வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வியாழன், 12 செப்டம்பர், 2013

இன்று சி.வை.தாமோதரம்பிள்ளை பிறந்தநாள்.

 

                      தமிழ்நூல்களைப் பதிப்பித்தவர் என்றவுடன் நம் நினைவுக்கு வருபவர் தமித்தாத்தா உ.வே.சாமிநாதையர் தான். அவரைப்போலவே தமிழ்நூல்கள் பலவற்றையும் பதிப்பித்த சி.வை.தாமோதரம்பிள்ளை அவர்களையும் தமிழுலகம் என்றும் மறக்காது. இவர்  
 (செப்டம்பர் 12, 1832 - ஜனவரி 1, 1901, சிறுப்பிட்டி,யாழ்ப்பாணம்) பண்டைய சங்கத் தமிழ் நூல்கள் செல்லரித்து அழிந்து போகாது, தமது அரிய தேடல்கள் மூலம் அவற்றை மீட்டெடுத்து, காத்து, ஒப்பிட்டு பரிசோதித்து, அச்சிட்டு வாழ வைத்த பெருமைக்குரியவராவார். 
                     இவர், வைரவநாதபிள்ளை, பெருந்தேவி தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தவர்.இளம் வயதிலேயே தமிழ் இலக்கண, இலக்கிய நூல்களையும் ஆங்கிலத்தையும் நன்கு கற்றறிந்தார். தனது பன்னிரண்டாவது வயதில் அக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் புகழ் பெற்று விளங்கிய வட்டுக்கோட்டை செமினறியில் சேர்ந்து, அறிவியல் துறையிலும் பயிற்சி பெற்றார். அதன் பின்னர் 1852  இல் அயலூரான கோப்பாயில் போதனாசக்தி வித்தியாசாலையில் ஆசிரியராகச் சிலகாலம் பணி புரிந்தார். இவரது புதல்வர் அழகசுந்தரமும் தமிழாய்வாளராவார்.

பதிப்புத்துறை முன்னோடி

1853 ஆம் ஆண்டு நீதிநெறி விளக்கம் என்னும் ஒழுக்க நெறி சார்ந்த தமிழ் நூலொன்றைப் பதிப்பித்ததன் மூலம் நூல் வெளியீட்டுத் துறையில் அவருக்கிருந்த ஆர்வம் வெளிப்பட்டதுமல்லாமல், 'தமிழ்ப் பதிப்புத்துறை முன்னோடி' எனும் பெருமையையும் பெற்றார்.

இதழாசிரியர்

இவர், யாழ்ப்பாணம் வெஸ்லியன் ஆங்கிலப் பாடசாலை (தற்போதைய யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி) அதிபராக இருந்த பீட்டர் பேர்சிவல்பாதிரியார் தமிழ்நாட்டில் நடத்திவந்த தினவர்த்தமானி 
பத்திரிகையின் ஆசிரியர் பொறுப்பை ஏற்றுக்கொண்டு 1853 ஆம் ஆண்டுசென்னை வந்தார். அத்துடன் சென்னை இராசதானிக் கல்லூரியில் தமிழ்ப் பண்டிதராகவும் கடமையாற்றினார்.

பட்டப்படிப்பு

1858 இல் சென்னைப் பல்கலைக் கழகத்தால் நடத்தப்பட்ட முதலாவது கலைமாணி (பி.ஏ.) பட்டத்துக்கான தேர்வில் மாநிலத்திலேயே முதல் மாணவனாகத் தேறினார். பின்பு தமிழகம் கள்ளிக்கோட்டை அரசினர் கல்லூரித் தலைமை ஆசிரியரானார். அதன்பின் அரசாங்க வரவுசெலவுக் கணக்குச் சாலையில் கணக்காய்வாளரானார். அத்துடன் விசாரணைக் கர்த்தர் பதவியும் கிடைத்தது.

ராவ்பகதூர் விருது

தொடர்ந்து சட்டம் பயின்ற அவர், 1871 இல் 'பி.எல்.' தேர்விலும் வெற்றி பெற்று, கும்பகோணத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி, 1884ஆம் ஆண்டில் புதுக்கோட்டை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். ஆறு ஆண்டுகளுக்குப் பின் ஓய்வு பெற்ற தாமோதரம்பிள்ளைக்கு 1895 ஆம் ஆண்டில் அரசினர் 'ராவ் பகதூர்' பட்டமளித்துப் பாராட்டினர்.

தொல்காப்பியப் பொருளதிகாரம் பதிப்பித்தல்

பாண்டிய மன்னன் கைகளுக்கே அகப்படாததாக அன்று இழக்கப்பட்டதாய் கருதப்பட்டு வந்த தொல்காப்பியப் பொருளதிகாரம் அர்ப்பணிப்புடனான அவரது கடும் உழைப்பினால் தேடிக் கண்டுபிடிக்கப்பட்டு, பரிசோதிக்கப்பட்டு, அச்சிட்டு தமிழ் நாட்டின் பட்டினங்கள் தோறும் அந்நூலை அவர் பவனி வரச் செய்த போது, அதனை மெச்சி வியந்து பாராட்டாதோர் எவரும் இருந்ததில்லை. அவரது அப்பணி ஒன்றுக்காகவே அவர் பிறந்த ஈழத்துக்கு திராவிடம் அன்று நன்றி கூறிப் பாராட்டும் நல்கியிருந்தது.

மறைவு

    தமது அறுபத்தி ஒன்பதாம் வயதில், 1-1-1901 இல் சென்னையில் புரசைவாக்கம் பகுதியில் தாமோதரம்பிள்ளை மறைந்தார்.
தாமோதரனார் பண்டைக்கால இலக்கியங்கள் பலவற்றைப் பதிப்பித்தார். அவற்றில் சில:
·                    நீதிநெறி விளக்கம் (1953)
·                    தொல்காப்பியச் சொல்லகதிகாரத்திற்குச் சேனாவரையர் உரை (1868)
·                    வீரசோழியம் (1881)
·                    திருத்தணிகைப் புராணம்
·                    இறையனார் அகப்பொருள்
·                    தொல்காப்பியப் பொருளதிகாரத்திற்கான நச்சினார்க்கினியருரை
·                    கலித்தொகை
·                    இலக்கண விளக்கம்
·                    சூளாமணி
·                    தொல்காப்பிய எழுத்திகாரத்திற்கான நச்சினார்க்கினியருரை

இயற்றிய நூல்கள்

·                    கட்டளைக் கலித்துறை
·                    சைவ மகத்துவம்
·                    வசன சூளாமணி
·                    நட்சத்திர மாலை
·                    ஆறாம் வாசகப் புத்தகம்
·                    ஏழாம் வாசகப் புத்தகம்
·                    ஆதியாகம கீர்த்தனம்
·                    விவிலிய விரோதம்
·                    காந்தமலர் அல்லது கற்பின் மாட்சி (புதினம்)

தமிழ்ப் பதிப்புத்துறையில் பெரும்பங்காற்றிய சி.வை.தாமோதரம்பிள்ளை அவர்களின் பிறந்தநாளன்று அவர்களின் பணியை எண்ணிப்பார்ப்பதில் பெருமிதம் கொள்கிறேன்.. (தரவுகளுக்கு நன்றி தமிழ்விக்கிப்பீடியா)

5 கருத்துகள்:

  1. சிறப்பான பகிர்வு .நாம் அறிந்துகொள்ள
    வேண்டியவர்களை எப்போதும் இப்படி நன்றியோடு அறிமுகப் படுத்தி வரும் போது தான் இவை எமது
    இளைய தலைமுறையினரையும் சென்றடையும் .வாழ்த்துக்கள் மேலும் இது போன்ற பகிர்வுகள் தொடரட்டும் .

    பதிலளிநீக்கு
  2. "அவர்களின் பணியை எண்ணிப்பார்ப்பதில் பெருமிதம் கொள்கிறேன்" மகிழ்கின்றோம். நன்றி.

    பதிலளிநீக்கு