வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

புதன், 30 ஜூன், 2010

குறுந்தொகை-சீனக் கவிதை ஒப்பீடு.


தொன்மையான நாகரிகத்துக்குச் சொந்தக்காரர்கள் திராவிடர்கள். திராவிட மொழியின் கூறுகளை உலகமொழிகள் பலவற்றிலும் காணமுடிகிறது.திராவிட மொழிக்குடும்பத்தின் தாய்மைத் தன்மையுள்ள மொழியாகத் தமிழ்மொழி விளங்குகிறது.

மெசபடோமிய நாகரீகம், சீன நாகரீகம், எகிப்திய நாகரீகம், சிந்து சமவெளி நாகரீகம் என்னும் தொன்மையான நாகரீகங்களுள் நமது நாகரீகமும் உள்ளடக்கம் என்பது பெருமிதம் கொள்ளத்தக்கது.

அரப்பா,மொகஞ்சதாரோ நாகரீகங்களை ஏற்படுத்தி சிந்து-பஞ்சாப் பள்ளத்தாக்குகளில் நாகரீகத்துடன் வாழ்ந்தவர்கள் திராவிடர்கள் ஆவர். ஆரியர்களின் வருகையால் திராவிடர்கள் தென்னிந்தியப் பகுதிகளுக்கு இடம்பெயர்ந்தனர் என்பதை வரலாறு சுட்டிச்செல்கின்றது.

கால்டுவெல் வந்து சொல்லும் வரை இந்தியாவின் தனிப்பெரும் தொன்மையான மொழியாக வடமொழியே கருதப்பட்டது.

வழக்கொழிந்த தொன்மையான மொழிகளைப் புறந்தள்ளி இன்னும் தன்னிலை மாறாது நிற்கும் தமிழின் கூறுகளைப் பிற மொழிகளில் காணும் போது மகிழ்ச்சியாகவுள்ளது. சான்றாக,

சீனக்கவிதையொன்று,


“கியாட்டோ பட்டு வியாபாரிக்கு இருமகள்கள்
முத்தவள் இருபது, இளையவள் பதினெட்டு
வீரன் கத்தியால் கொல்லுவான்
ஆனால் இப்பெண்கள் கண்களால்“


முதல் வரி அறிமுக வரியாகவும்,
இரண்டாம் வரி அதன் தொடர்ச்சியாகவும்,
மூன்றாம் வரி முதலிரு வரிகளுக்கும் தொடர்பில்லாத வரியாகவும்,
நான்காம் வரி முதலிரு வரிகளையும் இயைபுபடுத்திச் சொல்லும் தன்மையிலும் அமையும்.இது சீனக் கவிதையின் இலக்கண அமைதியாகும்.

சங்க இலக்கியத்தில்,


காலே பரி தப்பினவே; கண்ணே
நோக்கி நோக்கி வாள் இழந்தனவே;
அகல் இரு விசும்பின் மீனினும்
பலரே மன்ற, இவ் உலகத்துப் பிறரே.

குறுந்தொகை -44. பாலை
வெள்ளிவீதியார்.

செவிலித்தாய் கூற்று
(தலைவி தலைவனுடன் போனபின்பு அவர்களைப் பாலை நிலத்தில் தேடிச் சென்ற செவிலி அவர்களைக் காணாமல் வருந்திக் கூறியது.)

என் கால்கள் நடந்து நடந்து நடை ஓய்ந்தன;
இணைந்து எதிர் வருவாரைப் பார்த்துப் பார்த்து என் கண்கள் ஒளியை இழந்தன;
நிச்சயமாக, இந்த உலகத்தில்,
நம்மகளும் அவள் தலைவனும் அல்லாத பிறர்,
அகன்ற பெரிய வானத்திலுள்ள மீன்களைக் காட்டிலும் பலராவர்.

என்பது பாடலின் பொருளாகும்.

குறுந்தொகை மற்றும் சீனக் கவிதை ஆகியன ஒப்புநோக்கி ஒற்றுமை கண்டு இன்புறத்தக்கனவாகவே உள்ளன..

ஒற்றுமைக் கூறுகள்.

○ இரு பாடல்களும் நான்கு அடிகளைக் கொண்டுள்ளன.
○ இரு பாடல்களிலும் முதல் அடி அறிமுக அடியாகவும்,
○ இரண்டாவது அடி முதலடியின் தொடர்ச்சியாகவும்,
○ மூன்றாவது அடி முதலிரு அடிகளுடன் தொடர்பற்ற அடியாகவும்,
○ நான்காவது அடி முதலிரு அடிகளை இயைபுபடுத்துவதாகவும் உள்ளது.


