வாய்ப்பு
என்றவுடன் பலருக்கும்
வேலை, வாய்ப்பு தொழில் வாய்ப்பு தான் நினைவுக்கு வரும் ஆனால்
இவை இரண்டையும் தாண்டி நிறைய வாய்ப்புகள் நம்மைச் சுற்றி இருக்கின்றன…
காலையில்
சூரியன் தோன்றுவதையும் மாலையில் மறைவதையும் பார்க்க எத்தனையோ பேர் காத்திருக்கிறார்கள். நிலவை, நட்சத்திரங்களை, வானவில்லை இயற்கையின்
ஒவ்வொரு அசைவுகளையும் காண்பதற்காகக் காத்திருப்பவர்கள் இயற்கையை ரசிக்கும் வாய்ப்பைப்
பெறுகிறார்கள். அவர்களில் சிலர் கவிஞராகலாம், ஓவியராகலாம், நிழற்படக்கலைஞராகலாம்.
பொழுதுபோக்குக்காக
விளையாடுவோர் பலர். சிலர் விளையாட்டுதான் தம் வாழ்க்கை என்று அதில் உள்ள வாய்ப்பை உணர்ந்து
விளையாட்டில் புகழ்பெறுகிறார்கள்.
பொருள் தேடுகிறேன்,
பிள்ளைகளின் கனவுகளுக்காக உழைக்கிறேன், அவர்கள் ஆசைப்பட்டதை வாங்கிக்கொடுக்கிறேன் என்று
பொருள் தேடுவோரில்
எத்தனை பேருக்கு பிள்ளைகளோடு நேரம் ஒதுக்க வாய்ப்புக்
கிடைத்திருக்கிறது.
இவ்வாறு நம்மைச் சுற்றி பல வாய்ப்புகள் உள்ளன.
பொதுவாக மனிதர்களை, வாய்ப்பில்லை என வாடுவோர், வாய்ப்புகளைத்
தேடுவோர், வாய்ப்புகளை உருவாக்கிக்கொள்வோர் என மூன்று வகையாகப் பகுக்கலாம்.
வல்லமை தாராயோ, - இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே? என்று பாடிய பாரதி
விசையுறு பந்தினைப்போல் - உள்ளம்
வேண்டியபடி செலும் உடல்கேட்டேன்,
என்று
பாடியுள்ளார்.
ஆம்
உள்ளம் சொல்வதை யாவர்க்கும் உடல் கேட்பதில்லை..
சிலர் உடல் குறைபாடுகளால் தனக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை
என்று புலம்புவதுண்டு.
(பொறியின்மை
யார்க்கும் பழியன்று அறிவறிந்து
ஆள்வினை இன்மை பழி. (618)
உடல் உறுப்புக் குறைகள் குறைகளல்ல, அறிய முயலாமயே குறை
என்றார் திருவள்ளுவர்.
எல்லா
பிரச்சனைகளுக்குள்ளும்
வாய்ப்பு உள்ளது
எல்லா வாய்ப்புகளுக்குள்ளும் பிரச்சனை உள்ளது.
வெற்றிபெற்றவர்களின்
வெற்றிக்குப் பின்னால்
விதி அல்லது அதிஷ்டம் இருக்கும் என்று நம்பும் பலர்
முயற்சியும் உழைப்பும் இருக்கலாம் என்பதை உணர்வதில்லை..
(ஆகூழால்
தோன்றும் அசைவின்மை கைப்பொருள்
போகூழால்
தோன்றும் மடி. (
371)
நல்விதி
முயற்சியினையும், தீயவிதி
சோம்பலையும் தரும் என்ற திருவள்ளுவரின் சிந்தனையை
ஆழ்ந்து நோக்கவேண்டும்.
முயற்சி
ஒருவனுக்கு வாய்ப்பையும், சோம்பல் ஒருவனுக்கு ஏமாற்றத்தையும் தரும் என்பதை உணரவேண்டும்.
நீண்ட
கால முயற்சியும், தொடர்ந்த உழைப்பும் உள்ள பலருக்கும் பெரிய வாய்ப்புகள் வரவில்லை என்றால்
அவர்கள் காலத்தையும் இடத்தையும் சரியாகப் பயன்படுத்தவில்லை என்று பொருள்.
பகல்வெல்லும்
கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது. 481
ஆந்தை, காக்கையின் வலிமையைக் காலமே முடிவுசெய்கிறது
நெடும்புனலுள்
வெல்லும் முதலை அடும்புனலின்
நீங்கின் அதனைப் பிற.
495
முதலையின் வலிமையும் அது வாழும் இடம் சார்ந்தே அமையும்
எனத் திருவள்ளுவர் காலம், இடம் அறிந்து செயல்படவேண்டும் என
உரைத்துள்ளார். அதனால்,
கொக்கொக்க
கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து. 490
நற்காலம்
வரும்வரை கொக்கைப்போலக் காத்திரு
எய்தற்
கரியது இயைந்தக்கால் அந்நிலையே
செய்தற் கரிய செயல். 489
அரிய செயலை உரிய காலத்தில் செய் என்ற திருவள்ளுவரின் வழிகாட்டுதலைப் பின்பற்றவேண்டும்,
பெற்றோர், ஆசிரியர்,
உறவினர்கள், நண்பர்கள் என யார் வழியாக வேண்டுமானாலும் வாய்ப்பு வரும். கிடைத்த வாய்ப்பை
சரியாகப் பயன்படுத்தி திறமையை வெளிப்படுத்தவேண்டும். திறமையாளர்கள் தடைகளை எண்ணித்
தயங்கமாட்டார்கள் அடிபணிந்தும் வாழ மாட்டார்கள். பணிவு
வேறு தாழ்வு வேறு என்பதை அவர்கள் உணர்வார்கள்.
மரத்தை
வெட்டிக் கொள்ளும் தச்சர்கள் பெற்ற சிறுவர்கள் தம் மழுவோடு காட்டிற்குச் சென்றால்
அங்குள்ள மரங்கள் எப்படி
அவர்களுக்கு உடனே வேண்டுமாறு பயன்படுமோ அப்படி எத்திசை சென்றாலும் அத்திசையில்
சோறு கிடைக்கும் என்று ஔவையார் பாடியுள்ளார்.
(மரங்கொல்
தச்சன் மைவல் சிறாஅர்
மழுவுடைக் காட்டகத்து அற்றே;
எத்திசைச் செலினும்,
அத்திசைச் சோறே.“ புறநானூறு-206,பாடியவர்:
ஔவையார். பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.)
பலர் தம் திறமையை
உணராமல், பிறருக்குக் கிடைக்கும் வாய்ப்பைப் பார்த்துப் பொறாமைப்படுவதுண்டு.
(பிறப்பொக்கும்
எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில்
வேற்றுமை யான். ( 972)
எவ்வுயிர்க்கும்
பிறப்பு பொதுவானது, செயலே
பெருமை தரும் என்றார்
திருவள்ளுவர்.
வான்
குருவியின் கூடு வல்லரக்குத் தொல்கறையான்
தேன்சிலம்பி
யாவருக்கும் செய்யரிதால் – யாம் பெரிதும்
வல்லோமே
என்று வலிமை சொல் வேண்டாங்காண்
எல்லார்க்கும்
ஒவ்வான்று எளிது. ஔவையார்
தூக்கணாங்குருவியின்
கூடு, குளவிகள்
கட்டுகின்ற அரக்குக் கூடு,
கரையானின்
புற்று, தேனீக்களின்
கூடு, சிலந்தியின்
வலை யாவும் தனித்தன்மையின் சான்றுகள். இவ்வுயிரினங்களுக்கு
இவைசெய்யும் செயல் எளிது. பிற உயிர்களுக்கு இச்செயல் செய்தல் அரிது. அதனால் எல்லார்க்கும்
ஒவ்வான்று எளிது என்றார் ஔவையார்.
சிலர், வெற்றி பெற்றவர்களைப் பார்த்து, இவர்களின்
திறமையை வெளிப்படுத்த நல்வாய்ப்பு கிடைத்தது,
எனக்குக் கிடைக்கவில்லை என்று மனதில் எண்ணிக்கொள்வதுண்டு.
புகழ்பட வாழாதார் தம்நோவார் தம்மை
இகழ்வாரை நோவது எவன்.
237
புகழுக்கும் ஏனை இகழுக்கும் காரணம் அவரவரே என்ற திருவள்ளுவரின் கருத்தையும்,
தீதும் நன்றும் பிறர் தர வாராது என்ற கணியன் பூங்குன்றனாரின் சிந்தனையை உணரவேண்டும்.
நாம் அனைவரும் ஒரே அளவு
திறமை பெற்றவர்கள் இல்லை. ஆனால், நம் திறமையை
வளர்த்துக்கொள்ள ஒரே அளவு வாய்ப்புகளைப் பெற்றிருக்கிறோம் என்றார் அப்துல்கலாம்
கலைத்
திறமை, விளையாட்டுத் திறமை என பலவகையான திறமைகள் உள்ளன.
ஆய
கலைகள் அறுபத்து நான்கு என்பது
தமிழர்
மரபு
படித்த
படிப்புக்கு ஏற்ற வேலை செய்வோர் பலர் உண்டு.
தம்
திறமையால் வாழ்வில் உயர்ந்தவர்கள் பலர் உண்டு.
கிடைத்த
வேலை செய்பவர்களுக்குக் கிடைக்காத மன நிறைவு
பிடித்த
வேலை செய்பவர்களுக்குக் கிடைக்கும்.
திறமை தானாக வராது; நாம்தான் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்பவர்களையே
திறமையாளர்கள் என்கிறோம்.
கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும்.(774) என்றொரு திருக்குறள்
உண்டு.
போர்க்களத்தில், தான் கையில் ஏந்திய வேலை ஒரு யானைமேல்
எய்து துரத்திவிட்ட வீரன், தன் மேல் தைத்த வேல் கண்டு வருந்தாமல்
மகிழ்ந்து சிரித்தான். இந்த வீரன் இழந்த வாய்ப்பைப் பற்றிக் கவலைப்படவில்லை.
கிடைத்த வாய்ப்பை எண்ணி மகிழ்ந்தான்.
ஒரு
நாளில் எட்டுத் தேர் செய்யும் தச்சன், ஒரு
மாதம் முயன்று செய்த ஓர் தேர்க்காலுக்கு ஒப்பானவன்! என்று
அதியமானை ஔவையார் பாடியதாக ஒரு புறநானூற்றுப் பாடல் உண்டு. அந்தத் தேர்க்கால் எத்தகு
வலிமையுடையதாகவும், கலை உணர்வுடனும் செய்யப்பட்டிருக்கும் என்பதை நாம் சிந்திக்கவேண்டும்.
எட்டுதேர் செய்யும் வாய்ப்பிருந்தும் ஒரு தேர்ச்சக்கரம் மட்டும் செய்வது எத்தகு சிறப்புடையதோ,
அதுபோன்றது நாம் தேர்ந்தெடுக்கும் வாய்ப்புகள்.
பல வாய்ப்புகள் வந்தாலும் அதில் மிகச்சிறந்த வாய்ப்பைத்
தேர்ந்தெடுப்பது திறமையின் அடையாளமாகும்.
கான
முயலெய்த அம்பினில் யானை
பிழைத்தவேல்
ஏந்தல் இனிது 772
முயலை எய்த அம்பைவிட,
யானையைத் தவறவிட்ட வேல் சிறந்தது.
பெரிய முயற்சி, பெரிய இலக்கு பெரிய வெற்றிக்கு வழி வகுக்கும்.
பெரிய இலக்கை நோக்கிப் பயணிப்பவர்கள் சின்னச்சின்ன வாய்ப்புகளைக்
கண்டு மனம் தடுமாறி தம் இலக்கைத் தவறவிடுவதுண்டு.
(*போரில், நீ முந்திச் செல்க என்று ஏவாது
தான் முந்திச் சென்ற வேந்தன் இப்போது மிகவும் இன்னாதவன் ஆயினன். நீ போ என்று
என்னைச் சொல்லாமல், தான் முந்திச் சென்று எமக்கு முன்மாதிரியாக
இருந்தாலும் தனக்கு இந்த வாய்ப்பை அளிக்கவில்லையே என்று
வருந்தும் வீரனைப் பற்றி புறநானூற்றில் ஆலியார் என்ற புலவர் குறிப்பிட்டுள்ளார்.)
வாயப்பைப் பெறும் வழிகள்,
·
அதிகாலை விழித்தல்,
புத்துணர்ச்சியுடன் அந்த நாளைத் தொடங்குதல்,
·
வாய்ப்பு வந்து எப்போது
நம் கதவைத் தட்டுவது,
வாய்பின்
கதவை நாம் தட்டுவோம் என்று தன்னம்பிக்கையுடன் ஒவ்வொரு மணித்துளிகளையும் எதிர்கொள்பவர்களை
வாய்ப்பு பின்தொடர்ந்துவரும்.
ஆக்கம்
அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்க
முடையா னுழை. 594
·
ஊக்கமுடையவரிடம்
செல்லும் வழிகேட்டு செல்வம் வந்து சேரும் என்றார்
திருவள்ளுவர்.
·
கூர்ந்து
கவனிப்பது, சிந்திப்பது,
திறந்த மனதுடன் இருப்பது வாய்ப்புகளை இனம் கண்டுகொள்ளும் வழியாகும்.
·
வாய்ப்பு
கிடைத்துவிட்டால் தயக்கமின்றி அதைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளும் அறிவு,
திறன், விடாமுயற்சி போன்றவற்றை வளர்த்துக்கொள்ளவேண்டும்.
·
சில மணித்துளிகளில்
வாய்ப்பை நழுவவிட்ட பலரும் இன்னும் கொஞ்சம் முயற்சித்திருக்கலாம், இன்னும் கொஞ்சம்
சிந்தித்திருக்கலாம், இன்னும் கொஞ்சம் பொறுமையாக இருந்திருக்கலாம், இன்னும் கொஞ்சம்
திட்டமிட்டிருக்கலாம் என வருந்துவதுண்டு.
·
சில
நேரங்களில் தோல்விகள் கூட புதிய வாய்ப்புகளுக்கான கதவுகளைத் திறக்கும். ஒவ்வொரு
தோல்வியும் ஒரு பாடம், அது முயற்சியின்
அடையாளம், அடுத்த வாய்ப்பை சிறப்பாகப் பயன்படுத்த உதவும்.
·
வாய்ப்புகள்
வரும்போது நாம் தயாராக இருக்க வேண்டும். அதற்குத் தொடர்ந்து கற்றுக்கொள்வதும், நம் திறமைகளை வளர்த்துக்கொள்வதும்
அவசியம்.
·
தடைகளுக்கும் வாய்ப்புக்கும் இடையே சிறிய
வித்தியாசம் உள்ளது என்பதைப் புரிந்துகொண்டு இரண்டையும் தங்களுக்கு சாதகமாக
மாற்றிக்கொள்ளக்கூடியவர்கள் வெற்றிபெறுகிறார்கள்.
·
பல வாய்ப்புகள் வரும்
போது எந்த வாய்ப்பைத் தேர்ந்தெடுப்பது என்பதில் சிலர் சரியான முடிவெடுப்பார்கள், சிலர்
பிறர் சொல்லும் கருத்துகளில் தவறான முடிவெடுத்து நல்ல வாய்ப்பை இழந்து விடுவதுண்டு.
தகுதியும்
திறமையும் கொண்டவர்கள் வாய்ப்புக்காகக் காத்திருக்க மாட்டார்கள், வாய்ப்புகளைத் தேடிச்
செல்வார்கள் என்பதை,
வருகவென வேண்டும் வரிசை யோர்க்கே
பெரிதே உலகம், பேணுநர் பலரே (- புறநானூறு - 07 ) என்ற பெருஞ்சித்திரனாரின்
சிந்தனையை உணர்வோம்
தன்னம்பிக்கையுடன் வாய்ப்புகளை எதிர்கொள்வோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக