உழைப்பே உயர்வு தரும், உழைக்காத காசு நிலைக்காது, என்றெல்லாம் அனுபவமொழிகள்
உண்டு.
உழைத்து வாழ வேண்டும் பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே என்று
பாடல் உண்டு.
திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்ற பழமொழியும் உழைத்துவாழ் என்றே அறிவுறுத்துகிறது.
அடிமையைப் போல உழைப்பவன் அரசனைப் போல உண்பான் என்றார் கதே,
உழைப்பை இருவகைப்படுத்தலாம்..
அறிவு உழைப்பு - உடல் உழைப்பு
அறிவு உழைப்பாளர்களுக்கே மதிப்பு அதிகம்
உடல் உழைப்பாளர்களுக்கு மதிப்புக் குறைவு
பலர் ஏன் உழைக்கிறோம்? எதற்காக
உழைக்கிறோம்? எப்படி உழைக்கிறோம்?
என்ற சிந்தனையின்றி உழைத்துக்கொண்டே இருக்கிறார்கள்.
உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு
வேறோர் பணிக்கு என்றார் ஔவையார்.
உடல்
உழைப்பு சார்ந்த பல வேலைகள் இன்று மறைந்து வருகின்றன.
(உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர். -1033
சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை. - 1031)
பல தொழில்களில் இயங்கினாலும் ஏரின் பின்னதே இவ்வுலகம் என்ற திருவள்ளுவரின் கருத்து இன்று சிந்திக்கத்தக்கதாக உள்ளது.
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை
செய்வோம்-வீணில்
உண்டுகளித் திருப்போரை நிந்தனை செய்வோம் என்றார்
பாரதி
உழவுத் தொழில் மட்டுமின்றி, நெசவுத் தொழில் உட்பட பல்வேறு தொழில்களிலும்
மனித உழைப்புக்கு மாற்றாக இயந்திரங்களும், கணினியும் பயன்படுத்தும் சூழல் ஏற்பட்டுள்ளது.
குறுந்தொகையில் ஒரு தலைவன்,
பொருள் தேடுவதற்காகத் தலைவியைப் பிரிந்து நெடுந்தூரம்
வந்தான். பொருள் தேடியபின்
தலைவியைக் காண மனம் துடிக்கிறது. வீடோ மிகவும் தூரத்தில் உள்ளது. இந்நிலையில் தன்
மன நிலையை,
ஒரு ஏர் மட்டும் வைத்திருக்கும் உழவன் பருவ காலத்தில் தம் நிலம்
முழுவதும் உழுவதற்கு எவ்வளவு
ஆர்வமுடன் இருப்பானோ
அந்த மனநிலையோடு ஒப்பிட்டு உரைப்பதாக ஒரு குறுந்தொகைப் பாடல் உள்ளது. இப்பாடலைப் பாடிய புலவர்
பெயர் தெரியாத நிலையில் இந்த உவமையாலே இப்புலவர் ஓரேருழவர் என்று அழைக்கப்பட்டு வருகிறார்.
(தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்தது
உண்ணிலின் ஊங்கினிய தில்- 1065)
தெளிந்த நீர்போன்ற கூழானாலும் உழைத்து உண்பதே
இனியது என்ற திருவள்ளுவரின் கருத்தை உணராத பலர்,
குறுகிய காலத்தில் உயரத்துக்குவரவேண்டும்,
பெரிய பணக்காரராகவேண்டும் என்ற பேராசையில் தவறான வழிகளில் பொருள் ஈட்டுகின்றனர்.
(பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர்
கழிநல் குரவே தலை.- 657)
பழியைச் சுமந்த செல்வதைவிட சான்றோர் வறுமையே மேல் என்ற திருவள்ளுவர் சிந்தனையை நினைவில் கொள்ளவேண்டும்.
உழைப்பு மனிதனை ஏமாற்றுவதில்லை!
மனிதன் தான் உழைப்பை ஏமாற்றுகிறான்!
சிந்திக்கும்
திறன் மனிதர்களை விலங்குகளிலிருந்து வேறுபடுத்தியது. விலங்குகளின் உழைப்பு உணவுத் தேடலுடன்
நிறைவு பெறுகிறது. மனிதர்களின் சிந்தனைத் திறன், உணவுத் தேடலுக்குப் பின்னும் தொடர்ந்தமையால்
சில விலங்குகளின் உழைப்பையும் பயன்படுத்திக்கொண்டனர். வீட்டு விலங்குகளை வளர்த்து அவற்றின்
பயனைப் பெற்ற மனிதர்கள், யானை, குதிரை போன்ற விலங்குகளின் உழைப்பையும் போருக்குப் பயன்படுத்தினர்.
தொல்லியல் அகழாய்வுகளில் கிடைக்கும் பானை ஓடுகளும் கருவிகளும் முன்னோர் வாழ்வியலையும்
அவர்தம் உழைப்பையும் கண்முன் நிறுத்துகின்றன.
என்றாலும்
சிந்திக்கும் திறன் யாவருக்கும் பொதுவானது அல்ல.
அதனால்,
(விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரோடு ஏனை யவர். 410 (வள்ளுவர்)
கல்லாதவரும் விலங்குகளும் ஒன்றாகவே கருதப்படுவர் என்றார் திருவள்ளுவர்.
ஓங்கு கல்வி உழைப்பை மறந்தீர்
மானமற்று விலங்குகள் ஒப்ப
மண்ணில் வாழ்வதை வாழ்வெனலாமோ? என்றார் பாரதி.
விலங்கு போல வாழும் மனிதர்களை உழைத்து வாழச் செய்வதும். உழைத்து
வாழும் மனிதர்களின் உழைப்பை மேலும் எளிமைப்படுத்தி,
குறைந்த நேரத்தில், குறைந்த ஆற்றலில் அதிக விளைவுகளை ஏற்படுத்தும்
நுட்பங்களையும் சிந்திக்கும் திறனால் மனித சமூகம் பெற்றுள்ளது.
(தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது.-68)
தம்மைவிட அறிவுக்குழந்தைகளைப் பெறுதல் உலகிற்கே இனிது எனத் திருக்குறள் உரைக்கிறது.
சிற்றூரும், வரப்பெடுத்த
வயலும், ஆறு
தேக்கிய நல் வாய்க்காலும், வகைப் படுத்தி
நெல்சேர உழுது உழுது
பயன் விளைக்கும்
நிறை உழைப்புத் தோள்களெலாம் எவரின் தோள்கள்?
கற்பிளந்து மலைபிளந்து கனிகள் வெட்டிக்
கருவியெலாம் செய்துதந்த கைதான் யார்கை?
என்று மனித உழைப்பால்தான் காடுகள் நாடுகளாகவும் நகரங்களாகவும் மாறின என்று உரைத்தார்
பாரதிதாசன்.
நாம் உண்ணும் உணவு முதல் உடுத்தும் உடை வரை நாம் பயன்படுத்தும்
ஒவ்வொரு பொருளிலும் பலரின் உழைப்பு உள்ளது.
முன்னோர்
சேர்த்துவைத்த செல்வங்களால் சிலருக்கு அவர்களின் உழைப்பின்றி பொருள் கிடைக்கும், அவ்வாறு பொருளுடன் தொழில்தொடங்குவது பாதுகாப்பானது,
மகிழ்ச்சியானது
குன்றேறி யானைப் போர் கண்டற்றால்
தன்கைத்தொன்று
உண்டாகச் செய்வான் வினை. ( 758) என்பார் திருவள்ளுவர்.
சிலருக்கு
அவ்வாறு வாய்ப்புகள் அமைவதில்லை. அவர்கள் முன்னோர் சேர்த்துவைத்த பொருள் இல்லையே என்று
வருந்தவேண்டாம் என உரைக்கும் திருவள்ளுவர்,
(இலமென்று
அசைஇ இருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும். ( 1040)
இல்லை
என்று உழைக்காது இருப்பவரைக் கண்டு நிலம் சிரிக்கும் என்றார்.
செல்வத்தின் பயன் தகுந்தவருக்கு உதவதற்கே என்று ஒப்புரவறிதல் அதிகாரத்தில் உரைக்கிறார்.
ஒருவருக்குக்
கொடுப்பதாக இருந்தாலும், உன் முயற்சியால், உன்
உழைப்பினால், பெற்ற செல்வமாக இருந்தால் மட்டுமே பிறருக்குக்
கொடு என்றார் திருவள்ளுவர்,
(தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு. 212 )
உழைப்பால் கிடைக்கும் செல்வம் நாம் மட்டும் நுகர்வதற்கானது அல்ல.
செல்வத்தின் பயன் ஈகை.
தமக்காக உழைக்காமல், பிறருக்காக உழைப்பவர்கள் இருப்பதால்தான் இவ்வுலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது என்கிறது புறநானூறு.
முன்னோர் உழைத்துச் சேர்த்துவைத்த பொருள்களை போற்றிக்காப்பது ஒன்றே நம் கடன். அதனைச் செலவு செய்ய நமக்கு
உரிமை கிடையாது. அவ்வாறு செலவு செய்பவர்களை உயிருள்ளவராக மதிப்பதில்லை. அவரவர் உழைப்பில் தான் உதவவேண்டும்.
பொருளின்றி இருப்பதைவிட வேறென்ன இழிவு இருக்கமுடியும் என்ற கேள்வியையும் முன்வைக்கிறது
இந்த சங்கப்பாடல். இதனை,
உள்ளது சிதைப்போர் உளரெனப் படாஅர்
இல்லோர் வாழ்க்கை இரவினும் இளிவென குறுந்தொகையில் பாடியுள்ளார் பெருங்கடுங்கோ..(குறுந்தொகை -283, பாலை பாடிய
பெருங்கடுங்கோ)
(ஒன்றன் கூறு ஆடை உடுப்பவரே ஆயினும்,
ஒன்றினார்
வாழ்க்கையே வாழ்க்கை; - கலித்தொகை 18)
கலித்தொகையில் தோழி, தலைவனிடம்,
அரிய பொருள்களின் மீது எழுந்த ஆசையால் உள்ளம் தூண்ட
தலைவியைப் பிரிந்து வேற்றுநாடு சென்றிருக்க எண்ணாதே!
நீ நன்கு மதித்த பொருளும் நீண்ட காலம் தேடுவன்றி
அள்ளிக்கொள்ளுமாறு
ஒரே இடத்திலேயேவா கிடைக்கப்போகிறது?
பொருள் தேடப்போகாது, ஒரே இடத்திலேயே இருப்பவர்கள் எல்லாரும் உணவுக்குக் கூட வழியில்லாது அழிந்து
போகிறார்களா என்ன?
இளமையும், அன்பும் ஒன்றாக வாய்க்கப்பெற்றவர்கள்,
பொருளை விரும்புவார்களா?
இல்வாழ்க்கை என்பது இன்ப
துன்பங்களை இணைந்து எதிர்கொள்வதுதானே. சில நேரம் ஒன்றன் கூறாகிய
ஆடையும் உடுப்பவராக வறுமையுற்று வாழ்ந்தாலும் அதனைப்பற்றிக் கவலைப்படாமல் ஒன்றிக்
கலந்து அன்புடன் வாழ்வதல்லவோ வாழ்க்கை.
பொருளுக்காகப் பிரிந்து சென்ற நீ இளமை கழிந்து பொருளை
மட்டும் ஈட்டி வருவதா வாழ்க்கை? என்று கேட்கிறாள்.
உழைப்பு, உடலை வலிமையாக்கும். உழைப்பு அனுபவத்தையும்
மன வலிமையையும் தரும்.
விதைத்தவர் உறங்கலாம் விதைகள் உறங்குவதில்லை என்று சொல்வதுபோல
உழைக்கும் இயல்பு உடையவர்கள் உடல் துன்பங்களைப் பெரிதென மதிப்பதில்லை,
மெய்வருத்தம் பாரார், பசிநோக்கார், கண்துஞ்சார்
எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்-செவ்வி
அருமையும் பாரார் அவமதிப்பும் கொள்ளார்
கருமமே கண்ணாயி னார்” என்றார் ஔவையார்.
முழு
ஈடுபாட்டுடன் செய்யும் எந்தவொரு செயலும் தவத்துக்கு இணையானது. விருப்பத்துடனும்,
ஆர்வத்துடனும் உழைத்தால் சோர்வு தோன்றாது.
மன நிறைவே தோன்றும்.
வரப்புயர நீருயவர்வதும்
நீருயர நெல் உயர்வதும்
நெல்லுயரக் குடி உயர்வதும் குடி உயரக் கோல் உயர்வதும் உழைப்பால்
என்பதை உணர்வோம் உழைப்பால் உயர்வோம்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக