அறிவுடைமை
அதிகாரத்தில் திருவள்ளுவர்,
எப்பொருள்
யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு. ( 423)
யாரிடம் கேட்டாலும் உண்மையை ஆராய்ந்து
அறிவதே அறிவு
என்றும்,
மெய்யுணர்தல்
அதிகாரத்தில்
எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு. (355)
எப்பொருளையும் தோற்றத்தை மட்டும் காணாமல் உண்மைக் காண்பதே அறிவு
என்றும்
உரைத்துள்ளார்.
இவ்விரு
குறள்களையும் ஆழ்ந்து நோக்கினால் செவிகளால் கேட்பது, கண்களால் காண்பது ஆகிய இரண்டும்
உண்மைதானா என ஆராய்ந்து அறியவேண்டும் என்ற கருத்து தோன்றுகிறது.
“நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே
நீங்கள் எல்லாம் சொர்ப்பனம் தானோ
பல தோற்ற மயக்கங்களோ
கற்பதுவே கேட்பதுவே கருதுவதே
நீங்கள் எல்லாம் அர்ப்ப மாயைகளோ
உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ“
என்ற
பாரதியார் பாடலும் மெய்ப்பொருள் குறித்த தேடலாகவே உள்ளது.
பொருள் என்ற சொல்லுக்குப் பல பொருள்கள் உண்டு.
சொல்லுக்கான பொருள், வாழ்க்கைக்கான பொருள், பயன்படுத்தும் பொருள்
என பல நிலைகளில் இச்சொல் பயன்படுத்தப்படுகிறது. என்றாலும் சராசரி மனிதர்கள் செல்வம்
என்ற பொருளைத் தேடுகிறார்கள் அது அழியக்கூடியது, ஆன்மீக நாட்டமுடையவர்கள் அருளைத் தேடுகிறார்கள்
அது அழியாதது என்று நம்புகிறார்கள்.
தேடுவோருக்கெல்லாம்
தேடும் பொருள் கிடைப்பதில்லை..
கிடைத்தாலும் நிலைப்பதில்லை.
அதனால்
நிலையான பொருளைத் தேடும் முயற்சி தொடர்கிறது.
“காதில்லாத ஊசியைக்கூட நாம் கடைசிவரை
எடுத்துச்செல்லமுடியாது
என்று தெரிந்தும் பொருளையே தேடுகிறோம்.
(அறன்கடைப் படாஅ வாழ்க்கையும், என்றும்
பிறன்கடைச் செலாஅச் செல்வமும், இரண்டும்
பொருளின் ஆகும். (அகநானூறு - 155)
எப்போதும் தீய நெறியில் செல்லாத வாழ்க்கை, எப்பொழுதும் மற்றவன் வீட்டு வாசலில் சென்று நிற்காத மேன்மை ஆகிய இரண்டும் பொருளால்
ஏற்படும் என்பார் பாலை பாடிய பெருங்கடுங்கோ.
(பொருளல் லவரைப் பொருளாகச்
செய்யும்
பொருளல்லது இல்லை பொருள்.( 751)
மதிப்பில்லாதவர்களும் பொருளால் மதிப்படைவர்
அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள.( 241)
செல்வங்கள் பலவற்றுள் சிறந்தது அருள் செல்வமே, பொருள் செல்வம் இழிந்தோரிடமும்
உண்டு
நச்சப்
படாதவன் செல்வம் நடுஊருள்
நச்சு மரம்பழுத் தற்று. 1008
கஞ்சனின் செல்வம், ஊர் நடுவே நச்சுமரம் பழுத்தது போன்றது
ஊருணி
நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு. 215
பேரறிவாளனின் செல்வம், ஊருணி நீர் நிறைந்தது போன்றது என உரைத்தார் திருவள்ளுவர்.
பொருள்
இல்லாருக்கு இவ்வுலகம் இல்லை என்ற கருத்து எக்காலத்துக்கும் ஏற்புடையது.
பொருள்
சேர்ப்பது பெரிய செயல் அல்ல…
பொருளை
நேர்வழியில் சேர்ப்பது மிகப்பெரிய செயல்!!
பொருளை
சேமிப்பது அரிய செயல் அல்ல…
சேமித்த
பொருளை நல்ல வழியில் செலவுசெய்வது அரிய செயல்!
நாம் சேர்க்கும் பொருளைவிட மதிப்புமிக்கவை பல
இவ்வுலகில் உண்டு.
ஆனால்,
பொய்யானவற்றை மெய்யென்று உணர்வதே துன்பம் தரும் பிறப்பு என்கிறது
திருக்குறள்.
(பொருள்அல்ல வற்றைப் பொருள்என்று உணரும்
மருளான்ஆம் மாணாப் பிறப்பு. – 351 )
கண்களைக்
கவரும் வண்ணங்களில், செவிக்கு இனிய இசையில் மனதைக் கவரும் காட்சிகளில் பல பொருள்களை
இன்று வணிக நிறுவனங்கள் விளம்பரப்படுத்துகின்றன. அவற்றின் உண்மைத் தன்மையை உணரும் திறன்
இன்று பலருக்கும் இருப்பதில்லை.
(தமவும் பிறவும் ஒப்ப நாடிக்
கொள்வதூஉம் மிகைகொளாது கொடுப்பதூஉம் குறைகொடாது
பல்பண்டம் பகர்ந்து
வீசும் -
பட்டினப்பாலை -205 )
சங்க காலத்தில் வணிகம் பற்றி கூறும்போது, வணிகர்கள் தம்முடைய பொருளையும் மற்றவர்களுடைய பொருளையும் ஒன்றாகவே மதிப்பார்கள். தாம் கொள்ளும் பொருளை மிகுதியாகக் கொள்ளாமலும், தாம் கொடுக்கும் பொருளை குறைவாகக் கொடுக்காமலும் பல பண்டங்களின் மதிப்பை வெளிப்படையாகச் சொல்லி விற்பார்கள் என்பார்
கடியலூர்
உருத்திரங்கண்ணனார்.
பெரிய வணிக அங்காடிகளுக்குச்
செல்லும் பலர் தாம் என்ன வாங்கச் சென்றோம் என்பதை மறந்து கண்களில் பட்ட பல பொருள்களை
வாங்கி வருவார்கள். நாளைக்குப் பயன்படும் என்று
பார்த்துப் பார்த்து வாங்கும் பலர் இன்றைக்கு என்ன தேவை என்பதை மறந்துவிடுகின்றனர்.
(பிறப்புஎன்னும் பேதைமை நீங்கச்
சிறப்புஎன்னும்
செம்பொருள் காண்பது அறிவு. – 358)
பிறப்பின் உண்மை நிலையை அறிவதே மெய்யறிவு
பிறப்பின் நோக்கம் என்ன என்று தேடுவோர்..
தேவையற்றவற்றைத் தூக்கிச் சுமக்கமாட்டார்கள்.
தோற்றத்தைக் கண்டு மயங்க மாட்டார்கள்,
(உருவுகண்டு எள்ளாமை வேண்டும்
உருள்பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து. ( 667)
உருவத்தைப் பார்த்து யாரையும்
குறைத்து மதிக்கக்கூடாது, பெரிய தேருக்கு சிறிய அச்சாணி
மிகத் தேவை. அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
(மடல் பெரிது தாழை; மகிழ் இனிது கந்தம்
உடல்
சிறியர் என்று இருக்க வேண்டா-கடல் பெரிது
மண்ணீரும்
ஆகாது; அதன் அருகே சிற்றூறல்
உண்ணீரும்
ஆகி விடும்.
தாழம்பூவின் மடல் பெரிதாக இருந்தாலும் வாசம் தருவதில்லை. ஆனால் அதனின் சிறிய மகிழம்பூவோ நல்ல வாசனையைத் தருகிறது.
பெருங்கடலின் நீர் உடலைக் கழுவக்கூடப் பயன்படாது, ஆனால் அதனருகிலேயே தோன்றும் சிறு ஊற்று குடிப்பதற்கும் நல்ல நீரைத் தருகிறது.
எனவே உருவத்தை வைத்து ஒருவரை எடை போடக் கூடாது
என்றார்
ஒவையார்
ஒருவர் பேசும் வார்த்தைகளை மட்டும் வைத்து முடிவுக்கு வரக்கூடாது.
அந்த
வார்த்தைகளுக்கு பின் உள்ள நோக்கத்தையும் உண்மைத் தன்மையையும்
ஆராயவேண்டும்.
குறுந்தொகையில் தலைவனின் வருகையை பாணன் வழியாக அறிந்த தலைவி
இவ்வாறு கேட்கிறாள்.
குறுந்தொகை 75,படுமரத்து மோசிகீரனார், )
நீ கண்டாயா? கண்டவர்கள் சொல்வதைக் கேட்டாயா? தெளிவாகக் கூறு!
உண்மையை அறிய விரும்புகின்றேன்.
பொன் நிறைந்த பாடலி நகரை நீ பெறுவாயாக.
என் காதலர் வரவை யார் சொல்லக் கேட்டாய்? என்று பாணனிடம்
ஆவலோடு கேட்கிறாள்.
இன்றைய
சூழலில் நூல்களையும் நூலகங்களையும் விட இணையமும் சமூகத்தளங்களும் அதிகமாக மக்களைச்
சென்றடைகின்றன. ஆனால் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகத் தான் உள்ளது. கையில் உள்ள திறன்பேசிகளில்
நிறையும் செய்திகள், பகிரும் செய்திகளும் அவ்வாறே அதன் உண்மைத்தன்மையை அறிந்து பகிரும்
வழக்கம் பலருக்கும் இல்லை. செயற்கை நுண்ணறிவின் வரவால் நாம் கண்களால் பார்க்கும் செய்திகளின்
நம்பகத்தன்மை மேலும் கேள்விக்குறியாகியிருக்கிறது. இக் கருவிகள் செய்திகள், படங்கள்,
காணொலிகள் என சான்றுகளற்ற செய்திகளை விரைவாக உருவாக்குகின்றன. இவற்றை தொழில்நுட்ப அடிப்படையில்
மாயத்தோற்றங்கள் என்று உரைக்கின்றனர். இவற்றை பொழுதுபோக்காகக் கருதலாம். உண்மை என நம்பவோ
அதைப் பகிர்வதோ அறிவுடைமை அல்ல.
(யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன். (341)
எதிலிருந்தெல்லாம் நீங்குகிறோமோ அவற்றால் துன்பங்கள் வராது என்று திருவள்ளுவர் சொன்னதை உணர்ந்து, அளவுடன் இந்த ஊடகங்களைப்
பயன்படுத்தி மெய்ப்பொருள், என்று ஆராய்ந்து உணர்வதை மட்டுமே பகிர்வது அறிவுடைமை.
செவிகளால்
கேட்பது, கண்களால் காண்பது மயக்கம் தரும்.அதனால்,
மாறாதது
எது ? நிலையானது எது? அழியாதது எது? என்பதை
சிந்திக்கவேண்டும்.
மாறதது
மாற்றம் மட்டுமே, நிலையானது நிலையாமை மட்டுமே..
அழியாதது
புகழ் மட்டுமே..
ஒருமைக்கண் தான் கற்ற கல்வி
ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து. 398
இப்பிறவியில்
கற்பது ஏழு பிறவிக்கும் உதவும்,
கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை. 400
கல்வியே
அழிவில்லாத செல்வம், பிற எல்லாம் செல்வமல்ல
என்பதை உணர்வோம்.
(தெண்கடல் வளாகம் பொதுமை
இன்றி
வெண்குடை நிழற்றிய
ஒருமை யோர்க்கும்
நடுநாள்
யாமத்தும் பகலும் துஞ்சான்
கடுமாப்
பார்க்கும் கல்லா ஒருவற்கும்
உண்பது
நாழி; உடுப்பவை இரண்டே;
பிறவும்
எல்லாம் ஓரொக் கும்மே;
அதனால்
செல்வத்துப் பயனே ஈதல்;
துய்ப்பேம்
எனினே, தப்புந
பலவே'' (புறநானூறு
- 189))
என்பார்
நக்கீரனார். இதே
கருத்தை திருவள்ளுவர்..
"அன்பிலார்
எல்லாம் தமக்குரியர்; அன்புடையார்,
என்பும்
உரியர் பிறர்க்கு'' (குறள்
- 72)
"ஈதல் இசைபட வாழ்தல்; அதுவல்லது
ஊதியம்
இல்லை உயிர்க்கு'' (குறள் - 231) என்றுரைப்பர்.
பொருளற்றவற்றைப் பொருளென்று கருதுவதால் பலர்
வாழ்க்கையின் பொருளை உணர்வதில்லை..
பொருள் என்பது செல்வம் என்று கருதுவோர் அது நிலையானது
என்றே கருதுகின்றனர்..
சான்றோர், செல்வம் என்று உயர்வாகக்
கருதுவது,
அடைக்கலமாக நம்மைச்சேர்ந்தவருக்கு வரும்
துன்பங்களைக் கண்டு அஞ்சுவதாகும். அவர் துன்பத்தை நீக்கி அவரைக் காத்தலே சிறந்த
செல்வம்!என்றனர், இதை,
நெடிய மொழிதலுங் கடிய ஊர்தலும்
செல்வம் அன்றுதன் செய்வினைப் பயனே
சான்றோர் செல்வம் என்பது சேர்ந்தோர்
புன்கண் அஞ்சும் பண்பின்
மென்கண் செல்வஞ் செல்வமென் பதுவே
என்று பாடியுள்ளார் நல்வேட்டனார்
என்ற சங்கப் புலவர்
நாம் தேடும் பொருள் எது என்று சிந்திப்போம்,
கல்வியும், புகழும் அழியாத செல்வம் என்பதைப்
புரிந்துகொள்வோம்,
தோற்ற மயக்கங்களிலிருந்து
விடுபடுவோம். செவிகளில் கேட்பதையும், கண்களில் காண்பதையும் ஆராய்ந்து மெய்ப்பொருளை
உணர்வோம்.
முனைவர் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பி.எஸ்.ஜி கலை அறிவியல்
கல்லூரி
கோயம்புத்தூர்
9524439008
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக