மனம் போன போக்கெல்லாம் போகவேண்டாம்
வஞ்சனைகள் செய்வாரோடு இணங்கவேண்டாம்.
நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்லவேண்டாம் என்கிறது உலகநீதி
மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா என்றார் அகத்தியர்
சிந்தை தெளிவாக்கு என்று
பாடிய பாரதி
பேயாய் உழலுஞ் சிறுமனமே!
பேணாய் என்சொல் இன்று முதல் நீயா ஒன்றும் நாடாதே
நினது தலைவன் யானேகாண் என்று பாடியுள்ளார்
உள்ளம் பெரும் கோயில் ஊன் உடம்பு ஆலயம் என்றார் திருமூலர்.
(வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலன் ஐந்தும் காளா மணிவிளக்கே)
மனிதனின் உள்ளம் ஒரு கோயிலைப் போன்றது, அங்கு இறைவன் உறைகிறான். எனவே, உள்ளத்தை தூய்மையாகவும், நேர்மறை எண்ணங்களுடனும் வைத்துக்கொள்ள வேண்டும். மனம் அழுக்காக கள்ளத்தன்மை கொண்ட புலன்கள் ஐந்தும்
பெரும்பங்காற்றுகின்றன என்பதை உணரவேண்டும்.
மனிதனின் குற்றங்களில் பெரும்பாலானவை அவனது
நாவிலிருந்துதான்
பிறக்கின்றன என்றார்
நபிகள் நாயகம்.
மனதில் தோன்றாமல் நாவில் பிறக்காது என்பதை உணரவேண்டும்.
அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்
வேண்டிய எல்லாம் ஒருங்கு. - 343
ஆசைகளை வெல்ல ஐம்புலன்களை அடக்கவேண்டும்,
சினத்தையும், மனத்தையும்
ஆளத்தெரியாதவரை யாவரும்வெல்வர் என்ற திருவள்ளுவர்,
நீங்கான் வெகுளி
நிறையிலன் எஞ்ஞான்றும்
யாங்கணும் யார்க்கும்
எளிது. ( 864)
எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
மாணாசெய் யாமை தலை -317
யார்க்கும், எப்போதும் சிறிதும்
மனதளவிலும் தீமை செய்யாதே
மனத்து
உளதுபோலக் காட்டி ஒருவற்கு
இனத்துளது ஆகும் அறிவு.( 454)
அறிவு மனம் சார்ந்ததல்ல, சேரும் கூட்டம் சார்ந்தது என்றார்.
கடவுளுக்கு அஞ்சுவோர், சட்டத்துக்கு
அஞ்சுவோர், பழிச்சொல்லுக்கு அஞ்சுவோர், தன் மனசாட்சிக்கு அஞ்சுவோர் எதற்கும் அஞ்சாதவர்கள்
என்று மனிதர்களை வகைப்படுத்தலாம்
தாங்கள் செய்யும்
தீச்செயல்களை நேரடியாகப் பார்த்தவர்கள் இல்லை என்று நெஞ்சறியச் செய்த கொடிய
செயல்களை மற்றவர்களிடமிருந்து மறைத்துவைத்தாலும், அவர்கள் மனம் அதை நன்கறியுமாதலால் அதனைக்
காட்டிலும் வேறு சான்று தேவையில்லை! எனக் கலித்தொகை(125)
உரைக்கிறது.
மனசாட்சிக்கு அஞ்சுவோர்,
தன்நெஞ்சு அறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும். (293) என்பதை அறிவார்கள்
இதே கருத்தை கண்ணதாசன்,
ஒன்றே சொல்வார், ஒன்றே செய்வார்
உள்ளத்தில் உள்ளது அமைதி என்று பாடினார்.
பொய் சொன்னால் அதை மறைக்க இன்னொரு பொய்
சொல்லவேண்டும்.
