வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திருக்குறள் தேடி


செவ்வாய், 5 ஆகஸ்ட், 2025

எண்ணித் துணிக - சான்றோர் சிந்தனை - வானொலி உரை


எந்தவொரு செயலையும் தொடங்குவதற்கு முன், அதன் விளைவுகளைப் பற்றியும், அதைச் செயல்படுத்துவதற்கான வழிமுறைகளைப் பற்றியும் ஆழமாகச் சிந்திக்க வேண்டும். இது வெற்றிக்கான முதல்படி.

குழந்தைப் பருவத்தில் நாம் முதல் அடி எடுத்துவைத்ததிலிருந்து இந்த மணித்துளி வரை நம் சொல், செயல் இரண்டிலும் எவ்வளவு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த மாற்றங்களுக்குள் இயல்பாகவே இருப்பது எண்ணுதல் மற்றும் துணிதல் ஆகிய பண்புகளே. இப்பண்புகளை மேலும் கூர்மைப்படுத்தும்போது நம் செயல் சிறப்பாக அமையும்.

கருதாமல் கருமங்கள் முடிக்கவேண்டாம் என்கிறது உலகநீதி.

(சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்

சொல்லிய வண்ணம் செயல்.      ( 664)

சொல்லுவது யார்க்கும் எளிது, சொல்லியபடி செய்துமுடிப்பதே அரிது என்று திருவள்ளுவர் சொல்லுவது போல அரிய செயல்களைச் செய்பவர்களாக இருக்கிறோமா?

வாய்ச்சொல்லில் வீரரடி என்று பாரதியார் சொல்வது போல இருக்கிறோமா என்று சிந்திக்கவேண்டும்.

திட்டமிடாத செயல் துடுப்பில்லாத படகு போன்றது

நல்ல செயல்களைச் செய்ய இயலாவிட்டாலும் தீய செயல்களைச் செய்யாமலிருங்கள். அதுதான் அனைவரும் விரும்புவது. அத்துடன் நல்ல நெறியும் அதுதான் என்பதை,

நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்

அல்லது செய்தல் ஓம்புமின் – அதுதான்

எல்லோரும் உவப்பது அன்றியும்

நல்லாற்றுப் படூஉம் நெறியுமார் அதுவே

( புறநானூறு - 195 ) என்றார் நரிவெரூஉத் தலையார்

செய்தக்க அல்ல செயக் கெடும் செய்தக்க
செய்யாமை யானுங் கெடும்.       ( 466)
நற்செயல் செய்யாவிட்டாலும், தீச்செயல் செய்தாலும் கேடுவரும்

 

தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்
நீங்கா நிலனாள் பவர்க்கு. ( 383)
விரைவு, கல்வி, துணிவு மூன்றும் ஆளும் அரசனுக்கு வேண்டும் என்றார் திருவள்ளுவர்,

 

அரசனாகவே இருந்தாலும் அவனுக்குத் துணிவு இருந்தாலும்

செய்யக்கூடாத செயல்கள் இவை என்று புறநானூற்றில் ஒரு புலவர், அசரனுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

 

வேந்தனே, உனக்கு ஒன்று கூறுவேன் கேட்பாயாக..
போரில் வெற்றிபெறத்தக்கவன் நீயே!

(
வென்ற மன்னர் தோற்ற நாட்டின் பொருள்களைக் கொள்வதும், நாட்டுக்கு தீவைத்துக் கொளுத்துவதும், காவல் முரசு, காவல் மரத்தையும் அழிப்பதுமே மரபு!)
கடிமரந் தடித லோம்புநின்
நெடுதல் யானைக்குக் கந்தாற் றாவே. (57) காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் பாடியது.

 

ன் வீரர்கள் பகைவர் நாட்டு வயல்களை அழித்தாலும்,
ஊர்களைத் தீக்கிரை ஆக்கினாலும்,

ன் வேல் அப் பகைவரை அழித்தாலும்,
அவர் காவல் மரங்களை மட்டும் வெட்டாமல் விடுக!
அவை ன் யானைகளுக்கு கட்டுத் தறியாகும்” என்று காரிக்கண்ணனார் பாடியுள்ளார்.

இயற்கையைப் பாதுகாப்பது மனிதர்களின் கடன் என்பதை மன்னருக்கு அறிவுறுத்திய புலவரின் பண்பு பாராட்டத்தக்கதாக அமைகிறது

 

அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
ஊதியமும் சூழ்ந்து செயல்.                                        461
ஆக்கத்தையும், அழிவையும் ஆராய்ந்து செயல்படு

 

தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு

அரும்பொருள் யாதொன்றும் இல்.                              462

தேர்ந்த நட்புடன், ஆராய்ந்து செய்யும் செயல் நன்றாகவே முடியும்

 

ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை
ஊக்கார் அறிவுடை யார்.                                  463
கிடைப்பதை எண்ணி இருப்பதை விடாதவரே அறிவுடையவர் என எந்வொரு செயலையும் எண்ணியபின் துணிந்து செய்தால் நன்றாகவே முடியும் என்பது திருவள்ளுவர் கருத்து.

 

அறம் செய்வதையே நம் வாழ்க்கை  இலக்காகக் கொள்வோம். நல்வினை செய்வோமா? செய்யவேண்டாமா? என்ற சிந்தனை கொண்டோர் நெஞ்சத் துணிவில்லாதவர்களாவர்.

யானை வேட்டுவன் தவறாது யானையை வேட்டையாடி மீள்வதும் உண்டு.
சிறு பறவைகளை வேட்டையாட விரும்பிச் செல்வோர் அவற்றைப் பெறாது வெறுங்கையுடனே வருவதும் உண்டு. அதனால் நல்வினை செய்வதற்கு தயங்குதல் கூடாது.

 

செய்குவங் கொல்லோ நல்வினை யெனவே
ஐய மறாஅர் கசடீண்டு காட்சி
நீங்கா நெஞ்சத்துத் துணிவில் லோரே
யானை வேட்டுவன் யானையும் பெறுமே
குறும்பூழ் வேட்டுவன் வறுங்கையும் வருமே (புறநானூறு -214)

 

வாழ்க்கையில் தவறு செய்யும் யாவரும் தாம் செய்யும் தவறுகளுக்கு ஏதாவது ஒரு காரணத்தை வைத்திருப்பார்கள். ஆனால்,

 

ஈன்றாள் பசிகாண்பாள் ஆயினுஞ் செய்யற்க

சான்றோர் பழிக்கும் வினை.- 656

தாயின் பசி தீர்ப்பதாயினும் இழிசெயல்களை செய்வது தவறு.

 

நேர்மையான வழியில் உழைத்துப் பெறும் பொருளே மதிப்பிற்குரியது.

தவறான வழியில் தேடும் பொருளை விட வறுமையே மேலானது.

ஆனால் நேர்மையான வழியில் வாழத் துணிவு வேண்டும்.

 

பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர்

கழிநல் குரவே தலை.- 657

பழியைச் சுமந்து சேர்த்த செல்வதைவிட சான்றோர் வறுமையை மேல்

 

சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு

தாழ்ச்சியுள் தங்குதல் தீது.   671

ஆராய்வது துணிவடையவே, துணிந்தபின் காலந்தாழ்த்தக்கூடாது   

பொருள்கருவி காலம் வினையிடனொடு ஐந்தும்
இருள்தீர எண்ணிச் செயல்.          675
பொருள், கருவி, காலம், செயல், இடவலிமை ஆராய்ந்து செய்க

முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும்
படுபயனும் பார்த்துச் செயல்.        676
முடிவையும் தடைகளையும் அதன் பயன்களையும் பார்த்துச் செய்

செய்வினை செய்வான் செயன்முறை அவ்வினை
உள்ளறிவான் உள்ளம் கொளல்.  677
செயலின் தன்மையை அனுபவசாலியிடம் கேட்டுப் பின் செய்

வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள்
யானையால் யானையாத் தற்று.   678
ஒரு நேரத்தில் இருசெயல்களைச் செய்வது, யானையால் யானை பிடிப்பது போன்றது 

 

என செய்யும் செயல்களை ஆராய்ந்து செய்க என்று திருவள்ளுவர் உரைத்துள்ளார்.

சங்க இலக்கியத்தில் ஒரு காட்சி,

தலைவியைக் காணவேண்டும் என்று தலைவனின் மனம் விரும்புகிறது, பொருள் தேடல் முடியாமல் பாதியில் செல்லாமா என தலைவனின் அறிவு கேட்கிறது. நற்றிணையில் இடம்பெறும் இப்பாடலில் தலைவனின் மனமும் அறிவும் இரு யானைகளாகவும், அதனால் ஏற்பட்ட தன்னிலையை தேய்ந்த பழங்கயிற்றோடும் ஒப்பிட்ட புலவரின் பெயர் தெரியாத சூழலில். இந்த உவமையே புலவருக்குப் பெயராகி தேய்புரிபழங்கயிற்றினார் என்று அழைக்கப்பட்டு வருகிறார். (நற்றிணை -284 பாலை - தேய்புரிப் பழங்கயிற்றினார்)

நாம் செய்யும் செயல்களுக்குப்பின் இந்தத் தலைவனைப் போலத்தான் நம் மனமும் அறிவும் இந்தச் செயலைச் செய் செய்யாதே. என போராட்டம் நடத்திக்கொண்டிருக்கும். மனம் சொல்வது பல நேரங்களில் அறிவுக்கு ஏற்றதாக இருக்காது, அறிவு சொல்வது மனதிற்கு ஏற்றதாக இருக்காது. அதனால் தான் எண்ணியபின் துணிக என்ற சிந்தனையை எப்போதும் நினைவில் கொள்ளவேண்டும்.

அதே நேரம் எண்ணியபின் எடுக்கும் முடிவுகள், அறிவின் வசப்பட்ட முடிவுகளா? உணர்வின் வசப்பட்ட முடிவுகளா? என்று சிந்திக்கவேண்டும். சில நேரங்களில் உணர்வு வசப்பட்ட முடிவுகளும் பாராட்டத்தக்கதாக இருக்கலாம்.

சான்றாக பேகன், பாரி, அதியமான் போன்ற வள்ளல்கள் எடுத்த முடிவுகளை அறிவின்வசப்பட்ட முடிவுகளாக நாம் ஏற்பதில்லை என்றாலும் உணர்வின் வசப்பட்ட முடிவுகளாகப் பாராட்டுகிறோம்.

எதிர்காலம் எவ்வாறு இருக்கும் என்பது நிகழ்காலத்தில் நாம் செய்யும் செயல்களிலும் எண்ணங்களிலும் அமைந்துள்ளது. நல்ல நேரத்திற்காகக் காத்திருப்பதைவிட கிடைத்த நேரத்தை நல்லநேரமாக மாற்றுவது எண்ணித் துணிவதில் உள்ளது.

எண்ணிய முடிதல் வேண்டும்,

நல்லவே எண்ணல் வேண்டும்;

திண்ணிய நெஞ்சம் வேண்டும்,

தெளிந்தநல் றிவு வேண்டும் என்றார் பாரதி.

 சிந்தித்து செயலாற்றுவதே நன்று. உனது மனதை உயர்ந்த லட்சியங்களாலும், சிந்தனைகளாலும் நிரப்பு. அவற்றை ஒவ்வொரு நாளின் பகலிலும் இரவிலும் உன் முன் நிறுத்து; அதிலிருந்து நற்செயல்கள் விளையும்.  என்றார்  சுவாமி விவேகானந்தர்.

தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்

இடங்கண்ட பின்அல் லது.           491

எந்த செயலையும் முடிவை அறிந்த பின் தொடங்கு

காலாழ் களரின் நரியடும் கண்ணஞ்சா

வேலான் முகத்த களிறு.     500

வலிய யானை சேற்றில் சிக்கினால், நரிகூட அதைக் கொல்லும்

எனத் திருவள்ளுவர் குறிப்பிடுவதுபோல, காலமும் இடமும் அறிந்து முடிவெடுக்கவேண்டும்.

சொல்லுக்கும் செயலுக்கும் வேறுபாடின்றி செயலாற்றுபவர்கள் மதிக்கப்படுவார்கள்.

திட்டமிடுவதையெல்லாம் நடத்திக் காட்டுபவர்களே புகழ்பெறுவார்கள்.

அதனால் தான்,

எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின். (666)  என்றார் திருவள்ளுவர்.

 

சேர மன்னனின் முடிவெடுக்கும் திறன் பற்றிக் கூறும்போது,

அவன் வானளவு சிந்திப்பதாக முரஞ்சியூர் முடிநாகராயர் குறிப்பிட்டுள்ளார்.

 

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்.                                      664
சொல்லுவது யார்க்கும் எளிது,சொல்லியபடி செய்துமுடிப்பதே அரிது

அதனால்,

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு.                                    467
சிந்தித்து செயல்படு, செயல்பட்ட பிறகு சிந்திப்பது இகழ்ச்சி என்று திருவள்ளுவர் சொன்னதை சிந்திப்போம். வெற்றியோ தோல்வியோ அது நம் வாழ்வின் அனுபவம் என்று ஏற்றுக்கொள்வோம்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக