைமான், பிணைமான்) பாலை நிலத்து நீர்ச் சுனை ஒன்றின் முன்னே நிற்கின்றன. வரண்டு போன அச்சுனையில் இருக்கும் நீர் இரண்டுக்கும் போதுமானதாக இல்லை. தான் அருந்தாவிட்டால் பெண்மானும் அருந்தாது என்பது ஆண்மானுக்குத் தெரியும். எனவே பெண்மான் அருந்தட்டும் என தான் அருந்துவது போல் பாசாங்கு செய்கிறதாம் ஆண்மான். இதுவே காதல் உள்ளங்களின் ஒழுக்கம் என்கிறார் புலவர்.

நிற்க அதற்குத் தக - Nirkka Atharkku Thaga (Kindle Edition)


கற்பதால் மட்டுமே மனிதன் விலங்கிலிருந்து வேறுபடுகிறான். கல்வி அறிவுடைவர்களுக்கே முகத்திலிருப்பன கண்கள், கல்லாதாருக்கோ அவை புண்கள் என உரைப்பார் வள்ளுவர். நல்ல நூல் படிக்கப் படிக்க புதிய புதிய சிந்தனைகளை நல்கும் அதுபோல நல்ல பண்புடையவர்கள் பழகப் பழக இன்பம் தருவர் என்றும் உரைக்கிறார்.
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக - 391 என்ற குறளில், கற்க என்ற சொல்லை அறிதல் என்றும், கசடறக் கற்க என்ற சொல்லை தெரிதல் என்றும் கற்பவை என்ற சொல்லை தெளிதல் என்றும் நிற்க அதற்குத் தக என்பதை, அறிந்து நிற்க! தெரிந்து நிற்க! தெளிந்து நிற்க! சூழலுக்குத் தக நிற்க! என்றும் பொருள் கொள்ளமுடிகிறது. இக்குறள் வழி, இந்நூல், அறிதல், தெரிதல், தெளிதல், நிற்றல் என நான்கு நிலைகளில் கல்வி குறித்த பல்வேறு சிந்தனைகளை நல்குகிறது.

வியாழன், 28 மே, 2020

இன்றைய சிந்தனைகள்: (Today's Thoughts) (Tamil Edition) Kindle Edition


இன்றைய சிந்தனைகள் என்ற இந்த நூல் ஒவ்வொரு நாளும் அந்த நாளின் சிறப்புகளையும், பொன்மொழிகளையும் எடுத்துரைக்கிறது

திருக்குறள் பொன்மொழிகள்: ( மின்னூல்) (Tamil Edition) Kindle Edition


      மனிதனால் மனிதனுக்கு எழுதப்பட்ட திருக்குறள் என்னும் உலகப்         பொதுமறைக்கு பல விளக்க உரைகள் இருந்தாலும், இந்த ஒரு வரி உரை என்பது எனது புரிதலின் வெளிப்பாடாகவே அமைகிறது..

       நவில்தொறும் நயம்தரும் நூல்! நுண்ணிய நூல்! மெய்ப்பொருள் காட்டும் நூல்! அற்றம் காக்கும் நூல்! அறிதோறும் அறியாமை காட்டும் நூல்! தொட்டனைத் தூறும் மணற்கேணி போன்ற நூல்! வருமுன்னர் காக்கும் நூல்! மெய்வருத்தக் கூலிதரும் நூல்! நுண்மாண் நுழைபுலம் தரும் நூல்! புகழொடு தோன்றிய நூல்! தனக்குவமை இல்லாத நூல்! கேட்டார்ப் பிணிக்கும் நூல்! நா நலம் தரும் நூல்! இடுக்கண் களையும் நூல்! என பல்வேறு சிறப்புகளையும் கொண்ட நூல் திருக்குறள். இந்நூலுக்கு எத்தனை உரைகள் வந்தாலும், எத்தனை மாநாடுகள் நடத்தினாலும் இதன் உட்பொருளை முழுமையாக யாரும் புரிந்துகொள்ள இயலாது. அதனால் தான் காலந்தோறும் இந்நூலுக்கு புதிய புதிய உரைகள் எழுதப்பட்டு வருகின்றன. உரைகளின் வரிசையில் இவ்வுரை, உரையாசிரியர்களைக் கடந்து நான் பெற்ற சிந்தனைகளை சமகால மொழிநடையில் பதிவுசெய்தல், திருக்குறள் ஒரு வாழ்வியல் வழிகாட்டி நூல் என்பதை உணர்த்துதல், பல்வேறு மொழிகளிலும் வழங்கப்பட்டுவரும் உலக அறிஞர்களின் பொன்மொழிகளுக்கு இணையான சிந்தனைவளமுடையது திருக்குறள் என்பதை வெளிப்படுத்துதல் ஆகிய நோக்கங்களுக்காக எழுதப்பட்டது

 

- முனைவர் இரா.குணசீலன்

 

மின்னூல் பதிவிறக்க முகவரி