உண்மை சொன்னால் அதை எப்போதும் மாற்றிச்
சொல்ல வேண்டிய தேவையிருக்காது, குற்ற உணர்வும் தோன்றாது. அதனால் தான்,
(மனத்துக்கண்
மாசிலன் ஆதல் அனைத்து அறன்
ஆகுல நீர பிற. -34)
மனதளவில் குற்றமின்றிஇருத்தலே அறங்களுள்
சிறந்த அறம் என்றார் திருவள்ளுவர்
பகை, பொறாமை ஆகியவற்றை நீ வெளியிட்டால், அவை வட்டியும் முதலுமாக மீண்டும் உன்னிடமே திரும்பி
வந்து சேர்ந்துவிடும் என்றார் விவேகானந்தர்.
எதை விதைக்கிறோமோ அதையே அறுவடை
செய்வோம்
பிறர்க்கின்னா முற்பகல்
செய்யின் தமக்குஇன்னா
பிற்பகல் தாமே வரும்.( 319)
பிறர்க்கு முற்பகல் செய்யும்
தீமை, நமக்கு பிற்பகல் தாமே வரும்
அதனால் மனதில் எதிர்மறை எண்ணங்கள் தோன்றாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.
மனதில் தோன்றும் குற்றங்கள் பல,
ஆசை, பொய், சினம், பொறாமை, தீமை, அச்சம் எனப் பல.
ஆசையே துன்பத்துக்குக் காரணம்! என்றார் புத்தர்.
மனதில் தோன்றும் குற்றங்களுக்கெல்லாம் விதையாவது ஆசையே..
ஆரா இயற்கை அவாநீப்பின்
அந்நிலையே
பேரா இயற்கை தரும்.( 370)
ஆசையற்ற நிலையே பேரின்ப
நிலை
பொய்யாமை பொய்யாமை ஆற்றின்
அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று.( 297)
உண்மை பேசுவது அறம்
செய்வதைவிட உயர்ந்தது
நகையும்
உவகையும் கொல்லும் சினத்தின்
பகையும்
உளவோ பிற. ( 304)
சிரிப்பையும், மகிழ்ச்சியையும் கொல்வதால் சினமே
பெரும்பகை
அழுக்காறு
எனஒரு பாவி திருச்செற்றுத்
தீயுழி
உய்த்து விடும். ( 168)
பொறாமை என்ற பாவி ஒருவனின்
செல்வத்தை அழித்துக் கெடுக்கும்
என்றார் திருவள்ளுவர்.
இன்னா
செய்தாரை ஒறுத்தல் அவர்
நாண
நன்னயம் செய்துவிடல்- 314(வள்ளுவர்)
இன்னா செய்தாருக்கும் அவர் வெட்கப்படும்படி இனிய செய்,
அவர் உனக்கு செய்த தீமையையும்,
நீ அவருக்கு செய்த நன்மையையும் மனதில் தூக்கி சுமக்காதே மறந்து விடு என்றார் திருவள்ளுவர். இதையே பாரதி,
பகைவனுக்
கருள்வாய்-நன்னெஞ்சே! என்றார்.
மனதில்
தோன்றும் குற்றங்களை நீக்கும் போது மனித வடிவில் மட்டுமின்றி மனிதப் பண்போடும் வையத்தில் வாழ்வாங்கு வாழலாம்.
அரம்போலும்
கூர்மைய ரேனும் மரம்போல்வர்
மக்கட்பண்பு
இல்லா தவர். (
997)
அரம்போன்ற
கூர்மையான அறிவுடையவராக இருந்தாலும் மக்கட் பண்புமின்றிப்
பயனில்லை என்பதை உணரவேண்டும்.
ஒரு
அரசனுக்கு ஒரு ஏழையைப் பார்த்துப் வியப்பு! நாம் எல்லா செல்வங்களோடும் மகிழ்ச்சியின்றி
இருக்கிறோம். ஆனால் இவன் எந்த செல்வங்களும் இன்றி நம்மைவிட மிகவும்
மகிழ்வாக இருக்கிறானே என்று. ஒருநாள் தன் அமைச்சரை அழைத்து இவன் மகிழ்வு எங்கு
இருக்கிறது என்று கண்டுபிடிக்கவேண்டும் என்றார். அமைச்சர், 99 பொற்காசுகளை ஒரு பையில் கட்டி அவன் வீட்டு வாசலில் போட்டுவிட்டார்.
மறுநாள் காலையில் எழுந்து வந்த ஏழை அந்தப் பையைப் பார்த்து வியந்து போனான்.
சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு அதை எடுத்து வீட்டுக்குள் சென்று
எண்ணிப்பார்த்தான். ஒரு காசு குறைந்தது. அன்றிலிருந்து அவனது உறக்கம்போனது,
மகிழ்வு போனது! எப்போதும் தன் மடியிலேயே அந்தப் பையை வைத்துக்கொண்டு
வீட்டையே சுற்றிச் சுற்றிவந்தான்.
இந்த ஏழையின் தூக்கத்தையும், மகிழ்வையும் பறித்த கவலைகள் இரண்டு, இந்தப் பணத்துக்குச் சொந்தம் கொண்டாடி யாராவது வந்துவிடுவார்களோ? தொலைந்த அந்த 100வது
காசு எங்கே?
அமைச்சர்
அரசனிடம் சொன்னார். மன்னா, “இந்த ஏழையிடம் இல்லாமையில்
இருந்த மகிழ்ச்சி, இருப்பில்
இல்லாமல் போனது! இவன் தன்னிடம் இருப்பதைப் பற்றி மகிழ்ச்சியடையாமல் இல்லாததைத் தேடித் தன் மகிழ்ச்சியைத் தொலைத்துவிட்டான்”
என்று.
மனத்தூய்மை உள்ளவர்களிடம் உள்ள மன நிறைவும், மகிழ்ச்சியும், சிரிப்பும்
மனத்தூய்மை இல்லாதவர்களிடம் இருப்பதில்லை. அதனால் தான்,
நகல்வல்லர் அல்லார்க்கு
மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன்று இருள். 999
சிரிக்கும் பண்பில்லாதவர்களுக்குப் பகலும் இரவு போன்றதே என்றார்
திருவள்ளுவர்.
மனத்தூய்மை இல்லாதவர்களின் மனம் பலவீனமாகிவிடும். பலவீனமான
மனதுடையவர்களே போதைப் பழக்கங்களுக்கு எளிதில் அடிமையாகிவிடுவார்கள். அதனால்
அவர்கள் பலமடைவதாகக் கற்பனை செய்துகொள்வார்கள்.
குற்றம் என்று தெரிந்தும் பலர்
மனமறிந்து தவறுகளைத் தொடர்ந்து
செய்வதுண்டு. அத்தகைய மனிதர்களைக் கண்டு அவர்களின் புலன்களே சிரிக்கும் என்றார் திருவள்ளுவர்,
வஞ்ச
மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும்.( 271 ) என்றார்.
மனத்தூய்மையின்
முதிர்ந்த நிலை சுயநலமின்மை, உயிர்கள் மீது அன்பு செலுத்துதல்,
பகுத்துஉண்டு
பல்உயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம்
தலை (322)
பகுத்துண்டு
வாழ்வதே நூலோர் தொகுத்தவற்றுள் தலையானது என்றார் திருவள்ளுவர்.
இரந்தும் உயிர்வாழ்தல்
வேண்டின் பரந்து கெடுக உலகியற்றி யான். ( 1062) என்றார்,
தனியொரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை
அழித்திடுவோம் என்றார் பாரதி
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்றார்
வள்ளலார்
இவர்கள் மனத்தூய்மையின் அடையாளங்களாவர்.
மரங்களில் தாவும் குரங்கு, கிளை விட்டுக் கிளை தாவுவது
போல மனமும் ஒன்றை விட்டு இன்னொன்று என்று தாவிக்கொண்டே இருக்கும்.
கோபம், பொறாமை, கவலை, ஆசை போன்ற
எண்ணங்களால் கலங்கிய நீரைப் போன்ற மனதைத்
தூய்மைப்படுத்தவே துறவிகளும் தவம் செய்தனர். கலங்கிய நீரில் மண் அடியில்
படிந்தபின் நீர் தெளிவடைவது போல, நம் மனதில் கலந்த எதிர்மறையான சிந்தனைகள் மனதின்
ஆழத்தில் படிந்து நேர்மறையான சிந்தனைகள் வளரும்போது மனம் தூய்மையாகும்.
தவம்
என்பதும் துறவு என்பதும் தோற்றத்தில் இல்லை. மனதைக் கட்டுப்படுத்துவதில் உள்ளது.
மனமறிந்து தவறுசெய்யக்கூடாது, என்பதை,
வானுயர் தோற்றம் எவன் செய்யும் தன்நெஞ்சம் தானறி குற்றப் படின். ( 272) என்றார்
திருவள்ளுவர்.
மனதைத் தூய்மைப்படுத்த பல
வழிகள் உள்ளன. தெளிவான மற்றும் நேர்மறையான மனநிலைக்குக் கொண்டு செல்ல,
மனதை
ஒருமுகப்படுத்தி,
எண்ண
ஓட்டங்களைக் கவனித்தல்,
நிகழ்காலத்தில் கவனம் செலுத்துதல், எதிர்மறையான எண்ணங்களை நீக்குதல், சுயநலம்
நீக்குதல், உயிர்களிடத்தில் அன்பு செலுத்துதல். புத்தக வாசிப்பு என பல
வழிமுறைகளால் மனதைத் தூய்மைப் படுத்தலாம்.
இந்திரனுக்குரிய
அமிழ்தம் கிடைத்தாலும்,
அது
இனிமையானது என்று தனித்து உண்ண மாட்டர்கள்
யாரையும்
வெறுக்க மாட்டார்கள்
சோம்பலின்றிச்
செயல்படுவார்கள்
பிறர்
அஞ்சுவதற்குத் தாமும் அஞ்சுவார்கள்
புகழ்வரும்
என்றால் தம் உயிரையே வேண்டுமானாலும் கொடுப்பர்கள்!
பழிவரும்
என்றால் உலகம் முழுவதும் கிடைப்பதானாலும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்! மனம் தளர மாட்டார்கள்!
இத்தகைய
சிறப்புடையவர்களாகித் தமக்காக உழைக்காமல், பிறர்க்காக உழைப்பவர்கள் இருப்பதால்தான் இவ்வுலகம்
இயங்கிக்கொண்டிருக்கிறது என்கிறது ஒரு புறானூற்றுப்
பாடல்.
சொர்க்கம்!
நரகம்! இரண்டும் எங்கோ இல்லை …
நம் நேர்மறை, எதிர்மறை எண்ணங்களாலேயே
இவ்விரண்டும் தீர்மானிக்கப்படுகின்றன.
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா
இயன்றது அறம். 35
புறம்தூய்மை
நீரான் அமையும் அகம்தூய்மை
வாய்மையான் காணப் படும் (298) என்றார் திருவள்ளுவர்
பொறாமை, பேராசை,
கோபம், கடுஞ்சொல்லைத் தவிர்த்து நம்
உடலை நீரால் தூய்மைப்படுத்துவது போல அகத்தை உண்மையால் தூய்மைப்படுத்தி சான்றோர் காட்டும்
வழியில் மனத்தூய்மையோடு மண் பயனுற வாழ்வோம்.
முனைவர்
இரா.குணசீலன்
தமிழ்
இணைப்பேராசிரியர்
பி.எஸ்.ஜி கலை
அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்
9524439008
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக