வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சனி, 22 டிசம்பர், 2012

எனது தமிழாசிரியர்கள்


ஞாலமுதல்மொழி, திராவிடமொழிகளுக்குத் தாய்மொழி, பழமையான,  சிறந்த இலக்கியச்செல்வங்களைச் சங்ககாலம் முதலாக இன்றுவரை தொடர்ச்சியாகக் கொண்ட மொழி என்னும் பல்வேறு சிறப்புகளைக் கொண்ட தமிழ்மொழி என் தாய்மொழி என்று சொல்லிக்கொள்வதில் பெருமிதம் கொள்கிறேன். தமிழில் எழுதுவதையும், பேசுவதையும் பெருமையாகக் கருதுகிறேன்.

“ஒரு நல்ல ஆசிரியரால் நல்ல மாணவனை உருவாக்கமுடியும்  நல்ல மாணவனால் நல்ல ஆசிரியராக உயரமுடியும்“ என்றொரு பொன்மொழி உண்டு.

நான் இன்று  தமிழ் விரிவுரையாளராக இருக்கிறேன் என்றால் அதற்குக் காரணம் நான் நல்ல மாணவனாக இருந்தேன் என்று நினைக்கவில்லை, எனக்கமைந்த ஆசிரியர்கள் நல்ல ஆசிரியர்களாக அமைந்தார்கள் என்பதே காரணம். எனது ஆசிரியர்கள் ஒவ்வொருவரையும் அவ்வப்போது எண்ணிப்பார்ப்பதுண்டு. 

என்னைக் கவர்ந்த மனதில் நிலைத்த எனது தமிழாசிரியர்கள் பலரையும் மொத்தமாக எண்ணிப்பாக்கும் வாய்ப்பை ஏற்படுத்தித்தந்த தமிழ்ச்செடி இணையத்துக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டு எனது கடந்தகாலத்துக்கு உங்களையும் அழைத்துச்  செல்கிறேன்.

பள்ளித் தமிழாசிரியர்கள்

சிவகங்கை மாவட்டத்தில், கல்லல் என்னும் கிராமத்தில் முருகப்பா மேனிலைப் பள்ளியில்தான் நான் 6ஆம் வகுப்புமுதல் 12ஆம் வகுப்புவரை படித்தேன். பலநாட்கள் மரத்தடியில்தான் வகுப்புகள் நடக்கும். வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் மாணவர்களை ஆசிரியர்கள் தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து பாடம் நடத்துவது என்பது அவர்களுக்குப் பெரிய சாதனையாக இருக்கும். அங்கு எனது தந்தை (மு.இராசேந்திரன்) தமிழாசிரியராகப் பணியாற்றிவந்தார். 

அவர் அடிக்கடி சொல்வார் “மேயப் போகும் மாடு கொம்பில் புல்லைக் கட்டிக்கொண்டு போகாது” என்று. இந்த பழமொழி என்னை அதிகமாக சிந்திக்கவைத்தது. 

எதையும், யாரையும் எதிர்பார்க்காது வேர்களைப்போல, நீரைப் போல இடத்துக்கு ஏற்ப சூழலுக்கு ஏற்ப என்னை வடிவமைத்துக்கொள்ள இந்த சிந்தனை பெரிதும் உதவியது. அவர் நன்றாக மரபுக்கவிதை இயற்றுவார். எங்கள் ஊரில் ஏதும் திருமண விழா என்றால் அவரிடம் வந்து பலரும் வாழ்த்துப் பாடல்களை எழுதிச்செல்வார்கள். அதனால் என் தந்தையைப் பலரும் புலவர் என்றுதான் அழைப்பார்கள். அவரது இந்த ஆற்றல் எனக்கு மரபுக்கவிதை எழுதவேண்டும் என்ற வேட்கையை ஏற்படுத்தியது.

6,7 ஆம் வகுப்புகளில் திருமதி. பாண்டியம்மாள் அம்மா அவர்கள் எனக்குத் தமிழ் எடுத்தார். அவர்களின் குரல்வளம் இப்போது நினைத்துபார்த்தாலும் காதுகளில் கேட்பதுபோல இருக்கிறது. கிராமிய மொழிநடையில் அவர் சொன்ன கதைகள், திருக்குறள் கருத்துக்கள் என்னைப் பெரிதும் கவர்ந்தன.

8,9,10 ஆம் வகுப்புகளில் திருமதி. நாகம்மை அம்மா அவர்கள் தமிழ் எடுத்தார். அவர்கள் அதிராத குரலில் தமிழை நயமாகப் பேசுவார். அவர்கள் சொன்ன நன்னெறிக் கதைகள் என்னை நிறைய சிந்திக்கவைத்தன.

11,12 ஆம் வகுப்புகளில் திரு குப்பால் அவர்கள் தமிழ் வகுப்பெடுத்தார். அவர் எங்கள் பள்ளியின் தலைமையாசிரியராகவும் இருந்தார். சங்க இலக்கியத்தை எனக்கு அறிமுகம் செய்தவர் இவரே. சங்ககாலக் கதைகள் பல சொல்லி என்னை வியப்பில் ஆழ்த்தினார். அவர் தமிழ் பேசியவிதம், பாடம் நடத்திய முறை தமிழ் மீது எனக்கு பற்று ஏற்படக் காரணமாக அமைந்தது.

கல்லூரித் தமிழாசிரியர்கள்

காரைக்குடி இராமசாமித் தமிழ்க்கல்லூரியில் நான் (பிலிட்) இளங்கலை தமிழ் பயின்ற காலத்தில் எனக்கு வந்த தமிழாசிரியர்கள் தமிழ்மொழியின் பல்வேறுதுறைகளை எனக்கு அறிமுகம் செய்துவைத்தனர். அதைக் கல்லூரி என்று யாரும்சொல்லமாட்டார்கள். வீடுபோலத்தான். அதன் தோற்றமும் அப்படித்தான் இருக்கும். ஐயா, அம்மா என்றுதான் ஆசிரியர்களை அழைப்போம். அவர்களும் மாணவர்களைத் தம் பிள்ளைகள் போலத்தான் நடத்துவார்கள்.

முதல்வர் திரு முருகசாமி ஐயா அவர்கள் எனக்கு படைப்பிலக்கியம் நடத்தினார். முதலாம் ஆண்டில் நடந்த கவிதைப் போட்டியில் கல்லூரியில் முதலிடம் பெற்றேன். அதற்குக் காரணம் அவர் பாடம் எடுத்த முறைதான். இலக்கியம் சார்ந்த பல்வேறு போட்டிகளுக்கு அவர் என்னை அனுப்பிவைத்திருக்கிறார், என்னை அழைத்தும் சென்றிருக்கிறார். 

அவர் ஒவ்வொரு முறையும் சொல்வார். நாம் எந்தப்போட்டியில் கலந்துகொண்டாலும் நாம் வெற்றியடைகிறோமா? தோல்வியடைகிறோமா? என்று சிந்திக்கக்கூடாது. அதில் கிடைக்கும் அனுபவம் தான் மிகவும் பெரிது என்பார். அது எவ்வளவு பெரிய உண்மை என்பதை இன்று நினைத்துப் பார்த்தாலும் வியப்பாக இருக்கிறது. முதல்வர் அவர்கள், பாரதி, பாரதிதாசன் கவிதைகளையெல்லாம் அழகான இசையில் தன்னை மறந்து பாடுவார். குதித்துக் குதித்து அவர் பாடம் எடுத்த முறை இன்று நினைத்துப் பார்த்தாலும் கண்களில் நிழலாடுகிறது.

திரு.சுப்பிரமணியன் ஐயா அவர்கள் எங்களுக்குப் புறப்பொருள் வெண்பாமாலை பாடம் எடுத்தார். பழந்தமிழரின் புறவாழ்க்கை குறித்த பெருமிதம் அவர் நடத்தியமுறையால் எனக்கு ஏற்பட்டது. கல்லூரி விரிவுரையாளர் இப்படித்தான் பாடம் நடத்தவேண்டும் என்ற ஈர்ப்பு இவர் பாடம் நடத்திய முறையால் எனக்குள் முதலில் ஏற்பட்டது.

திரு.தியாகராசன் ஐயா அவர்கள் முக்கூடற்பள்ளு என்னும் சிற்றிலக்கியம் எடுத்தமை என்னால் மறக்கவேமுடியாது. ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் அவர் எடுத்துரைத்த முறை தனித்துவமானது. எந்த ஒரு இலக்கியமாக இருந்தாலும் மிக எளிதாகப் புரியவைத்துவிடும் அவரது அனுபவம் பாராட்டுதலுக்குரியது.எங்களைக் கல்லூரி நாட்களில் அதிகமாகச் சிரிக்கவைத்தவர் ஐயா அவர்கள்தான்.

திருமதி.வள்ளியம்மை அம்மா அவர்கள் கல்வெட்டுத்துறையில் பெரிதும் ஈடுபாட்டுடன் இருந்தார். சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு கல்வெட்டுகளையும் கண்டறிந்து எங்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தார். யாப்பருங்கலக்காரிகை என்னும் இலக்கணத்தை அவர் நடத்திய முறை இலக்கணம் பயிலும்போதெல்லாம் நினைவுக்கு வரும்.

திருமதி.மெய்யம்மை அம்மா அவர்கள் தண்டியலங்காரம் எடுத்தார். தம் கருத்தை எடுத்துரைக்க அவர் வெளிப்படுத்தும் உடலசைவு மொழிகள் மாணவர்களிடம் அவருக்குப் பெரும் வரவேற்பைப் பெற்றுத்தந்தன.

திருமதி. புவனேஸ்வரி அம்மா அவர்கள் தமிழக வரலாறும் பண்பாடும் பாடம் எடுத்தார்கள். மாணவர்களிடம் அவர் அன்புடன் பழகுவார்கள். ஒருநாள் மெய்யெழுத்துகளைப் பற்றிப் பேசும்போது மாணவர்களை கரும்பலகையில் வந்து எழுதச் சொன்னார்கள். பலமாணவர்கள் சில எழுத்துக்களைத் தவறாக எழுதினர். என்னை அழைத்தபோது நான் சென்று தவறின்றி விரைவாகக் கரும்பலகையில் எழுதினேன். அப்போது அம்மா சொன்னார்கள். குணசீலன் நீங்க நிச்சயமாக விரிவுரையாளராகிவிடுவீர்கள் அது நீங்கள் எழுதும் முறையிலேயே தெரிகிறது. என்றார் அப்போது அந்த வார்த்தைகள் என்னைப் பெரிதும் ஊக்குவிப்பதாக அமைந்தன.

திரு.ஞானசேகரன் அவர்கள் வானம் வசப்படும் என்னும் பெரிய புதினத்தை எடுத்தார். அவர் அடிக்கடி கையை மேலே தூக்கி உணர்ச்சிபொங்க பாடம் எடுப்பார். அவர் எப்போது பெரிய சத்தமிட்டுப் பேசுவார் என்று யாருக்கும் தெரியாது. அதனால் அவர் வகுப்பில் மட்டும் யாருமே தூங்கியதில்லை. உதவும் மனப்பான்மை மிகவும் உடையவராவர். அவரின் நடை, உடை, செயல்பாடுகள் என ஒவ்வொன்றிலும் தனக்கென தனித்தன்மையுடையவராக இவர் இருந்தார். பிறமொழி கலவாது அவர் பேசிய தமிழ் அன்றைய காலத்தில் எனக்கு வியப்பாக இருந்தது.

பல்கலைக்கழகத் தமிழாசிரியர்கள்

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில், நான் முதுகலை, ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்ட ஆய்வுகளை முடித்தேன். அங்குதான் சங்க இலக்கியம் குறித்த பல்வேறு பரிணாமங்களை நான் பெற்றேன்.
அழகப்பா பல்கலைக்கழகம். காரைக்குடி

முனைவர் தெ.சொக்கலிங்கம் அவர்கள் எங்களுக்கு இலக்கண வகுப்புக்கு வந்து தொல்காப்பியம் எடுத்தார். இலக்கணத்தைக் கூட இவ்வளவு எளிமையாக நடத்தமுடியுமா என்று இவரைப் பார்த்து வியந்திருக்கிறேன்.

முனைவர் இரா.பாலசுப்பிரமணியன் அவர்கள் காலை முதல் வகுப்புக்கு எப்போது வந்தாலும் முதலில் பாடம் எடுக்கமாட்டார். முதல் பத்து நிமிடங்களுக்கு ஏதாவது ஒரு சிந்தனை குறித்துப் பகிர்ந்துகொள்வார். மாணவர்களிடமே கேட்பார். இன்று எதுதொடர்பாகப் பார்க்கலாம் என்று, அந்தப் பத்துநிமிடம் பாடம் தொடர்பாகவோ, வாழ்வியல் தொடர்பாகவோ, சமூகம் தொடர்பாகவே பேசுவார். பிறகுதான் பாடத்துக்குச் செல்வார். இந்த அணுகுமுறை எனக்கு மிகவும் பிடித்ததாகும். இன்றும் எனது வகுப்புகளில் இந்த முறையை நான் மாணவர்களின் வரவேற்போடு பின்பற்றிவருகிறேன்.

அழகப்பா பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையில் இணைப் பேராசிரியராகப் பணியாற்றிவரும் முனைவர் சு.இராசாராம் அவர்கள் எனது தாய்மாமனாவார். நான் தமிழ்த்துறையைத் தேர்ந்தெடுத்தமைக்கும், நெட்தேர்வில் தேர்வு பெற்றமைக்கும் இவரே எனக்கு வழிகாட்டியாக அமைந்தார். இவர் எனது வாழ்வியல் நெறியாளராவார். இவர் பாடம் எடுக்கும்போது பாடப்பொருள் தொடர்பான பல்வேறு சான்றாதாரங்களையும் தருவார். கரும்பலகையை முழுமையாகப் பயன்படுத்துவார். சங்கஇலக்கியத்தில் இவர் செய்த ஆய்வே எனக்கு நாமும் இவரைப் போல சங்கஇலக்கியத்தில் ஆய்வு செய்யவேண்டும் என்ற எண்ணத்தைத் தந்தது. இவரது ஆய்வுக்கட்டுரைகளும், பாடம் நடத்தும் முறையும், எனக்குப் பெரிய முன்மாதிரிகளாக அமைந்தன.

அழகப்பா பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையில் இணைப் பேராசிரியராகப் பணியாற்றிவரும் முனைவர் சே.செந்தமிழ்ப்பாவை அவர்கள் எனது எம்பில் மற்றும் முனைவர் பட்ட ஆய்வுகளுக்கு நெறியாளராவார். சங்க இலக்கியம் குறித்தும், ஆய்வியல் அணுகுமுறை, நெறிமுறை, திட்பநுட்பமாக கட்டுரை வழங்குதல் குறித்தும் பல்வேறு நுட்பங்களையும் இவரே எனக்குப் புரியவைத்தார். 

பெரிய இலக்கண நூற்பாக்கள் பலவற்றையும் இவர் மனப்பாடமாகச் சொல்வார். இவர் எனக்குப் புறத்திணையியல் எடுத்தபோது நானும் இவரைப் போல நூற்பாக்களை மனப்பாடமாகச் சொல்லவேண்டும் என்று முயன்று பல நூற்பாக்களை மனப்பாடம் செய்தமை நினைவுக்கு வந்துசெல்கிறது.

இதுவரை சொன்ன தமிழாசிரியர் பெருமக்கள் யாவும் ஒவ்வொரு காலங்களிலும் என்னைச் செதுக்கியவர்களாவர். இவர்களின் மாணவன் நான் என்று சொல்லிக்கொள்வதில் நான் என்றும் பெருமிதம் கொள்வதுண்டு. 

எனது மாணவர் இவர் என்று அவர்கள் என்னைச் சொல்லும் அளவுக்கு என்னை உயர்த்திக்கொள்ள நாளும் முயன்றுவருகிறேன். 
கோடி கொடுத்து குடியிருந்த வீடும் கல்விக்காக கொடுத்த கொடை வள்ளல் திரு. அழகப்பச் செட்டியார். காரைக்குடி. 

ஒவ்வொருவரைப் பற்றியும் தனித்தனியாகச் சொல்வதென்றால் எனக்கு நாளொன்று போதாது. இருந்தாலும் யாரையும் விட்டுவிடக்கூடாது என்ற எண்ணத்தில் ஒவ்வொருவரைப் பற்றியும் சில நினைவுகளை மட்டும் பதிவுசெய்துள்ளேன்.

என் தமிழாசிரியர் பெருமக்களுக்கு இந்தக் கட்டுரை வழியாக என் பணிவான வணக்கங்களையும், அன்பையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி! நன்றி! நன்றி!

(எனது தமிழாசிரியர்கள் பற்றிய கட்டுரை வழியே என்னைக் கடந்த 

காலத்துக்கு அழைத்துச்சென்ற தமிழ்ச்செடி இணையதளத்துக்கு எனது 

மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்

16 கருத்துகள்:

  1. தமிழ்மொழி என் தாய்மொழி என்று சொல்லிக்கொள்வதில் பெருமிதம் கொள்கிறேன். தமிழில் எழுதுவதையும், பேசுவதையும் பெருமையாகக் கருதுகிறேன்.

    தமிழாசிரியர்களை அருமையாய் அறிமுகப்படுத்தி பெருமை சேர்த்தமைக்கு வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி இராஜராஜேஸ்வரி

      நீக்கு
  2. தமிழின் சிறப்பையும், தமிழைக்கற்றுக் கொடுத்த ஆசான்களின் சிறப்புகளையும் கூறியிருப்பது சிறப்பே !

    தொடர வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  3. your post made me think about the tamil teachers i had during my school and college days.... Thanks for sharing. [Sorry for using english!]

    பதிலளிநீக்கு
  4. கல்வி கற்றுத் தந்த வள்ளல்களாம் ஆசிரியர்களை நினைவு கூர்ந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது அய்யா. நமது எதிர்கால வளர்ச்சிக்கு வித்திட்டவர்கள் அல்லவா.தங்கள் ஆசிரியர்களையும், தங்களையும் எண்ணினால் மிகவும் பெருமையாக இருக்கின்றது அய்யா. நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் முதல் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி ஜெயக்குமார்.

      நீக்கு
  5. உங்கள் தந்தையாரையே தமிழ் ஆசிரியராகப் பெறும் பாக்கியம் பெற்றவரா நீங்கள்? இரத்தத்திலேயே தமிழ் ஓடுகிறதே!

    “ஒரு நல்ல ஆசிரியரால் நல்ல மாணவனை உருவாக்கமுடியும் நல்ல மாணவனால் நல்ல ஆசிரியராக உயரமுடியும்“ தங்கத்தில் பொறிக்கப்பட வேண்டிய வாசகங்கள்.

    மேயபோகும் மாடு புல்லை கொம்பில் கட்டிக்கொண்டு போகாது. எத்தனை அர்த்தமுள்ள பழமொழி இது! நீங்கள் மட்டுமல்ல; நாங்களும் நிறையக் கற்றுக் கொண்டோம்.


    ஒவ்வொரு முறை உங்கள் எழுத்தைப் படிக்கும் போதும் ஒரு புதிய செய்தியை அறிகிறேன் ஐயா!

    பாராட்டுக்கள். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  6. உணர்வுள்ள,உண்மையான,நன்றியுள்ள பதிவு பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் தொடர் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி கவிஞரே.

      நீக்கு
  7. சங்க இலக்கியங்கள் மீது எனக்கு ஆர்வம் வந்ததற்கு அடித்தளமே நீங்கள் தான் ஐயா.உங்களைப் போன்ற நல்ல ஆசானை எங்களுக்கு தந்த அத்தனை ஆசிரியர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகள் ஐயா‌

    பதிலளிநீக்கு
  8. சங்க இலக்கியங்கள் மீது எனக்கு ஆர்வம் வந்ததற்கு அடித்தளமே நீங்கள் தான் ஐயா.உங்களைப் போன்ற நல்ல ஆசானை எங்களுக்கு தந்த அத்தனை ஆசிரியர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகள் ஐயா‌

    பதிலளிநீக்கு