ஆன்மீகம் என்பது முடிவடையாத தேடல்!
ஆன்மீகத்தைப் பற்றி, பெரிய பெரிய ஞானிகள் கூட அரிய பெரிய கருத்துக்களை முன்வைத்துச் சென்றிருக்கிறார்கள்.
ஆன்மீகம் குறித்த இளம் ஞானி ஒருவரின் சிந்தனை இன்றைய இடுகையாக...
என் மாணவன் ச.கேசவன் (இயற்பியல் துறை இரண்டாமாண்டு) ஆன்மீகம் பற்றிய தேடலோடு ஒரு கவிதையைப் படைத்து வந்தார். படித்துப் பார்த்த நான் அவர் உடலுக்கு வயது 19 இருக்கலாம் ஆனால் எழுத்துக்களுக்கு வயது 60க்குக் குறையாமல் இருக்கும் என மதிப்பீடு செய்தேன்.
இதோ அவருடைய கவிதை..
ஆன்மீகம் என்பது
அமைதிக்கு மார்க்கம்!
ஆன்மாவின் ஒழுக்கம்!
கற்பனைக்கு நெருக்கம்!
தனிமைக்கு சொர்க்கம்!
நம்பிக்கையின் விளக்கம்!
நற்கருத்துக்களின் உள்ளடக்கம்!
சான்றோரின் அனுபவச் சுருக்கம்!
பேராற்றல் கொண்ட ஆதவனை
வான்மேகம் மறைத்ததுபோல்
அண்டத்தை அடக்கிவைத்த
ஆன்மீகம் படும்பாடு பெரும்பாடு!!
இதோ சில...
வாயில்லா உயிர்களுக்கு
வாயார உணவளித்தான்!
வாயெடுத்து வாழ்த்துமுன்னே
பலிகொடுத்து பக்தி என்றான்!!
தாயின் பாதம் பதம் அறியாத ஒருவன்
ஆன்மீகம் பெயரைச் சொல்லி
பணம் உறிஞ்சும் அட்டைப்புழுவின்
பாதம் கழுவி மோட்சம் என்றான்!!
இயல்பான பெண் ஒருத்தி
சத்தமிட்டுத் தள்ளாட
சக்தி அருளாடி வந்துவிட்டாள்!
வேதவாக்கு அவள் சொல் என்றான்!!
தீயினிலே நடக்கின்றான்!
தீச்சட்டி ஏந்துகின்றான்!
சூலம் கொண்டு உடலுறுப்பை
இரத்தம் வர வருத்துகின்றான்!
இதில் என்ன இவன் வாழ்ந்துவிட்டான்?
எனக்கொன்றும் புரியவில்லை!!
இறைசிந்தனை இல்லாது
இன்புற்று வாழ்வோர் பலரே!
இறைச் சிந்தனையோடு இன்னும்
இவன் வாழும் இடம் சிறு குடிலே!!
தேங்காய் அழுகினும், வளைந்து உடையினும்
மலர் மாலை வாடினாலும், அகழ்விளக்கு அணைந்தாலும்
சிறுகாயம் ஏற்படினும்,
குற்றம் குற்றம் தெய்வக்குற்றம்??????
ஏதடா குற்றம்? எதிலடா குற்றம்?
சந்தனம் தான் ஆன்மீகம்!!
அதை ஏன் நீ
சகதியிலே கலந்துவிட்டாய்?????
இறைநம்பிக்கை தேவையல்ல
என்பதல்ல என்கருத்து!
இதில் தேவையல்ல மூடநம்பிக்கை
என்பதுதான் என்கருத்து!!
இறை நூல்கள் படிப்பதிலும்
மந்திரங்கள் ஓதுவதிலும்
தினம் வழிபாடு செய்பதிலும் தான்
இறைவன் மகிழ்கின்றானா?
இதுதானோ ஆன்மீகம்???
இல்லை...
இறைநூல் நெறிப்படி
அதன் ஒழுக்கங்களைப்
பின்பற்றி வாழ்வதை இறைவன் விரும்புகிறானா??
இது தானோ ஆன்மீகம்???
விடை தெரியவில்லை....
தெரிந்தவர்கள் கூறுங்களேன்...
கவிதை ஆக்கம்
ச.கேசவன்
இயற்பியல் இரண்டாமாண்டு
கே.எஸ்.ஆர் கலை அறிவியல் கல்லூரி
திருச்செங்கோடு
நாமக்கல் மாவட்டம்.
தொடர்புடைய இடுகைகள்