வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திங்கள், 17 செப்டம்பர், 2012

முழுமையான தகவல்தொடர்பு (Effective Communication )


பேச்சுக்கலை பற்றிப் பேசும்போதும்
தெளிவான, முழுமையான தகவல் தொடர்புபற்றிப் பேசும்போதும் 
சொல்லின் செல்வன் அனுமனைப் பற்றியே பலரும் பேசுவது வழக்கம்.

ஆம்! தான் சீதையைக் கண்டுவந்த செய்தியை வாயைத்திறந்து சொல்லும் முன்பே,  தம் உடலசைவுமொழிகளால் முழுவதும் விளங்கச்செய்தவனன்றோ அனுமன்.

வழக்கமாக இராமனை, வணங்கி, வாழ்த்தும் அனுமன் சீதையைக் கண்டு திரும்பியபோது சீதை இருந்த இலங்கை திசை நோக்கித் திரும்பி நின்று கைகள் இரண்டும் பூமியைத் தொடும்படி கீழே விழுந்து வணங்கினான், வாழ்த்தினான். அதனால்,

சீதை உயிருடன்  இருக்கிறாள்..

உயிரினும் மேலான கற்புடன் இருக்கிறாள் என்பதையும் இராமன் 

புரிந்துகொண்டான்..

இங்கு இராமன் புரிந்துகொண்டான் என்று சொல்வதைவிட, புரியுமாறு 

அனுமன் சொன்னான் என்பதுதான் சரியாக இருக்கும்.

அடுத்து கண்டனென் கற்பினுக்கு அணியை என்றான். இதனை,

கண்டனென் கற்பினுக்கு அணியை கண்களால்
தெண்திரை அலை கடல் இலங்கைத் தென்நகர்
அண்டர் நாயகஇனிதுறத்தி ஐயமும்
பண்டு உள துயரும் என்று அனுமன் பன்னுவான்.
நூல்கம்ப ராமாயணம்
(சுந்தரகாண்டம்திருவடி தொழுத படலம்)
பாடியவர்கம்பர்
என்ற பாடல் எடுத்தியம்பும்..

அனுமனின் பேச்சுக்கலை நுட்பம் பற்றி சிந்திக்கும்போதெல்லாம், இராமனின் மனநிலை அப்போது எப்படியிருந்திருக்கும் என்றும் சிந்திப்பதுண்டு. அப்போதெல்லாம் மனதில் தோன்றும் சங்க இலக்கியப் பாடல் இதுதான்...நீ கண்டனையோ கண்டார்க் கேட்டனையோ
ஒன்று தெளிய  நசையினம் மொழிமோ
வெண்கோட்டு யானை சோணை படியும்
பொன்மலி பாடலி பெறீஇயர்
யார்வாய்க் கேட்டனை காதலர் வரவே.

குறுந்தொகை 75,
படுமரத்து மோசிகீரனார்
தலைவி பாணனிடம்  சொன்னது..


(தலைவன் வருகிறான் என்ற செய்தியைப் பாணன் வாயிலாக அறிந்த தலைவி நீ பாடலிபுத்திர நகரைப் பெறுவாயாக என வாழ்த்தும் பாடல் இது.)


நீ கண்டாயா?
கண்டவர்கள் சொல்வதைக் கேட்டாயா?
தெளிவாகக் கூறு!
உண்மையை அறிய விரும்புகின்றேன்.
வெள்ளைத் தந்தங்களுடைய யானைகள் விளையாடும்  சோணை நதியையுடையபொன் நிறைந்த பாடலி நகரை நீ பெறுவாயாக. என் காதலர் வரவை யார் சொல்லக் கேட்டாய்?
என்று பாணனிடம் ஆவலோடு கேட்கிறாள் தலைவி.

                             ப்பாடலில் தலைவனின் வருகையைச் சொன்ன பாணன் எப்படிச் சொல்லியிருப்பான் என்பது சொல்லப்படவில்லை. இருந்தாலும், 


தலைவிக்குத் தெளிவாகப் புரியாமல் சொல்லியிருப்பானா?
தலைவியின் ஆர்வத்தை மேலும் தூண்டும்விதமாகச் சொல்லியிருப்பானா?

என்னும் இருகேள்விகள் மனதுள் எழுகின்றன. 

இவ்விரு பாடல்கள் வழியாக..

முழுமையான தகவல் தொடர்பில்..


 • உடலசைவுமொழிகள்
 • சொல்லவரும் செய்தியை முழுமையாகக் கூறுதல்
 • புரியுமாறு சொல்லுதல்
 • ஆர்வத்தைத் தூண்டும்விதமாகச் சொல்லுதல்
 • கேட்பவர் மனநிலையை உணர்ந்து சொல்லுதல்
ஆகிய பேச்சுக்கலை நுட்பங்கள் நாம் நம் பேச்சில் கடைபிடிக்கவேண்டியனவாக உள்ளன.


தொடர்புடைய இடுகை..
                                        1. வெற்றிதரும் பேச்சுக்கலை 


                                                                   2. பேச்சுத் திறமை 

8 கருத்துகள்:

 1. அருமையான சிந்தனை. நல்ல ஒப்பீடு.

  பதிலளிநீக்கு
 2. பேச்சுக்கலை விளக்கங்கள் அருமை... நன்றி முனைவரே...

  பதிலளிநீக்கு
 3. அருமையான இலக்கியப்பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

  இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு