Sunday, September 4, 2011

வேர்களைத்தேடி வழங்கும் பரிசு!!

அன்பின் உறவுகளே..

ஒரு வலைப்பதிவைத் தொடங்குவது மிக எளிது. ஆனால் அதனைத் தொடர்ந்து இற்றைப்படுத்துவது எவ்வளவு கடினம் என்பது இந்த வலையுலகில் இயங்குபவர்களுக்கு நன்றாகத் தெரியும்.

ஒரு வலைப்பதிவு தொடர்ந்து சீராக இயங்கவும்
தகுதியான இடுகைகளை பதிவர் வழங்கவும் துணை நிற்பன தரமான மறுமொழிகளே!

மறுமொழிக்காக என்றுமே நான் இடுகைகள் வெளியிட்டதில்லை.
இருந்தாலும் எனக்கு வந்த மறுமொழிகளே என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தின.
தொடர்ந்து தடம் மாறாமல் எழுதச் செய்தன என்பதை என்னால் மறுக்கமுடியாது.அவ்வடிப்படையில் வேர்களைத்தேடி என்னும் இவ்வலைப்பதிவு தொடர்ந்து சீராக இயங்க மறுமொழியாளர்கள் வழங்கிய கருத்துரைகளே அடிப்படைக் காரணமாகும். நான் வழங்கும் இலக்கிய இடுகைகளைக்கூட ஆழமாகப் படித்து உணர்ந்து நீங்கள் வழங்கிய கருத்துரைகளே இன்று வரை என்னை இவ்வளவு தொலைவு அழைத்து வந்திருக்கிறது.

மறுமொழியாளர்களைப் பலவகைப்படுத்த இயலும்.

1. வருகையைப் பதிவு செய்வோர்.
2. ஒரு சில வரிகளை மட்டும் படித்து மறுமொழியிடுவோர்.
3. ஆழ்ந்து படிப்போர், விவாதிப்போர்.
4. தவறுகளைக் கூட நயமாக உரைப்போர்.
5. நகைச்சுவை உணர்வோடு பதிலளிப்போர்.
6. சிந்தித்து, சிந்திக்க பதிலளிப்போர்
7. தொடர்புடைய செய்திகளை மறுமொழியில் சுட்டுவோர்.
8. நிறைய மறுமொழியிடுவோர்.
9. மறுமொழி வழியே தன் இணைப்புக்கு அழைப்போர்.
10. ஓட்டளித்துவிட்டேன் என்று உறுதிகூறுவோர்

என பலவகைப்பட்ட மறுமொழியாளர்களை இப்பதிவுலகில் காணமுடிகிறது.

என் வலையில் இதுவரை மறுமொழியிட்டவர்களுள் என்னால் மறக்கமுடியாதவர்கள் நிறைய பேர். அவர்களை முடிந்தவரை அடையாளப்படுத்தும் நோக்கில் என் வலையில் மேற்பக்கத்தில் இதுஉங்கள் இடம் என்றொரு பகுதியே ஒதுக்கியுள்ளேன்.

எனக்கு மறுமொழியிட்டவர்களுக்கு என்னால் முடிந்தவரை சென்று மறுமொழியிட்டிருக்கிறேன். அதற்கும் மேலே உங்களுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்று என் மனம் சொல்லிக்கொண்டே இருக்கிறது. கொடுப்பதில் கிடைக்கும் நிறைவு வேறு எதில் இருக்கிறது.

பணம் இருக்கும் மனிதரிடம் மனம் இருப்பதில்லை
மனம் இருக்கும் மனிதரிடம் பணம் இருப்பதில்லை

என்னிடம் நிறைய மனம் இருக்கிறது அதில் அன்பு மட்டுமே நிறைந்திருக்கிறது. அதனால் அன்பையே விருதாக வழங்க விரும்புகிறேன்.


1.முதலாவதாக இலக்கியத் தேனீ என்னும் விருது.

பழந்தமிழ் இலக்கியங்களானாலும் எம் தமிழ் இலக்கியங்கள் என்ற உரிமையோடு வந்து படித்து தம்மால் முடிந்தவரை புரிந்துகொண்டு மறுமொழியிட்ட பதிவர்களுக்கு இவ்விருதைப் பெருமையோடு வழங்குகிறேன்.

2.இரண்டாவதாக சிந்தனைச் சிற்பி என்னும் விருது.


எந்த இடுகை எழுதினாலும் என் சிந்தனையை உள்வாங்கி, தன் சிந்தனையைப் பதிவு செய்து மறுமொழியிட்ட பதிவர்களுக்கு இவ்விருதை பெருமகிழ்ச்சியுடன் வழங்குகிறேன்.

3. மூன்றாவதாக நகைச்சுவைத் தென்றல் என்னும் விருது.எத்தகைய இடுகையாக இருந்தாலும் நகைச்சுவையாகப் பதிலளிக்கும் வலைப்பதிவர்களுக்கு சிரித்துக்கொண்டு இவ்விருதை வழங்குகிறேன்.

அன்பின் உறவுகளே...

பழந்தமிழ் இலக்கியங்கள் குறித்த எனது சிறந்த கட்டுரைகளைத் தொகுத்து நூலாக்கம் செய்வது என்று எனக்கு ஒரு எண்ணம் உள்ளது. அச்சூழலில் உங்கள் கருத்துரையோடு வெளியிடவேண்டும் என்பது எனது நீண்ட காலத் திட்டம். பார்ப்போம் காலம் பதில் சொல்லும்.

என் மதிப்பிற்குரிய பதிவர்களே..
இந்த வேர்களைத்தேடி வந்த ஒவ்வொருவரும் இந்த விருதுகளுள் உங்களுக்குப் பிடித்த விருதை உரிமையோடு எடுத்துக்கொள்ளுங்கள்.
நீங்கள் எந்த விருதை எடுத்துக்கொள்கிறீர்கள் என்பதை மட்டும் தெரிவித்தால்.. உங்களை நானும் இவ்வலைக்கு வரும் பிற பதிவர்களும் அடையாளம் கண்டு கொள்ளத் துணையாக இருக்கும் என்று கருதுகிறேன்.


நன்றி.

தங்கள் மேலான பார்வைக்கு.


பொய் என்ற பொருளில்..

1. பொய்சொல்லிகள்
2. இதை நான் எதிர்பார்க்கல
3. உளறிக் கொட்டிய உண்மை
4. நிலவுக்கு வந்த சோதனை

பல இடுகைகள் எழுதியிருந்தாலும் நேற்று “பெரிய பொய்“ என்ற தலைப்பில் எளிய புதிர் ஒன்று வெளியிட்டேன்.

அதற்கு பதிவர்கள் வெளியிட்ட மறுமொழிகளைப் பாருங்கள்.

நான் மறுமொழியாளர்களை வகைப்படுத்தியதன் பொருள் உங்களுக்குப் புரியும்
.

வருகை தந்த, பரிசு பெற்ற அனைத்து பதிவர்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.


70 comments:

 1. எந்த விருதுக்கும் எனக்குத் தகுதி இல்லை!

  ReplyDelete
 2. பரிசுகள் தருவதற்கும் நல்ல மனம் வேண்டும் முனைவரே...

  நல்ல மனம் பெற்ற உங்களுக்கு வாழ்த்துகள்....

  ”இலக்கியத் தேனீ” பெயரே நயமாக இருக்கிறது...

  ReplyDelete
 3. உங்களின் மாறுபட்ட கோணத்திலான பதிவும் சிறந்த பதிவர்களுக்கான பரிசுகளும் பதிவர்களை பற்றிய உளவியல் ரீதியலான சிந்திப்புகளும் உண்மையில் பாராட்டக் கூடியன தொடருங்கள் நன்றி

  ReplyDelete
 4. வணக்கமும் வாழ்த்துகளும்

  ReplyDelete
 5. அருமையான பதிவு.
  நன்றி ஐயா.

  ReplyDelete
 6. அருமை அருமை!இத்துணை மெனக்கெட்டு பின்னூட்டம் கொடுத்தவர்களுக்கு மதிப்பளித்தல்...அப்பா எவ்வளவு உயரத்துக்கு போய் விட்டீர்கள்!தமிழன் தமிழன் தான்யா(அதிலும் தமிழை வளர்ப்பவர்கள்)...உபசரித்து மகிழும் குணம் அவனை விட்டால் யாருக்கு வரும்!

  ReplyDelete
 7. விருது வழங்கியதற்கு நன்றி முனைவரே....

  ReplyDelete
 8. அண்மையில்தான் உள்நுழைந்தேன். ஆனாலும், இத்தளத்தில் ஆழமாகப் பற்றுக் கொண்டுள்ளேன். இலக்கியங்களைச் சுவைக்கின்றேன். அதில் என் கருத்துக்களையும் நுழைக்க தவறேன். நாசுக்காகத் தமிழ் இலக்கியங்களைப் போதிக்கும் வல்லமையைக் கொண்டவர் நீங்கள் என்பதை உங்கள் வலை உணர்த்துகின்றது. இலக்கியத்தில் பற்றுள்ளவர் அனைவரும் தேடிவரும் தேனீ இத்தளம் என்பதை யான் கூறி நீங்கள் புரியவேண்டிய அவசியம் இல்லை. அருமை என்போருக்கும் ஆழமாகப் பின்னூட்டம் இடுவோருக்கும் வேறுபாடு புரிந்தவரே நீங்கள். பின்னூட்டத்தைப் புரிந்து கொண்டு பரிசுகள் வழங்கும் பொறுப்பு உங்களையே சாரும். விருதுகளை யாரும் தாமாகப் பெற்றுக் கொள்ளமுடியாது துணைவரே! யாராவது கொடுக்க வேண்டும்.

  ReplyDelete
 9. எனக்கு இலக்கியத் தேனீ விருது வழங்கி சிறப்பித்தமைக்கு மிக மிக நன்றி முனைவர் அவர்களே

  ReplyDelete
 10. என்னிடம் நிறைய மனம் இருக்கிறது அதில் அன்பு மட்டுமே நிறைந்திருக்கிறது. அதனால் அன்பையே விருதாக வழங்க விரும்புகிறேன்.//  அருமையான அன்பான வரிகள். வாழ்த்துக்கள்.......

  ReplyDelete
 11. அப்பப்பா! என்ன சிந்தனை சகோதரரே! உங்கள் சிந்தனை! என்னால் இப்படி முடியாதப்பா! நான் மிக விரும்பி வாசிக்கும் தளம் உங்கள் தளம். இதை மட்டும் நிச்சயமாகக் கூற முடியும். புலமைத் தனம் காட்ட நினைக்கும் பல சில்லறைகளைச் சந்திக்கிறேன். நீங்கள் எவ்வளவு தெளிவாக எழுதுவது விளங்கிக் கொள்ளச் சுலபமாக உள்ளது எளிமையாக உள்ளது . அதனாலும் எனக்கு உங்கள் தளம் பிடித்துள்ளது. என் தளத்திற்கு வருகை தந்து எனக்கு ''சிந்தனைச் சிற்பி'' என்று நீங்களே விருதளித்தமைக்கு மிகுந்த மகிழ்ச்சி. மிக்க நன்றி சகோதரரே!. இறை ஆசி கிட்டட்டும்.

  ReplyDelete
 12. நன்றிங்க மாப்ள....என்னையும் ஒரு பொருட்டாய் மதித்து மதிப்பளித்த உம பெருந்தன்மைக்கு நன்றி...!

  ReplyDelete
 13. மிக்க நன்றி ஐயா எனக்கு “ இலக்கிய தேனீ ”விருது வழங்கியமைக்கு.மிகுந்த சந்தோஷத்துடனும் பெருமையுடனும் ஏற்றுக்கொள்கிறேன்.நன்றி.

  ReplyDelete
 14. நண்பரே தங்கள் தளத்தில் தான் நான் இருக்கிறேன்

  தங்களது பதிவையும் பின்னூட்டத்தையும் படித்துக் கொண்டிருந்தேன் .

  விடைகள் எத்தனை பேர் சொல்லியிருக்கிறார்கள் என்று பார்த்துக் கொண்டிருந்தேன்

  ReplyDelete
 15. நண்பர் குணசீலன் அவர்களுக்கு

  தங்களின் இலக்கிய தேனீ விருதுக்கு மிக்க நன்றி நண்பரே .

  நன்றியுடன் ஏற்றுக்கொள்கிறேன்

  தங்கள் அன்பிற்கும் நன்றி நண்பரே

  ReplyDelete
 16. எனக்கு
  ''இலக்கியத் தேனீ '' விருது
  வழங்கி சிறப்பித்தமைக்கு மகிழ்ச்சி .
  மிக்க நன்றி .

  ReplyDelete
 17. உங்களின் அன்பான பரிசுக்கு நன்றி..
  வாழ்த்துகள் நண்பரே...

  ReplyDelete
 18. முனைவர் கொடுக்கிறதால அதை ஊக்கம் நு பிரியமா சொல்லிடலாம்.. என்ன முனைவரே சரி தானா?

  ReplyDelete
 19. இலக்கிய வித்தகர் மூலம் விருதுபெறுவதை
  நான் கிடைத்தற்கரிய பெரும் பேறாகக் கருதுகிறேன்
  மனமார்ந்த நன்றி

  ReplyDelete
 20. தங்களின் நல்ல பணிக்கு வாழ்த்துக்கள். விரைவிலேயே உங்களிடமிருந்து விருதைப் பெறுவேன்.

  ReplyDelete
 21. விழுதுகளைப் பெருமைப்படுத்திய வேர்களுக்கு
  மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!.

  ReplyDelete
 22. தேனீக்களுக்கு அங்கீகாரம் வழங்கிய மலருக்கு
  மனம் மகிழ்ந்த பாராட்டுக்கள்.

  ReplyDelete
 23. வாழ்த்துக்கள் தலைவரே!தூய தமிழ் தான் உங்கள் அடையாளம்!!

  ReplyDelete
 24. நண்பரே...

  ஆசிரியரிடம் முதல் ரேங் சர்டிபிகேட்டுடன் வாங்கும் மாணவன் எவ்வளவு மகிழ்ச்சி அடைவானோ

  அந்த சந்தோசம் எனக்கு தாங்கள்
  " இலக்கிய தேனீ "விருது வழங்கிய போது இருந்தது....

  அன்பாக தாங்கள் கொடுத்த இவ்விருதினை அன்போடு ஏற்றுக்கொள்கிறேன்...

  மிக்க நன்றி நண்பரே

  ReplyDelete
 25. தங்கள் 'இலக்கியத்தேனீ' விருதிற்கு என்றும் இந்த சில்லறையின் சிரம் தாழ்ந்த நன்றிகள்.... இந்த நான் வலைத்தளத்தில் இட முடியுமா...? எப்படி...?

  ReplyDelete
 26. வணக்கம் நண்பா,
  நல்லதோர் முயற்சி, இவ் விருது வழங்கும் முறையான பதிவர்கள் அனைவருக்கும் பதிவினை முழுமையாகப் படித்து, உணர்ந்து கருத்துரை வழங்க வேண்டும் எனும் உணர்வினை உருவாக்கும் என்பதில் ஐயமில்லை.

  எனகும் நீங்கள் இங்கே அறிவித்துள்ள விருதுகளை எடுத்துக் கொள்ளுவதற்குத் தகுதி இல்லை நண்பா.
  இன்று நான் உங்கள் வலைப் பதிவிற்கு இரண்டாவது முறையாக வந்துள்ளேன்.
  ஹா....ஹா...ஹி...

  ReplyDelete
 27. பள்ளி பாடங்களோடு நாங்கள் மறந்து விட்ட தமிழ் இலக்கியங்களை - மீண்டும் ரசிக்கவும், மேலும் பல குறிப்புகளோடு நன்கு புரிந்து கொள்ளும் வகையில், நீங்கள் தொடர்ந்து பகிர்ந்து வருவதற்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் தெரிவித்துக் கொள்கிறோம். விருதுகள் வழங்கி இன்னும் உற்சாகப்படுத்துவதற்கு, நன்றிகள் பல.

  ReplyDelete
 28. புதுமையாக இருக்க்கிறது! பாராட்டுகள்!

  ReplyDelete
 29. வை.கோபாலகிருஷ்ணன் said...
  முனைவர்.இரா.குணசீலன் said...
  //தொடர்ந்து என் வலையில் இலக்கியத் தேன் பருகியமைக்காக உங்களுக்கு “இலக்கியத் தேனீ“ என்னும் விருது வழங்கி மகிழ்கிறேன்..

  http://gunathamizh.blogspot.com/2011/09/blog-post_04.html

  நன்றி.//

  நன்கு படித்து தமிழில் புலமைபெற்ற பண்டிதர்களுக்கே புரியும், பழமை வாய்ந்த தமிழ் இலக்கியங்களைத்தேடி, அலசி ஆராய்ந்து அதன் அருமை பெருமைகளை, என் போன்ற பாமரனுக்கும் நன்கு புரியும் வண்ணம் சுலபமாக்கி, பழச்சாறு போலத் தந்து வரும், தங்கள் தமிழ்பணிக்கு, தமிழராய்ப் பிறந்துள்ள அனைவரும் தலை வணங்க வேண்டும்.

  தொடர்ந்து தொய்வில்லாமல் இத்தகைய தமிழ்பணியாற்றும் மிகச்சிறந்த மனிதரான, முனைவர், இரா.குணசீலன் ஆகிய தங்களால் ஒரு விருது கிடைக்க நான் தான் மிகவும் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

  என் உடல்நிலை + வேறு சில குடும்பச்சூழ்நிலைகள் காரணமாக, அதிகமான பதிவர்களின் வெளியீடுகளை கடந்த 2 மாதங்களாக படிக்க முடியாமலும், அப்படியே ஆசையில் படித்தாலும் பின்னூட்டம் அளிக்க முடியாமலும் உள்ளேன்.

  இருப்பினும் என் பழைய பின்னூட்டங்களுக்கு மதிப்பளித்து, எனக்கு நீங்கள் இந்த விருது வழங்கியுள்ளதற்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். அன்புடன் vgk

  ReplyDelete
 30. வாழ்த்துகள்....

  ReplyDelete
 31. எனக்கும் இலக்கியத் தேனீ விருது வழங்கி சிறப்பித்தமைக்கு மிக மிக நன்றி முனைவர் அவர்களே

  ஆனாலும் நான் இந்த விருதுக்கு தகுதி உடையவனா எனத்தெரியவில்லை..

  ReplyDelete
 32. இலக்கியத் தேனீ விருதுக்கு நன்றி!

  ReplyDelete
 33. வசந்தமண்டபத்தில் வாசம் செய்த என்னை
  வண்டை மயக்கும் மலராய் உங்கள் தளம் ஈர்த்தது...
  வேர்களின் தன்மையையும் அதன் வியாபித்திருக்கும்
  அழகையும் ரசித்திக்கொண்டிருக்கும் போது
  இதோ வைத்துக்கொள் என
  "சிந்தனைச் சிற்பி" விருது கொடுத்து கௌரவித்திருக்கிரீர்கள்.
  என்னே உமது பெருந்தன்மை...
  பதிவுலகத்தில் சிறியவனாம் என்னை
  விருதேற்கச் செய்த முனைவரே...
  நான் ஏற்றுக்கொள்ள தகுந்தவனா???
  இருப்பினும் எம் மனம் பூரிக்கிறது முனைவரே.
  கோடானுகோடி நன்றிகள்.

  வளர்க நின் தமிழ்ப் புலமை.
  வாழிய நின் தமிழ்த் தொண்டு .

  ReplyDelete
 34. விருதுகளை வழங்கி சிறப்பித்த முனைவருக்கு நன்றிகள்.
  விருதுகளைப் பெற்ற முப்பரிமாண நட்புக்கு வாழ்த்துக்கள்.
  எனக்கும் விருதளித்த முனைவருக்கு நன்றி.

  ReplyDelete
 35. வகை 11 ....

  எவ்வளவு தான் சிலவற்றை படித்தாலும் நம்ம மூளைக்கு ஏறாமல்...சான்றோர் இடம் தேடிச்சென்றாலே போதுமென்ற வகை...அதில் நானும்....

  ReplyDelete
 36. பாராட்டவும் பரிசுகள் தரவும் பணம் தேவையில்லை. உங்களைப் போன்ற நல்ல மனம் போதும். நீங்கள் தரும் இவ்விருதுக்கு ஈடு இணை கூற இயலுமோ...!

  வணக்கத்துடன் எம் ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 37. நல்ல முயற்சி. வரும்போதே விருதுகளை எதிர்பார்க்கக் கூடாது என்பதால் கவனமாக அவற்றைத் தாண்டி வந்து விட்டேன்...!

