வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வெள்ளி, 1 ஜனவரி, 2010

வலையுலகப் படைப்பாளிகள்! (தினமணி)






இன்றைய தினமணி நாளிதளில் வலையுலகம் பற்றி வந்த கட்டுரையில்,

”தமிழ் இலக்கியங்களையும் மரபுவழி தமிழ் ஆராய்ச்சிகளையும் அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் வகையில் சில வலைப்பூக்கள் செயல்படுகின்றன. மு.இளங்கோவன், இரா.குணசீலன், கல்பனா சேக்கிழார், எம்.ஏ.சுசீலா, நா.கணேசன், சுப்ரபாரதி மணியன், அழகியசிங்கர் போன்றவர்கள் வலைப்பூக்களில் இலக்கியப்பணி செய்கின்றனர். கவிதைகள், இலக்கியக் கூடல்கள், புத்தக வெளியீட்டு விழாக்கள் போன்றவை இவர்களின் வலைப்பூக்களை ஆக்கிரமித்திருக்கின்றன.“

என்று எனது வலைப்பதிவையும் குறிப்பிட்டுள்ளார்கள் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்..

இயல், இசை, நாடகம் என முத்தமிழாக இருந்த தமிழ் இணையத்தமிழ் என்ற நான்காம் தமிழாக வளர்ந்துவருகிறது. எதிர்காலத்தமிழருக்கான சான்றாதரங்கள் யாவும் கொண்டதாக இந்த இணையவுலகம் வளர்ந்து வருகிறது. கருத்துச்சுதந்திரம் நிறைந்த இந்த இணையவுலகில் பலதுறை சார்ந்து எழுதுவோர் இருக்கிறார்கள்..

மொழி, இலக்கியம் சார்ந்து எழுதுவோர் குறைவாகவே உள்ளனர். இந்நிலை மாறவேண்டும் தமிழ்த்துறைசார்ந்தோரும் தம் கருத்துக்களை வலைப்பதிவுகளில் வெளியிடவேண்டும்.
தமி்ழ்த்துறை சார்ந்தோர் பலர் வலைப்பதிவின் கருத்துக்களைப் படிப்வர்களாக மட்டுமே உள்ளனர். அவர்களும் வலைப்பதிவு வாயிலாகத் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்தல் தேவையான ஒன்றாகவுள்ளது.


கட்டுரை இதோ..

வலையுலகப் படைப்பாளிகள்!
எம். மணிகண்டன்
First Published : 01 Jan 2010 12:12:00 AM IST

எழுத்துலகில் இது தலைமுறை மாற்றத்துக்கான தருணம். பத்திரிகைகளுக்கு படைப்புகளை அனுப்பிவிட்டு, அது பிரசுமாகும் நாளுக்காகக் காத்திருக்கும் தலைமுறையின் காலம் கடந்துபோய்க் கொண்டிருக்கிறது. பெரிய பத்திரிகையில் படைப்புகள் பிரசுரமாகின்றன என்பது படைப்பாளிக்குப் பெருமைதான். ஆனால், அது நடக்காவிட்டால், அந்தப் படைப்புகள் குப்பைக் கூடைக்குத்தான் போக வேண்டும் என்று இன்றையத் தலைமுறை எண்ணிக் கொண்டிருக்கவில்லை.
இந்தக்கால இளைஞர்கள் எதை வேண்டுமானாலும் எழுதுகிறார்கள், சொல்ல வந்ததைத் தைரியமாகச் சொல்கிறார்கள், பிறரிடம் கருத்துக் கேட்கிறார்கள், விரிவான வாசகர் வட்டத்தையும் உருவாக்கிக் கொள்கிறார்கள். கட்டற்ற விடுதலை உணர்வு அவர்களிடமிருந்து வெளிப்படுகிறது. இவற்றையெல்லாம் சாத்தியமாக்க அவர்களுக்கு உதவியிருப்பது இணையம்.
உலகளாவிய வலை, மின்னஞ்சல் போன்ற நிலைகளைத் தாண்டி வேறொரு பரந்த வெளியில் இணையம் பயணிக்கத் தொடங்கி சில ஆண்டுகளாகிவிட்டன. இந்தத் தலைமுறையினர் ஃபேஸ்புக்கையும், ட்விட்டரையும் தெரியாதவர்களைப் படிப்பறிவில்லாதவர்கள் என சீண்டுகிறார்கள். வலைப்பூ இல்லாவிட்டால் முகவரியில்லாதவர்களைப் போலப் பார்க்கிறார்கள்.
தமிழைப் பொறுத்தவரை, வலைப்பூக்கள்தான் கருத்துகளைச் சொல்லும், படைப்புகளை வெளியிடும் தளங்களாக இருக்கின்றன. இதைப் படைப்பவர்களைப் பதிவர்கள் என்கிறார்கள். பொறியியல் வல்லுநர்கள் எழுதும் கவிதைகளையும், குடும்பத் தலைவிகள் செய்யும் நையாண்டிகளையும், இலக்கியவாதிகள் எழுதும் சினிமா விமர்சனங்களையும் வலைப்பூக்கள் நமக்கு அறிமுகம் செய்கின்றன. ஒவ்வொருவரும் தனது துறை தாண்டிய படைப்புகளை இங்கு வெளியிட முடிகிறது. யாரும் முழுமையாக அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை என்பதால், துணிச்சலான, வித்தியாசமான, பலதரப்பட்ட கருத்துகள் வெளியிடப்படுகின்றன. அந்த வகையில் எந்தக் கொள்கைக்குள்ளும் முடங்கிப் போகாத ஊடகங்களாகவே இந்த வலைப்பூக்கள் கவனிக்கப்படுகின்றன. அரசியல்வாதிகள், சினிமாக்காரர்கள், வேறு வகையில் புகழ்பெற்றவர்கள் எல்லாம் வலைப்பூக்களை மேய்ந்தால், தங்களைப் பற்றிய உண்மையான விமர்சனத்தைத் தெரிந்து கொள்ள முடியும் என்றே சொல்லலாம்.
நாடு, இனம், மதங்களைக் கடந்த நட்பு வட்டத்தை உருவாக்கிக் கொள்வதற்கும் வலைப்பூக்கள் வாய்ப்புகளை வழங்கியிருக்கின்றன. வாசகர் வட்டங்களைப் போல பதிவர் வட்டங்களும் கூட்டமைப்புகளும் உருவாக்கப்பட்டிருக்கின்றன. பதிவர்கள் அவ்வப்போது கூட்டங்கள் நடத்தி தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்வதுடன் அவற்றை வலைப்பூக்களில் வெளியிடவும் செய்கின்றனர்.
நர்சிம், பரிசல்காரன், வால்பையன், கேபிள் சங்கர், பழமைபேசி, பைத்தியக்காரன், அனுஜன்யா, அபி அப்பா, கார்க்கி, அகல் விளக்கு, க.பாலாசி, நசரேயன், நேசமித்திரன், அமிர்தவர்ஷினி அம்மா, சோம்பேறி என வித்தியாசமான புனைப்பெயர்களுடன் பதிவிடும் வலைப்பதிவர்கள், நிறைய எழுதுவதுடன் பரந்து விரிந்த நட்பு வளையத்தையும் கொண்டிருக்கிறார்கள். நேரடியாக நட்புக்கொள்வதில் இருக்கும் சில சங்கடங்கள் இல்லை என்பதை இந்த நட்பு வட்டத்தின் சிறப்பாகக் கருதலாம்.
வலைப்பூக்களில் பெண்களின் ஆதிக்கம் குறிப்பிடத் தகுந்த அளவுக்கு இருப்பது வரவேற்கத் தகுந்த ஒன்று. வலைப் பதிவிடும் பெண்கள் பெரும்பாலும் கவிதை எழுதுகின்றனர் அல்லது சமையல் குறிப்புகளை வழங்குகின்றனர். வாழ்க்கை அனுபவங்கள், குடும்பப் பிரச்னைகள், அம்மாக்களுக்கான ஆலோசனைகள், திரைப்பட, தொலைக்காட்சி விமர்சனங்கள் என இவர்களது எழுத்து வட்டம் கொஞ்சம் அடக்கமானதாகவும் பொறுப்புணர்வுடன் கூடியதாகவும் இருக்கிறது. சில பெண் படைப்பாளிகள் அரசியல், சமூகச் சிந்தனைகளையும் விதைக்கின்றனர். ஃபஹீமாஜஹான், நளாயினி, புதியமாதவி, தமயந்தி, சாந்தி லட்சுமணன், கலகலப்ரியா, ராமலக்ஷ்மி, ரம்யா, கிருபாநந்தினி, மதுமிதா, தாரணி பிரியா, பெரியார் தமிழச்சி, மாதங்கி, விக்னேஷ்வரி, மழை ஷ்ரேயா போன்ற நூற்றுக்கணக்கானோர் ஆக்கப்பூர்வமான, அபூர்வமான படைப்புகளை பதிவிடுகின்றனர். ÷தமிழ் இலக்கியங்களையும் மரபுவழி தமிழ் ஆராய்ச்சிகளையும் அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் வகையில் சில வலைப்பூக்கள் செயல்படுகின்றன. மு.இளங்கோவன், இரா.குணசீலன், கல்பனா சேக்கிழார், எம்.ஏ.சுசீலா, நா.கணேசன், சுப்ரபாரதி மணியன், அழகியசிங்கர் போன்றவர்கள் வலைப்பூக்களில் இலக்கியப்பணி செய்கின்றனர். கவிதைகள், இலக்கியக் கூடல்கள், புத்தக வெளியீட்டு விழாக்கள் போன்றவை இவர்களின் வலைப்பூக்களை ஆக்கிரமித்திருக்கின்றன.இன்னும் சிலர், தொழில்நுட்பம் தொடர்பான தகவல்களையும் உதவிகளையும் தமிழில் தருகின்றனர். இதுபோன்ற முயற்சிக்கு வலைப் பதிவர்கள் மத்தியில் பெரும் ஆதரவு இருக்கிறது. இவற்றுக்கிடையே, ஜெயமோகன், பாமரன், மனுஷ்யபுத்திரன், எஸ். ராமகிருஷ்ணன், மாலன், ஞாநி, சாரு நிவேதிதா போன்ற பிரபலங்கள் பலரும் வலைப்பூக்கள் வழியாக வாசகர்களைச் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஒட்டுமொத்தமாகக் கூறுவதென்றால், வலைப்பூக்கள், ஊடகங்களின் முழுச் சுதந்திரம் கொண்ட நவீனப் பரிமாணங்களாக உருவெடுத்திருக்கின்றன. அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒபாமாவை வெற்றிபெறச் செய்ததில் வலைப் பதிவர்களுக்கு பெரும்பங்கு உண்டு. வெளிநாடுகளில் சந்தைக்கு வரும் தயாரிப்புகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வலைப்பூக்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றிலிருந்து வலைப்பூக்களின் வீச்சை அறிந்து கொள்ளமுடிகிறது.
÷இன்னும் சில காலம் போனால், மரபுவழி ஊடகங்களுக்கு இணையாக வலைப்பூக்கள் மாதிரியான இணையவழி ஊடகங்களுக்கும் செல்வாக்குக் கிடைத்துவிடும். இதை மரபுவழி ஊடகங்களுக்கான அச்சுறுத்தலாகக் கருத முடியாது. ஆயினும், ஊடகங்களின் பரிமாணம் மாறிக் கொண்டிருப்பதைப் புரிந்து, வலைப்பதிவர்களுடன் சமநிலைப்படுத்திக்கொள்ள மரபுவழி ஊடகங்களும் தயாராகிக் கொண்டிருக்கின்றன.

தழைக்குமா தமிழ்…?




பிறமொழியின் துணையின்றி தனித்து இயங்கவல்லது தமிழ்மொழி. ஆனால் தமிழன் வாயில் தமிழ்படும் பாடு கொஞ்சமல்ல. பிறமொழிசார்ந்தோர் தமிழ்மொழியைபேசும் அளவுக்குக் கூட தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழன் தமிழ் பேசுவதில்லை என்பது உண்மை. ஆங்கிலத்தோடு தமிழைக் கலந்து பேசுவதில் தமிழனுக்கு அளவுகடந்த ஆர்வம். பிறமொழிக்கலப்பில்லா தமிழ் பேசுவோரைக் காணுதல் அரிதாகவே உள்ளது.

தமிழா நீ பேசுவது தமிழா….

என்று இன்றைய தமிழன் பேசும் தமிழின் நிலையை தமிழன் சிந்திக்கும் வகையில் சொன்னார் உணர்ச்சிப் பாவலர். காசியானந்தன் அவர்கள்..

கவிஞர் வேழவேந்தன் அவர்களைத் தமிழுலகம் நன்கறியும். அவர்தம் கவிதையில் தமிழன் பேசும் தமிழின் நிலையை அழகாக எடுத்தியம்பி பிறமொழியின் துணை எதற்கு..?
அழகுத்தமிழில் பேசலாமே என்ற சிந்தனையைத் தூண்டியுள்ளார்..
கவிதை இதோ…


“டாடி என்றே அழைக்காதீர் இனிமை தோய
தண்டமிழில் அப்பாவென்றே அழைத்திடுங்கள்

மீடியா என மொழிய வேண்டா ; நல்ல
மென்றமிழில் ஊடகங்கள் எனக்கூறுங்கள்

மூடில்லை எனப் பேசல் வேண்டா மூளை
முனைப்பில்லை எனத் தமிழில் பேசிடுங்கள்

பாடி என்றே சொல்லாதீர்! அழகாய் நந்தம்
பழந்தமிழில் உடலமென்றே கூறிடுங்கள்

சூப்பர் என்றே ஏன் கூறல் வேண்டும்? சொந்தச்
சுவைத்தமிழில் மிக நன்றே என்றால் என்ன?

பேப்பர் என்றே ஏன் மொழிதல் வேண்டும்?
பேசும் பேச்சினிலே“தாள்“ என்றால் தவறா? நாமும்

சாப்ட் என்றே ஏன் பேசல் வேண்டும்? நந்தம்
தாய்மொழியில் மென்மை என்றால் புரிந்திடாதா?

சேப்டி இல்லை எனப்புலம்பும் நீங்கள் தூய
தென்தமிழில் காப்பில்லை என்றால் என்ன?

மம்மி என்றே பெற்றவளைப் பிணமாக்காமல்
மதுத்தமிழில் அம்மா என்றழைத்தால் தப்பா?

டம்மி என்று கூறுவதை மாற்றி நந்தம்
தண்டமிழில் போலி எனச் சொல்லக்கூடாதா?

செம்மொழியாய் நம்மொழியை அறிவித்தென்ன?
சேய்த்தமிழர் தாய்மொழியை மிதித்துவிட்டுத்

தம்மொழியாய்த் தேம்ஸ் மொழியைத் தலையில் வைத்தால்
சாகாமல் தீந்தமிழ் வாழ்வதெங்கே?

(கவிஞர்.வேழவேந்தன்)

இன்றைய நிலையில் எல்லா அறிவியல்த்துறைகளையும் தமிழ்வழி கற்கும் அளவுக்கு தன்னிறைவு பெற்றுள்ளோம். மருத்துவக்கல்வி, கணினி, அறிவியல் என எந்தத்துறையாக இருந்தாலும் அந்தத்துறையைத் தமிழில் படிக்க இயலும். அந்த அளவுக்கு கலைச்சொற்கள் உருவாக்கப்பட்டுள்ளன, உருவாக்கப்பட்ட வருகின்றன.
சான்றாக தமிழ் இணையப்பல்கலைக்கழகம் என்ற இணையதளத்தில் பல்வேறு துறைகளுக்கான கலைச்சொற்களை இலட்சக்கணக்கில் தொகுத்தளித்துள்ளனர். தமிழன் சிந்திக்கவேண்டிய நேரமிது.

வியாழன், 31 டிசம்பர், 2009

வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்),

சுட்டி ஒருவர் பெயர்கொள்ளப்பெறாமல் தலைவன், தலைவி செவிலி, நற்றாய் என்று சுட்டப்பெற்ற சங்ககால அகவாழ்வியலின் பதிவுகள் பழந்தமிழரின் வாழ்வியல் இலக்கணங்களாக இன்று நமக்குக் கிடைத்துள்ளன.

அகவாழ்க்கையை அகத்திணைகள் உணர்த்துகின்றன.
அகவாழ்க்கை களவு(காதல்) கற்பு (திருமணத்துக்கு பின்)
என இரு கூறுகளைக் கொண்டது.

குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை என்பன அன்பின் ஐந்திணைகளாகவும் கைக்கிளை பெருந்திணை என்னும் திணைகளும் அகத்திணைகளாகவே கொள்ளப்படும். கைக்கிளைக்கும் பெருந்திணைக்கும் நிலங்கள் கிடையாது.
குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் ஆகிய திணைகளுக்கு மட்டுமே நிலம் உண்டு பாலைத் திணை முல்லையும் குறிஞ்சியும் தன்னிலையில் திரிந்த் நிலையாகும்.

பண்டைக் காலத்தில் கிடைத்த சங்கப்பாடல்கள் எந்த விதமான வகைபாடும் இன்றியே கிடைத்தன.

சங்கப்பாடல்கள் பாடபட்ட காலம் வேறு தொகுக்கப்பட்ட காலம் வேறு.
தொகுக்கப்பட்ட போது முழுமையான நெடும்பாடல்களைத் தொகுத்து பத்துப்பாட்டாக்கினர். எஞ்சிய பாடல்களை அகம், புறம் என்னும் பெரும்பாகுபாட்டுக்குள் எட்டுத்தொகையாக வகுத்தனர். அகப்பாடல்களில் ” முதல் - கரு - உரி என்னும் இலக்கண மரபுகளைக்கொண்டு திணைப்பாகுபாடு செய்தனர்.

முதல் என்பது நிலம் - பொழுது என்பதன் இயல்பு கூறுவதாகும்

கரு
என்பது அந்ததந்த நிலத்துக்கான தெய்வம், உணவு, பறை, யாழ், விலங்கு, பறவை போன்ற கூறுகளைக் கூறுவது

உரிப்பொருள் என்பது அந்த நிலத்துக்கு உரிய மாந்தர்களின் மனதில் தோன்றும் உணர்வுகளை அடிப்படையாகக் கொண்டு
கூடல்
ஊடல்
பிரிதல்
இருத்தல்
இரங்கல் என்ற வகைப்பாடு பெறுவதாகும்.இதனை,






இந்த அட்டவணைகள் விளக்கும்.



குறிஞ்சியின் கருப்பொருட்கள்:


கடவுள்: முருகக்கடவுள்
மக்கள்: பொருப்பன், வெற்பன், சிலம்பன், குறத்தி, குறவன், கொடிச்சி, வெற்பன், வேம்பன், பொருப்பன்,கானவர்
புள்: கிளி, மயில்
விலங்கு: புலி, கரடி, யானை
ஊர்: சிறுகுடி
நீர்: அருவி நீர், சுனை நீர்
பூ: வேங்கை, குறிஞ்சி, காந்தள், குவளை
மரம்: ஆரம் (சந்தனம்), தேக்கு, அகில்ம் அசோகம், நாகம், மூங்கில்
உணவு: மலைநெல், மூங்கில் அரிசி, தினை
பறை: தொண்டகப்பறை
யாழ்: குறிஞ்சி யாழ்
பண்: குறிஞ்சிப்பண்
தொழில்: வெறியாடல், மலைநெல் விதைத்தல், தினைப்புனம் காத்தல் தேன் அழித்தல், நெல் குற்றுதல், கிழங்கு எடுத்தல், அருவி மற்றும் சுனை நீர் ஆடல்
குறிஞ்சித்திணைக்கு உரித்தான துறையாக ஒரு எடுத்து காட்டு: "பகற்குறிக்கண் செறிப்பு அறிவுறீத் தோழி வரைவு கடாயது"




-oOo-



முல்லையின் கருப்பொருட்கள்:


கடவுள்: மாயோன் (திருமால்)
மக்கள்: குறும்பொறை நாடன், தோன்றல், மனைவி, கிழத்தி, இடையர், இடைச்சியர், ஆயர், ஆய்ச்சியர், பொதுவர், பொதுவியர், கோவலர்
புள்: காட்டுக்கோழி
விலங்கு: மான், முயல்
ஊர்: பாடி, சேரி, பள்ளி
நீர்: குறுஞ்சுனை நீர், கான்யாற்று நீர் (காட்டாறு)
பூ: குல்லை, முல்லை, பிடவம், தோன்றிப்பூ
மரம்: கொன்றை, காயா, குருந்தம்
உணவு: வரகு, சாமை, முதிரை
பறை: ஏறுகோட்பறை
யாழ்: முல்லை யாழ்
பண்: முல்லைப்பண்
தொழில்: சாமை விதைத்தல், வரகு விதைத்தல், அவற்றின் களை கட்டல் மற்றும் அரிதல், கடா விடுதல், கொன்றை குழல் ஊதல், ஆவினம் மேய்த்தல், கொல்லேறு தழுவல், குரவை கூத்தாடல், கான்யற்று நீராடல்.




-oOo-

மருதத்தின் கருப்பொருட்கள்:

கடவுள்: வேந்தன் (இந்திரன்)
மக்கள்: ஊரன், மகிழ்நன்,கிழத்தி, மனைவி, உழவர், உழத்தியர், கடையர், கடைசியர்
புள்: வண்டானம், மகன்றில், நாரை, அன்னம், பெருநாரை, கம்புள், குருகு, தாரா.
விலங்கு: எருமை, நீர்நாய்
ஊர்: பேரூர், மூதூர்
நீர்:ஆற்று நீர், கிணற்று நீர்
பூ: தாமரை, கழுனீர்
மரம்: காஞ்சி, வஞ்சி, மருதம்
உணவு: செந்நெல் அரிசி, வெண்ணெல் அரிசி
பறை: நெல்லரிகிணை, மணமுழவு
யாழ்: மருத யாழ்
பண்: மருதப்பண்
தொழில்: விழாச்செய்தல், வயற்களைகட்டல், நெல் அரிதல், கடாவிடுதல், குளம் குடைதல், புது நீராடல்




-oOo-


நெய்தலின் கருப்பொருட்கள்:


கடவுள்: வருணன்
மக்கள்: சேர்ப்பன், புலம்பன், பரத்தி, நுழைச்சி, கொண்கண், துறைவன், நுளையர், நுளைச்சியர், பரதர், பரத்தியர், அளவர், அளத்தியர்
புள்: கடற்காகம், அன்னம், அன்றில்
விலங்கு: சுறா, உமண் பகடு
ஊர்: பாக்கம், பட்டினம்
நீர்:உவர்நீர் கேணி, மணற்கேணி
பூ: நெய்தல், தாழை, முண்டகம், அடம்பம்
மரம்: கண்டல், புன்னை, ஞாழல்
உணவு: மீனும் உப்பும் விற்று பெற்றவை
பறை: மீன்கோட்பறை, நாவாய் பம்பை
யாழ்: விளரி யாழ்
பண்: செவ்வ்வழிப்பண்
தொழில்: மீன்பிடித்தல், உப்பு விளைத்தல், மீன் உணக்கல், பறவை ஓட்டுதல், கடலாடுதல்




-oOo-


பாலையின் கருப்பொருட்கள்:


கடவுள்: கொற்றவை (துர்க்கை)
மக்கள்: விடலை, காளை, மீளி, எயினர், எயிற்றியர், மறவர், மறத்தியர்
புள்: புறா, பருந்து, எருவை, கழுகு
விலங்கு: செந்நாயும் வலிமை அழிந்த யானை, புலி
ஊர்: குறும்பு
நீர்: நீரில்லாகுழி, நீரில்லாகிணறு
பூ: குரா, மரா, பாதிரி
மரம்: உழிஞை, பாலை, ஓமை, இருப்பை
உணவு: வழிப்பறி பொருள், பதியில் கவர்ந்த பொருள்
பறை: துடி
யாழ்: பாலை யாழ்
பண்: பாலைப்பண்
தொழில்: போர் செய்தல், வழிப்பறி




இவ்வாறு அகவாழ்வியலில் திணைப்பாகுபாடு செய்து வாழ்ந்து வந்தனர்.
இந்த அடையாளங்கள் வாயிலாக ஒவ்வொரு தமிழனும் இந்த நிலம் சார்ந்தவன் என்று அடையாளம் காணப்பட்டான். இவையெல்லாம் தமிழனின் வாழ்வியல் அடையாளங்கள்..

இன்றைய தமிழனுக்கு தமிழன் என்பதற்கான அடையாளங்கள் இப்படி ஏதாவது காணமுடிகிறதா..?

(படங்கள் யாவும் ஐந்தாம் உலகத்தமிழ் மாநாட்டுமலரிலிருந்து எடுக்கப்பட்டவை.நன்றி!)
-oOo- -oOo-

-oOo-

புதன், 30 டிசம்பர், 2009

வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்)

எழுத்துக்கும், சொல்லுக்கும் இலக்கணம் கூறும் மொழிகள் உலகில் பல இருக்கின்றன. வாழ்க்கைக்கு இலக்கணம் கூறிய பெருமை கொண்ட மொழி நம் தமிழ் மொழியாகும்.

சங்கப்பாடல்கள் அகம், புறம் என்னும் பாகுபாடுடையன. அகத்தில் காதலும், புறத்தில் வீரமும் சொல்லப்பட்டுள்ளது.

அகம் என்பது… (களவு, கற்பு)


சுட்டி ஒருவர் பெயர்கொள்ளப்பெறாத மக்களின் அகவாழ்வியலைப்பற்றியது.
கைக்கிளை, குறிஞ்சி,முல்லை, மருதம்,நெய்தல், பாலை,பெருந்திணை என்ற ஏழும் அகத்திணைகளாகும்..

இயற்கைப்புணர்ச்சி, இடந்தலைப்பாடு, பாங்கர்கூட்டம், பாங்கியர்கூட்டம், அறத்தொடுநிற்றல், வரைவுகடாவுதல், நொதுமல்வரைவு போன்ற பலவும அகத்துறைகளாகும்..

அகத்திணைகள் ஏழுக்குமான புறத்திணைகள் ஏழை வகுத்தனர் நம்முன்னோர்.பின் புறத்திணைகள் ஏழு என்பது பன்னிரண்டாக வளர்ந்தது.

புறம் என்பது வீரம் கொடை சார்ந்தது.

வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, உழிஞை, நொச்சி. தும்பை, வாகை, பாடாண், பொதுவியல்,கைக்கிளை,பெருந்திணை ஆகியன புறத்திணைகளாகும்.
இயன்மொழி,பாணாற்றுப்படை,செவியறிவுறுஉ போன்றன புறத்துறைகளாகும்.


புறத்துறைகள்.
1.வெட்சி. (குறிஞ்சி என்னும் அகத்துறைக்கு புறனானது)

இரு மன்னர்கள் போர் புரியும் முன்னர் பறை அடித்து அறிவிப்பு செய்தனர்.
நாங்கள் இவ்விடத்தில் போர் தொடங்கவுள்ளோம் அதனால் ஆவும், ஆவைப்போன்ற பார்ப்பனர்களும், பெண்களும், நோய்வாய்ப்பட்டவர்களும், முதியவர்களும்,குழந்தைகளும், இவ்விடம் விட்டு நீங்கிச்செல்லுங்கள் என்று அவ்வறிவிப்பு இருக்கும்.இந்த அறிவிப்பை ஆநிரைகள் அறியாது ஆதலாலும், ஆநிரைகள் செல்வமாகக் கருதப்பட்டதாலும் வீரர்கள் பகைநாட்டு ஆநிரைகளைக் கவர்ந்துவருவர். அப்போது அவர்கள் வெட்சி பூ அணிந்திருப்பர் அதனால் இத்திணை வெட்சியானது.




2.கரந்தை.


நிரை கவர்ந்து சென்ற வெட்சி வீரர்களிடமிருந்து தம் நிரைகளை மீட்பது கரந்தையாகும். ஆநிரை மீட்கப் போர்புரியும் வீரர்கள் கரந்தைப் பூ அணிந்திருப்பர் அதனால் இத்திணை கரந்தையானது.



3.வஞ்சி.(முல்லை என்னும் அகத்திணைக்குப் புறனானது)


பகை நாட்டை விரும்பிப் போர் தொடுத்தல் வஞ்சியாகும். இப்போரின் முதன்மை நோக்கம் பகைநாட்டு மன்னனின் மண்ணைக் கவர்தலாகும்.


4.உழிஞை. (மருதம் என்னும் அகத்திணைக்குப் புறனானது)


பகைவருடைய மதிலை வளைத்தல் உழிஞையாகும். இவ்வீரர்கள் உழிஞைப் பூச்சூடுவர்.



5.நொச்சி.

உழிஞை வீரர்கள் மதிலைக் கைப்பற்றாதவகையில் மதிலைக் காத்தல் நொச்சியாகும். இவ்வீரர்கள் நொச்சிப்பூச்சூடியிருப்பர்.





6.தும்பை (நெய்தல் என்னும் அகத்திணைக்குப் புறனானது)

இரு மன்னர்களும் போர்க்களத்தில் எதிர் எதிரே நின்று போர்செய்தல் தும்பையாகும். இருநாட்டு வீரர்களும் தும்பைப் பூச்சூடியிருப்பர்.



7.வாகை (பாலை என்னும் அகத்திணைக்குப் புறனானது)

வெற்றிபெற்ற மன்னன் தன் வெற்றியைக் கொண்டாடுதல் வாகையாகும். இங்கு வாகைப்பூச் சூடப்படும்.



செவ்வாய், 29 டிசம்பர், 2009

மூங்கில் இலைமேலே........



கம்பர் வாழ்வில் நடந்ததாகக் கூறப்படும் செவி மரபுக்கதை,

ஒரு முறை கம்பர் வயல்வெளிப்பக்கம் சென்றாறாம். அப்போது உழவர்கள் உழவுத்தொழில் செய்துவந்தார்களாம். அப்போது ஒரு உழவர் மாலைவேளையில் ஏற்றப்பாட்டு பாடினாராம்..

மூங்கில் இலைமேலே........
தூங்கும் பனிநீரே....

என்று இவ்வாறு பாடிய உழவர் அன்றைய பணியை நிறைவு செய்து பாடலை முழுதும் பாடமலேயே வீட்டுக்குச் சென்றுவிட்டாராம்.

பாடலைக் கேட்டு வியந்த கம்பர் பாடலை முழுவதும் கேட்க இயலவில்லையே என்று வருந்தினாராம்...

அந்தப்பாடலின் அடுத்த அடிகளைக் கேட்டு மகிழவேண்டும் என்று எண்ணிய கம்பர் அடுத்த நாளும் அங்கு வந்து உழவனின் பாடலுக்காகக் காத்திருந்தாராம்..

மறுநாள் வந்த உழவன் பாடினானாம்..

தூங்கும் பனிநீரை
வாங்கும் கதிரோனே
!

என்று வியந்து போனாராம் கம்பர்..

இந்தக் கதையில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்று சிந்திப்பதை விட “கவிச்சக்கரவர்த்தி கம்பரே வியக்கும் வகையில் இந்த வாய்மொழிப்பாடல்களின் சுவை இருக்கிறது என்ற கருத்தை உணர்ந்து கொள்ளுதல் நயம் பயப்பதாக அமையும்..

ஏட்டில் எழுதப்பட்ட இலக்கியங்கள் யாவும் இதுபோன்ற ஏட்டிலில்லா இலக்கியங்களின் வழிவந்தவையே..