வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திங்கள், 28 செப்டம்பர், 2026

புரிதல் I சான்றோர் சிந்தனை I வானொலி உரை I

 

பறவைகளும் விலங்குகளும் மனிதர்கள் போல பேசுவதில்லை..

என்றாலும் அவை வெளிப்படுத்தும் ஒலிகளுக்குள் புரிதல் நிகழ்கிறது..

மனிதரின் மொழிகளில் பல வகை உண்டு..

இருவர் இருவேறு மொழிகளில் உரையாடும்போது அவர்களுக்குள் தவறான புரிதல் ஏற்படுவது இயல்பு. ஆனால் ஒரு மொழியை நன்றாக அறிந்த இருவர் உரையாடும்போதும் தவறான புரிதல் தோன்றுவதற்குப் பல காரணங்கள் உண்டு.

அறிவு, அனுபவம், ஆர்வம், தேடல் என பல்வேறு பண்புகளால் புரிதல் என்பது ஒருவருக்கொருவர் வேறுபடுகிறது..

சொல்லாமலேயே புரிந்துகொள்வோர் உண்டு

சொல்லியும் புரியாதவர்கள் உண்டு

ஒருவர் பேசும் வார்த்தைகளை மட்டும் வைத்து அவரது கருத்தை முழுவதும் புரிந்துகொள்ளமுடியாது. அவரது உடல்மொழியை உற்றுநோக்கும்போது மட்டுமே அவரது உணர்வுகளைப் புரிந்துகொள்ளமுடியும்.

கண்ணோடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச் சொற்கள்

என்ன பயனும் இல. (1100)

கண்களிரண்டும் பேசும்போது, வார்த்தைகளால் எந்தப் பயனுமில்லை என அன்புடையவர்களின் கண்களே பேசிக்கொள்ளும் என்றார் திருவள்ளுவர்.

 

குரு தரிசனத்தில் பாரதியார்,

பேசுவதில் பயனில்லை, அனுப வத்தால்
பேரின்பம் எய்துவதே ஞானம்”என்றார்

பேசிக் கொண்டே இருக்கிறோம். பேசுவதைக் கேட்டுக் கொண்டே இருக்கிறோம். மற்றவர்கள் பேசுவதை கேட்பதை விட நமக்குள் நாமே பேசிக் கொண்டிருக்கிறோம். பேச்சு நிற்க வேண்டும். கேள்விகள் நிற்க வேண்டும். 

மௌனம் வர வேண்டும். மௌனம் ஞான வரம்பு என்பார்  ஒளவையார். மௌனம் ஞானத்தின் எல்லை. கருத்து வேறுபட்டு சண்டையிடுவோர் சத்தமாக பேசுவதன் காரணம் இருவரும் ஒருவர் பேசும் வார்த்தைகளை இன்னொருவர் கேட்பதில்லை. தம் கருத்தையே முன்னிலைப்படுத்த விரும்புகின்றனர்.

புரிந்துகொள்ளத் தயாராக இல்லாதவர்கள்,

அடுத்தவர் பார்க்கும் பார்வையின் பொருள் என்ன என்று உணர விரும்பாதவர்களுக்குள் புரிதல் நிகழ வாய்ப்பே ஏற்படுவதில்லை.

அன்பானவர்கள் தவறாகப் பேசினாலும் ஏற்றுக்கொள்ளும் மனம் அன்பில்லாதவர்கள் சரியாகப் பேசினாலும் குறை காணவே முயல்கிறது.

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்

புன்கணீர் பூசல் தரும்.  (71)

அன்பை அடைத்து வைக்கமுடியாது அது கண்ணீர் துளியில் கூட வெளிப்படும் என்றார் திருவள்ளுவர். அன்பின் மொழி அறிந்தவர்களுக்குள் வார்த்தைகள் தேவையில்லை. அதனால் தான் வீட்டில் வளர்க்கும் விலங்குகளும் பறவைகளும் மனிதர்களின் அன்பைப் புரிந்துகொள்ளமுடிகின்றன.

நாய் வாலை ஆட்டினால் பாசம், பூனை வாலை ஆட்டினால் கோபம் என்ற பழமொழி கூட விலங்குகளின் உடல் மொழி குறித்த புரிதலாகவே வெளிப்படுகிறது.

 

நல்ல மாட்டுக்கு ஒரு சுவடு நல்ல மனிதனுக்கு ஒரு சொல் என்பது முன்னோர் முதுமொழி. ஒரே சொல்லில் எல்லோருக்கும் புரிந்துவிட்டால் இங்கு கல்வி நிலையங்களே தேவையில்லை.

சில நேரங்களில் சக மனிதர்கள் பேசும் வார்த்தைகளைப் புரிந்துகொள்ளும் நாம் அந்த வார்த்தைகளின் உள்நோக்கத்தைப் புரிந்துகொள்ளத் தவறுகிறோம்.

தவறான புரிதல் என்பது உறவுகளை, நட்பை, பணிச்சூழலை சிக்கலாக்குகிறது.

கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச்

சொல்தெரிதல் வல்லார் அகத்து.            (717)

சொற்களைத் தவறில்லாமல் சரியான பொருள் அறியும் ஆற்றல் படைத்தவர் முன் பேசும்போது, நல்லறிஞரின் கல்வித்திறம் அனைவருக்கும் விளங்கும்.

புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள்

நன்கு செலச் சொல்லு வார். (719)

அதேநேரம், அறிவார்ந்த அவையில் பேசுவோர், அறிவில்லாதவர்கள் முன் பேசாமை நன்று அவர்கள் தவறாகப் புரிந்துகொள்வார்கள்.

கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற

மிக்காருள் மிக்க கொளல். (724)

தெரிந்ததைப் புரியுமாறு, கூறி தெரியாததை கேட்டு அறிக என உரைத்த திருவள்ளுவர்,

காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்

கண்டானாம் தான்கண்ட வாறு. (849)

தான் அறிந்ததே சரி என எண்ணுபவரிடம் பேசுவதால் பயனில்லை என்றார்.  

 

புகழ்ந்தாலும் இகழ்ந்தாலும் இருமடங்காகப் புரிந்துகொள்வது மனித இயல்பு. தவறான புரிதல்களும், அவசர முடிவுகளுமே மனித உறவுகளுக்கிடையே பெரிய சுவர்களை எழுப்புகின்றன. ஆனால், ஆழமான புரிதல் எந்தவொரு கடினமான சூழ்நிலைகளையும் எளிதாகிவிடும். ​மனித மனங்களையும், உலகின் இயல்பையும் ஆராய்ந்து தெளிவு பெறுவதே உண்மையான அறிவு.

 

பிறரைப் புரிந்துகொள்வது நமக்கு நிதானத்தையும், நம்மை நாமே புரிந்துகொள்வது நமக்குத் தளராத தன்னம்பிக்கையையும் தருகிறது. சுய புரிதல் கொண்ட மனிதன் தோல்விகளைக் கண்டு அஞ்சுவதில்லை; அதைத் தன் வளர்ச்சிப் படியாகவே மாற்றிக்கொள்கிறான்.

 

ஒவ்வொருவரும் தாம் சொல்வதுதான் சரி என்றே நம்புகிறோம். நம்மைப் போலவே அடுத்தவருக்கும் சிந்தனை இருக்கிறது, அவரின் பார்வை கூட சரியானதாக இருக்கலாம் என்பதை ஏற்க மறுக்கிறோம். கலீல் ஜிப்ரான் கதை ஒன்று,

 

நான்கு தவளைகள், நதியில் மிதக்கும் ஒரு மரக்கட்டையில் அமர்ந்திருந்தன.
திடீரென வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட கட்டை மெதுவாக நீரோடையில் நழுவிச் சென்றது.

தவளைகள் தாம், இவ்வாறு ஒருமுறைகூட மிதந்து சென்றதில்லையே என்று மகிழ்ச்சியில் ஆழ்ந்தன. ஓடும் போது, முதல் தவளை பேசியது...
“
உண்மையில் இது ஓர் அதி அற்புதமான மரக்கட்டையாகும். ஏதோ உயிருள்ளது போல செல்கிறது. இதுபோன்ற கட்டையினை இதுவரை நான் அறிந்ததில்லை!”
இரண்டாம் தவளை பேசியது..
“
இல்லை என் நண்பனே, மற்ற மரக்கட்டைகள் போல் தான் இதுவும் நகர்வதில்லை. கடலை நோக்கிச் செல்லும். நதிதான் நம்மையும் இந்தக் கட்டையையும் அதனுடன் இழுத்துச்செல்கிறது.“
மூன்று தவளைகளும், உண்மையில் எது நகர்கிறது என தம்முள் வாதிட ஆரம்பித்தன. இந்தச் சண்டை வளர்ந்தது. அவற்றுக்குள் ஒரு உடன்பாடில்லை.
அவை, அதுவரை அமைதிகாத்து வாக்குவாதங்களைப் பார்த்துக்கொண்டிருந்த நான்காவது தவளையை நோக்கித் திரும்பி அதன் கருத்தைக் கேட்டன.
நான்காம் தவளை சொன்னது..
“
உங்கள் ஒவ்வொருவரின் கருத்தும் சரி. யாருடையதும் தவறில்லை.
நகர்தல் இந்த மரக்கட்டையில், நீரில், நம் சிந்தனையிலும் உள்ளது“ என்றது.
மூன்று தவளைகளும் பெருங்கோபமுற்றன.
அவை ஒன்றுசேர்ந்து நான்காம் தவளையை மரக்கட்டையிலிருந்து நதியில் தள்ளிவிட்டன.

புரிதல் என்னும் திறன் ஒருவருக்கொருவர் வேறுபடுகிறது.

புத்தருக்கு போதி மரத்தில் ஞானம் கிடைத்தது, போதி மரத்தால் அல்ல...

புரிதல் என்பது வெளிப்புறச் சூழலால் மட்டுமே நிகழ்ந்துவிடுவதில்லை; அது அகத்தின் முதிர்ச்சியாலும், சுய தேடலினாலும் தோன்றுகிறது.

புரிந்துகொள்ளப்படாத வார்த்தைகளே மனிதர்களுக்கிடையே பெருஞ்சுவர்களை எழுப்புகின்றன; புரிந்துகொள்ளப்பட்ட மௌனமே பாலங்களை அமைக்கின்றது.

 

கல்விநிலையங்களில் ஆசிரியர் சொல்வதை எல்லா மாணவர்களும் புரிந்துகொள்வதில்லை. அதனால் தான் மதிப்பெண்கள் வேறுபடுகின்றன. ஆசிரியர் பேசும் சொற்களின் மதிப்பைப் புரிந்துகொண்ட மாணவர்கள் எங்கோ பெரிய உயரங்களை அடைகின்றனர். புரியாத, புரிந்துகொள்ள முயற்சிக்காத மாணவர்கள் தங்கள் இலக்குகளை அடைவதில் தடைகளை எதிர்கொள்கின்றனர்         கல்வி நிலையங்களைப் போன்றே அன்றாட வாழ்விலும் சக மனிதர்களை அவர்களின் வார்த்தைகளை மட்டுமின்றி அவர்களின் உணர்வுகளையும், நோக்கத்தையும் புரிந்துகொள்ளும்போது உறவுகள் மேம்படுகின்றன.

 

இந்த உலகம் ஒரு கண்ணாடி போன்றது; அது நம் சிந்தனையையே பிரதிபலிக்கிறது. உரையாடலில் உண்மையான புரிதல் என்பது வெறும் வார்த்தைகளை மட்டும் கேட்பதில் இல்லை; முழுமையான அமைதியோடு கவனிப்பதிலும் (Deep Listening), அவர்களின் உடல்மொழியோடு உள் உணர்வுகளையும் புரிந்துகொள்வதிலும் தான் நிறைவடைகிறது. என்னை யாரும் புரிந்துகொள்ளவில்லை என்று புலம்புவதை விடுத்து, பிறரைப் புரிந்துகொள்ளும் அக முதிர்ச்சியைப் பெறுவதே மனித வாழ்வை இனிமையாக்கும்.

 

 

முனைவர் இரா.குணசீலன்

தமிழ் இணைப்பேராசிரியர்

பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரி

கோயம்புத்தூர்

9524439008

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக