வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஞாயிறு, 1 மே, 2011

களவும் கற்று மற.. - UPSC EXAM TAMIL - குறுந்தொகை - 25

குறுந்தொகை 25

பறவைகள், விலங்கினங்கள் எல்லாம் எங்குபோய் திருமணம் செய்துகொண்டு வாழ்கின்றன. அவற்றுக்கு திருமண முறிவு என்றால் எங்கு நடக்கும்..? 

மனிதனும் ஒரு காலத்தில் அப்படித்தான் வாழ்ந்து வந்தான். ஒருவன் பலரோடு வாழ்ந்த காலமும் உண்டு. களவுக்கும் கற்புக்கும் (காதலும், திருமணமும்) இடையேதான் தமிழர் மரபு இன்று வரை ஊசலாடிக் கொண்டிருக்கிறது. 

கற்பு என்றால் என்ன? கற்பு என்பது ஏதோ பெண்களுக்கு மட்டும் இருக்கவேண்டிய ஒன்று என்ற சிந்தனை என்று தோன்றியதோ அன்றே திருமணத்துக்கான தேவையும் தோன்றிவிட்டது. ஆம் கற்பு என்பது ஒழுக்கம். அது ஆண்,பெண் இருபாலருக்குமே பொதுவானது. ஆனால் சில ஆண்கள் பெண்களைக் காதலி்த்துவிட்டு ஏமாற்றிய சூழலில் தான் இவர்களைக் கட்டுப்படுத்த திருமணம் என்ற சடங்கு பெரியோர்களால் உருவாக்கப்பட்டது. 

காதலுக்கான கால அளவு. 

“களவும் கற்று மற“என்பதற்கு திருடவும் கற்றுக்கொள்ளவேண்டும் பின் அதனை மறந்துவிடவேண்டும் எனப் பொதுவாகப் பொருள் வழங்கிவருகின்றனர். சரியான பொருள் காதலிப்பதற்கும் கால அளவுண்டு என்பதுவே.. ஆம்.. களவாகிய காதல் 2மாத காலம் தான் நிகழும் என, “களவினுள் தவிர்ச்சி வரைவின் நீட்டம் திங்கள் இரண்டின் அகமென மொழிப“ இறையனார் களவியல் உரைக்கிறது. காதலித்துக்கொண்டே இருந்துவிடக் கூடாது காதல் திருமணமாக மாறவேண்டும் என்பதே நம் முன்னோர் வகுத்த மரபாகும். 

பெண்கள் மலரணிதல்.
திருமணமான பெண்கள் மலர் அணிவர். திருமணமாகாத பெண்கள் மலர் அணிவதில்லை. மணமாகாத பெண் ஒருத்தி மலர் அணிந்திருந்தால் அவள் காதலிக்கிறாள் என்று ஊரார் அலர் தூற்றுவர்.

சிலம்புகழி நோன்பு.

திருமணத்திற்கு முன்னர் சிலம்பணிந்த பெண், 
திருமணத்திற்குப் பின்னர் அச்சிலம்பை அணிவதில்லை.
பெண்ணுக்கு பெற்றோர் அணிவிக்கும் இச்சிலம்பு மணம்புரிவதற்கு முன்னர் நீக்கப்படும். இதற்கு சிலம்புகழிநோன்பு என்று பெயர்.இதனை,

“நும்மனைச் சிலம்பு கழிஇ அயரினும்
எம்மனை வதுவை நன்மணங் கழிகெனச்
சொல்லின் எவனொ மற்றே வென்வேல்
மையற விளங்கிய கழலடிப்
பொய்வல் காளையை ஈன்ற தாய்க்கே“
(ஐங்குறுநூறு -399)என்ற பாடலடி விளக்கும்.
மேலும்...

“சிலம்பு கழீஇய செல்வம்
பிறகுணக் கழிந்த என் ஆயிழை அடியே“
நற்றிணை 279.
என்ற அடிகளும் விளக்கும்.
கரணம் (மணச்சடங்கு)

“பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணம் என்ப“
(தொல்காப்பியம் – பொருள் 143)

இங்கு ஐயர் என்ற சொல் தலைசிறந்த பெரியொராகிய அறிஞர்களைக் குறிப்பிடுகிறது. இதனால் தொல்காப்பியர் காலத்திலேயே பொய்யும், வழுவும் தோன்றியிருந்தமை புலனாகிறது.

சிலம்பும் – மலரும் – மரபும்
சிலம்பின் ஓசையும் மலரின் தோற்றமும் ஒரு பெண் திருமணம் ஆனவளா? ஆகாதவளா? என்ற கேள்விக்குப் பதிலளிப்பதாக அமையும்.
இதைப் பிழைபட உணர்தலே...

பொய்யும் வழுவும் என தமிழறிஞர் வசுப.மாணிக்கனார் உரைப்பர்.
இன்னும் சிலர் இயல்பான வழக்கில் உள்ள பொய்சொல்லுதல், ஏமாற்றுதல் ஆகியனவே என்பர். காதலித்துவிட்டு ஏமாற்றுதல், திருமணம் செய்துகொள்வேன் எனக்கூறி கால நீட்டிப்பு செய்தல் ஆகியனவும் இவற்றுள் அடங்கும்.
இதோ பொய்சொல்லிய தலைவன்..


வரைவு நீட்டித்த இடத்துத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. (தலைவன் திருமணம் செய்து கொள்ள கால நீட்டிப்புச் செய்கிறான்.இச்சூழலில் தலைவி சொல்வதாக இப்பாடல் அமைகிறது) தோழி.. 

தலைவன் என்னைக் களவில் மணந்த காலத்தில் அதைப் பார்த்தவர்கள் யாரும் இல்லை. 
தலைவனாகிய கள்வன் ஒருவன்தான் இருந்தான். 
அவன் களவுக்காலத்தில் செய்த சூளுறவினை (சத்தியத்தை) மறந்தான். அதற்கு நான் என்ன செய்யமுடியும்..? 
ஓடுகின்ற நீரில் செல்லும் ஆரல் மீனின் வருகையையும், 
வந்தால் அந்த மீனை உண்பதற்காகவும் காத்திருந்த தினையின் அடியைப் போன்ற, 
சிறிய பசிய கால்களைக் கொண்ட நாரையும் (கொக்கு) இருந்தது.
அதுவும் எங்கள் காதலை அறியாது.  என்பதே பாடலின் பொருள்.

இப்பாடலின் வழியே.. 

1.கற்பு என்றால் என்ன? 
2.காதலுக்கான காள அளவு எவ்வளவு? 
3.பெண்கள் மலரணியும் மரபு. 
4.சிலம்புகழி நோன்பு. 
5.திருமணம் என்ற மரபு தோன்றிய சூழல். 
ஆகிய செய்திகள் எடுத்தியம்பப்பட்டுள்ளன.

தொடர்புடைய இடுகைக


8 கருத்துகள்:

 1. களவும் கற்று மற என்பதற்கு இப்படி ஒரு விழக்கம் இருக்கும் என்று நான் அறிந்ததில்லை, அருமை.

  பதிலளிநீக்கு
 2. @இனியாள் இன்னும் எத்தனை எத்தனையோ வியப்புகளை உள்ளடக்கியது தமிழ்மொழி தோழி..

  பதிலளிநீக்கு
 3. களவும் கற்று மற என்பதற்கு இவ்வாறான விளக்கம் இருக்கு என்று இப்ப தான் அறிந்தேன். தங்கள்
  தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்

  பதிலளிநீக்கு