நல்லார்சொல் கேட்பதுவும் நன்றே என்றும்,
மூத்தோர்
சொல் வார்த்தை அமிர்தம்
எனவும் உரைத்தார் ஒளவையார்.
மூத்தோர் சொல்லும் முது நெல்லிக்கனியும் முதலில் கசக்கும்
பிறகு இனிக்கும் என்பது பழமொழி
மூத்தோர்
சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்
என்றார் உலகநாதர்
செவி வாயாக நெஞ்சு களனாக
கேட்டவை கேட்டு அவை விடாது உளத்து அமைத்து
என்றார் பவணந்தி முனிவர்.
அரசர்க்கு நல்லறிவுச் சிந்தனைகளைத் தரும் புறத்துறை செவி அறிவுறூஉ எனப்படும்
(வள்ளியோர் செவிமுதல் வயங்குமொழி வித்தித்,
தாம்
உள்ளியது முடிக்கும் உரனுடை உள்ளத்து
வரிசைக்கு வருந்தும்இப் பரிசில் வாழ்க்கைப்
பரிசிலர்க்கு அடையா வாயி லோயே! புறநானூறு-206.)
வள்ளன்மை மிக்கவர்களின் செவிகளில் நல்ல சொற்களை விதைத்து,
தமக்குத் தேவையான பரிசிலை விளைவிக்கும் ஆற்றல் மிக்க
உள்ளத்தைக் கொண்ட பரிசிலர்கள் எப்போதும் செல்லும் அடைக்காத வாயிலை உடையவனே! என்று அதியமானை ஔவையார் பாடியுள்ளார்.
செவிக்குண
வில்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப்படும். 412
உயிர்வாழ வயிற்றுக்கும், சிறப்பாக வாழ செவிக்கும் உணவிடு என்றார் திருவள்ளுவர். வயிற்றுக்கு வழங்கும் உணவு உடலை வளர்க்கும், செவிக்கு
வழங்கும் உணவு அறிவை வளர்க்கும்.
கேட்கும் ஒலியிலெல்லாம் நந்தலாலா - நின்றன்
கீத மிசைக்குதடா நந்தலாலா என்று பாடிய பாரதி
செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்
தேன் வந்து பாயுது காதினிலே என்றார்.
நாவின் சுவையைவிட செவியின் சுவை இனிது என்பதை
உணரவேண்டும்
குழல்
இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல்
கேளா தவர். 66
குழலையும்
யாழையும் விட தம் மக்களின் மழலைச் சொல் இனிது என்றார் திருவள்ளுவர்
சொல்லும் மழலையிலே - கண்ணம்மா
துன்பங்கள் தீர்த்திடுவாய்:
என்று பாடியுள்ளார்
பாரதி
ஈன்ற
பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன்
எனக்கேட்ட தாய். 69 (வள்ளுவர்)
தன் மகன் சான்றோன் என்று
கேட்ட போதே தாய் பெரிதும் மகிழ்வாள் என்றார் திருவள்ளுவர்.
மெச்சி உன்னை ஊரார் - புகழ்ந்தால்
மேனி சிலிர்க்கு தடி!
என்றார் பாரதியார். அவர் வாழ்ந்த
காலத்தில்,
காசி நகர்ப் புலவர் பேசும் உரைதான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்
என்று கனவு கண்டார். இன்று உலகில் எந்த நாட்டிலிருந்தாலும்
ஒருவர் பேசுவதை நாம் இருந்து இடத்திலிருந்தே கேட்கமுடிகிறது.
கான்ஓடும் ஆறுகளின் சத்தம் என்றன்
காதுகளைத் தொட்டதுண்டா? குயிலின் பாட்டைத்
தான்கொஞ்சம் கேட்டதுண்டா? குழலும் யாழும்
தரும்மதுரத் தனிச்சுவையில் பித்துக் கொண்டே
நான்மயங்கிக் கிடந்ததுண்டா? அறிஞர் பேச்சில்
நனைந்ததுண்டா என்நெஞ்சம்? என்ன வாழ்க்கை
என்றார்
கவிஞர் மீரா.
கற்றில
னாயினுங் கேட்க அஃதொருவற்கு
ஒற்கத்தின் ஊற்றாந் துணை. 414
ஊன்றுகோல் போல துன்பத்தில், உதவுவது கேள்வியறிவே
எனைத்தானும்
நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும். 416
எவ்வளவு நல்லது கேட்கிறோமோ அவ்வளவு நல்லது விளையும்
கேட்பினுங்
கேளாத் தகையவே கேள்வியால்
தோட்கப் படாத செவி. 418
செவியின் கேட்புத்திறன், ஓசையல்ல, கேள்வியறிவே!
செவியிற்
சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என். 420
செவியின் சுவையறியாமல் வாழ்வதும் வாழ்க்கையா?
என உரைத்த திருவள்ளுவர், குறைகூறுவோரின் சொற்களையும் தாங்குவது மன்னர் கடன் என்றார்.
(செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ்த் தங்கும் உலகு (389)
எல்லா
நேரமும் கேட்கும் செவிகள் சில நேரங்களில் கேட்டும் கேளாமலிருப்பதே நல்லது.
நம்மை
ஒருவர் புகழும்போதும், இகழும்போதும் செவிகள் கேட்காமலிருப்பதே
நல்லது.
புகழ்சி
நம்மை மதிமயக்கும். உயர்வு மனப்பான்மையைத் தோற்றுவிக்கும்
இகழ்ச்சி
நம்மை கோபத்தைத் தூண்டும். அதே நேரம் புகழும்போதும் இகழும்போதும் அதில் நம் வளர்ச்சிக்கு
தேவையானவற்றையும், நாம் திருத்திக்கொள்ளவேண்டிய குறைகளையும் பகுத்துணர்ந்து கொள்வது
அறிவுடைமை.
மபுறநானூற்றில் சோழன் கடுமான் கிள்ளி என்ற அரசனை, மதுரைக்
குமரனார் என்ற புலவர் வியந்து பாடுகிறார்.
கிள்ளி கண்ணுக்கு
இன்னாதவனாக, செவிக்கு இனியவனாக
இருக்கிறான்.
அவனுடைய எதிரி,
கண்ணுக்கு இனியவனாகவும் செவிக்கு இன்னாதவனாக இருக்கிறான். இருந்தாலும் கிள்ளியையே இவ்வுலகம் வியக்கிறது என்றார் புலவர். |
|
|
|
ஏனென்றால் கிள்ளி, போரைக் கண்டால்
பகைவரை வென்று அவரது படையை விலக்கி எதிர்நின்றான். அதனால்
வாள் தைத்த தழும்புடன் காணப்படுவதால் அவன் வீரத்தைக்
கேட்பவர் செவிகளுக்கு இனியவனாக விளங்குகிறான். புண்ணுடைய
உடம்புடன் கண்ணுக்கு இன்னாதவனாகத் தோன்றுகிறான்.
பகைவரோ அவனைக் கண்டு புறங்காட்டி ஓடியதால்
புண்இல்லாத உடம்புடன் தோற்றத்தில் கண்ணுக்கு இனியவராகவும், அவரது
அச்சம் காரணமாக, செவிக்கு இன்னாதவராகவும் உள்ளனர்.
அதனால் கிள்ளி ஒன்றில் இனியவனாகவும், பகைவரும் ஒன்றில் இனியவராகவும் இருந்தாலும் இவ்வுலகம் கிள்ளியையே புகழ்ந்து போற்றுகிறது அதற்குக் காரணம் யாதோ? என்று கிள்ளியின் வீரத்தை
வியந்து இகழ்வதுபோல புலவர் புகழ்ந்து பாடுகிறார்.
“அழகு என்பது கண்களால்
காண்பது மட்டுமல்ல!
செவியால் கேட்பதும் தான்” என்ற
நுட்பமான கருத்தை இப்பாடல் விளக்குகிறது,
·
கேட்பது நமது அறிவை விரிவுபடுத்துவதற்கு
அடிப்படையாக அமைகிறது
·
உரையாடல்கள், சொற்பொழிவுகள் மற்றும் அறிவுரைகள் மூலம் நாம் பெறும்
கேள்வியறிவு நமது கற்றல் திறனை மேம்படுத்துகிறது.
·
கதைகள், பாடல்கள், பழமொழிகள்
மற்றும் வாய்மொழி மரபுகள் மூலம் தலைமுறை தலைமுறையாகப் பெறப்படும் அறிவு நல்வாழ்வின்
வழிகாட்டியாக அமைகிறது.
·
வகுப்பறைகளில்
ஆசிரியர்களின் விளக்கங்கள், சக
மாணவர்களின் கலந்துரையாடல்கள் ஒலிப் புத்தகங்கள் வழியாகப்
பெறும் கேள்வியறிவு சிந்தனை வளர்ச்சியில் பெரும்பங்காற்றுகிறது.
·
ஆர்வமாக கேட்பவர்களிடம்
பேசுவோர் முழுமையாகவும் ஈடுபாட்டுடனும் கருத்தை வெளிப்படுத்துவர்.
·
பிறர் பேசுவதை நுட்பமாகக்
கேட்டால் பேசும்போது தவறின்றி மொழியைத் துல்லியமாக உச்சரிக்கமுடியும், சொல்வளமும் நன்றாக
இருக்கும்.
·
நமது கருத்தை அடுத்தவருக்குச்
சொல்வதில் எவ்வளவு கவனம் செலுத்துகிறோமோ அதுபோல அடுத்தவர் கருத்தைக் கேட்பதற்கும் கவனம்
செலுத்தவேண்டும்.
கேட்டார்ப்
பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம்
சொல். 643
கேட்டார் மகிழ, கேட்காதவரும் விரும்ப அமைவதே நல்ல
பேச்சு என்ற திருவள்ளுவர்,
விரைந்து தொழில்கேட்கும்
ஞாலம் நிரந்தினிது
சொல்லுதல்
வல்லார்ப் பெறின்.(648) என்று உரைத்துள்ளார்,
சொல்லுபவர்
சொன்னால் இவ்வுலகமே அதனை விரைந்து கேட்கும் என்ற
கருத்தின் உள்ளே சொல்வன்மையின் சிறப்பு மட்டும் பேசப்படவில்லை. கேட்போர் இயல்பும் சொல்லப்பட்டுள்ளது.
திருக்குறளில் கேள்வி என்ற அதிகாரத்தில்,
நுணங்கிய கேள்விய ரல்லார்
வணங்கிய
வாயினராதல் அரிது. 419
நல்ல கேள்வியறிவுடைரே, பணிவுடன் பேசுவர் என்ற கருத்து
உள்ளது.
செவியால் கேட்கும் நற்கருத்துகள்
சிந்தனையைத் தூண்டும்.
சிந்திப்பவர்களுக்குத் தான்
கேள்விகள் தோன்றும்.
கேள்விகளே நம் அறியாமையை நீக்கும் அகல்விளக்குகள்.
ஏன்? எதற்கு? எப்படி? என கேள்விகளாலே
தான் மனித சமூகம் நாள்தோறும் புதிய புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கி வருகிறது. மனப்பாடம் செய்து சொல்லும் பதிலைவிட,
அறியாமல் வினவும் கேள்வியே அறிவை வளர்க்கும்!!
அறிவு, ஒரு கருவூலம்.
கேள்விகளே அதன் திறவுகோல் என்றார் நபிகள்
நாயகம்
செல்வத்துட்
செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள்
எல்லாந் தலை. 411
செல்வங்களுள் உயர்ந்த செல்வம் கேள்விச் செல்வமே என்ற திருக்குறளின் கருத்தை உணர்வோம் கேள்விளால் ஞானம் பெறுவோம்.
முனைவர்
இரா.குணசீலன்
தமிழ்
இணைப்பேராசிரியர்
பி.எஸ்.ஜி கலை
அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்
9524439008
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக