வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திருக்குறள் தேடுபொறி

திருக்குறள் தேடுபொறி


செவ்வாய், 27 நவம்பர், 2012

நாம் அறிவுடையவர்கள்! நம்மால் முடியும்!

சுத்தமான காற்று!
சுகாதாரமான சுற்றுச்சூழல்!

ஆகிய இரண்டும் உலகம் எதிர்நோக்கும் மிகப்பெரிய சவால்களாக உள்ளன.

நோய்கள் உருவாக அடிப்படைக் காரணமாக மனிதர்கள் வெளியேற்றும் குப்பைகளே அமைகின்றன. 

நம் வீடு போலத்தானே நாடும்! என்ற எண்ணம் எப்போது ஒவ்வொருவருக்கும் உருவாகிறதோ அப்போது அந்த நாடு சுத்தமான நாடாகக் காட்சிதரும். 

சுகாதாரமான சூழல் கொண்ட உலகின் பல்வேறு நாடுகளைக் காணும்போது வியப்பாக உள்ளது. 

எப்படி இவர்களால் மட்டும் தம் நகரை சுத்தமாக வைத்துக்கொள்ளமுடிகிறது?
இதற்கு யார் காரணம்?
அரசுமட்டுமா?
அரசு விதிக்கும் அபராதம் என்னும் அச்சுறுத்தல் தான் காரணமா?

என்ற கேள்விகள் மனதில் எழுகின்றன.

ஆழ்ந்துநோக்கினால் மக்ககளின் பொதுநலன் குறித்த சிந்தனையும், தனிமனித ஒழுக்கமுமே ஒரு வீட்டையும், நாட்டையும் சுகாதாரமாக வைத்துக்கொள்ளஉதவும் என்பது புரிகிறது.

நம்மைச்சுற்றி கொஞ்சம் திரும்பிப் பாருங்களேன்.
நகரைத் தூய்மையாக வைத்துக்கொள்ள அரசு எவ்வளவு நடவடிக்கைகள் எடுத்திருக்கிறது? அதைப் பொதுமக்கள் எந்த அளவுக்கு மதித்து நடக்கிறார்கள்? 

நேற்று காரைக்குடி சென்றேன் ஒரு தெருவில் குப்பை மேட்டின் மீது அமர்ந்து ஒருவர் ஏதோ எழுதிக்கொண்டிருந்தார்..

என்ன என்று பார்த்தேன்..

அறிவு உள்ள எவரும்.. என்று மட்டும் எழுதியிருந்தார். என்னவாக இருக்கும்..? இங்கு குப்பை கொட்டக்கூடாது என்று எழுதுவாரோ என்று நினைத்துக்கொண்டே வந்தேன்..

நான் நினைத்ததுபோலவே அடுத்த தெருவில் “அறிவு உள்ள எவரும் இப்பகுதியில் குப்பை கொட்டவோ, அசுத்தம் செய்யவோ மாட்டார்கள்“ என்று எழுதப்பட்டிருந்தது.

இதை செய்யென்றால் செய்யமாட்டோம்..
செய்யாதே என்றால் செய்வோம் இதுதானே நம் இயல்பு?



அழகாக எழுதப்பட்ட இந்தக் கருத்தைப் படிக்கத்தெரிந்தால் அவர் இங்கே குப்பை கொட்டுவாரா?
என்ற கேள்வி முதலில் நம் மனதில் எழும். இருந்தாலும் நன்கு சிந்தித்துப் பார்த்தால் படித்தவர்களில் பெரும்பாலானவர்களே இந்தத் தவறைச் செய்கிறார்கள் என்ற உண்மை புலப்படும்.அதனால் சுத்தமான சுற்றுச் சூழல் நோய்நொடியற்ற வாழ்வு தரும்  என்பதை உணர்ந்து நம் சுற்றுச்சூழல் தூய்மையா இருக்க உதவுவோம்.

  • நீர்வளங்கள்
நீர் வளங்களைப் பாதுகாக்கவேண்டிய பெரிய கடன் நமக்கு இருக்கிறது என்பதை உணர்ந்து, நீர்வளங்களை அசுத்தம் செய்யாமல் பாதுகாப்போம்.


  • இதைப் பார்த்தாவது திருந்துவோம்


  • நாம மக்கு மனுசனா?



  • இயற்கை வளங்களைப் பாதுகாப்போம்.




எவ்வளவு பெரிய உண்மை??

இந்த பூமி எவ்வளவு அழகானது?
இதை இன்னும் அழகாக்காவிட்டாலும்- கொஞ்சம் அழுக்காக்காமால் விட்டுச்செல்வோமே!!

நாம் அறிவுடையவர்கள்! நம்மால் முடியும்!

தொடர்புடைய இடுகை

சனி, 24 நவம்பர், 2012

கருத்து சொல்(லலாமா?)

ஒவ்வொருவரும் தம்கருத்துகளை மனம்விட்டுப் பகிர்ந்துகொள்ள நிறையவே சமூகத் தளங்கள் வந்துவிட்டன. தனிமனிதர்கள் முதல் அரசு வரை யாவரும் இன்று பல்வேறு கருத்துக்களை
 இணையமேடையில் பகிர்ந்துகொள்கின்றனர்.

சாலையில் நேரும் விபத்துக்களைப்போல சமூகத் தளங்களில் சிலரால் ஏற்பட்ட கருத்துவேறுபாடுகள் காரணமாக, கருத்துசுதந்திரம் குறித்த சில கேள்விகள் மக்களிடம் எழுந்துள்ளன.
அரசியல்,ஆன்மீகம், விளையாட்டு, கலை, வணிகம் என பல்வேறு துறைசார்ந்து நாள்தோறும் வெளிவரும் கருத்துக்களை இன்று பார்வையாளர்கள் அச்சத்துடனேயே காண்கின்றனர். இதில் நாம் கருத்து சொல்லலாமா? வேண்டாமா?
சொன்னால் ஏதும் சட்டரீதியான சிக்கல்கள் வருமா? என்று ஒவ்வொருவரும் சிந்திக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

அன்று தேநீர்க்கடை வாசலில் நாளிதழ் படித்துக்கொண்டு உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை விவாதித்து வந்த மக்கள் இன்று வீட்டுக்குள்ளேயே தேநீர் அருந்திக்கொண்டு உலகில் பல்வேறு இடங்களில் வாழும் மக்களுடன் அதே செய்திகளை மனம் விட்டுப் பகிர்ந்தவருகின்றனர்.

ஒவ்வொரு மனிதனின் வளர்ச்சிக்கும் அடிப்படையாக அமைவது தன்மதிப்பீடு ஆகும். அடுத்து அடுத்தவர் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்கள். அது சரியா? தவறா? என்ற மதிப்பீடு. இவை ஒரு மனிதனை உயரத்துக்கு அழைத்துச்செல்லும் கூறுகளாகும்.

நாம் நினைப்பதுதான் சரி. அடுத்தவர் சொல்வது தவறு. நான் பிடித்த முயலுக்கு மூன்றுகால் என்று மட்டும் எண்ணிக்கொண்டிருந்தால் ஒருவன் வெற்றிப்பாதையை நோக்கிச் செல்லவேமுடியாது.
அடுத்தவர் சொல்லும் கருத்துக்களையும் செவிமடுத்துக் கேட்கவேண்டும்.தவறென்றால் திருத்திக்கொள்ளவேண்டும்.

தனிமனிதர்கள் சேர்ந்ததுதான் நாடு அதனால் அரசுக்கும் இது பொதுவானதாகும். எந்த நாட்டில் கருத்துச் சுதந்திரம் முழுவதும் இருக்கிறதோ அந்த நாடு விரைவில் வளர்ச்சியடையும் என்பது உலகோர் ஒப்பிய முடிவு.

சமூகத்தளங்களில் இப்போதே உலவுபவர்களில் பலர் முகமற்றவர்களாக (அனானி) உலவிவருகிறார்கள் அதற்குக்காரணம் சட்டரீதியான கருத்துரிமை குறித்த அச்சமே. கருத்து சுதந்திரம் குறித்த தெளிவான முடிவை அரசு விரைவில் வகுக்காவிட்டால் இணையத்தில் உலவும் பலரும் இனி வரும் காலங்களில் முகமற்றவர்களாக மாறும் அவலம் நேரலாம் என்ற கருத்து மேலும் அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.

ஒரு கதை..

கடவுளே இல்லையென்று சொல்லும் ஒருவர்
கடவுள் உண்டு என்று சொல்லும் ஒருவர். இருவரும் மிகவும் அறிவாளிகள், பேசுவதில் சிறந்தவர்கள். இவர்கள் பேசுவதைக் கேட்பவர்கள் இவர்கள் சொல்வதுதான் சரி என்று எண்ணுவார்கள்.

மக்களுக்கு ஒரு ஆசை. இவர்கள் ஒவ்வொருவரும் பேசும்போது இவர்கள் பேசுவதுதான் சரியென்று தோன்றுகிறது. ஆனால் கடவுள் உண்டா இல்லையா? இரண்டில் ஒன்று தெரியவில்லையே. இவர்களை ஒன்றாக ஒரே மேடையில் பேசவிட்டால் தெரிந்துவிடுமே என்று அவர்களிடமே கேட்டார்கள். அவர்களும் பேச உடன்பட்டு வந்து 
ஒரே மேடையில் பேசினார்கள்.

கடவுள் உண்டு என்றவர் அதற்கான சான்றுகளை
 அழுத்தமாக முன்வைத்தார்.
கடவுள் இல்லை என்றவர் அதற்கான சான்றுகளை 
நன்றாக எடுத்துரைத்தார்.

மக்களுக்கு இப்போதும் குழப்பமாக இருந்தது. முடிவு தெரியவில்லை. மேடையை விட்டு இறங்கும்போது ஆத்திகரும், நாத்திகரும் 
மனதளவில் மாற்றம் அடைந்திருந்தனர்.
இவ்வளவு அழுத்தமாகப் பேசுகிறாரே ஒருவேளை கடவுள் இருக்குமோ என்று எண்ண ஆரம்பித்தார் கடவுள் இல்லை என நம்பியவர்.

இவ்வளவு தெளிவாகப் பேசுகிறாரே ஒருவேளை கடவுள் இல்லையே என்று எண்ண ஆரம்பித்தார் அதுவரை கடவுள் உண்டு என்று நம்பியவர்.

இதுதான் கருத்துசொல்வதால் ஏற்படும் மாற்றம்.

கருத்து ஊடக சுதந்திரத்தில் இந்தியாவுக்கு 131 வது இடம் கிடைத்திருக்கிறது. 
மக்கள் கருத்து சொல்(லலாமா?) வேண்டாமா? என்று அஞ்சிவரும் நிலையில் மக்களின் அச்சத்தைப் போக்கவேண்டியது அரசின் கடமையாகும்.


தொடர்புடைய இடுகை


வெள்ளி, 23 நவம்பர், 2012

சுடுகாடு வரைக்கும்..






தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும்..
பசுமரத்தாணி போல..
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது..
என்ற முதுமொழிகள் எல்லாம் இளமைக்காலத்தில் கற்றுக்கொள்ளும் பழக்கம் முதுமைக்காலம் வரையிலும் தொடர்ந்துவரும் என்ற கருத்தை எடுத்தியம்புகின்றன.
இன்று பலவீடுகளில் உள்ள கடிகாரங்கள் 15 நிமிடம், 30 நிமிடம் விரைவாக ஓடிக்கொண்டிருக்கின்றன. காரணம் அப்போதுதான் குழந்தைகள் உரிய காலத்தில் கிளம்புவார்கள் என்று பெற்றோர்கள் கூறுகின்றனர்.
இதனால் ஏற்படும் விளைவு. அந்தக் குழந்தைகள் வளர்ந்து கல்லூரிக்குச் சென்றாலும், பல்கலைக்கழகத்துக்குச் சென்றாலும், படித்து முடித்து வேலைக்குச் சென்றாலும் காலதாமதமாகவே செல்கின்றனர்.
காலைநேரத்தில் ஒவ்வொருவரும் கிளம்புவதே போருக்குத் தயாராவது போல இருக்கும். அதிலும் குழந்தைகளைக் பள்ளிக்கு அனுப்புவது..!!
            
        நான் பள்ளியில் படித்த காலத்தில் ஆண்டுவிழாவில் 6ஆம் வகுப்புவரையிலான மாணவர்களுக்கு“பள்ளிக்குத் தயாராகுதல்“ என்றொரு விளையாட்டே உண்டு. இன்று எத்தனை பள்ளிகளில் இந்த விளையாட்டுப்போட்டி வைக்கிறார்கள்?
·         100 மீட்டர் ஓட்டப் பந்தையத்துக்கான எல்லையே இந்த விளையாட்டுக்கும் எல்லையாகும்.
·         முதலில் தொடக்கக் கோட்டில் தயாராக நிற்கும் மாணவர்கள் போட்டி தொடங்கியதும் விரைந்து ஓடுவார்கள், சிறிது தூரத்தில் நின்று பல்துலக்குவார்கள், குளிப்பார்கள், சட்டை மாட்டுவார்கள், சிறிது தூரம் ஓடுவார்கள். பிறகு பாடநூல்களை எடுத்து பையில் வைப்பார்கள் பள்ளிக்கு விரைந்து செல்வார்கள்.
·         யார் முதலில் இந்த உடலசைவு மொழிகளோடு முடிவு எல்லைக் கோட்டைத் தொடுகிறார்களோ அவர்கள் வெற்றிபெற்றவர்களாக அறிவிக்கப்படுவார்கள்.


இந்தப் போட்டியின் அடிப்படை நோக்கம் “காலநிர்வாகம்“ ஆகும். மாணவர்கள் மனதில் உரிய காலத்திற்குள் கிளம்பவேண்டும் என்ற எண்ணத்தை வரவழைக்கவேண்டும் என்பதாகும்.


குழந்தைகளின் மனதில் காலநிர்வாகம் குறித்த சிந்தனைகளைக் கொண்டுவந்தால் வாழ்நாள் முழுவதும் அவர்கள் அதைக் கடைபிடிப்பார்கள்.

காலத்தின் பின்னால் ஓடுபவர்கள்
காலத்தின் முன்னால் ஓடுபர்கள்
காலத்தோடு ஓடுபவர்கள்

என்ற மூன்று வகை மனிதர்களுள் நாம் எந்த வகையினராக இருக்கிறோம் என்பதை சீர்தூக்கிப்பார்த்து.
நம் குழந்தைகளுக்கு நாம் முன்மாதிரியாக கால நிர்வாகத்தைக் கடைபிடிப்போம்.
தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும் என்பதை உணர்வோம் உணரவைப்போம்.

தொடர்புடைய இடுகை.




புதன், 21 நவம்பர், 2012

தொலைத்தொடர்பு அடர்த்தி


காலந்தோறும் ஒவ்வொரு வீடுகளிலும்,
செல்வத்தின் அடையாளமாகவும்தொழில்நுட்ப அறிவின் அடையாளமாகவும் இருந்த கருவிகள் சிலவற்றைக் காண்போம்..

வானொலி
கருப்பு வெள்ளைத் தொலைக்காட்சி
தொலைபேசி
வண்ணத் தொலைக்காட்சி
டெக்
டேப்ரிக்கார்டர்
சிடி பிளேயர்
டிவிடி பிளேயர்
கணினி
அலைபேசி
இணையத்துடன் கூடிய கணினி
மடிகணினி
டேப்ளட் பிசி
சுமார்ட் போன்
என காலந்தோறும் பல கருவிகள் வந்திருக்கின்றன.வந்துகொண்டிருக்கின்றன.
இவற்றுள் கணினியும், அலைபேசியும் மக்களைச் சென்றடைந்த அளவுக்கு வேறு எந்தக் கருவியும் அதிகம் சென்றடைந்த்தில்லை.





ஒரு காலத்தில் ஊருக்கு ஒரு தொலைக்காட்சிதான் இருக்கும் அதுவும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருக்கும்..
ஆனால் இன்று..!!

2சி, 3சி, 4சி என தொழில்நுட்ப மாற்றங்களை இரண்டாவது தலைமுறை, மூன்றாவது தலைமுறை, நான்காவது தலைமுறை எனப் பாகுபாடு செய்துள்ளனர். நாம் இன்னும் மூன்றாவது தலைமுறைக்கே முழுவதும் சென்று சேரவில்லை அதற்குள்ளாக 4வது தலைமுறை தொழில்நுட்பம் பயன்பாட்டுக்கு வந்துவிட்டதாம்.

120 கோடிக்கு மேல் மக்கள் கொண்ட இந்தியாவில் அலைபேசி இணைப்பாளர்களின் எண்ணிக்கை 90கோடி இருக்கிறது.

ஒருகாலத்தில் வீட்டுக்கு ஒரு தொலைத்தொடர்பு இணைப்பு இருப்பதே வியப்புக்குரியதாக இருந்தது. இன்று, பலருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட அலைபேசிகள் உள்ளன.

கணினி தயாரிப்பாளர்களெல்லாம் அலைபேசிக்கான தயாரிப்புகளில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

v  ஒரு காலத்தில் நல்லது கெட்டது எதுவாக இருந்தாலும் உறவினர்களிடம் சென்று சொல்லிவருவது முதன்மையான பணியாக இருக்கும்.
v  அடுத்து கடிதவழி தொடர்பு.
ஆனால் இன்று அலைபேசி, இணையத்தின் வளர்ச்சியால் இந்த மரபுகள் எல்லாம் தொலைந்துபோய்விட்டன.

இன்று உலகின் எந்த இடத்தில இருப்பவரிடமும் நேருக்கு நேராக அலைபேசி வழியே முகம் பார்த்துப் பேசமுடியும் என்பது எவ்வளவு பெரிய மாற்றம்!!

புறா, ஒற்றன், தூதுவன், கடிதம், தொலைபேசி, அலைபேசி, இணையம் என்ற வளர்ச்சி..

யாகூ மெசஞ்சர் (எழுத்து உரையாடல்)
ஜிடாக் (பேச்சு உரையாடல்)
முகநூல் (பேச்சும், எழுத்தும் கலந்த உரையாடல்)
ஸ்கைப் (முகம் பார்த்துப் பேசும் உரையாடல்)

என்ற வளர்ச்சிப் படிநிலையை அடைந்துள்ளது.

இவ்வளவு தொழில்நுட்ப வளர்ச்சியில் வாழும் நாம் கொஞ்சம் திரும்பிப்பார்க்கலாம் வாங்க.

ங்கப் பாடல் ஒன்று...

தலைவன் வெளியூர் சென்றிருக்கிறான். மழைக்காலத்தில் திரும்பிவந்துவிடுவேன் என்றுசொல்லிச்சென்றான்.
அந்தக்காலமும் வந்துவிட்டது. ஆனால் தலைவனைக் காணோமே எனத் தலைவியின் மனது பதற்றம் அடைகிறது.
அப்போது தோழி தலைவியை ஆற்றுப்படுத்துகிறாள்.
கவலைப்படாதே...
தலைவன் வரப்போகிறான் என்பதை முன்பே அறிந்த மேகங்கள் கடலில் சென்று நீரை முகந்துவந்து பெருமழையாகப் பொழிகின்றன. அறிவல்லாத மேகங்களோ உனது துன்பத்தைக் குறைக்கும்விதமாக..
மழைக்காலம் வந்துவிட்டது
தலைவன் வந்துகொண்டிருக்கிறான் என்பதன் அடையாளமாகத்தான் மழைபொழிகிறேன்..
என்று  சொல்லாமல் சொல்லிச்செல்கின்றன.
நீ ஏன் குழப்பமடைகிறாய் என்கிறாள்.

விருந்து எவன்செய்கோ- தோழி!- சாரல்
அரும்பு அற மலர்ந்த கருங் கால் வேங்கைச்
சுரும்பு இமிர் அடுக்கம் புலம்பக் களிறு அட்டு,
உரும்பு இல் உள்ளத்து அரிமா வழங்கும்
பெருங் கல் நாடன் வரவு அறிந்துவிரும்பி,
மாக் கடல் முகந்துமணி நிறத்து அருவித்
தாழ் நீர் நனந் தலை அழுந்து படப் பாஅய்,
மலை இமைப்பது போல் மின்னி,
சிலை வல் ஏற்றொடு செறிந்த இம் மழைக்கே?

நற்றிணை -112, பெருங்குன்றூர் கிழார்.
பருவ வரவின்கண்ஆற்றாளாய தலைவியைத் தோழி வற்புறுத்தியது.

தோழீ !
மலைச்சாரலில் அரும்பு முழுதும் ஒருசேர மலர்ந்த கரிய கிளைகளையுடைய வேங்கைமரத்தில், சுரும்பு முரலுகின்ற பக்கமலையிலுள்ளவெல்லாம் அஞ்சும்படியாக; களிற்றைக் கொன்று அச்சமற்ற உள்ளத்தையுடைய சிங்கம் நிற்கும் பெரிய மலைநாடன்,
கார்ப்பருவத்தின்கண் வருவேன் என்று கூறிச் சென்றபடி மீண்டு வருகின்றான் என்பதை அறிந்து விருப்பமுற்று,
கரிய கடலின்கண்ணே சென்று நீரையுண்டு மணிபோலும் நிறத்தினையுடைய அருவியினிழிகின்ற நீரையுடைய அகன்ற இடமெல்லாம் மறைபடுமாறு பரவி; மலையானது கண்விழித்து இமைத்தாற் போல மின்னி ஒலிக்கின்ற வலிய இடியேற்றுடனே கலந்து வந்த இந்த மழைக்கு; நான் யாது கைம்மாறு செய்வேன்? என்று தலைவியை ஆற்றுப்படுத்துகிறாள் தோழி.


தலைவன், தலைவி இருவரும் ஒருவரை ஒருவர் தொடர்புகொள்ள எந்த தொழில்நுட்பமும் இல்லாத சங்ககாலத்தில் அவர்கள் இயற்கையோடு எவ்வாறெல்லாம் இயைபுபட வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள இதுபோன்ற பாடல்கள் பெரிதும் துணைபுரிகின்றன.


இவ்வளவு தொழில்நுட்பங்களோடு வாழும் நமது மகிழ்ச்சி
எந்தத் தொழில்நுட்பமும் இன்றி வாழ்ந்த சங்ககால மக்களின் மகிழ்ச்சி

இரண்டையும் சீர்தூக்கிப்பார்த்தால்..

சங்ககாலத்தைவிட இன்று நாம் தொழில்நுட்ப அளவில் முன்னேற்றமடைந்திருக்கிறோம்!

ஆனால்

உறவுகளிடையே உள்ள அன்புநிலையின் பின்னேற்றம் அடைந்திருக்கிறோம் என்றே தோன்றுகிறது.

இன்று வெளியே சென்ற உறவுகளை இவ்வளவு ஆவலோடு யாரவது எதிர்பார்த்துக் காத்திருக்கிறோமா..

வரவில்லையென்றால் உடனே  அலைபேசியில் அழைத்து என்ன? ஏது? எனக் கேட்டுத் தெரிந்துகொண்டு அடுத்த வேலையைப் பார்க்கப்போய்விடுகிறோம்.

இந்தப் பாடலில் தலைவி தலைவனை ஆவலோடு எதிர்பார்த்துக்காத்திருக்கிறாள்.
அவன் வருவதாகச் சொல்லிய பருவம் வந்துவிட்டது. அவனைக் காணோமே என்று..

மேகம் மழைபொழிவது இயற்கை.
இங்கு அதனைத் தனக்கு சார்பாகத் தோழி பயன்படுத்திக்கொள்ளும் பாங்கு எண்ணி இன்புறத்தக்கதாக உள்ளது.

இன்று தொலைத்தொடர்பு அடர்த்தி அதிகரித்திருக்கலாம்
ஆனால்
மனித மனங்களுக்கிடையிலான அன்பின் அடர்த்தியும் அதிகரித்திருக்கிறதா?
என்று தன்மதிப்பீடு செய்துகொள்ள இவ்விடுகை பயன்படும் எனக் கருதுகிறேன்.