தொன்மையான இருவேறு நாகரீகங்களில் இருவேறு மொழிக்குடும்பங்களில் தோன்றிய இருமொழிகளின் பாடல் வடிவம், இந்த அளவுக்கு ஒப்புமைத் தன்மையுடனிருப்பது வியப்புக்குரியதாகவுள்ளது.

செவ்வாய், 29 ஜூன், 2010

இவங்களுக்கு வேற வேலையில்ல!



நாலு பேரு ஏதாவது சொல்லுவாங்க?

அப்படின்னு ஏதாவதொரு சூழலில் நாம் நினைத்திருப்போம், யாரிடமாவது சொல்லியிருப்போம். இல்லையென்றால் யாராவது நம்மிடம் சொல்லியிருப்பார்கள்!

யாருங்க அந்த நாலு பேரு?
எதுக்காக அவங்களுக்குப் பயப்படனும்?

○ அடுத்தவங்களைப் பற்றிப் பேசுவதையே வேலையாகவோ, பொழுதுபோக்காகவோ கொண்டிருப்பவர்களைத் தான் நாலுபேர் என்று சொல்லுகிறார்கள்.
○ அந்த நாலு பேர் இன்னொரு நாலு பேருக்கிட்ட நம்மைப் பற்றி உள்ளதையும் இல்லாததையும் பேசி நம் மதிப்பைக் குறைத்துவிடுவார்களோ என்று தான் எல்லோரும் அந்த நாலு பேருக்குப் பயப்படுகிறார்கள். அந்த நாலு பேரில் நாமும் அடக்கம் தான்..

ஆம் நாம் பிறரைப் பற்றிப் பேசாமலோ இருந்திருப்போம்?
ஏதோவொரு சூழலில் ஏதாவது பேசியே இருப்போம்..


தத்துவமேதை சாக்கரடீசிடம் ஒருவன் வந்து….

நான் தங்களிடம் ஒருவனைப் பற்றி ஒரு செய்தி சொல்ல நினைக்கிறேன் என்றானாம். அவனிடம் சாக்கரடீஸ் பின்வரும் கேள்விகளைக் கேட்டாராம்.

சாக்கரடீஸ் - நீ சொல்லும் செய்தி உண்மையானதா?

ஒருவன் - எனக்குத் தெரியாது. என்னிடம் இன்னொருவர் சொல்லியது.

சாக்கரடீஸ் - சரி, நீ சொல்லும் செய்தியால் எனக்கோ, உனக்கோ ஏதாவது பயனுண்டா?

ஒருவன் - நிச்சயமாக இருக்காது.

சாக்கரடீஸ் - உண்மையெனத் தெரியாத, உனக்கும் எனக்கும் பயன்படாதவொரு செய்தியை நாம் ஏன் பேசி நேரத்தைச் செலவழிக்கவேண்டும்?

என்று கேட்டாராம் சாக்கரடீஸ்.


அடுத்தவரைப் பற்றி நாம் ஏன் பேசவேண்டும்?
நமக்கென்ன வேறு வேலையே இல்லையா?

என்று நீங்கள் கேட்பது எனக்குக் கேட்கிறது.

எங்க ஊருல நான் சிறுவனாக இருந்தபோது,
குடிநீர்க்குழாயில இருபெண்கள் ஒருவரைப் பற்றி ஒருவர் ஏதோ பேசியதாக சண்டை வந்து ஒருவர் காதை இன்னொருவர் கடித்துவிட்டார்…

இன்று நினைத்துப்பார்த்தாலும் சிரிப்புத்தான் வருகிறது.

இன்றைய ஊடகங்கள்,

நடிகர்கள், அரசியல்வாதிகள், விளையாட்டுவீரர்கள்….
இன்னும் யார்யாரைப்பற்றியோ பேசிப்பேசியே அவர்களைப் பெரிய மனிதர்களாக்கிவிடுகின்றன..

இவர்களைவிட சிறந்த நடிப்புத்திறனுடையவரோ, மக்களை ஆளும் தன்மைகொண்டவரோ,விளையாட்டுத்திறனுடையவரோ மண்ணில் இல்லையா?

சரி,
சங்க காலத்துக்குச் செல்வோம்….


நற்றிணைப் பாடலொன்று,

சிலரும் பலரும் கடைக்கண் நோக்கி
மூக்கின் உச்சிச் சுட்டுவிரல் சேர்த்தி
மறுகின் பெண்டிர் அம்பல் தூற்றச்
சிறுகோல் வலந்தனள் அன்னை அலைப்ப
5 அலந்தனென் வாழி தோழி கானல்
புதுமலர் தீண்டிய பூநாறு குரூஉச்சுவல்
கடுமா பூண்ட நெடுந்தேர் கடைஇ
நடுநாள் வரூஉம் இயல்தேர்க் கொண்கனொடு
செலவயர்ந் திசினால் யானே
10 அலர்சுமந்து ஒழிகவிவ் அழுங்கல் ஊரே.

நற்றிணை -149. உலோச்சனார் நற்றிணை.
திணை : நெய்தல்.
துறை : (1) இது, தோழி தலைவியை உடன்போக்கு வலித்தது.
துறை :(2) சிறைப்புறமாகச் சொல்லியதூஉமாம்.

தலைமக்களின் காதல் வாழ்வியலைப் பற்றிப் பேசுவதற்கு அலர் என்றும் அம்பல் என்றும் பெயராகும்.

(அம்பல் - சிலரறிந்த பழிச்சொல்.
அலர் - பலரறிந்த பழிச்சொல்.)

துறைவிளக்கம்.

1.தலைமக்களின் காதலை அறிந்த ஊரார் அலர் தூற்றினர். அதனை எண்ணி வருந்திய அன்னை சினம் கொண்டாள். அதனால் இனி நீ இங்கு இருக்க வேண்டாம். தலைவனுடனேயெ செல்வாயாக என்றாள் தோழி.

அதற்கு அஞ்சிய தலைவியிடம் நீ தலைவனுடன் சென்றபிறகு இந்த ஊர் என்ன செய்துவிடும்?
மிஞ்சி மிஞ்சிப் போனால் அலர் தூற்றும அவளவுதானே!

என்கிறாள் தோழி இதனை - துறை : (1) இது, தோழி தலைவியை உடன்போக்கு வலித்தது என்னும் துறை விளக்குகிறது.

2.தலைவியைச் சந்திக்க வந்த தலைவன் அருகாமையில் மறைந்திருக்க, அவனை அறியாதவள் போலத் தோழி அவனுக்குச் சொல்ல நினைக்கும் கருத்தை இவ்விதம் சொல்கிறாள்.

தலைவி உங்கள் காதலை அறிந்த ஊரார் அலர் தூற்றுகின்றனர்.அதையெண்ணி அன்னையும் வருத்தம் கொண்டாள். இதற்கு ஒரே வழி தலைவனுடன் நீ சென்றுவிடுவதுதான்.
ஊரைப் பற்றிக் கவலைப்படாதே..
எப்போதும் அலர் தூற்றும் ஊர்.. அலர் தூற்றும்…. தூற்றட்டுமே அதனாலென்ன என்கிறாள் இதனையே - துறை :(2) சிறைப்புறமாகச் சொல்லியதூஉமாம். என்னும் அகத்துறை விளக்குகிறது.

◊ தோழி தலைவியிடம் என்ன பேசுகிறாள் என்று கேளுங்கள்…


தோழீ! வாழி!
நம்மூர்த் தெருவிலுள்ள பெண்களுள் ஓரிடத்தில் சிற்சிலரும் ஓரிடத்தில் பற்பலரும் இப்படியாக ஆங்காங்குத் தெருக்களிலே கூடிநின்று கடைக்கண்ணாலே சுட்டி நோக்கி,

தம்தம் மூக்கினுனியிலே சுட்டுவிரலை வைத்துப் பழிச்சொற் கூறித் தூற்றவும்,
அப் பழிமொழியை நம் அன்னை கேட்டறிந்து உண்மையென எண்ணிக் கொண்டு சிறிய கோல் ஒன்றினை ஏந்தி அது சுழலும்படி வீசி அடிப்பவும்; இதனால் நான் மிக்க துன்பமுடையவளாகிவிட்டேன்.

ஆதலின் இத் துன்ப மெல்லாம் தீரும்படி சோலையிலுள்ள புதிய மலர் தீண்டிய பூமணம் வீசுகின்ற நல்ல நிறம் பொருந்திய பிடரிமயிரையுடைய விரைந்து செல்லும் குதிரைபூண்ட நெடிய தேரைச் செலுத்தி, நள்ளிருளில் வருகின்ற தேரையுடைய தலைவனுடன் நீ செல்லவேண்டும் என நான் நினைக்கிறேன். அங்ஙனம் சென்றொழிந்தால் பேரொலியையுடைய இவ்வூர் என்ன செய்யும்? வேண்டுமானால் அலர் தூற்றிக்கொள்ளட்டும்!

( தலைவி எட்டியுஞ்சுட்டியுங் காட்டப்படுங் குலத்தினளல்லளாதலால் வாயினாற்கூறலும் ஏறிட்டுப்பார்த்தலுங் குற்றமாகுமென்றஞ்சிக் கடைக்கண்ணால் நோக்கிக் குறிப்பாகக் கூறுவது குறிப்பிடத்தக்கது. அவ்வாறு பெருங்குடியிலே பிறந்து பெருநாணமும் உடையளாயினாளொரு சிறுமி காமந் தலைக்கொண்டு உடன்போயினாளென்னையென வியப்பெய்தலின் மூக்கினுனியின்கண்ணே சுட்டுவிரல் சேர்த்தினமை கூறியதாம்; இதுவும் வாயினாலேகூற அஞ்சினமை குறிப்பித்ததாயிற்று.
மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - போக்கு உடன்படுத்தல்.
இரண்டாந் துறைக்கும் மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - வரைவு உடன்படுத்தல்.)



பாடல் வழி புலப்படும் கருத்துக்கள்.

○ தலைவியைத் தோழி உடன்போக்குக்குத் தூண்டியது, தலைவியைத் தலைவன் திருமணம் செய்துகொள்ளத் தோழி தூண்டியது என்னும் இரு அகத்துறைகள் விளக்கம் பெறுகின்றன.
○ தலைமக்களின் காதல் பற்றிப் பேசும் ஊராரின் மெய்பாடுகளை,

கடைக்கண் நோக்கல்,
தம் மூக்கின் நுனியில்விரல் வைத்து வியப்புடன் பேசுதல்.

என நுட்பமாகக் கூறிய பாங்கு இப்போது நினைத்தாலும் சங்ககாலக் காட்சியைக் கண்ணில் விரியச் செய்வதாகவுள்ளது.

○ வாழ்ந்தாலும், தாழ்ந்தாலும் பேசிக்கொண்டே இருக்கும் இவ்வுலம். அதனால் ஊரைப் பற்றியும் உலகத்தைப் பற்றியும் கவலைப்படாதே உன் வாழ்க்கைதான் இப்போது சிந்திக்க வேண்டியது. உன்மகிழ்வு தலைவனுடன் சேர்ந்திருப்பதிலே தான் இருக்கிறது. அதனால் உடன்போக்கில் தலைவனுடன் சென்றுவிடு என்று சொல்லும் தோழியின் கூற்று ஆழ்ந்து நோக்கத்தக்கதாகவுள்ளது.

○ பெற்றோருக்குத் தெரியாமல் திருமணம் செய்துகொள்வது சரியா? தவறா? என்ற விவாதம் ஒருபுறம் இருக்க..

அன்று முதல் இன்று வரை இவ்வாறு திருமணம் நடந்துவருகிறது என்பதை யாரும் மறுக்கமுடியாது.

இவ்வேளையில் நாலுபேருக்குப் பயப்படாமல் முடிவெடுக்கும் தோழியின் திறன் நம் வாழ்வில் நாம் எடுக்கும் முடிவுகளுக்கு எடுத்துக்காட்டாக அமைவதாவே நான் கருதுகிறேன்.

திங்கள், 28 ஜூன், 2010

அழகான அனுபவம்.




○ மனமகிழ்வுடன், முழு ஈடுபாட்டுடன் செய்யப்படும் வேலை ஒரு அழகான அனுபவமாகும்.

பாடம்


○ பள்ளியில் பாடம் கற்றுக்கொண்ட பிறகு தேர்வு எழுதுகிறோம்!
ஆனால் வாழ்க்கையில்,
தேர்வு எழுதிய பிறகுதான் பாடம் கற்றுக்கொள்கிறோம்!



கடவுள்
○ வழிபாடு செய்யுங்கள்..
கடவுளுக்கு அருகில் நீங்கள் செல்லலாம்.
ஆனால் சேவை செய்யுங்கள்..
கடவுள் உங்கள் அருகில் வருவார்!

-அன்னை தெரசா.


○ கடவுளுக்கும் மரணம் வரும்.
ஒருவனுக்குத் தன்னம்பிக்கை பிறக்கும் போது!

தந்தை பெரியார்.

வேலைக்காக
○ ஊர்சுற்றும் பிள்ளையின் வேலைக்காகக்
கோயில் சுற்றும் அம்மா.


குழந்தை○ குழந்தைகள் உங்களுடன் இருக்கலாம்
ஆனால் அவர்கள் உங்களுக்குச் சொந்தமானவர்கள் அல்ல!
அவர்களுக்கு உங்கள் அன்பைக் கொடுங்கள்
உங்கள் சிந்னையைத் தரவேண்டாம்!
அவர்களுக்கென்று சிந்தனை இருக்கிறது!

கலீல் ஜிப்ரான்.

வெள்ளி, 25 ஜூன், 2010

யாரணங்குற்றனை கடலே?


ஏங்க என்ன ஆச்சு?
ஏன் இப்படிக் கன்னத்துல கைவெச்சுக்கிட்டிருக்கீங்க?
என்ன பிரச்சனை?

என்று கேட்போர் எண்ணிக்கை குறைந்துவிட்டதால் தற்கொலையின் விழுக்காடு அதிகமாகிவருகிறது.

“வாழப் பிடிக்கவில்லையென்றால்
தற்கொலை செய்துகொள்!
ஆனால்,
தற்கொலை செய்துகொள்ளும்
துணிவிருந்தால்...

வாழ்ந்துபார்!

என்பது அலெக்சான்டர் வாக்கு.


என வாழ்வுக்கும் சாவுக்கும் இடையே போரடிக்கொண்டிருக்கும் வாழ்வில்,

பகிர்தல்
புரிதல்

ஆகியன குறைந்துவிட்டன.

பணம் மட்டுமே வாழ்க்கை என்றாகிவிட்டது.

பணத்தைத் தேடி ஓடும் வாழ்க்கையில் மனஅழுத்தமே எஞ்சிநிற்கிறது.

வாரத்தில் ஆறு நாட்கள் பணத்தின் பின்னே ஓடிச் சென்ற மனித இயந்திரம் கிடைக்கும் ஒரு நாளில் தன்னுடைய உடலையும், உள்ளத்தையும் சீரமைத்து அடுத்தவாரம் ஓடுவதற்குத் தயாரித்துக்கொள்கிறது.


இந்தச்சூழலில் அடுத்தவர்களின் மனநிலையைப் புரிந்து கொள்ள இந்த வாழ்க்கையில் ஏது நேரம்..

சரி எனக்கு என்ன பிரச்சனைன்னு கேட்குறீங்களா?

எனக்கு ஒரு பிரச்சனையுமே இல்லைங்க!
இதுதான் பெரிய பிரச்சனை!

என்னைச் சுற்றியிருப்பவர்களிள் பிரச்சனைகளைப் பலவகைப்படுத்தலாம். பல பிரச்சனைகளையும் ஒரே சொல்லில் அடையாளப்படுத்தவேண்டுமென்றால் “பணம்“ என்று சொல்லாம்.

பணத்துக்கு அடுத்தபடியாகக் காலம் காலமாகவே தீராத பிரச்சனைகளுள் ஒன்று காதல்.

சங்க காலம் முதல் இன்றுவரை இந்தப் பிரச்சனை தீரவேயில்லை.

உடன்போக்கு,இற்செறித்தல், அலர் என அந்தப் பிரச்சனைகளின் பெயர் வேண்டுமானால் கால மாற்றத்தால் புரிந்துகொள்ள இயலாததாக இருக்கலாம். ஆனால் இந்த சிக்கல்கள் தீர்ந்தபாடில்லை.


பணம் - காதல் இரண்டின் பின்னும் பலர் ஓடுகிறார்கள்.
பணம் - காதல் இரண்டும் சிலர் பின்னால் ஓடுகின்றன.

காதலுக்குப் பல வழிகளில் பிரச்சனைகள் வரும்.

திருக்குறள் சுட்டும் தலைவியின் நிலை,


தலைவனின் பிரிவால் வாடும் தலைவி,
மாலைப் பொழுதிடம் பேசுகிறாள்….

ஏ மாலைப் பொழுதே உன் துணைவரும் என் துணைவரைப் போல வன்மனம் கொண்டவரோ?
நீயும் என்போலவே ஒளியிழந்து காணப்படுகிறாய்?

என்று கேட்கிறாள்.குறள் இதோ,

புன்கண்ணை வாழி மருள்மாலை எம்கேள்போல்
வன்கண்ண தோநின் துணை. (திருக்குறள்)


சங்ககாலத் தலைவியின் நிலை,


தலைவனின் பிரிவால் வருந்தும் தலைவி கடலைப் பார்க்கிறாள்.
மீன்களை உண்ணவந்த கொக்கினங்கள் பரவியிருக்கின்ற கடல் பார்ப்பதற்கு வெள்ளாடுகள் கூட்டமாகப் பரவியிருப்பது போல உள்ளது.
கடல் அலையாக வந்து கரையிலிருக்கும் வெண்மையான மலர்களைக் கொண்ட தாழையை அடித்துச் செல்கிறது. அந்த ஒலி கேட்கும் தலைவி,

ஏ கடலே..
நீ நள்ளிரவிலும் ஒலிக்கின்றாயே?
யாரால் வருத்தமுற்றாய்?
என்று வினவுகிறாள். பாடல் இதோ,


யாரணங் குற்றனை கடலே பூழியர்

சிறுதலை வெள்ளைத் தோடுபரந் தன்ன

மீனார் குருகின் கானலம் பெருந்துறை

வெள்வீத் தாழை திரையலை

நள்ளென் கங்குலுங் கேட்குநின் குரலே.


தலைவி கூற்று
குறுந்தொகை - 163.
அம்மூவன்.

நள்ளிரவில் தன்னுடன் தூங்காமல் விழித்துப் புலம்பிக்கொண்டிருக்கும் கடல் தன்னைப் போலவே துன்புறுவதாக எண்ணிக்கொள்கிறாள் தலைவி.

ஒப்பீடு.

திருக்குறள் சுட்டும் தலைவிக்கு மாலை - பெண்ணாகத் தெரிகிறது.
குறுந்தொகைத் தலைவிக்குக் கடல் - பெண்ணாகத் தெரிகிறது.

கடல் ஆணா? பெண்ணா?


கடலை ஆண்கடல் என்றும், பெண்கடல் என்றும் அழைப்பார்கள் கேள்விப்பட்டிருக்கிறேன்.

சீற்றம் அதிகமான கடல் ஆண்கடலென்றும்,
சீற்றம் குறைவான கடல் பெண்கடலென்றும் அழைப்பார்கள்.

இதில் எனக்கு நீண்டகாலம் ஐயம் உண்டு.
அன்றுமுதல் இன்றுவரை பெண்கள் தானே அதிகம் பேசுகிறார்கள்..

சீற்றம் அதிகமான கடல் - அதிகமாகப் பேசும் பெண்கள்

இரண்டும் இயைபுபட்டுவருவது சி்ந்திக்கத்தக்கதாகவுள்ளது.

சரி நாம் பாடலுக்கு வருவோம்,

இரு தலைவியரிடமும் என்ன பிரச்சனை என்று கேட்க ஆளில்லை.
அதனால் மனஅழுத்தம் கொண்ட தலைவியரின் நிலை மாலைப்பொழுதிடமும், கடலிடமும் புலம்புவதுவரை சென்றுள்ளது.

ஆனால் இரு தலைவியரும் தன்னிடம் தான் யாரும் என்ன பிரச்சனை என்று கேட்கவில்லை என்றாலும் மாலைப்பொழுதிடமும், கடலிடமும் என்ன பிரச்சனை என்று கேட்கிறார்கள்.

மனஅழுத்தம் அதிகமானால் அது மனப்பிறழ்வாக மாறும்.

இருதலைவியரின் புலம்பலை வெறும் புலம்பலாக மட்டும் கொள்ளாது..

இன்றைய வாழ்வியலுடன் உளவியல் அடிப்படையில் ஒப்புநோக்கினால்….

இந்தத் தலைவியரைவிட நாம் நம்மனதோடு எவ்வளவு சத்தத்துடன் யார்யாருடனோ பேசிக்கொண்டிருக்கிறோம் என்பதை உணரமுடியும்.

○ வாய்பேசாவிட்டாலும் மனம் பேசாமல் இருப்பதில்லை….
○ வாய்விட்டுப் பேசவும், மனதோடு பேசவும் பகிர்தல் தேவை…..

இவ்வாறு பேசுவதால் மனஅழுத்தம் நீங்கும் இந்த உளவியல் கூறுகளைத் தாங்கி வரும் சங்கப்பாடல்களை நோக்கும் போது, சங்கப்புலவர்களின் உளவியல் அறிவு எண்ணிப்பெருமிதம் கொள்ளத்தக்கதாகவுள்ளது.

செவ்வாய், 22 ஜூன், 2010

மாணவர் புலம்பல்.



வலி மிகும் இடங்கள்.


தமிழ்த்தேர்வில் இலக்கணக்குறிப்பு எழுதுகிறான் மாணவன்.

வலி மிகும் இடங்கள் யாவை?

உடலில் எல்லா இடங்களுமே வலிமிகும்.
நீண்ட தூரம் நடந்தால் காலில் வலிமிகும்.
எல்லோருக்கும் அடிக்கடி தலையில் வலிமிகும்.

வல்லின ஒற்று மிகும் இடங்கள்(தமிழை + கண்டேன்   = தமிழைக் கண்டேன்.)யாவை? என்ற கேள்வியை வகுப்புக்கு வராத, வந்தும் கவனிக்காதவனாக இம்மாணவன் இருந்தாலும் தேர்வு எழுதும் போது இலக்கணம் என்று தயங்காது இப்படியொரு பதிலளிக்கிறான். இப்பதிலை தவறு என்று முற்றிலும் மறுத்துவிடமுடியுமா என்ன?



தமிழில் தோன்றிய முதல் சிறுகதை,

“பாட்டி வடைசுட்ட கதை” யே தமிழில் முதலில்தோன்றிய முதல் சிறுகதை என்று எழுதுகிறான் ஒரு மாணவன்.

எத்தனைமுறை வ.வே.சு ஐயரின் குளத்தங்கரை அரசமரம் சொன்னகதையே தமிழின் முதல் சிறுகதை என்ற சொன்னாலும் தேர்வு அறையில் இம்மாணவர்களின் நினைவில் வருவேதே இல்லை. இருந்தாலும் சிந்தித்து இப்படியொரு பதிலை எழுதி என்னைச் சிரிக்கவைத்துவிட்டான் ஒரு மாணவன்.


மாணவர் புலம்பல்.

◊ ஆண்டு முழுவதும் 24 மணிநேரமும் விழிப்புடனிருக்கும் எனது மூளை, இயங்காமல்ப் போகும் ஒரே இடம் “தேர்வு அறை“

◊ வேதனையோடு இருப்பவர்களுக்கு வெறும் தண்ணீர்!
வேடிக்கை பார்ப்பவர்களுக்கு, தேநீர், வடை.
என்ன கொடுமை இது!

வகுப்பு - தேர்வு


1-3 தினமும் படிக்கிறேன்டா..
3-6 கொஞ்சம் கடினாமாத்தான் இருக்கு..
6-10 தேவையான வினாக்கள் மட்டும் தேர்ந்தெடுத்துப் படிக்கிறேன்டா..
10-12 பார்த்து எழுதீரலம்னு இருக்கேன்டா..
கல்லூரி - என்ன சொல்ற.. இன்றைக்குத் தேர்வா????

வெள்ளி, 18 ஜூன், 2010

திருடிக்குத் தேள் கொட்டியதுபோல…


திருடனுக்குத் தேள் கொட்டினால் என்ன ஆகும்?
திரு திரு என்று விழிக்க வேண்டியது தான்…..

அதே திருடன் வலி தாங்காமல் கத்தி மாட்டிக்கொண்டால் என்ன ஆகும் தலைகவிழ்ந்து நிற்க வேண்டடியது தான்…..

உலகத்தில் தவறு செய்யாதவர்கள் யார்தான் இருக்கிறார்கள்?

எல்லோருமே தவறு செய்தவர்கள்தான். என்றாலும். அதே தவறை மீண்டும் செய்தால் தப்பாகிவிடும் என்று உணர்ந்து திருத்திக்கொள்ளும் போது அவர்கள் மதிப்புக்குரிய மனிதர்களாகிறார்கள்.

தவறிழைத்தோர் யாருமே தம் தவறுக்கு என ஏதாவதொரு காரணம் வைத்திருப்பார்கள்.

தவறு செய்வோர் உருவாக அவர்கள் மட்டுமே காரணமில்லை. அவர்கள் வளர்ந்த சூழலும், வாழும் சூழலும் கூட காரணமாகின்றன.

ஒரு குழந்தை தவறி மீன்தொட்டியை உடைத்துவிட்டது என்றால் அக்குழந்தையின் பெற்றோர் அக்குழந்தையை எப்படி எதிர்கொள்ளவேண்டும்.

பொருளின் இழப்பை அக்குழந்தைக்குப் புரியவைக்க வேண்டும்.
அதைவிட்டு விட்டு அக்குழந்தையை அடித்தால் அடுத்த முறை இதுபோல தவறு நேர்ந்தால் அக்குழந்தை தன் தவறை ஏற்றுக்கொள்ளாது. தான் தவறிழைக்கவில்லை என்று தன் தவறை யார் மீதாவது சுமத்தவே முயலும்.

இவ்வாறு வளரும் சூழலும் ஒரு மனிதனின் பண்புகளுக்குக் காரணியாகிறது.

சங்ககாலம்…………..

மக்கள் தொகை குறைவான காலம், இனக்குழுவிலிருந்து நிலவுடைமைச் சமூகத்துக்கு மனிதன் வளர்ந்த காலம். அதனால் தலைவன் பரத்தையரிடம் (பொருட்பெண்டிர்) செல்வதைத் பெருந்தவறாக எடுத்துக்கொள்ளவில்லை. சங்ககாலச் சமூகச் சூழல் அதற்குத் துணையாக இருந்தது. இருப்பினும் தலைவி வாயில் மறுத்து தலைவனின் செயலை எதிர்த்திருக்கிறாள்.


பரத்தையர் சேரியில் தங்கியிருந்த தலைவன் வீடு திரும்பினான். அவன் செயல் எண்ணித் தலைவி ஊடல் கொண்டாள்(சினம்). தன்னிடம் ஊடிய தலைவியிடம் தலைவன், “யான் பரத்தையர் யாரையும் அறியேன்“ என்றான். அதுகேட்ட தலைவி தலைவன் நட்புக் கொண்டுள்ள பரத்தையைத் தான் கண்டமையும் அவள் மீது அன்பு கொண்டமையும் கூறினாள்.

தலைவனே!
நீர்நாய்களையுடைய பழைய நிர்நிலையின்கண் செழித்து வளர்ந்த தாமரையின் அல்லியாகிய இதழினைப் போன்ற குற்றமற்ற உள்ளங்கையினையும்,

பவளம் போன்ற அழகிய வாயினையும்,

நாவால் திருத்தமாகப் பேசப்படாவிட்டாலும், கேட்போர் விரும்பும் மழலை மொழிபேசும், பொற்றொடி அணிந்த நம் புதல்வனைப் பகைவரும் விரும்புவர்.

அத்தகைய நம் புதல்வன் தெருவில் சிறுதேர் உருட்டி விளையாடிக் கொண்டிருந்தான். நீ விரும்பும் பரத்தை அவ்வழியே வந்தாள். நம் புதல்வன் உன் உருவத்துடன் இருப்பது கண்டு வியந்து மகிழ்ந்தாள்.

சுற்றும் முற்றும் பார்த்தாள். யாரும் தன்னைக் காணவில்லை என்ற எண்ணத்தில் புதல்வனை தன் மார்போடு சேர்த்து அனைத்துக்கொண்டாள்.

இக்காட்சியைக் கண்ட நான் அவ்விடத்தைவிட்டு நீங்காமல் அங்கேயே நின்றேன். என்னைக் கண்டு உன் பரத்தை திகைத்தபோது நான் சென்று அவளைத் தழுவிக்கொண்டு,

குற்றமற்ற இளமகளே ஏன் மயங்கினாய்?
நீயும் என் புதல்வனுக்குத் தாய்போலத் தானே?

என்று கூறினேன். திருடியவன் மாட்டிக் கொண்டது போல, தவறை உணர்ந்த பரத்தை “ நாணி முகம் கவிழ்ந்து நிலத்தைக் கீறி நின்றாள்.“

அவளுடைய நிலையைக் கண்ட நான் வானில் காண்பதற்கரிய அருந்ததி என்னும் விண்மீனுக்கு ஒப்பான இவள் நம் புதல்வனுக்குத் தாயாகும் தகுதியுடையவள் என்று அவளை விரும்பினேன் என்றாள். பாடல் இதோ,


நாயுடை முது நீர்க் கலித்த தாமரைத்
தாதின் அல்லி அவிர் இதழ் புரையும்,
மாசு இல் அங்கை, மணி மருள் அவ் வாய்,
நாவொடு நவிலா நகைபடு தீம் சொல்,
5 யாவரும் விழையும் பொலந்தொடிப் புதல்வனை,
தேர் வழங்கு தெருவில், தமியோற் கண்டே!
கூர் எயிற்று அரிவை குறுகினள்; யாவரும்
காணுநர் இன்மையின், செத்தனள் பேணி,
பொலங்கலம் சுமந்த பூண் தாங்கு இள முலை,
10 'வருகமாள, என் உயிர்!' எனப் பெரிது உவந்து,
கொண்டனள் நின்றோட் கண்டு, நிலைச் செல்லேன்,
'மாசு இல் குறுமகள்! எவன் பேதுற்றனை?
நீயும் தாயை இவற்கு?' என, யான் தற்
கரைய, வந்து விரைவனென் கவைஇ
15 களவு உடம்படுநரின் கவிழ்ந்து, நிலம் கிளையா,
நாணி நின்றோள் நிலை கண்டு, யானும்
பேணினென் அல்லெனோ மகிழ்ந! வானத்து
அணங்கு அருங் கடவுள் அன்னோள் நின்
மகன் தாய் ஆதல் புரைவது ஆங்கு எனவே?

அகநானூறு -16
(மருதம்)சாகலாசனார்

பரத்தையர் சேரியிலிருந்து வந்த தலைமகன் “யாரையும் அறியேன்“ என்றாற்குத் தலைமகள் சொல்லியது.


நகையும் சுவையும்,

l தலைவனின் புதல்வனைத் தெருவில் கண்டு கட்டித்தழுவிய பரத்தையிடம் சினம் கொண்டு சண்டையிடாத தலைவி, “நீயும் எம் புதல்வனுக்குத் தாய்தானே“ என்று எள்ளலாகச் சொல்லுவது நகையேற்படுத்துவதாகவுள்ளது.

l தலைவிக்குத் தெரியாது தவறிழைத்தவர்கள் தலைவனும், பரத்தையும் ஆவர். யாருக்கும் தெரியாது என்று அவர்கள் செய்த தவறு தலைவிக்குத் தெரிந்தபோது,

பரத்தை - நாணி முகம் கவிழ்த்து நிலம் கீறி நிற்கிறாள்.
தலைவன் - பதில் சொல்ல முடியாது தவிக்கிறான்.

இவ்விருவரின் செயல் நகையேற்படுத்துவதாகவும்.

இவர்களின் தவறை அறிந்தும் அவர்கள் தம் தவறை உணர்ந்தார்கள் என்பதால் அதனைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாத தலைவியின் செயல் அவளின் பெருந்தன்மையை உணர்த்துவதாகவும் உள்ளது.

நன்றாகச் சிந்தித்துப் பார்த்தால்.

தலைவனுக்கும், பரத்தைக்கும்,

இதற்கு மேல் என்ன பெரிய தண்டனை கொடுத்துவிடமுடியும்?