வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வெள்ளி, 15 ஆகஸ்ட், 2014

அறிவு கெட நின்ற வறுமை!


மக்கள்தொகைப் பெருக்கம், விலைவாசி ஏற்றம், வேலையில்லாத் திண்டாட்டம், தனியார்மயமான கல்வி என எல்லாவற்றுக்கும் காரணமான அரசின் திறமையற்ற ஆட்சிமுறை யாவும் சேர்ந்து நம் இந்தியாவை வீழ்ச்சிப் பாதையில் அழைத்துச் சென்றுகொண்டிருக்கிறது. அதனால் படித்த குற்றவாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

வறுமை ஒரு மனிதனை தவறான பாதைக்கு அழைத்துச் சென்றுவிடுகிறது.

நெருப்பில்கூட ஒருவனால் தூங்கமுடியும் ஆனால் வறுமை நிலையில் எவ்வகையாலும் கண்மூடித் தூங்குதல் அரிது என்பார் வள்ளுவர். இதனை,

நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்
யாதுஒன்றும் கண்பாடு அரிது

திருக்குறள் – 1049
என்ற குறள் சுட்டும்.

வறுமையைப் போலத் துன்பமானது எது என்று கேட்டால், வறுமையைப் போல் துன்பமானது வறுமை ஒன்றே ஆகும் எனவும் உரைக்கிறார். இதனை,

இன்மையின் இன்னாதது யாதுஎனின் இன்மையின்
இன்மையே இன்னா தது.

திருக்குறள் – 1041
என்ற குறள் வழி உணரலாம்.

வறுமை மனிதனின் அறிவைக் கெடுத்துவிடும் என்ற உண்மையை உணர்த்தும் புறநானூற்றுப் பாடலைக் காண்போம்.

பயம் கெழு மா மழை பெய்யாது மாறி
கயம் களி முளியும் கோடை ஆயினும்
பழற்கால் ஆம்பல் அகல் அடை நீழல்
கதிர்க் கோட்டு நந்தின் சுரி முக ஏற்றை
நாகு இள வளையொடு பகல் மணம் புகூஉம்
நீர் திகழ் கழனி நாடு கெழு பெரு விறல்?
வான் தோய் நீள் குடை, வய மான் சென்னி!
சான்றோர் இருந்த அவையத்து உற்றோன்
ஆசு  ஆகு என்னும் பூசல் போல
வல்லே களைமதி அத்தை – உள்ளிய
விருந்து கண்டு ஒளிக்கும் திருந்தா வாழ்க்கை
பொறிப் புணர் உடம்பில் தோன்றி என்
அறிவு கெட நின்ற நல்கூா்மையே!
புறநானூறு 266

சோழன் உருவப் பல்தேர் இளஞ்சேட் சென்னியைப் பெருங்குன்றூா்க் கிழார் பாடியது.

பயன்மிக்க வான்மேகம் மழையைப் பொழியாது நீங்குதலால் நீர்நிலைகள் வற்றிப்போகும் கோடைக்காலமாயினும் துளைபொருந்திய நீண்ட காம்பைக் கொண்ட ஆம்பலின் அகன்ற இலையின் நிழலில் கதிர்போன்ற கோட்டினைக் கொண்ட சுழித்த முகத்தை உடைய நத்தையின் ஏற்றை செருக்கினால் பெண்ணாகிய இளைய சங்குடன் பகற்காலத்தே கூடி மகிழும். இத்தகைய நீா்வளமிக்க வயல்களைக் கொண்ட நாட்டையும் வெற்றிச்சிறப்பையும் உடையோய்!

வானளாவ உயா்ந்த குடையையும், வலிமைமிக்க குதிரையினையும், உடைய சென்னி!

அறிவுமிக்க சான்றோர் ஒருங்கிருந்த அவையில் சென்று ஒருவன் யானுற்ற துன்பத்துக்குத் துணையாய் நீவிர் எனக்குப் பற்றாக வேண்டும். என்னும் முறையீட்டை அவா்கள் விரைந்து தீர்பார்கள். அதுபோல என்னை நினைந்து வந்த விருந்தினரைக் கண்டு அவர்க்கு விருந்தளிக்க இயலாமல் ஒளியச் செய்யும் நன்மை இல்லாத இல்வாழ்க்கையை உடையவன் நான். ஐம்புலன்களும் குறைவின்றிப் பொருந்திய என் உடம்பில் அவற்றால் ஆகிய பயனை அடையமுடியாதபடி எனது அறிவு கெட நிலைபெற்ற வறுமையை விரைவாகதத் தீர்பாயாக. 

10 கருத்துகள்:

  1. இனியன கூறி இதயத்தை அள்ளும்
    கனியென நுகர்ந்தேன் கசிந்து !

    அருமையான ஆக்கம் வாழ்த்துக்கள் சகோதரா .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் அம்பாளடியாள்

      நீக்கு
  2. அழகான இலக்கிய வரிகளும்,விளக்கங்களுடனும், இன்றைய விலைவாசி ஏற்றத்தையும் அதனால் விளையும் வறுமை எப்படிப்பட்ட பாதைக்கு அழைத்துச் செல்லும் என்று சொல்லிய விதம் அருமை ஐயா!

    பதிலளிநீக்கு
  3. வறுமையைவிட துன்பம் வறுமைதான். இதை வள்ளுவனைவிட வேறு யாரால் அழகாய் சொல்ல முடியும்.

    பதிலளிநீக்கு
  4. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் நண்பரே.

    பதிலளிநீக்கு
  5. வணக்கம்
    அப்போதே வகுத்துவிட்டான் வள்ளுவன்..... மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  6. வறுமையின் பலனை அப்பனின் இரண்டடியை மேற்கோள் காட்டி புறநானூற்றுப் பாடலை இணைத்து விளக்கியதற்கு நன்றி.

    நின் தமிழ்ப்பணி தொடர வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு