வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திங்கள், 3 மே, 2010

சங்க இலக்கியத்தில் விடுகதை.




சங்க இலக்கியங்கள் சங்கத்தமிழரின் வாழ்வியலைக் கூறும் வரலாறாகும். விடுகதைகள் நாட்டுப்புற மக்களின் சிந்தனைத் திறனுக்கு தக்க சான்றாகும். சங்க இலக்கியங்கள் வாய்மொழி வழி வந்தவை என்பதால் சங்கப்பாடல்கள் பலவற்றிலும் விடுகதைக் கூறுகளைக் காணமுடிகிறது. அதனை எடுத்தியம்புதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

விடுகதை

விடும் கதை – விடுவிக்கும் கதை என்பதே விடுகதையாகும். மறைபொருளிலிருந்து பொருள் விளக்கும் முயற்சியே விடுகதை. வினா எழுப்பி விடையளிக்குமாறு இவ்விடுகதைகள் அமையும். அறிவூட்டுவது சிந்தனையைத் தூண்டுவது இதன் நோக்கமாகும். யாப்பு முறையை சுட்டும் போது தொல்காப்பியர்,

‘பாட்டுரை நூலே வாய்மொழி பிசியே’ என்றுரைக்கிறார்.

‘பிசி, நொடி, புதிர், விடுகதை, வெடிபோடுதல், அழிப்பாங்கதை” ஆகியன இதன் வேறு பெயர்களாகும். விடுகதை என்னும் சொல்லாட்சி பழந்தமிழ் இலக்கியங்களில் இல்லை. ‘பிசி’ என்னும் சொல்லே பிதிர் என்று மாறி புதிர் என்று மாறியது. குறுகிய காலத்தில் விடைகாணும் முயற்சியால் ‘நொடி’ என்ற பெயரும் பெற்றது.

சங்கப்பாடல்களில் விடுகதை

Ø க.கைலாசபதி அவர்கள் ‘தமிழ் வீரயுகப்பாடல்கள்’ என்னும் தம் நூலில் சங்க இலக்கியப்பாடல்கள் வாய்மொழிப்பாடல்கள் என்று நிறுவியுள்ளார்.
Ø கதிர்மகாதேவன், தமிழண்ணல், கமில் சுவலபில் போன்ற தமிழ்ச்சான்றோரும் இதனை ஏற்றுள்ளனர். இவர்களின் கருத்து எவ்வளவு உண்மையானது என்பதை சங்கப்பாடல்களை நன்கு உற்று நோக்கும் போது அறிந்துகொள்ள முடிகிறது.

நாட்டுப்புறவியல் கூறுகள் பலவும் பழந்தமிழர் வாழ்வில் இயைபுற்று இருந்தமையும், அவற்றுள் ‘விடுகதை’ வழக்கிலிருந்த மரபையும் சங்கப்பாடல்கள் வழியாக நன்கு அறிந்துகொள்ளமுடிகிறது.


‘துணங்கை அம் செல்விக்கு அணங்கு நொடித்தாங்கு’ (பெரும்பாணாற்றுப்படை-459)

என்னும் அடிகள் வாயிலாகப் பேய்மகளிர் கொற்றவைக்கு விடுகதை என்னும் நொடிவிட்டதை கடியலூர் உருத்திரங்கண்ணனார் சுட்டுவர்.


கலித்தொகையில் விடுகதைக் கூறு.

தலைவன் தலைவியின் அழகு நலத்தை வியந்து புகழும் பாடல் ஒன்று விடுகதையின் கூறுகளைத் தன்னகத்தே தாங்கிநிற்கின்றது. பாடல் இதோ,


'ஐ தேய்ந்தன்று, பிறையும் அன்று
மை தீர்ந்தன்று, மதியும் அன்று
வேய் அமன்றன்று, மலையும் அன்று
பூ அமன்றன்று, சுனையும் அன்று
மெல்ல இயலும், மயிலும் அன்று
சொல்லத் தளரும், கிளியும் அன்று’
“கலி 55-9-14)

இதன் பொருள்,

உன் நெற்றி வியக்குமாறு தேய்ந்தது
ஆயினும் பிறையுமல்ல!
உன் முகம் மறுவற்றுள்ளது
ஆயினும் நிலவுமல்ல!
உன் கண் மலர் போலுள்ளது
ஆயினும் மலருமல்ல!
நீ அது பிறக்கும் சுனையுமல்ல
உன் சாயல் மெல்லென அசைவதே
ஆயினும் நீ மயிலுமல்ல!
நீ சொல்லுக்குச் சொல் தளர்கிறாய்
ஆயினும் நீ கிளியுமல்ல!

என்பதே ஆகும்.
விடுகதைக் கூறுகளுள் ‘இயைபுநிலை விடுகதை’ என்னும் வாய்மொழிக் கூறுகொண்டு இப்பாடல் விளங்குகிறது.

இப்பாடலுடன் ஒப்புநோக்கத்தக்க விடுகதை,

‘பச்சைப் பசேலென்றிருக்கும் பாகற்காயுமல்ல
பக்கமெல்லாம் முள்ளிருக்கும் பலாக்காயுமல்ல
உள்ளே வெளுத்திருக்கும் தேங்காயுமல்ல
உருக்கினால் நெய்வடியும் வெண்ணெயுமல்ல’


விடை – ஆமணக்கு


வாழ்க்கை இயல்பு கூறும் விடுகதை

தலைவனுடன் உடன்போக்கில் பெற்றோரை நீங்கிச் சென்றாள் தலைவி. தலைவி மீது கொண்ட பற்றினால் அவள் சென்ற வழியிலேயே தொடர்ந்து வந்தால் செவிலி. வழியில் முக்கோர்பவரைக் கண்டு, தாங்கள் வந்த வழியில் எனது மகளைப் பார்த்தீர்களா என்று வினவினாள். அச்சான்றோர் சொன்ன பதிலே விடுகதை போல இருந்தது. அவர்கள் சொன்ன கருத்தை ஆழ நோக்கினால் வாழ்க்கை இயல்பு இதுதான் என்று புரிந்துகொள்ளும் பக்குவம் வந்துவிடும். பாடல் இதோ,

‘பலவுறு நறுஞ்சாந்தம் படுப்பவர்க்கு அல்லதை
மலையுளே பிறப்பினும் மலைக்கு அவைதான் என் செய்யும்?
நினையுங்காலை நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே
சீர் கெழு வெண்முத்;தம் அணிபவர்க்கு அல்லதை
நீருளே பிறப்பினும் நீர்க்கு அவைதான் என்செய்யும்
தேருங்காலை நும்மகள் நுமக்கும் ஆங்கு அனையளே
ஏழ்புணர் இன்னிசை முரல்பவர்க்கு அல்லதை
யாழுளே பிறப்பினும் யாழ்க்கு அவைதாம் என் செய்யும்?

கலித்தொகை 09

என்றனர்.

v நறுமணப் பொருளான சந்தனைம் பூசிக்கொள்பவரல்லது மலையிலே பிறந்தாலும் மலைக்கு அவைதான் என்ன செய்யும்?
v சிறந்த வெண்முத்துக்கள் அணிபவருக்குப் பயன்படுவதன்றி கடலிலே பிறந்தாலும் கடலுக்கு அவைதான் என்ன செய்யும்?
v ஏழ் நரம்பிலான யாழில் தோன்றும் இன்னிசை யாழிலே பிறப்பினும் பாடுபவர்கல்லாது யாழுக்கு அவைதான் என்ன செய்யம்?
v இவைபோலவே உன் மகள் உனக்கும். அவள் உன் மகளாயினும் அவள் அவனுக்குப் பிடித்தவனோடு வாழ்வதே வாழ்வின் இயல்பு.

என்ற முக்கோற்பவரின் கேள்வி செவிலியைச் சிந்திக்கச் செய்வதாக அமையும். வாழ்க்கையின் இயல்பு அது தான் என்பதை உணரச்செய்வதாகவும் அமையும்.

குறுந்தொகையில் விடுகதை

வினாநிலை விடுகதை

தன் தலைவியின் கூந்தல் மணத்தைவிட சிறந்த மணம் வேறெந்தப் பூக்களிலும் உள்ளதா? என்று ஞிமிறிடம் கேட்கும் தலைவனின் கூற்று முழுமையான விடுகதையைக் கேட்டு, பதிலை எதிர்பார்ப்பது போலவே உள்ளது. பாடல் இதோ,

2. குறிஞ்சி - தலைவன் கூற்று
கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
செறியெயிற் றரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீயறியும் பூவே.
-இறையனார்.

இப்பாடலின் வழி இக்கருத்தை உணரலாம்.


இயைபுநிலை விடுகதை

நிலத்தைவிடப் பெரியது
வானைவிட உயரமானது
கடலைவிட ஆழமானது எது?

என்று இன்று யாரையாவது கேட்டால் அவரவர் அறிவுக்கு ஏற்ப ஏதாவதொன்றைச் சொல்வார்கள். ஆனால் சங்கஇலக்கியம் பயின்றவர்களை இக்ககேள்வியைக் கேட்டால் உடனே சொல்வார்கள் ‘காதல்’ என்று. பாடல் இதோ,

நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆரள வின்றே சாரல்
கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே.”

குறுந்தொகை -3 குறிஞ்சி - தலைவி கூற்று

அம்மா சேலையை மடிக்க முயாது
அப்பா காச எண்ண முடியாது
அது என்ன?

(விடை – வானம் - நட்சத்திரம்)

என்பது போலவே இக்குறுந்தொகைப்பாடல் உள்ளது. அளக்கலாகா கூறுகளை விளக்கும் முயற்சியே இவை போன்ற விடுகதைகளாகும்.

புதிர் நிலை விடுகதை

தலைவியைச் சந்தித்து மகிழும் இடத்தைத் தோழியிடம் கேட்கிறான் தலைவன். தோழியோ நேரிடையாகக் கூறாமல் சுற்றி வளைத்துப் புதிர் போடும் முறையில் பதில் சொல்கிறாள்.

ஊர்க்கும் அணித்தே பொய்கை பொய்கைக்குச்
சேய்த்தும் அன்றே சிறுகான் யாறே
இரைதேர் வெண்குரு கல்ல தியாவதும்
துன்னல்போ கின்றாற் பொழிலே யாமெம்
கூழைக் கெருமண் கொணர்கஞ் சேறும்
ஆண்டும் வருகுவள் பெரும்பே தையே.


(குறுந்தொகை 113
மருதம் - தோழி கூற்று
மாதீர்த்தனார்.)

ஊர்க்கு அணிமையில் பொய்கை உள்ளது. சிறு காட்டாறு அப்பொய்கைக்குத் தூரத்தில் இல்லை. அவ்வாற்றில் இரைதேடும் நாரையன்றி வேறு எவ்வுயிரும் அடைதல் இல்லை. நாங்கள் எம் கூந்தலுக்கு செங்கழுநீர் மலர் பறிக்க அங்கு செல்வோம். பெரிய பேதமை கொண்ட தலைவி அங்கும் வருவாள் என்கிறாள் தோழி.

‘ஆற்றங்கரைக்கு வந்தால் தலைவியைப் பார்க்கலாம் என்று தலைவனுக்கு நேரிடையாகப் பதில் கூறாமல் தோழி பதில் சொல்லும் முறை புதிர் நிலை விடுகதை போல உள்ளது படித்து இன்புறத்தக்கதாகவுள்ளது.

சிந்திக்கத்தூண்டும் விடுகதை

இயற்கைப் புணர்ச்சிக்குப் பின் தலைவன் தன்னைப் பிரிவான் என்று அஞ்சி வருந்தினாள் தலைவி. அவள் மனநிலையை அறிந்த தலைவன்,

என் தாயும் உன் தாயும் என்ன உறவினர்?
என் தந்தையும் உன் தந்தையும் எம்முறையில் உறவினர்?
நானும் நீயும் இதற்கு முன்னர் எந்நிலையில் உறவுடையவர்களாக இருந்தோம்?

என்று கேட்கிறான்.

எவ்விதத்திலும் தமக்கு இதற்கு முன் உறவு இல்லை என்பதே தலைவியின் மனதில் தோன்றும் பதில்.

செம்மண் நிலத்தில் சேர்ந்த மழைத்துளி போல நீயும் நானும் சேர்ந்தோம் என்ற தலைவனின் பதில். தலைவன் இனிதன்னை நீங்கமாட்டான் என்ற மனநிம்மதியைத் தலைவிக்கு அளிப்பதாகவுள்ளது. பாடல் இதோ,

‘யாயும் ஞாயும் யார் ஆகியரோ
எந்தையும் நுந்தையும் எம் முறைக் கேளிர்
யானும் நீயும் எவ் வழி அறிதும்
செம் புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.’

குறுந்தொகை 40 – செம்புலப் பெயர்நீரார்.

என்ற பாடல் தலைவியின் மனதில் சிந்தனையைத் தூண்டி பதில் வழி மனமகிழ்ச்சியைத் தருவதாக அமைகிறது.

உறவு நிலை விடுகதை.

வெளிநாடுகளில் ஒரு பெண் தன் காதலையோ திருமணத்தையோ தன் பெற்றோரிடம் மிகவும் சாதரணமாக,

மகள் - அப்பா நேற்று மாலை எனக்கு திருமணம் முடிந்துவிட்டது.
அப்பா – ஓ அப்படியா. பரவாயில்லை மகளே இந்தமுறைதான் எங்களை அழைக்கவில்லை. அடுத்தமுறையாவது தவறாது அழைப்பாயா?

என்று கேட்பது ஒன்றும் உலக அதிசயமல்ல. வெளிநாட்டு மரபுகளைத் தழுவி தமிழர்களும் மாறிவருவது கண்கூடு. இன்று ஒரு தமிழ்ப் பெண் தன் காதலையோ திருமணத்தையோ பெற்றோரிடம் சொல்வதற்குத் தயங்கினாலும் சொல்வதில் பெரியளவுக்கு தயக்கமோ, சிக்கலே இருப்பதில்லை. ஆனால் சங்ககாலத்தில் ஒரு பெண் தன் காதலைப் பெற்றோரிடம் தெரிவிப்பது என்பது இயலாதவொன்றாகவே இருந்தது.

தலைவி தன் காதலைத் தோழியிடம் தெரிவிக்க,
தோழி செவிலியிடம் தெரிவிக்க,
செவிலி நற்றாயிடம் தெரிவிக்க,
நற்றாய் தந்தையிடம் சென்று மகளின் காதலைச் சொல்வாள். இதுவே சங்ககால மரபு.


அகவன் மகளே அகவன் மகளே
மனவுக்கோப் பன்ன நன்னெடுங் கூந்தல்
அகவன் மகளே பாடுக பாட்டே
இன்னும் பாடுக பாட்டேஅவர்
நன்னெடுங் குன்றம் பாடிய பாட்டே.

குறுந்தொகை 23. குறிஞ்சி - தோழி கூற்று
-ஒளவையார்.

இப்பாடலில் தலைவி அகவன் மகளிடம்,
‘இன்னும் பாடுக பாட்டேஅவர்
நன்னெடுங் குன்றம் பாடிய பாட்டே.’

என்று தலைவனின் குன்றம் பற்றி பாடலையே தலைவி மீண்டும மீண்டும் விரும்பிக்கேட்பதை அருகாமையில் இருக்கும் செவிலியோ, நற்றாயோ கேட்டு தன்மகள் காதல் வயப்பட்டுவிட்டாள் என்பதை உணர்வர் இதுவே சங்ககால மரபு. இப்பாடலை தலைவி தாயரிடம் கேட்கும் விடுகதையாகக் கொள்வது பொருத்தமாக அமையும்.

நிறைவுரை.

வாய்மொழிப்பாடல்களின் வழிவந்தவையே சங்கப்பாடல்கள் என்பதால் வாய்மொழிக்கூறுகள் பலவும் சங்கப்பாடல்களில் பொதிந்திருக்கின்றன. அவற்றுள் ‘விடுகதை’ என்னும் வாய்மொழி மரபும் பாடல்களில் இழையோடி இருக்கக் காண்கிறோம். இன்று பேச்சு வழக்கில் யாராவது பேசுவது புரிந்தும் புரியாமலும் இருந்தால் என்ன புதிர்போட்டுப் பேசுகிறாய்? என்று கேட்பது வழக்கம். அது போல சங்கப்பாடல்கள் பலவற்றிலும் பேச்சு மரபுகளினூடே விடுகதைப் பண்பு இயைபுற அமைந்திருப்பது உற்று நோக்கி இன்புறத்தக்கதாகவுள்ளது.

கேள்வி கேட்டல், சிந்தனையைத் தூண்டுதல், மறைபொருளாகக் கூறுதல், உவமையாகக் கூறுதல், சுற்றி வளைத்துக் கூறுதல் தத்துவப் பொருளாகக் கூறுதல் போன்ற பல்வேறு விடுகதைப் பண்புகளையும் சங்கப்பாடல்களில் காணமுடிகிறது.

சனி, 24 ஏப்ரல், 2010

பூ உதிரும் ஓசை




வானம், நிலா, நட்சத்திரம், தென்றல், என்று நான் எப்போதாவது இயற்கையைப் பார்த்து மகிழ்ந்து கவிதை சொல்ல முற்பட்டால் என் நண்பர்கள் சொல்வார்கள்,

இவன் காதல் வயப்பட்டுவிட்டான், கவிஞனாகிவிட்டான் என்று.

இயற்கை என்ன காதலர்களுக்காகவும் கவிஞர்களுக்காகவுமே தோன்றியதா?
சராசரி மனிதர்கள் இயற்கையோடு உறவாடக் கூடாதா?

என்னைக் கேட்டால் இயற்கையோடு உறவாடும் மனிதர்களே வாழத்தெரிந்தவர்கள் என்பேன்.

என் அனுபவத்தில் சொல்கிறேன் சராசரி வாழ்வில் இயற்கையோடு உறவாட நேரம் ஒதுக்கிப் பாருங்கள். உங்கள் இன்பம் இருமடங்காகும், துன்பம் பாதியாகக் குறையும்.

பூ பூக்கும் ஓசை அதைக் கேட்கத்தான் ஆசை என்று பாடல் கேட்டிருப்போம், ஆனால்,

பூ பூக்கும் ஓசையையோ, பூ உதிரும் ஓசையையோ கேட்டது உண்டா?

இன்றைய ஒலி மாசுபாடுகள் நிறைந்த உலகில் பூ பூக்கும் ஓசையை எங்கு கேட்பது என்கிறீர்களா?

“காசின் ஓசையின் முன்னே
பூவின் ஓசையை எல்லோராலும் கேட்கமுடியாது என்பது உண்மைதான்“

“அப்படி என்னதான் சொல்லிவிட்டது காற்று
இப்படிக் குலுங்க குலுங்கச் சிரிக்கிறதே மரம்“


என்னும் கவிதை இயற்கையின் ஒவ்வொரு அசைவிலும் ஓராயிரம் கவித்துவம் மறைந்துள்ளதையே தெரிவிக்கிறது.

சங்ககாலக் காட்சி ஒன்று.

“கொன் ஊர் துஞ்சினும் யாம் துஞ்சலமே
எம்இல் அயலது ஏழில் உம்பர்
மயில் அடி இலைய மாக்குரல் நொச்சி
அணிமிகு மென்கொம்பு ஊழ்த்த
மணிமருள் பூவின் பாடுநனி கேட்டே“


(குறுந்தொகை -138
புலவர் -கொல்லன் அழிசி
திணை – குறிஞ்சி
உரி – கூடல்
துறை – குறி பிழைத்த தலைவன் பின் இரவுக்குறி வந்தபோது தோழி சிறைப்புறமாகக் கூறியது. இரவுக்குறி நேர்ந்ததும்ஆம்.)


தலைவன் கேட்கத் தோழி உரைக்கிறாள்,

எம் மனைக்கு அயலாகவுள்ள ஏழுமனையின் அப்பால் மயில் அடியைப் போன்ற இலைகளையுடைய கரிய பூங்கொத்துக்களைக் கொண்ட நொச்சியின் அழகுமிக்க மெல்லிய கொம்புகள் உதிர்த்த நீலமணிபோன்ற நிறம் கொண்ட பூவின் ஓசையை மிகவும் கேட்டு, அலர் உரைக்கும் ஊர் தூங்கினாலும் நாங்கள் தூங்கவில்லை.

தலைமக்கள் இரவுக்காலத்தில் தலைவியின் வீட்டருகே சந்தித்து உறவாடி மகிழ்வது“இரவுக்குறி“ எனப்படும். இக்காலத்தில் தலைவன் தன் வருகையை ஏதாவது ஒலி செய்து தெரிவிப்பது மரபு. அதனால் தலைவன் செய்யும் ஒலிக்காக இரவு முழுவதும் உறங்காது காத்திருந்த தலைவிக்கு ஏழுவீடுகளுக்கு அப்பால் உதிரும் நொச்சிப் பூவின் ஓசைகேட்டது என்கிறாள் தோழி.

நொச்சிப் பூவின் மெல்லிய ஓசையைக்கூடக் கேட்கமுடிந்த நாங்கள் நீ சிறு ஒலி செய்திருந்தால் கூட அதைக் கேட்டிருப்போம். நீ வரவில்லை அதனால் ஏதும் ஒலி செய்யவில்லை. நீ வருவாய் எனக் காத்திருந்த தலைவி ஏமாற்றமடைந்தால் என்பதைத் தலைவனுக்கு உணர்த்தினாள் தோழி.

ஊர்தூங்கும் காலம் என்று தோழி குறிப்பது தலைவியை சந்திக்க ஏற்றகாலம் இரவு என்று “இரவுக்குறி“ தலைவனுக்கு அறிவுறுத்துவதாகவும் கொள்ளலாம்.

பாடல் உணர்த்தும் கருத்து.

 இரவுக்குறி, குறிபிழைத்தல் போன்ற அகத்துறைகள் விளக்கப்படுகின்றன.
 இயற்கையோடு ஒன்றிய பழந்தமிழரின் அகவாழ்வு புலப்படுத்தப்படுகிறது.
 நொச்சிப் பூ உதிரும் ஓசை கேட்கமுடிந்தது என்பதால் ஒலிமாசுபாடற்ற வாழ்வை சங்கத்தமிழர் வாழ்ந்தனர் என்பது உணரமுடிகிறது.
 மயில் அடியைப் போன்ற நொச்சி என்ற புலவரின் வருணனை மயில் அடியோடு நொச்சியிலையை நுட்பமாக ஒப்புநோக்கிய புலவரின் திறன் பாராட்டத்தக்கதாகவுள்ளது.

புதன், 21 ஏப்ரல், 2010

அறிஞர்.அண்ணா கட்டிய வீடு.



அறிஞர்.அண்ணா அவர்களின் மனைவி தன் பேத்தி வாயிலாக அண்ணாவிடம் நாம் வீடுகட்டவேண்டும் என்ற கோரிக்கையை வைத்தாராம். தன்பேத்தி கொண்டு வந்த கோரிக்கை எழுதிய தாளிலேயே வீட்டின் படத்தை வரைந்து கொடுத்தார் அண்ணா.

வரைபடத்தைப் பார்த்த அவரின் மனைவி, நம் வீட்டின் மாதிரிப்படமா? என்று கேட்க. அதற்கு அண்ணா அவர்கள்,


“நம் வீடே அதுதான்“ என்றாராம்.

-------------------------------------------------------------------------------------

அரசர் கண்பார்வையற்ற புலவர் ஒருவரைப் பாராட்டிப் பொன்னாடை போர்த்தலாம் என்று எண்ணினார். ஆனால் அமைச்சரோ புலவர் கண்பார்வையற்றவர்தானே, என்று நினைத்து கிழிந்த பொன்னாடையைக் கொடுத்தார்.

பொன்னாடையைத் தடவிப்பார்த்தார் புலவர்.

புலவர் அதன் வடிவமைப்பைத் தான் தடவிப்பார்க்கிறார் என்று நினைத்த அரசர் புலவரிடம்,

புலவரே! அதில் அழகான வடிவமாக பூ இருக்கிறது, மாங்காய் இருக்கிறது என்றார்.

அரசருக்குப் பதிலளித்த புலவர்,

“ஆம் மன்னா பூவும் இருக்கிறது, காயும் இருக்கிறது அதில் பிஞ்சும் இருக்கிறது” என்றாராம்.

(பிஞ்சு என்று புலவர் மாம்பிஞ்சைக் குறிப்பது போல பொன்னாடையின் கிழிந்ததன்மையைச் சுட்டியதால் தன் தவறை உணர்ந்தார் அரசர்.)


-------------------------------------------------------------------------------------

 பெர்னாட்சா – இன்று நான் பெரிய நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறேன். நீங்களும் வருகைதாருங்கள் உங்கள் நண்பர்களுடன், “ அப்படி யாராவது உங்களுக்கு இருந்தால்“

சர்ச்சில் – இன்று முக்கியமான நிகழ்ச்சி இருப்பதால் என்னால் கலந்துகொள்ளமுடியாது. அடுத்த நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறேன். “அப்படி ஏதாவதொன்று நடந்தால்“


-------------------------------------------------------------------------------------

நூறு ஆயிரமான கதை


வள்ளலிடம் சென்ற புலவர் நூறு ரூபாய் கேட்டார். இருங்கள் தருகிறேன் என்று தன் வீட்டினுள் சென்றுதிரும்பிய வள்ளல் புலவரிடம் நூறு ரூபாய் கொடுத்தார். அதனை வாங்க மறுத்த புலவர்..

புலவர் - என்ன ஐயா நீங்கள் இருநூறு ரூபாய் தருகிறேன் என்று சொல்லி நூறு ரூபாய் தானே தருகிறீர்கள்?
வள்ளல் – நான் எப்போது புலவரே இருநூறு ரூபாய் தருகிறேன் என்று சொன்னேன்?
புலவர் – முன்னூறு ரூபாய் தருகிறேன் என்று தாங்கள் தானே சொன்னீர்கள்?
வள்ளல் – நான் எப்போது சொன்னேன். (மனதுக்குள் இவர் ஏமாற்றுக்காரராக இருப்பாரோ என்று எண்ணிக்கொண்டார்)

புலவர் – நானூறு ரூபாய் தருகிறேன் என்று தாங்கள் தானே சொன்னீர்கள்?
வள்ளல் – புலவரே ஏன் இப்படி பொய்பேசுகிறீர்கள். நான் எப்போது இப்படியெல்லாம் சொன்னேன்?

புலவர் – வள்ளளே நான் நூறு ரூபாய் தான் கேட்டேன்..

தாங்களும் இரு தருகிறேன் என்று சென்றீர்கள். “ இரு“ என்பதை சேர்த்துக்கொண்டு இருநூறு ரூபாய் தருவதாகச் சொன்னேன்.

முன்பு நூறு ரூபாய் தருகிறேன் என்றீர்கள் அல்லவா.. அந்த முன் என்பதையும் நூறு என்பதையும் சேர்த்து முந்நூறு ரூபாய் தருவதாகச் சொன்னேன்.

நான் நூறு ரூபாய் தருகிறேன் என்று சொன்னீர்கள் அல்லவா.. அதனால் “நான்“ நூறு என்பதைச் சேர்த்து நானூறு ரூபாய் தருகிறேன் என்று சொன்னதாகச் சொன்னேன் என்ற விளக்கம் சொல்லவும் புலவரின் தமிழ் நயத்தைவியந்த வள்ளல் நூறு ரூபாய் கேட்டுவந்த புலவருக்கு மகிழ்வோடு ஆயிரம் ரூபாய் கொடுத்தனுப்பினார்.

செவ்வாய், 20 ஏப்ரல், 2010

சங்க இலக்கியத்தில் நகைச்சுவை.




“எள்ளல், இளமை, பேதைமை, மடன்“ என்னும் நான்கு கூறுகள் நகை என்னும் சிரிப்பு தோன்ற அடிப்படையாகும் என்பர் தொல்காப்பியர்.

பேதமை காரணமாகத் தோன்றிய நகையை சங்கப்பாடல்கள் வழி காண்பது இவ்விடுகையின் நோக்கமாகும்.

கெண்டை மீன் ஒன்று நீரில் துள்ளிக்குதித்து நீந்திவந்தபோது அதற்காகவே காத்திருந்த கொக்கு (நாரை) கெண்டைமீனைக் கவ்வியது. எதிர்பாராதவிதமாக கொக்கின் கவ்வுதலிலிருந்து தப்பியது மீன். உயிர்பிழைத்த மீன் அச்சவுணர்வுடனேயே நீருள் நீந்திவந்தது. நீருக்கு மேல் எட்டிப்பார்த்த மீன் தாமரைமலரைக் கண்டு அதுவும் கொக்குதானோ என்று அஞ்சிவருந்தியது.

“அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்“ என்பது போல இங்கு கொக்கிடமிருந்து தப்பிய கெண்டை மீனுக்கு தாமரை மலர்கூட கொக்காகவே தெரிகிறது! இது பேதமை காரணமாகத் தோன்றிய நகையாகும். மீனின் மனவுணர்வைப் பிரதிபலிக்கும் இவ்வகப்பாடல் உணர்த்துவதும் ஒரு அழகான அகவாழ்வியல்,

பரத்தையரிடமிருந்து மீண்ட தலைவன் ஊடல் கொண்டிருந்த தலைவியிடம் பாணனைத் தூதாக விடுத்துத் தான் பின்நின்றான். பாணனைக் கண்ட தோழி அவனைநோக்கி, “நின் பாணன் பொய்யனாக இருப்பதால் பாணர் யாவரும் பொய்யராகவே எமக்குத் தோன்றுகிறார்கள் என்று கூறி வாயில் மறுத்தாள்.

(வாயில் மறுத்தல் – என்பது அகத்துறைகளுள் ஒன்று தலைவன் பரத்தையரிடம் சென்றதால் மனம் வாடி அவன் தவறை அவனுக்கு உணர்த்துவதாக அவனை தம் வீட்டுக்கு வர அனுமதி மறுப்பர். இதற்கு வாயில் மறுத்தல் என்று பெயர்)


குருகுகொளக் குளித்த கெண்டை யயல
துருகெழு தாமரை வான்முகை வெரூஉம்
கழனியம் படப்பைக் காஞ்சி யூர
ஒருநின் பாணன் பொய்ய னாக
5 உள்ள பாண ரெல்லாம்
கள்வர் போல்வர்நீ யகன்றிசி னோர்க்கே.

(குறுந்தொகை -127.ஓரம்போகியார். மருதம்)
தோழி கூற்று (மருதம் - ஊடல்)


குருகிற்கு அஞ்சிய கெண்டை அக்குருகைப் போன்ற தோற்றத்தை மட்டும் உடையதும் கொடுமை யில்லாததுமாகிய தாமரை முகையையும் கண்டு அஞ்சினாற்போல, நீ விடுத்த பாணனைப் பொய்யனாகக் கண்டு வெறுத்த மகளிர் பொய்யரல்லாத பிற பாணரையும் வெறுத்தனரென்பது குறிப்பு. இப்பாடலைப் போலவே நாரையிடம் தப்பிய இறாமீன் தாழையின் மலரைக் கண்டு நாரையோ என்று அஞ்சுவதாக நற்றிணை (211) பாடலும் சுட்டிச் செல்கிறது.

பாடல்வழி அறியலாகும் கருத்து,

• கொக்கிடமிருந்து தப்பிய கெண்டை மீனின் செயல் பேதமை நிமித்தம் சிரிப்பைத் (நகை) தோற்றுவிப்பதாகவுள்ளது.

• கொக்கிடம் மீண்ட மீன் தாமரையைக் கண்டு கொக்கோ என்று அஞ்சுவது – தலைவனுக்காகப் பொய்சொல்லும் பாணரைக் கண்ட மகளிர் எல்லாப் பாணர்களும் பொய்யர்கள் என்று எண்ணுதல் ஆகியன ஒப்பு நோக்கி இன்புறத்தக்கன.

• மனித உணர்வுகளைப் போல வாய் பேச இயலாத உயிரினங்களின் (மீன்) மனவுணர்வையும் நகைச்சுவையுணர்வோடு சிந்தித்த சங்கப்புலவர்களின் உளவியல் அறிவு வியக்கத்தக்கதாகவுள்ளது.

சனி, 17 ஏப்ரல், 2010

இயற்கையின் காவலர்கள்.




சிறுவயதில் எங்கெங்கோ தேடியலைந்து சிறு சிறு செடிகளைப் பறித்து வந்து வீட்டில் தோட்டம் வைக்க முயற்சித்திருக்கிறேன்.

நட்டுவைத்த செடிகள் பூ பூக்கும் போது மனதெல்லாம் பூப்பூத்த அனுபவம்!

நான் வளர்த்த தோட்டத்தில் பறவைகள் வந்தமரும் போது நண்பர்கள் வீட்டுக்கு வந்த உற்சாகம்!

இன்றும் நினைத்துப்பார்த்தால் நெஞ்சில் நிற்கிறது.

தினமும் செடிகளுக்குத் தண்ணீர்விட்டு, அரும்போடும், மலரோடும், காயோடும், கனியோடும் பேசி வளர்ந்த நாட்கள் எண்ணி இன்புறத்தக்கன.

அப்படித்தான் சிறுவயதில் வேப்ப மரம் வளர்க்க வேண்டும் என்ற ஆவலில் எங்கிருந்தோ பறித்து வந்த வேப்பஞ்செடியை வீட்டில் வைத்து வளர்த்தேன்.

என்னோடு செடியும் என் உயரத்துக்கு வளர்ந்தது.

இரண்டு ஆண்டுகள் வெளியூரில் தங்க வேண்டிய சூழல்.

திரும்பி வந்து பார்த்தால் என்னை விட உயரமாக கிளைபரப்பி வளர்ந்து என்னைப் பார்த்து சிரித்தது வேப்பமரம். அதற்கு நேரவிருக்கும் ஆபத்தை உணராமல்!


ஆம் அந்த மரத்தோடு ஒருகிளையில் ஒட்டாக இன்னொரு தாவரமும் செடியாக வளர ஆரம்பித்திருந்தது. முதலில் வியந்த நான் எல்லோரிடமும் பெருமையாகச் சொன்னேன். கேட்டவர்களும், பார்த்தவர்களும், உறவினர்களும், அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களும் ஆளுக்கொரு யோசனை சொன்னார்கள்!

வேம்போட இப்படி வேற செடி சேர்ந்து வளர்ந்தா குடும்பத்துக்கு ஆகாது என்றார் ஒருவர்.

(மரத்துக்கும் குடும்பத்துக்கும் என்னடா சம்பந்தம் என்று நான் கூறியது யார் காதிலும் விழவில்லை)

வீட்டுக்கு முன்னாடி வேம்பு வளர்ந்தா அதன் வேர் வீட்டை இடித்துவிடும் என்றனர் சிலர்.

கிணற்றுத் தண்ணீர் வற்றிப் போகும் என்றனர் சிலர்.

கம்பளிப் பூச்சி வரும் என்றும், எறும்பு கூடுகட்டும் என்றும் ஆளுக்கொரு யோசனை சொல்ல முடிவாக மரம் வெட்டப்பட்டது.

உணர்வுபூர்வமாக எதையே இழந்த உணர்வு இன்றும் என்னுள் இருக்கிறது.

மரத்தைக் காக்க நான் பட்ட பாடு! அதை வளர்க்கக்கூட பட்டிருக்கமாட்டேன்!

இப்படி என்னைப் போல ஒவ்வொருவருக்கும் மரத்தோடு நெருங்கிய உறவு இருக்கத்தான் செய்யும். தமிழர் மரபைப் பொருத்தவரை மரங்கள் என்பவை தாவரங்களாக மட்டுமல்ல,

நம்பிக்கையின் வடிவங்களாக,

தெய்வங்களாக,

நோய் நீக்கும் மருந்துகளாக,

உணவுப் பொருள்களாக,

இன்னும் ஆயிரம் ஆயிரம் உறவுநிலைகளைக் கொண்டிருக்கின்றன.


ஒரு செடியை வளர்ப்பதும் – குழந்தையை வளர்ப்பதும் ஒன்று.


இரண்டும் எளிதான பணியல்ல என்பது இரண்டையும் வளர்த்தவர்கள் நன்கு அறிவார்கள்.

செடி வளரத் தேவையான கூறுகள் இருந்தால் மட்டும் போதாது. சில காலத்துக்கு அச்செடிக்குப் பாதுகாப்பும் வேண்டும்.

மரத்தையும், மக்கள் நம்பிக்கையையும் காத்த இயற்கையின் காவலர் ஒருவரைப் பற்றி இன்றைய இடுகை அமைகிறது.



இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய பாண்டியன் நன்மாறன்

என்னும் பாண்டிய வேந்தன்,ஒருகாலத்தில் பகைவர்மேற் போர்குறித்துச் சென்றான், அவனைக் காணப் போயிருந்த காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார், அவனுடைய போர்வன்மையை நன்குணர்ந்தவராதலால்,

“வேந்தே, கல்வியறிவுடையவராயினும், அறிவு குறைவுடையவராயினும் நின்னைப் புகழவே எண்ணுவர் அத்தகைய சிறப்புடையவன் நீ!

உனக்கு ஒன்று கூறுவேன் கேட்பாயாக..

போரில் வெற்றிபெறத்தக்கவன் நீயே!

(வென்ற மன்னர் தோற்ற நாட்டின் பொருள்களைக் கொள்வதும், நாட்டுக்கு தீவைத்துக் கொளுத்துவதும், காவல் முரசு, காவல் மரத்தையும் அழிப்பதுமே மரபு!)

நின் வீரர் பகைவர் நாட்டு வயல்களைக் கொள்ளை கொள்ளின் கொள்க!

ஊர்களைத் தீக்கிரை யாக்கினும் ஆக்குக!

நின் வேல் அப் பகைவரை அழிப்பினும் அழிக்க!

அவர் கடிமரங்களை (காவல் மரங்களை) மட்டும் தடியாமல் விடுக!

அவை நின் யானைகட்குக் கட்டுத் தறியாகும் வன்மை யுடையவல்ல” என்று பாடுகின்றார்.



வல்லா ராயினும் வல்லுந ராயினும்

புகழ்த லுற்றோர்க்கு மாயோ னன்ன

உரைசால் சிறப்பிற் புகழ்சான் மாற

நின்னொன்று கூறுவ துடையே னென்னெனின்

5.நீயே, பிறர்நாடு கொள்ளுங் காலை யவர்நாட்

டிறங்குகதிர்க் கழனிநின் னிளையருங் கவர்க

நனந்தலைப் பேரூ ரெரியு நக்க

மின்னுநிமிர்ந் தன்னநின் னொளிறிலங்கு நெடுவேல்

ஒன்னார்ச் செகுப்பினுஞ் செகுக்க வென்னதூஉம்

10.கடிமரந் தடித லோம்புநின்

நெடுதல் யானைக்குக் கந்தாற் றாவே. (57)



திணை: வஞ்சி. துறை: துணைவஞ்சி. அவனைக் காவிரிப்பூம்

பட்டினத்துக் காரிக்கண்ணனார் பாடியது.

பாடல் வழி அறியலாகும் கருத்துக்கள்.

* வென்ற மன்னன் தோற்ற நாட்டின் பொருள்களைக் கொள்வதும், நாட்டுக்கு தீவைப்பதும், காவல் மரம், காவல் முரசு ஆகியவற்றை அழிக்கும் புறவாழ்வியல் மரபு உணர்த்தப்படுகிறது.
* மன்னா மரபின்படி யாவும் செய்க! மரத்தை மட்டும் வெட்டாதே!
என்ற புலவரின் வேண்டுகோள் இயற்கையின் மீதும் மக்கள் மரத்தின் மீது கொண்ட நம்பிக்கையின் மீதும் புலவர் கொண்ட பற்றுதலை உரைப்பதாகவுள்ளது.

*இந்தப் புலவர் இயற்கையின் காவலராக, ( காதலராக ) எனக்குத் தோன்றுகிறார்.
இப்படி எத்தனை எத்தனையோ கண்ணுக்குத் தெரியாத இயற்கைக் காவலர்களால் தான் நம்மைச்சுற்றி இன்னும் மரங்கள் இருக்கின்றன.