  ReplyDelete
 38. சென்னைப் பித்தன் ஐயா தாங்கள் என்வலையில் இலக்கிய இடுகைகளைப் படித்துக் அதிகமாக மறுமொழியிட்டவர்களுள் குறிப்பிடத்தக்கவர் தங்களுக்கு இலக்கியத்தேனீ என்னும் விருது தகுதியானதே அதைத் த்ங்களுக்கு வழங்கியதில் என் மனம் நிறைவடைகிறது.

  ReplyDelete
 39. இலக்கியத் தேனீ விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள் வெங்கட்.

  ReplyDelete
 40. வருகைக்கு நன்றி திருமதிஸ்ரீதர்.

  ReplyDelete
 41. நன்றி இரத்தினவேல்
  நன்றி நண்டு.

  ReplyDelete
 42. கொடுப்பதில் கிடைக்கும் நிறைவு பெறுவதில் கிடைப்பதில்லை என்பது உண்மைதான் தென்றல்

  தங்கள் மறுமொழிக்கு நன்றிகள்.

  ReplyDelete
 43. தங்களுக்கு ஏற்ற விருது “இலக்கியத்தேனீ“

  பாராட்டுக்கள் சந்திரகௌரி.

  ReplyDelete
 44. பாராட்டுக்கள் கூடல்பாலா

  ReplyDelete
 45. சிந்தனைச் சிற்பி விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள் இலங்கா திலகம்.

  ReplyDelete
 46. மகிழ்ச்சி விக்கி
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 47. இலக்கியத் தேனீ விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள் இராம்வி.

  ReplyDelete
 48. தங்கள் தொடர் வருகைக்கும் ஆழ்ந்த வாசிப்புக்கும் நன்றி எம்ஆர்.

  இலக்கியத்தேனீ விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 49. விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள் நண்டு
  விருதுக்கு வாழ்த்துக்கள் இராஜா எம்விஎஸ்

  ReplyDelete
 50. உண்மைதான் சூர்யா வாழ்த்துக்கள்
  விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள் இரமணி ஐயா.
  விருதுக்குப் பாராட்டுக்கள் இராஜேஷ்வரி.

  ReplyDelete
 51. வேர்களைத்தேடி வந்தமைக்கு தங்களுக்கு இலக்கியத்தேனீ என்னும் விருதளித்து மகிழ்கிறேன்

  கவிப்பிரியன்

  ReplyDelete
 52. நன்றி மைந்தன் சிவா.

  வாழ்த்துக்கள் மாய உலகம்

  வாழ்த்துக்கள் நிரோஷ் நீங்க விரும்பினால் தங்கள் வலையில் இந்த படத்தை இணைத்துக்கொள்ளலாம்.

  ReplyDelete
 53. “இவ் விருது வழங்கும் முறையான பதிவர்கள் அனைவருக்கும் பதிவினை முழுமையாகப் படித்து, உணர்ந்து கருத்துரை வழங்க வேண்டும் எனும் உணர்வினை உருவாக்கும் என்பதில் ஐயமில்லை.“

  நல்லதொரு புரிதல் நிருபன்

  இதுதான் எனது நோக்கமும் கூட.

  தாங்கள் இலக்கியித் தேனீ என்னும் விருதுக்குத் தகுதியானவர்தான் நிருபன்

  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 54. மகிழச்சி சித்ரா.

  பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்

  ReplyDelete
 55. தங்கள் முதல் வருகைக்கு நன்றி எச்விஎல்

  ReplyDelete
 56. வை.கோபாலகிருஷ்ணன் அவர்க்ளே..

  நீங்கள் தங்களைப் பற்றி மிகவும் அடக்கமாகத் தெரிவித்துள்ளீர்கள் என்பதை நான் நன்கறிவேன்.

  அறிவை விட அனுபவம் சிறந்தது என்று கருதுபவன் நான்

  தங்களின் அனுபவமிக்க மறுமொழிகள் எனக்கு நிறைய கற்றுத்தந்தன என்பதை நீங்கள் அறிவீர்களா..

  விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள் ஐயா.

  ReplyDelete
 57. மகேந்திரன்..

  நான் வலையுலகில் கண்ட முத்தான பதிவர்களுள் தாங்களும் ஒருவர்.

  தாங்கள் என் வலையில் கருத்துரையளித்தளிலும்
  தங்கள் வலையில் இடுகை வெளியிடுவதிலும்

  தங்ளுக்கான தனித்துவத்தை என்னால் அறியமுடிந்தது.

  சிந்தனைச் சிற்பி என்னும் விருதுக்குத் தகுதியான நபர் தான் தாங்கள்..

  வாழ்த்துக்கள் அன்பரே.

  ReplyDelete
 58. வருகைக்கு நன்றி ராபின்சன்

  இவ்விருதுக்குத் தாங்கள் தகுதியானவர்தான் ரியாஷ்

  விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள் சே.குமார்

  இன்னொரு வகையை அறிமுகம் செய்த ரெவரிக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 59. வருகைக்கு நன்றி நிசாமுதீன்

  மனம் நிறைவாக இருக்கிறது முத்துராசு நன்றிகள்

  மகிழ்ச்சி ஸ்ரீராம்

  ReplyDelete
 60. தங்களின் முயற்சிக்கு வாழ்த்துகள். விருபெற்றவர்களுக்கும், பெறப்போகிறவர்களுக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
 61. உயரிய சிந்தனைக்கும்...
  இலக்கிய எழுத்துகளுக்கும்.............
  தேனீக்களை கவர்ந்திழுக்கும்
  தேன்சுவை பதிவுகளுக்கும் ....
  இலக்கிய தேனீ விருதுக்கு
  மனமார்ந்த நன்றி.......

  ReplyDelete
 62. பின்னூட்டங்களையும் பிரித்தறிந்து ஏற்ற விருதுகள் வழங்கி இலக்கியத்தில் இன்னும் ஈடுபாடு காட்டும் விதமாய் ஊக்குவிக்கும் தங்கள் முயற்சியைப் பெரிதும் பாராட்டுகிறேன்.

  ReplyDelete
 63. வணக்கம் முனைவர் அவர்களே.பேரானந்தம் கொண்டேன்!...இந்த விருதைப் பெறுவதற்கு எனக்குத் தகுதி வந்துவிட்டாதா இல்லையா என்பதைவிட என்னையும் ஒரு பொருட்டாய்
  மதித்து தாங்கள் எனக்களித்த இந்த விருதினை என் மனதோடு சேர்த்து எடுத்துக்கொண்டேன் .என் எழுத்துப் பயணத்தில் வலைத்தளம்மூலமாக தாங்கள் கொடுத்த இந்த முதல் விருதை நான் என்றுமே மறக்க மாட்டேன் .மிக்க நன்றி உங்கள் கௌரவிப்பிற்கு.இன்று என் வலைத்தளத்தில் ஒரு பாடல்வரியினை வெளியிட்டுள்ளேன்
  சந்தர்ப்பம் கிடைத்தால் வந்து உங்கள் கருத்தினை இட்டுக் கௌரவியுங்கள் .மிக்க நன்றி தங்களின் ஒத்துளைப்பிற்கு.............

  ReplyDelete
 64. இந்த விருதின் மூலம் உங்கள் தளத்திற்கு அடிக்கடி வந்து உங்கள் பதிவுகளுக்கு எங்களது பின்னூட்டங்களை இடுவதற்கு தூண்டும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை.....சார்.....

  விருதிற்கு மிக்க நன்றி......

  ReplyDelete
 65. எனக்குவரும் மின்னஞ்சல்களில் முதலில் நான் பார்ப்பது முனைவர் குணாவின் வேர்களைத் தேடி.. அதன்பிறகே எனக்கு வரும் முக்கிய மின்னஞ்சல்களைக்கூட நான் படிப்பேன். காரணம் தமிழின் மீது நான் கொண்டுள்ள அவா. மாணாக்கருக்கு தமிழ் கற்றுக்கொடுக்கும்போது அவர்களது உள்ளத்தைக் கொள்ளை கொள்ள நிறையவே வேர்களைத் தேடி வலைப்பூவில் உள்ளது. வளரட்டும் இவ்வலைப்பூ. முனைவருக்கு எனது தமிழியல் வாழ்த்துக்கள்!!

  ReplyDelete