Tuesday, September 10, 2013

தற்கொலை செய்துகொ(ல்)ள்வோம்!


ஆற்றிலும், குளத்திலும், கிணற்றிலும்
தினம் தினம் விழுந்து தற்கொலைக்கு முயற்சிக்கிறது நிலா!

ஒவ்வொரு மாலைநேரத்திலும்
கடலில் விழுந்து தற்கொலைக்கு முயற்சிக்கிறது சூரியன்!

பெரிய பெரிய மலைகளில் ஏறி
தற்கொலைக்கு முயற்சிக்கின்றன மேகங்கள்!

என்ன சிரிப்பு வருகிறதா?
நிலவும், சூரியனும் இவ்வாறெல்லாம் தோன்றுவது இயற்கை!
இந்தப் புரிதல் காட்சிப்பிழை என்று தோன்றுகிறதா?

அப்படித்தான் வாழ்வின் சில மணித்துளிகள் நமக்குத் தோன்றும் அச்சங்களும், துன்பங்களும் இவை நிலையானவை அல்ல சில மணித்துளிகளில் மாறிவிடும் காட்சிப்பிழைகளே!

சிங்கங்களுக்கும், புலிகளுக்கும் பயந்து
மான்கள் தற்கொலை செய்துகொள்வதில்லை!

பாம்புகளுக்குப் பயந்து
தவளைகள் தற்கொலை செய்துகொள்வதில்லை!

பூனைகளுக்குப் பயந்து
எலிகள் தற்கொலை செய்துகொள்வதில்லை!

அஃறிணை உயிரினங்கள் கூட வாழ்வதற்காகவே சாகின்றன
அஃறிணை உயிரினங்கள் எதுவும் தற்கொலை செய்துகொண்டதில்லை!

உலகம் முழுவதும் தினமும் 3,000 பேர், ஆண்டுதோறும் சுமார் 9 லட்சம் பேர் தற்கொலை செய்துகொள்கிறார்கள் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது. போர்களாலும், கொலைகளாலும், பயங்கரவாதத் தாக்குதல்களாலும், விபத்துகளாலும் நிகழ்கிற மரணங்களை விடவும், தற்கொலை செய்துகொள்வதன் மூலம் இறந்துபோகிறவர்கள் எண்ணிக்கையே அதிகமாகவுள்ளது.

தற்கொலை செய்துகொள்ள இவர்களுக்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம்.
வாழ்வதற்கு இவர்களுக்கு ஒரு காரணம் கூடவா கிடைக்கவில்லை?

ஒரு தோழி சொன்னார்….
ஆண்களுக்கு ஆயிரம் பிரச்சனைகள்,
ஆண்களோடு சேர்த்துப் பெண்களுக்கு ஆயிரத்தியொரு பிரச்சனைகள் என்று..
அதற்கு நான் கேட்டேன்..
ஆண்களோட ஆயிரம் பிரச்சனை என்ன என்று உங்களுக்குத் தெரியுமா? என்று..
அதற்கு அவர் தெரியாது என்று சொன்னார்..
நான் சொன்னேன்…………..
ஆண்களின் ஆயிரம் பிரச்சனைகளும் பெண்கள் தான் என்று..

இந்த உரையாடல் நகைச்சுவைக்காக மட்டுமல்ல. இதில் ஒரு உண்மையும் உள்ளது.

ஒவ்வொருவருக்கும் தாம் தான் உலகிலேயே மிகவும் துன்பப்படுகிறோம், நம்மைவிட துன்பப்படுபவர் யாருமே இல்லை என்ற எண்ணம் உண்டு. அதன் விளைவே நாம் வாழத்தகுதியற்றவர் என்ற முடிவில் தற்கொலை செய்துகொள்கின்றனர். துன்பங்களே இல்லாதவர் இன்னும் பிறக்கவேயில்லை என்பதை உணர்ந்துகொள்ளும்போது பிரச்சனைகளை எதிர்கொள்ளும் மனவலிமை நமக்கு வந்துவிடும்.

தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு கொடுமையான சூழல் ஒவ்வொருவக்குமே வரும். அப்போதெல்லாம் நாம் தற்கொலை செய்துகொள்வோம் என்ற முடிவை ஒவ்வொருவரும் எடுத்தால் இந்த உலகமே இடுகாடாக மாறிப்போய்விடும். அதனால் அப்படியொரு கொடுமையான சூழல் நம் வாழ்வில் வந்தால் முதலில் தற்கொலை செய்துகொள்வோம் என்ற எண்ணத்தை தற்கொலை செய்து கொல்வோம்!

இந்த உலகிலேயே விலைமதிக்கமுடியாதது உயிர் என்பதை உணர்வோம் உணர்த்துவோம்..


இன்று உலக தற்கொலை தடுப்புநாள்! (செப்டம்பர்10) 

தொடர்புடைய இடுகைகள்.

1. நான் ஏன் வாழக்கூடாது?
2. தற்கொலைகளைத் தடுக்கும் ஆற்றல்

12 comments:

 1. அருமையாகச் சொன்னீர்கள்... அவரவர் உணர வேண்டும்...

  வாழ்க்கை வாழ்வதற்கே...

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி நண்பரே.

   Delete
 2. உண்மை தான் வெளிநாடுகளில் இதன் விகிதாச்சாரம் அதிகரித்துக் கொண்டே
  வருகிறது என்பதை உணர முடிகிறது .இங்கு உள்ளவர்களில் அதிகமானவகளுக்கு
  மன அழுத்தம் இருப்பாதாகக் கருதுகின்றார்கள் .தூக்கமின்மை இதற்கெல்லாம்
  முக்கியமானதொரு காரணம் என்றும் அறியப்படுகின்றது .தக்க சமயத்தில்
  சிறப்பானதொரு ஆக்கம் .வாழ்த்துக்கள் மேலும் தொடரட்டும் முனைவர் அவர்களே .

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி அம்பாளடியாள்.

   Delete
 3. வணக்கம்

  பதிவு அருமை அருமை
  இன்று உலக தற்கொலை தடுப்புநாள்! (செப்டம்பர்10) நாளை நினைவு படுத்தியமைக்கு மிக நன்றி

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி ரூபன்.

   Delete
 4. தற்போதைய சூழலில்
  அவசியத் தேவையான கருத்து இது
  பகிர்வுக்கு மனமார்ந்த நன்ரி

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி ஐயா.

   Delete
 5. இயற்கை கொடுத்த உயிரை நாம் செயற்கையாக போக்கிக்கொள்ள உரிமையில்லை...


  எந்த சூழ்நிலையிலும் வாழ்க்கையை தன்னம்பிக்கையோடு வாழ பழகிவிட்டால் யார் மனதிலும் தற்கொலை எண்ணம் தோன்றது...

  நல்லதொரு விஷயம் அழகியபதிவாக...

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி கவிஞரே.

   Delete
 6. இதை ஏன் முன்னாடியே எழுதலே ? பல பேரை தற்கொலை பண்ணிக்கிறதிலே இருந்து காப்பாற்றி இருக்கலாம் இல்லையா ?ஒண்ணும் கவலைப்படாதீங்க ...இதைப் படிச்ச யாரும் தற்கொலை பண்ணிக்க மாட்டாங்க !

  ReplyDelete
  Replies
  1. கேள்வியும் நானே பதிலும் நானே என்ற தங்கள் வருகைக்கும் பதிலுக்கும் நன்றி நண்பரே.

   Delete