வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வியாழன், 30 ஜூலை, 2009

தமிழர் மரபியல் ( பாலியல் நோக்கு)



கால வெள்ளத்தில் தமிழர் மரபுகள் பல தவறான புரிதல்களுக்குட்பட்டு வருவது வருத்தமளிப்பதாகவே உள்ளது.
• பழந்தமிழர் மரபுகளின் உயர்வுகளை எண்ணிப் பெருமிதம் கொள்ளுதல்.
• பழந்தமிழர் மரபுகளில் சில காலத்துக்கு ஏற்பில்லாத நிலை கண்டு வருந்துதல்.
என்னும் இரு கருத்தாக்கங்கள் நம்மிடையே உள்ளன.
சங்க இலக்கியம், தொல்காப்பியம் ஆகிய நூல்களை முழுமையாகவும், ஆழமாகவும் கற்ற யாரும் தமிழர் மரபுகளைக் குறைத்து மதிப்பிட மாட்டார்கள்.

சங்க கால மக்களின் வாழ்வியல் பதிவுகளாகவே சங்க இலக்கியங்கள் விளங்குகின்றன. இவ்விலக்கியங்கள் வாயிலாகத் தமிழர்தம் மரபுகளைக் காண விழைவோர், சரியான கண்ணோட்டத்தில் காண்பது வேண்டும். தவறான புரிதல்களால்தான் தமிழர் மரபுகள் பிழைபட உணர்தலும், குறைத்து மதிப்பிடும் நிலையும் ஏற்படுகிறது.

இன்றைய சூழலில் வலைப்பதிவுகள், தமிழ்மொழியை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் வாயில்களுள் முதன்மையானவையாக விளங்குகின்றன.
வலைப்பதிவுகள் வழியே,
தமிழர் மரபு குறித்த தேடல்,
தமிழர் மரபு குறித்த புரிதல்,
தமிழர் மரபு குறித்த மதிப்பீடுகள்
ஆகியவற்றைக் காணும் போது மிகவும் மகிழ்வாக உள்ளது.
சில தவறான புரிதல்களைக் காணும்போது மனம் சிறிது வருத்தம் கொள்கிறது.

தமிழர் மரபில் பாலியல் நோக்கு.

தமிழர் மரபில் பாலியல் செய்திகள் குறித்த சிந்தனைகள் காலந்தோறும் விவாதிக்கப்பட்டுதான் வந்திருக்கின்றன.

“ பாதாதி கேச வருணணை
கேசாதி பாத வருணனை“
(பாதம் முதல் தலை வரை வருணணை
தலைமுதல் பாதம் வரை வருணனை)

என்பது இலக்கியத்தில் இயல்பாக வருவது. ஒரு பெண்ணை உச்சி முதல் உள்ளங்கால் வரை வருணித்தல் என்பது அக்காலத்தில் தவறாகப்படவில்லை. மாறாக ஒரு பெண்ணே தன் உறுப்புகளை வருணிப்பது போன்ற பாடல்களும் தமிழில் அதிகம் உள்ளன.

பக்தி இலக்கியங்கள், இறைவியரைக் கூட விட்டுவைக்கவில்லை.

இறைவியர் என்றால் பாதாதி கேச வருணனையும்,
மானிடகுலப் பெண்கள் என்றால் கேசாதி பாத வருணனையும் இடம் பெறுவது அக்கால மரபாகவே இருந்திருக்கிறது.

இன்று வந்த நாம் பழந்தமிழ் இலக்கியங்கள்......
இப்படி வருணனையைக் கொண்டு விளங்குகின்றனவே....
இது சரியா...?
இது தவறா...?

என்றெல்லாம் கேட்பதில் எவ்விதமான பயனுமில்லை.

இவ்வருணனைகள் இன்று நமக்குத் தவறாகப்படலாம்..
இன்று நமக்குத் தவறாகப்படுவது நாளை வரும் தலைமுறையினருக்கு மிகவும் சரியாகப் படலாம்.
அதனால் இம்மரபுகளைச் சரியாகப் புரிந்து கொள்ள அக்கால மக்களின் வாழ்வியல் குறித்த சரியான கண்ணோட்டம் நம் தேவையாகிறது.


ஒரு சின்ன நகைச்சுவை.




இந்த நகைச்சுவையில் அந்த சிறுவன் தன் தந்தையின் நோக்கத்தைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. தவறாக மதிப்பிட்டுக் கொள்கிறான்.

பழந்தமிழர் என்பவர் நம் தாத்தாக்களுக்கெல்லாம் தாத்தா...! அவர்களின் தோளில் ஏறித்தான் நாம் அவர்களின் உலகைப் பார்க்கிறோம். அப்படியிருக்கும் நாம் ....

தாத்தா நான் உன்னைவிட உயராமாக இருக்கிறேன்...

நீ என்னைவிட குள்ளமாக இருக்கிறாய் என்றால் அது அறிவுடைமையாகுமா...?

அது போலத் தான் நம் முன்னோர் மரபுகளைக் குறைத்து மதிப்பிடுவதும் அமையும்.
தமிழர்தம் மரபுகளை முழுமையாக அறிந்து கொள்ள நமக்கு இன்னும் முதிர்ச்சி வேண்டும்.

தமிழர் மரபுகளை ஆழமாகவும், விரிவாகவும், நுட்பமாகவும் எடுத்தியம்பியவர். மூதறிஞர்.வ.சு.ப.மாணிக்கனார் ஆவார்.

இவர் தம் தமிழ்க்காதல் நூலில், ஒவ்வொருவருக்கும் தமிழர்தம் அகத்திணை மரபுகள் குறித்த பாலியல் அறிவு தேவை என்கிறார்.
இதனை,


பாலியற் கல்வி

அகத்திணை ஓர் பாலிலக்கியம், பெயரில்லாதார் வாழ்க்கையிலிருந்து காமநுணுக்கங்களைக் கற்றுக்கொள்கின்றோம். காமம் பற்றிய ஆணுடல்
பெண்ணுடலின் கூறுகளையும், இயற்கை செயற்கை திரிபு ஆகிய மனக்கூறுகளையும் கரவின்றிப் பட்டாங்குச் சொல்வது பாலிலக்கண நூல். அந்நூல் வாழ்வைத் தொடாது, அறிவைத் தொடாது. அதனைக் கற்பவர்,
அறிவு நிலைபெறுவரன்றிக் காதலுக்கு இன்றியமையாத உணர்ச்சி நிலையைப் பெறார்; சமுதாயத்தோடு இசைந்த புணர்ச்சி நிலையை எண்ணார். அகத்திணை
வாழ்க்கையிலக்கியம் ஆதலால், உலக நடைமுறைக்கு ஒப்பதாயும் பெயரில்லாதாரின் காதலியல்களைப் புலப்படுத்துவதால், கற்பவர்க்குத் தமது
என்ற உணர்ச்சியை ஊட்டுவதாயும் அமைந்துள்ளது. உடல் நலத்திற்கென உடற்பயிற்சி இருவர் செய்கின்றனர் என வைத்துக்கொள்வோம். ஒருவன்
பயிற்சிப் படங்களைப் பார்த்துப் பயில்கின்றான். மற்றொருவன் தன்முன் நின்று பயிற்சிசெய்யும் பயில்வானைப் பார்த்துப் பயில்கின்றான்.

இவ்விரு நிலைக்கும் பெரு வேறுபாடு இல்லையா? பின்னது சிறந்தது, முறையானது, கெடுதலற்றது என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?
பாலிலக்கண நூல் கற்றுக் காதலுலகிற் புகுவான் இன்ப மரபு அறியாதவனாய்,
சமையல் நூல் கற்றுச் சமைக்கப் புகுந்தாளைப் போல இடர்ப்பட்டுக் காமம் இழப்பான், பசி நீங்கான். அகத்திணை போன்ற பாலிலக்கியம் நூல் கற்பவர்
கற்கும்போதே காதற் பயிற்சி கைவரப் பெறுவர்; அன்னை அருகிருந்து மகள் அடுப்புத் தொழில் பழகிக்கொள்வது போல, அன்புக்கேடும் ஆரவாரமும்
இன்றிக் காதலுலகில் இனிது இயங்குபவர். ஆதலின், பருவம் உற்ற ஆண் பெண் அனைவர்க்கும் அகத்திணைக் கல்வி இன்றியமையாதது. அக்கல்வி.
காமப் பருவத் தொடக்கத்தே கற்கத் தொடங்கவேண்டியது.
அகக்கல்வி கற்கும் நல்லிளைஞர் இளைஞியர் இன்றியமையாத உள்ளப் பண்பாவது கற்பு என்றும், இன்றியமையாத உடல் விளையாவது காமம்
என்றும் தெளிவாக விளங்கிக் கொள்வர், ஒருவர் காமத்தை ஏனையர் மதித்து ஒழுகுவர், காமநிறைவு மனநிறைவாம் என்று இன்பச் செய்கையில்
மீக்கொள்வர், ஞாலத்தைக் காதலுக்குப் பயன்கொண்டு தம் காதலால் ஞாலத்தை வாழ்விப்பர்.

அகம் கற்ற இளைஞன் தன் இன்பமே பெரிதென எண்ணமாட்டான். தன் கயமலர்க் கண்ணியை இன்புறுத்திப் பெறும் இன்பத்தையே காமம் என்று
எண்ணி, அதற்கேற்றபடி காதற்பள்ளியில் நடந்துகொள்வான். மனைவியின் ஊடலையும் ஊடற் காரணங்களையும், ஊடல் நீட்சிகளையும், ஊடல்
சொற்களையும் இன்ப இகலாகக் கருதாது, இன்ப வாயிலாகக் கருதுவான், தன்
புகழ்ப் பெருமையையும், அறிவுப் பெருமையையும், செல்வப் பெருமையையும், பதவிப் பெருமையையும், பரிசுப் பெருமையையும் எண்ணிச் செம்மாக்காது,
மெல்லியலாளின் காமப்பெருமையையும் ஏற்றுக் கொண்டு இரங்கி மொழிவான்.

அகம் கற்ற இளையாள் காமப்பெருக்கம் கருதி ஊடுவாளேயன்றி, குற்றம் உடைய தலைவனாயினும், அவனை இடித்துரைப்பதற்கு, அதுதான் காலம்
என்று பள்ளிக்கலவியில் ஊடற் புரையோடாள். இன்பக்கொடை அவளது நோக்கம் ஆவதன்றிச் சிறுமைசுட்டி அக்கொடை செய்தல் அவள் கற்புக்குச்
சிறப்பளிக்காது. பெருந்தோள் ஆடவனது பணிவையும் வேண்டுதலையும் கிடப்பையும் கண்டு காமுகன் என்றோ, சிறியவன் என்றோ கருதித் தருக்காது,
கற்பின் வணக்கம் என்று பொருள்புரிந்து இன்ப அருள் செய்வான்.

அகம் கற்ற குடும்பத்தார் தம் ஆண் பெண்மக்களின்
பருவவோட்டங்களை எளிதிற் புரிந்துகொள்வர். பருவக்கோளாறு என்று கருதி மயங்கி, அறிவற்ற அன்பினால் காதற்கோளாறும் கற்புக்கோளாறும் செய்யார்.

அகக்கல்வி பரவிய இனத்தார் காதல் வாழ்வுக்கு மாறான சமுதாயப் போக்குகளை வேரூன்றவிடார். கற்பிற்கு முரணான பரத்தமையை ஆடவர்க்காக வளரவிடார். வளர்ந்த பரத்தமையைக் குலவொழுக்கமென வாழவிடார், பெண்டிரெல்லாம் கற்புப் பெண்டிராகவே வாழ வழிவகுப்பர்.

துறவிக்கும் அகத்திணைக் கல்வி வேண்டற்பாலது. துறவாத இல்லற மக்களுக்குத் தொண்டு செய்யுங்கால், அம்மக்களின் காதற் காமநிலை பற்றிய
அறிவு வேண்டாங் கொல்?
அகத்திணைக்கல்வி தொல்காப்பியத்தாலும் சங்கவிலக்கியத்தாலும் திருக்குறளாலும் அன்றி வேறு எவ்வகையானும் பெறுதற்கில்லை. தமிழ்ப்பிறவி
எடுத்த நாம் இம்முத்திற நூல்களையும் கற்கவேண்டும். கற்பதோடன்றி நம்போல் ஞாலமும் உய்யும்படி கற்பிக்கவேண்டும். இவை செய்யாவிடின்
இப்பிறவியை ஏன் சுமந்தோம்? அகப்பொருள் யாத்த தொல்காப்பியர் ஒல்காப்புலமை வாய்ந்தவர், பல்புகழ் கொண்ட பண்பினர் என்று அறிவோம்.
சங்கச் செய்யுட்கள் பாடியோர் எத்தகையர்? வாய்மை விளங்கும் கபிலரும்,
உலகறம் மொழிந்த கணியன் பூங்குன்றனாரும், அச்சமில்லாத நக்கீரரும்,
அருநெல்லி பெற்ற ஒளவையாரும், நெடுஞ்செழியன் புகழ்ந்த மருதனாரும்,
கரிகாலன் மதித்த கண்ணனாரும், கரிகாலன் மகள் ஆதிமந்தியாரும்,
ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியரும், பிசிராந்தையாரின் நண்பர்
கோப்பெருஞ்சோழரும் முதலான எண்ணிலாச் சான்றோர் என்பது அறிவோம்.
காமத்துப்பால் அருளியவரோ தமிழ்த்தாய் உலக நலத்திற்கெனப் பெற்ற வள்ளுவப் பெருமகன். இத்தமிழ்ச் சான்றோர் எல்லாம் அகத்திணைப்
பாடல்கள் யாத்தார்கள் எனின், அகக்கல்வி ஞாலமானிடர்க்கு இன்றியமையாத தலைசால் தூய கல்வி என்பதுவே முடிவு.

சங்கவிலக்கியம் 1862 அகப்பாடல் உடைய காதலிலக்கியம். ஒவ்வொரு பாடலிலும் ஆண் பெண் உள்ளங்கள் உள்ளன. இப்பாடல்களைக் கற்பவர்
3727 காதல் உள்ளங்களைப் பற்றிய அறிவு பெறுவர், மேலும்
காதற்றலைமையுடைய இவ்விருவரைப் பற்றிப் பாங்கன் நினைத்தனவும், ஊரார் கண்டார் நினைத்தனவும் ஆகிய பல்வேறு உள்ளங்களின் அறிவினையும் பெறுவர். திருக்குறட் காமத்துப்பாலின் 250 குறள்களைக் கற்குநர் 500 காம நெஞ்சங்களைக் குறித்த கல்வி பெறுவர். பொருட்பாலால் புறவாழ்க்கையிலும்
காமத்துப்பாலால் அகவாழ்க்கையிலும் செம்மை எய்துவர். அகத்திணைக் கல்வித் தலைவராகிய தொல்காப்பியரது தமிழ் முதல்நூலைக் கற்கும்
அன்புடைத் தமிழ் நங்கையாரும் நம்பியாரும் இருபாலாரின் நுண்ணியல்களை யெல்லாம் பண்போடும் பாங்கோடும் தெளிந்து வாழ்ந்து நன்றியர்களாகப் பொலிவார்காண்.

என்னும் இக்கருத்துக்கள் வழி பழந்தமிழர்தம் மரபியலின் உயர்வு புலப்படுகிறது..

புதன், 29 ஜூலை, 2009

ஏழு வள்ளல்களில் சிறப்பு.



கொடுத்துச் சிவந்த கரங்களுக்குச் சொந்தக்காரர்கள்…........
வாரி வாரி வழங்கியதாலேயே வள்ளல்கள் என்ற பெயர்பெற்றவர்கள்............
பிற உயிர்களையும் தன்னுயிர் போல மதித்தவர்கள்......
எனப் பல்வேறு சிறப்புக்களுக்கும் சொந்தக்காரர்களாக விளங்கியவர்கள் கடையேழு வள்ளல்களாவர்................

இன்றெல்லாம் சிறு உதவி செய்தால் கூட அதைப் பெரிய அளவில் விளம்பரப்படுத்திக்கொள்வோரையே அதிகம் காணமுடிகிறது.........

ஒரு கோயிலுக்கு ஒருவர் மின்விளக்கை கொடையாக அளிக்கிறார் என்றால் அவ்விளக்கு மறையும் அளவுக்கு அதில் தன் பெயரை எழுதிவைத்துவிடுகிறார்.............

காரணம் தான் கொடை தந்தமை அடுத்தவருக்குத் தெரியவேண்டும் என் எண்ணம்.......

இன்று மட்டுமல்ல காலந்தோறும் இவ்வாறு தான் மக்களின் மனநிலை இருந்திருக்கும். இது போன்ற பண்புடைய மக்களுக்கு இடையே எந்த ஒரு புகழையும் எதிர்பார்க்காமல் கொடை கொடுத்ததால் புகழ்பெற்றனர் கடையேழு வள்ளல்கள், கால வெள்ளத்தில் அவர்கள் மறைந்தாலும் அவர்களின் கொடைத்திறம் மறைந்து விடாது போற்றப்பட்டுதான் வருகிறது.
கடையேழு வள்ளல்களைப் பற்றி,
சங்க இலக்கியத்தில் பத்துப்பாட்டில், சிறுபாணாற்றுப்படையில் குறிப்புள்ளது...


வானம் வாய்த்த வள மலைக் கவா அன்
கான மஞ்ஞைக்குக் கலிங்கம் நல்கிய 85
அருந் திறல் அணங்கின் ஆவியர் பெருமகன்,
பெருங் கல் நாடன், பேகனும்; சுரும்பு உண
நறு வீ உறைக்கும் நாக நெடு வழிச்
சிறு வீ முல்லைக்குப் பெருந் தேர் நல்கிய,
பிறங்கு வெள் அருவி வீழும் சாரல் 90
பறம்பின் கோமான், பாரியும்; கறங்கு மணி
வால் உளைப் புரவியொடு வையகம், மருள,
ஈர நல் மொழி, இரவலர்க்கு ஈந்த,
அழல் திகழ்ந்து இமைக்கும் அஞ்சு வரு நெடு வேல்,
கழல் தொடித் தடக் கை, காரியும்; நிழல் திகழ் 95
நீலம், நாகம் நல்கிய, கலிங்கம்
ஆல் அமர் செல்வற்கு அமர்ந்தனன் கொடுத்த,
சாவம் தாங்கிய சாந்து புலர் திணி தோள்,
ஆர்வ நன் மொழி, ஆயும்; மால் வரைக்
கமழ் பூஞ் சாரல் கவினிய நெல்லி 100
அமிழ்து விளை தீம் கனி ஒளவைக்கு ஈந்த,
உரவுச் சினம் கனலும் ஒளி திகழ் நெடுவேல்,
அரவக் கடல் தானை, அதிகனும்; கரவாது,
நட்டோர் உவப்ப, நடைப் பரிகாரம்
முட்டாது கொடுத்த, முனை விளங்கு தடக் கை, 105
துளி மழை பொழியும் வளி துஞ்சு நெடுங் கோட்டு
நளி மலை நாடன், நள்ளியும்; நளி சினை
நறும் போது கஞலிய நாகு முதிர் நாகத்துக்
குறும் பொறை, நல் நாடு கோடியர்க்கு ஈந்த,
காரிக் குதிரைக் காரியொடு மலைந்த 110
ஓரிக் குதிரை, ஓரியும்; என ஆங்கு,
எழு சமம் கடந்த எழு உறழ் திணி தோள்
எழுவர் பூண்ட ஈகைச் செந் நுகம்
( சிறுபாணாற்றுப்படை)-பத்துப்பாட்டு.

வள்ளல்கள் என்றவுடன் நம் நினைவுக்கு வருபவர்கள் கர்ணர், தர்மர்,
அவர்களுக்கு அடுத்து நம் நினைவுக்கு வருபவர்கள் கடையேழு வள்ளல்களாகவர்.

பேகன்,பாரி,காரி,ஆய்,அதிகன்,நள்ளி,ஓரி ஆகிய ஏழு வள்ளல்கள் செய்த கொடையை இந்நாளில் நல்லியக் கோடன் ஒருவனே செய்கிறான் என்று சிறுபாணாற்றுப்படை குறிப்பிடுகிறது.

1.பருவமழை தவறாது பொழிவதால் காட்டு மயில் அகவியதைக் கேட்டு அது குளிரால் நடுங்கியது என எண்ணி இரக்கமுற்று தம் போர்வையைக் கொடுத்தான் பேகன்.

மயிலுக்குப் போர்வையைத் தருவது அறிவுடைமையா?
அது சரியா? தவறா?
போர்வை கீழே விழுந்தால் மயில் அதனை மீண்டும் எடுத்துப் போர்த்திக் கொள்ளுமா?
எனப் பல ஐயங்கள் தோன்றுவது இயற்கையே....

தோகை விரித்து ஆடுவது என்பது இயற்கை என்று பேகனின் அறிவு சொல்கிறது..
இல்லை அது தன்னைப் போலக் குளிரால் நடுங்குகிறது..........
என்கிறது பேகனின் உணர்வு....
உணர்வு ,அறிவை வெல்கிறது......
இதையே கொடை மடம் என்கிறோம்.....

2.முல்லைக் கொடி படர தம் பெரிய தேரினை ஈந்தான் பறம்பு மலைக்கு அரசனான பாரி.

முல்லைக் கொடி படர சிறுபந்தல் போதுமே....
ஆனால் அந்த கண்ணோட்டத்தில் முல்லைக் கொடியைப் பாரியால் பார்க்க முடியவில்லை.

முல்லைக் கொடி, தான் படர்வதற்கு வழி இல்லையே என்று வாடுவது போல பாரிக்குத் தோன்றுகிறது.

அடுத்த நொடியோ அக்கொடியின் துயர்நீக்க,தன்னால் என்ன செய்ய இயலும் என்று சிந்திக்கிறான்..

தன்னிடமிருந்த தேரினை அக்கொடி படர்வதற்காக அவ்விடத்தே விட்டுச்செல்கிறான்..

3.வலிமை மிக்க குதிரையையும்,நல்ல சொற்களையும் கொடையாக இரவலர்க்கு வழங்கியவன் காரி.

துன்பத்துடன் வாடிவரும் கலைஞர்களுக்கு வலிமைமிக்க குதிரையும் நல்ல சொற்களும் வழங்கியதால் வள்ளல் எனப்பட்டவன் காரி...
பொருள் கொடுத்துத்து துயர் நீக்குதல் ஒரு வகை,
நல்ல துயர் நீக்கும் சொற்களால் துயர் நீக்குதல் இரண்டாவது வகை..
அவ்வகையில் நல்ல சொற்கள் வாயிலாகவே கலைஞர்களைக் கவர்ந்தவன் காரி.

4.ஒளிமிக்க நீலமணியையும், நாகம் தந்த கலிங்கத்தையும் இரவலர்க்குக் கொடுத்தவன் ஆய்.
தான் மிகவும் உயர்வாகக் கருதும் நீலமணியையும், நாகம் தனக்குத் தந்த கலிங்கம் என்னும் ஆடையையும் இரவலர்களுக்கு அளித்து மகிழ்வித்தவன் ஆய்.

5.அமிழ்தம் போன்ற நெல்லிக் கனியையும் தாம் உண்ணாமல் ஒளவைக்கு ஈந்தவன் அதியன்.

நீண்ட நாள் உயிர் வாழ்க்கையளிக்கும் அரிய நெல்லிக்கனி தனக்குக் கிடைத்தபோது...
சிந்தித்தான் அதியன்...
இக்கனியைத் தான் உண்டால் இன்னும் தன் நாட்டின் பரப்பு அதிகமாகும்.. பல உயிர்கள் மேலும் அழியும்..

ஆனால் இக்கனியை ஔவையால் உண்டால் நீண்ட காலம் அவர் உயிர் வாழ்வார் ...
தன்னை விட இவ்வுலகில் அதிக காலம் வாழ வேண்டியவர் புலவரே...
அவரால் தமிழ் மேலும் சிறப்புப் பெறும்...
என்று கருதிய அதியன் கனியை ஒளைக்குத் தந்து வள்ளள் என்னும் பெயர் பெற்றான்...

6.இரவலர்க்கு வேண்டிய பொருள்களை அதிகமாக வழங்கி ஆவர்கள் மனநிறைவு கண்டு மகிழ்ந்தவன் நள்ளி.
பசிப்பிணியோடு வாடி வந்த இரவலர்களுக்கு அதிகமாகப் பொருள் வழங்கி அவர்களின் மன நிறைவு கண்டு மகிழ்ந்தவன் நள்ளி..

7.கூத்தாடுவோருக்கு வளமான நாடுகளை வழங்கி மகிழ்தவன் ஓரி.
கூத்தாடும் கலைஞர்களின் கலைத்திறனை மதித்து வளமான பல நாடுகளை வழங்கி மகிழ்ந்தவன் ஓரி.

மண்ணில் எத்தனையோ பேர் வள்ளல்களாக வாழ்ந்து மறைந்திருந்தாலும். இன்றளவும் கடையேழு வள்ளல்கள் என நாம் இவர்களை மதிக்கிறோம் என்றால் அதற்கு அவ்வள்ளல்களிடம் இருந்த சிறந்த பண்புளான,
அஃறிணை உயிர்களிடத்தும் அன்பு கொள்ளுதல்,
கலைஞரைப் போற்றுதல்
இரவலரை ஓம்புதல்
ஆகியவையே காரணமாகும்.

செவ்வாய், 28 ஜூலை, 2009

வரை பாய்தல்




சங்க காலத்தில் தலைவன் தன் காதலியைப் பெற மானத்தை
விட்டு மடலூர்ந்து வருவான். அவ்வாறு வந்தால் தலைவியின் பெற்றோர் அஞ்சி தன் மகளைத் தலைவனுக்கு மணமுடித்து வைப்பர். இது தமிழர் தம் மரபு. ஐந்திணையில் மடல்கூற்று மட்டுமே நிகழும். பெருந்திணையில் ஏறிய மடல்திறமும் நிகழும். மடலூர்தலின் ஒரு கூறாக வரை பாய்தல் அமைகிறது.

வரைபாய்தல் என்பது மலையிலிந்து குதித்துத் தற்கொலை செய்து கொள்ளுதலைக் குறிப்பதாக அமைகிறது. காதல் கை கூடாத நிலையில் இன்றும் காதலர் மலையிலிருந்து குதித்தத் தற்கொலை செய்துகொள்கின்றனர்.

வரைபாய்தல் என்பதை ஒரு சங்க காலத்திலிருந்த சமூக வழக்காகவே அறிஞர்கள் கருதுவர்.

தமிழர்தம் மரபினை அறிந்து கொள்வதற்காக,
வரை பாய்தல் பற்றிய குறிப்புடைய அகநானூற்றுப் பாடலைக் காண்போம்.


வயங்குவெயில் ஞெமியப் பாஅய் மின்னுவசிபு
மயங்குதுளி பொழிந்த பானாட் கங்குல்
ஆராக் காமம் அடூஉநின் றலைப்ப
இறுவரை வீழ்நரின் நடுங்கித் தெறுவரப்
5. பாம்பெறி கோலிற் றமியை வைகித்
தேம்புதி கொல்லோ நெஞ்சே உருமிசைக்
களிறுகண் கூடிய வாண்மயங்கு ஞாட்பின்
ஒளிறுவேற் றானைக் கடுந்தேர்த் திதியன்
வருபுனல் இழிதரு மரம்பயில் இறும்பிற்
10. பிழையுறழ் மருப்பிற் கடுங்கட் 1பன்றிக்
குறையார் கொடுவரி குழுமுஞ் சாரல்
அறையுறு தீந்தேன் குறவர் அறுப்ப
முயலுநர் முற்றா ஏற்றரு நெடுஞ்சிமைப்
புகலரும் பொதியில் 2போலப்
15. பெறலருங் குரையணம் அணங்கி யோளே.

- பரணர்.


கூற்று : அல்ல குறிப்பட்டுப் போகும் தலைவன் தன் நெஞ்சுக்குச் சொல்லியது.

( தலைவியை தாம் சந்திப்பதற்காக ஏற்படுத்தும் அடையாள ஒலியைக் குறிப்படுத்தல் என்பர். அவ்வொலி இயற்கையிலே எழுவதுண்டு அவ்வேளையில் தலைவி அவ்வொலியைத் தலைவன் ஏற்படுத்தினான் என்று எண்ணி வந்து ஏமாந்து திரும்பிவிடுவாள். பின் தலைவன் வந்து உண்மையிலேயே ஒலி எழுப்பியும் அவ்வொலி இயற்கையிலேயே எழுவது தலைவன் ஏற்படுத்துவது அல்ல என்று தலைவி தவறாக எண்ணி அவ்விடம் வாராது இருப்பாள்.

இதனை அல்லகுறிப்படுதல் என்றழைத்தனர்.)


இன்றெல்லாம் காதலர்கள் ஒருவரை ஒருவர் சந்திப்பது மிகவும் எளிதாக உள்ளது. சந்திக்கவே இயலாத நிலையில் செல்லிடப்பேசி, இணையவழி சாட்டிங் என பல்வேறு தொழில்நுட்ப வசதிகளின் துணையால் ஒருவரோடு ஒருவர் உரையாடி மகிழ்கின்றனர்.

சங்க காலத்தில் தலைமக்கள் ஒருவரை ஒருவர் சந்திப்பது என்பது அரிதான செயலாகவே இருந்தது. தலைமக்கள் பகலில் சந்தித்தால் அதனைப் பகற்குறி, என்றும் இரவில் சந்தித்து மகிழ்ந்தால் அதனை இரவுக்குறி என்றும் அழைத்தனர். இரவுக்குறி தலைவியின் வீட்டின் அருகிலேயே நிகழும்.

தலைவன் தன் வருகையைப் பறவைகள் போலவோ, அல்லது வேறு வகையான இயற்கையில் எழும் ஒலிகளைப் போல எழுப்புவான். அவ்வொலி கேட்டுத் தலைவி, தலைவனைச் சந்தித்து மகிழ்வாள்.

அவ்வாறு தலைவியை அழைக்கத் தலைவன் ஒலி எழுப்பினான். இதைப் போன்ற ஒலி முன்பே இயற்கையில் எழுந்தமையால் தலைவி முன்பே வந்து பார்த்துச் சென்று விட்டாள்.
பின் தலைவன் ஒலி எழுப்பும் போது அதனைத் தலைவி இவ்வொலி இயற்கையில் எழுவது என்று தவறாக உணர்ந்துவிட்டாள்...

இந்நிலையில் தலைவியைக் காண இயலாது அல்லகுறிப்பட்டுத் தலைவன் வருந்தித் தன் நெஞ்சுச் சொல்லிப் புலம்புவது போல இப்பாடல் அமைகிறது.

பாடலின் பொருள்

திதியன் என்பான் இடியென முழங்கும் களிறுகளையும்,
வாளொடு போரிடும் போர்ப்படைகளையும்,
விரைந்தோடும் தேர்ப்படைகளையும் கொண்டவன்.

அவனது மலையானது செறிவான மரங்களைக் கொண்டு விளங்குகிறது.
அங்கு எதற்கும் அஞ்சாத தன்மை வாய்ந்த காட்டுப்பன்றியை அடித்துத் தின்ற வலிமை வாய்ந்த கொடிய புலிகள் முழக்கமிடும்.
உச்சிப் பாறைகளில் உள்ள தேனை ஏறி எடுக்கமுடியாமல் குறவர்கள் வருந்துவர்.

இத்தகைய அரிய, பெரிய மலை போல என் தலைவி......
கிடைத்தற்கு அரியவளாக விளங்குகிறாளே என்று தன் நெஞ்சில் எண்ணிக்கொள்கிறான்.

தலைவன், தலைவி மீது மிகுந்த அன்புடையவனாக விளங்குகிறான்.
இப்பிரிவைத் தலைவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை........
இப்பிரிவின் வலி கொடுமையானது...
அதனை அடுத்தவருக்குப் புரியவைப்பது கடினம்....
ஆனால் புலவர் அதனை அழகாக வெளிப்படுத்திப் புரியவைக்கிறார்...


தலைவன் தன் நெஞ்சிடம் ...............

ஏ நெஞ்சே ................
நள்ளிரவில் அடங்காக் காமம் வருத்துவதால் மலை உச்சியிலிருந்து வீழ்பவரைப் போலவும்.....

கோலால் அடிபட்ட பாம்பைப் போலவும்...........

நீ ஏன் வருந்துகிறாய் என்று கேட்கிறான்.....

தலைவியின் பிரிவை ஏற்க மறுக்கும் நெஞ்சம்...
அதன் வலியை இவ்வாறு உணர்கிறது
.

இப்பாடல் வழியாக ....

“ஆராக் காமம் அடூஉநின் றலைப்ப
இறுவரை வீழ்நரின்“

என்னும் அடிகள் வாயிலாக......

அல்லகுறிப்படுதல் என்னும் அகத்துறை விளக்கம் பெறுகிறது.

• மலையிலிருந்து தற்கொலை செய்து கொள்ளும் சங்ககாலத் தமிழர் மரபு அறியப்படுகிறது.
• காமம் என்ற சொல் இன்று வழங்கும் பொருளில் வழங்காமல் அன்பின் மிகுதிப்பாட்டையே புலப்படுத்துவதாக உள்ளது.
• தலைவியின் பிரிவை ஏற்க மறுக்கும் தலைவனின் நெஞ்சம் மலையிலிருந்து வீழ்வோரின் மன நிலையையும், அடிபட்ட பாம்பின் வலியை உணர்வது.......
காதலின் ஆழத்தை உணர்த்துவதாக உள்ளது.

திங்கள், 27 ஜூலை, 2009

இணைய இணைப்பின்றி எழுத்துருக்களை மாற்ற...

வலைப்பதிவில் தமிழ் எழுதுதல் தொடர்பாக நீண்ட காலமாக இருந்த சிக்கல் யுனிகோடு முறை வாயிலாக நீங்கியது. விண்டோஸ் 2000, மற்றும் எக்ஸ்.பி இயங்குதளங்களில் யுனிகோடு எவ்வித சிக்கலுமின்றி இயங்குகிறது. இவ்வியங்குதளங்களில் சில நேரங்களில் யுனிகோடு சரியாக இயங்காமல் உள்ளது. இச்சூழலில் லதா எழுத்துருவை
நிறுவினால் இச்சிக்கல் தீர்ந்து விடுகிறது.

புதிதாக வலைப்பதிவு எழுதுவோர் எந்த எழுத்துருவைப் பயன்படுத்துவது?
எந்த எழுத்துரு மென்பொருளைப் பயன்படுத்துவது
?

என்ற கேள்விக்கு பெரும்பாலோனவர்களின் பதில் என்.எச்.எம் என்பதாகவே இருக்கும்.

ஆம்...
என்.எச்.எம் என்னும் தளத்துக்குச் சென்று என்.எச்.எம் ரைட்டரை பதிவிறக்கி நம் கணினியில் நிறுவிக்கொள்ளவேண்டும். கணினியை ரீ ஸ்டார்ட் செய்தவுடன். கணினித் திரையில் வலது கீழ் பகுதியில் மணி போன்ற வடிவம் தோன்றும். அதனை அழுத்தினால் ஐந்து எழுத்துரு முறைகள் தோன்றும்.




இதில் முறையான தட்டச்சுமுறை, தமிங்கில முறை, பாமினி ஒருங்குறி முறை ஆகியனவும் அடங்கும்...
இவற்றில் ஒரு முறையைப் பின்பற்றி வலைப்பதிவில் சுலபமாக எழுதலாம்..



அதில் ஒவ்வொரு எழுத்துரு முறையிலும் எவ்வாறு எழுத்துருக்கள் பயன்படுத்த வேண்டும் என்பதை திரையின் வலது கீழ்ப்பகுதியில் உள்ள மணியை வலது பக்கம் சொடுக்கினால் ஆன்ஸ்கிரின் கீ போர்டு தெரியும் அதனைப் பின்பற்றினால் எளிய முறையில் தட்டச்சிட்டுப் பழகலாம்.


இதன் தனிப்பட்ட சிறப்பு.........
வலைப்பதிவு எழுதுதல், மின்னஞ்சல், தேடுதல் என எல்லா நிலைகளிலும் இம்மென்பொருள் பேருதவியாக உள்ளது.
இணைய இணைப்பின்றி எழுத்துருக்களை மாற்ற...



என்.எச்.எம், அழகி போன்ற யுனிகோடு மென்பொருள்கள் வந்த பின்னர் எழுத்துருச் சிக்கல் ஓரளவுக்குத் தீர்ந்தது.
இதற்கு முன்னர் பலரும் பொங்குதமிழ் போன்ற எழுத்துரு மாற்றிகளையே நம்பி வந்தனர்....


சாதாரணமான எழுத்துருக்களில் நம் வேர்டு கோப்புகளை உருவாக்கிய பின்னர்,
அதனைக் காப்பி செய்து பொங்கு தமிழ் எழுத்துரு மாற்றியில் இட்டு யுனிகோடு முறைக்கு மாற்றி அதனைக் காப்பி செய்து நம் வலைப்பதிவுகளிலும் மின்னஞ்சல்களிலும் பயன்படுத்தி வந்தோம்..... பயன்படுத்தி வருகிறோம்..

தமிழ்ப் பிடிஎப் கோப்புகளை இணைய இணைப்பின்றி மாற்ற...பொங்கு தமிழ் எழுத்துரு மாற்றி சாதாரணமான எழுத்துருக்களை யுனிகோடுக்கு மாற்றவும் – யுனிகோடு எழுத்துருக்களை சாரணமான எழுத்துருக்களாக மாற்றவும் பயன்பட்டு வருவது யாவரும் அறிந்ததே....

எனது நண்பர் ...............
இணைய இணைப்பின்றி பிடிஎப் கோப்புகளை மாற்ற வேண்டும் என்றார் நானும் இந்த மென்பொருளைக் கூறினேன்...
அவர் பொங்குதமிழையே இணைய இணைப்பின்றிபப் பயன்படுத்தலாமா...?

என்று கேட்டார்.....

நானும் அத்தளத்தில் தேடிப்பார்த்தபோது அதற்கு வழி இருந்தது அறிந்து மகிழ்ந்தேன்.....

மிக எளிய வழியில் பொங்கு தமிழ் எழுத்துரு மாற்றியை நம் கணினியில் சேமித்துக்கொள்வதால் இது சாத்தியமாகிறது...

வழிமுறை....

முதலில்

பொங்குதமிழ் இணையதளத்துக்குச் செல்லவும்..




படத்தில் உள்ளது போல (பைல் – சென்று சேவ் அஸ்) செய்து சேமித்துக் கொள்ளவும்.
அவ்வளவு தான் இனி இணைய இணைப்பு இல்லாத நிலையிலும் நீங்கள் யுனிகோடு எழுத்துக்களை உருவாக்க முடியும்...

இணைய இணைப்பு இல்லாத நிலையிலும் நீங்கள் பிடிஎப் கோப்புக்களை எழுத்துரு மாற்றிக் கொள்ளமுடியும்.....

சனி, 25 ஜூலை, 2009

நொதுமல் வரைவு




மாறிவரும் உலகில் மாறாத ஒன்று காதல். காலந்தோறும் காதல் பற்றிய மதிப்பீடு மாறலாம், ஆனால் காதல் மாறுவதில்லை. சங்க இலக்கியங்கள் வழி தமிழர் தம் காதல் மரபுகளை அறியமுடிகிறது.

இற்றைக் காலத்தில், ஒரு பெண் தன் பெற்றோருக்குத் தெரியாமல் காதலிக்கிறாள். தன் மகள் காதலிக்கிறாள் என்பதை அறியாது அவள்தம் பெற்றோர் தன் பெண்ணுக்கு மணம் பேசுகின்றனர். அந்நிலையில் அப்பெண் தன் காதலைப் பெற்றோருக்குத் தெரிவித்து நடைபெறவிருக்கும் திருமணத்தைத் தடுக்கிறாள்..

இது போன்ற நிகழ்வுகள் இன்று மட்டுமல்ல. இனி வரும் காலங்களிலும் நிகழும். இதே நிகழ்வு சங்க காலத்தும் நிகழ்ந்தது. அதற்குச் சங்கத் தமிழர் இட்ட பெயர் நொதுமல் வரைவு.

நொதுமல் வரைவு என்பது………

தலைவியை மணம் பேசி அயலவர் வருவார்கள். அவ்வாறு வரும் மணமகன் வீட்டாரை பெண்வீட்டார் முகமலர வரவேற்பர். சில நேரங்களில் அவ்வாறு மணம் பேச வருவோர் தலைவி காதலிக்கும் தலைவனின் வீட்டாராக அமைதலும் உண்டு. அவ்வாறு அமைந்தால் தலைவியும், தோழியம் பேருவகை அடைவர்.
தலைவனின் பெற்றோர் மணம் பேச வரும் போது தலைவியின் பெற்றோர் அதற்கு உடன்படுவதும் உண்டு, மறுத்து மொழிதலும் உண்டு.

பெற்றோர் உடன்பட்டால் மகிழும் தலைவி, மாறுபட்டால் எதிர்த்துப் போராடுவாள். தலைவிக்குத் துணையாகத் தோழியும் உடனிருப்பாள்.

தலைவியின் கற்பைக் காக்கத் தோழி, தலைவியின் காதலைச் செவிலிடம் கூறி அறத்தொடு நிற்பாள்.

இவ்வாறு நொதுமல் வரைவு பற்றி இயம்பும் பாடல்கள் சங்கஇலக்கியத்தில் பல உள்ளன. சான்றாக நற்றிணையிலிருந்து ஒரு பாடலைக் காண்போம்….


207 நெய்தல் - (நற்றிணை)

கண்டல் வேலிக் கழி சூழ் படப்பை
முண்டகம் வேய்ந்த குறியிறைக் குரம்பைக்
கொழு மீன் கொள்பவர் பாக்கம் கல்லென
நெடுந் தேர் பண்ணி வரல் ஆனாதே
குன்றத்து அன்ன குவவு மணல் நீந்தி
வந்தனர் பெயர்வர்கொல் தாமே அல்கல்
இளையரும் முதியரும் கிளையுடன் குழீஇ
கோட் சுறா எறிந்தென சுருங்கிய நரம்பின்
முடி முதிர் பரதவர் மட மொழிக் குறுமகள்
வலையும் தூண்டிலும் பற்றி பெருங் கால்
திரை எழு பௌவம் முன்னிய
கொலை வெஞ் சிறாஅர் பாற்பட்டனளே



(நொதுமல் வரைவுழித் தோழி, செவிலிக்கு அறத்தொடு நின்றது.)

தலைவியை மணமுடிக்க விரும்பி அயலார் பெண்கேட்டு வந்தமையைத் தோழி அறிந்தாள். அதனால் தோழி, செவிலியிடம் சென்று தலைவி ஒருவனைக் காதலிக்கிறாள். அவனை அவள் மணத்தலே சிறப்பு என்று தலைவியின் காதலை வெளிப்படுத்தி அறத்தொடு நிற்கிறாள்.


இனி பாடலை உரையாடல் வடிவில் காண்போம்…..

தோழி : அன்னையே………!

செவிலி : என்னடி……..?
இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறாய்……?
தலைவியைப் பெண்பார்க்க வந்திருக்கிறார்கள்…
உனக்குத் தெரியாதா….
நீ இங்கு இருக்கிறாய் ….
நீ போய் தலைவியுடன் இருப்பது தானே முறை….

தோழி : உன்னிடம் ஒரு செய்தி சொல்ல வேண்டும். அதற்குத் தான் உன்னைத் தேடி வந்தேன்…

செவிலி : என்ன செய்தி….?

தோழி : கடல் சூழ்ந்த நம் பரதவர்கள் குடில்கள் உள்ள நம் பாக்கத்துக்குத், தினமும் தேரில் ஒருவன் வந்து செல்கிறான் என்பதைத் தாங்கள் அறிவீர்களா………?

செவிலி : அப்படியா ….?
யாரது……….?
எனக்குத் தெரியாதே……..?

தோழி : தலைவியைக் காதலிக்கும் தலைவன்…

செவிலி : என்னடி சொல்ற…..?
மணம் பேச வந்திருக்கும் இந்த நிலையில என்ன பேசற..
உண்மைதானா……..?

தோழி : உண்மை தான்….
அவன் தலைவி மீது மிகுந்த காதல் கொண்டிருக்கிறான். அவளும் அவனை உயிராகக் காதலிக்கிறாள்….
அதனால் அவர்களைச் சேர்த்து வைப்பதே முறை….

செவிலி : சரி அதை இப்ப வந்து சொல்ற…
இதை நான் எப்படி அவள் பெற்றோருக்கு உரைப்பது..
இந்நிலையில் அவர்கள் மனம் என்ன பாடுபடும…..?

தோழி : தலைவியின் நலம் கருதி இதை தாங்கள் அவள் பெற்றோருக்கு எடுத்துரைக்கத் தான் வேண்டும்.

இளையோரும், முதியோரும் தம் சுற்றத்துடன் குழுமியவராய், கொல்லும் தன்மையுடைய
சுறா கிழித்ததால் உண்டான அகன்ற துளைகளைச் சுருங்கிய, மெல்லிய கொடியால் முடிச்சிடுவர்.

இவ்வாறு தொழில்புரியும் பரதவர் குலத்துத்தோன்றிய நம் தலைவி,

அவள் விரும்பும் தலைவனுடன் வாழ்ந்தாள் மனம் மகிழ்வுடனிருப்பாள். அவனும் அவளை நன்கு பார்த்துக்கொள்வான்…
இப்போது மணம் பேசி வந்திருப்பவர்களோடு ஒப்பிடும் போது, தலைவன் செல்வ நிலையிலும் மிகவும் உயர்ந்தவன்…

நான் இவ்வளவு தூரம் சொல்லியும்…
இந்த செய்தியை அவள் பெற்றோர் அறியாது அவளுக்குத் திருமணம் செய்து வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா?

செவிலி : என்ன நடக்கும்..?

தோழி : முதலில் அவள் விரும்பும் தலைவனுடன் அவள் வாழ இயலாவிட்டாள் உயிர் துறந்துவிடுவாள்…………
அன்றி வாழும் நிலை வந்தாலும்,

பெருங்காற்று வீசும் கடலுக்குச் செல்லும் கொல்லும் தொழில் வெய்ய பரதவராகிய சிறுமையாளரிடம் அகப்பட்டு அழிந்து போவாள்…………

செவிலி : சரி….
நடப்பது நடக்கட்டும்………
தலைவியின் காதலை அவள் பெற்றோருக்குத் தெரிவிக்கிறேன்…….
போதுமா………?

தோழி : மிக்க மகிழ்ச்சி……….!

செவிலி : தலைவியின் நலம் தானே நாம் விரும்புவது…

இவ்வாறு தலைவியை அயலவர் பெண் கேட்டு வருதல் நொதுமல் வரைவு எனப்படும்.

தலைவியின் காதலைத் தோழி செவிலிக்கு எடுத்துரைத்தல் அறத்தொடு நிற்றல் எனப்படும்..

செவிலி தலைவியின் காதலை அவள்தம் தாயான நற்றாக்கு எடுத்துரைப்பதும், நற்றாய் தம் கணவருக்கு உரைப்பதும் அறத்தொடு நிற்றல் என்றே அழைக்கப்பட்டது.

இவ்வாறு சங்க காலத் தலைவியர் தம் காதலுக்காகவும், கற்புக்காகவும் போராடினர் என்பதை பாடல்கள் சுவை பட இயம்புகின்றன..

வெள்ளி, 24 ஜூலை, 2009

ஔவை சென்ற தூது (வாள் மங்கலம்)




மன்னவனின் வாள் முதலான படைக்கருவிகளின் சிறப்பைக் கூறுவது வாள்மங்கலம் ஆகும். அதியமானின் படைக்கருவிகள் பாராட்டப்பட்டமையால் இது வாள்மங்கலம் ஆனது.

தமிழ்த்தூது இலக்கிய வளர்ச்சியில் சங்க இலக்கியம் பெரும்பங்கு வகிக்கிறது.

காமம் மிக்க கழிபடர்கிளவி என்னும் அகத்துறை அகம் சார்ந்த தூது இலக்கியம் தோன்றக் காரணமானது.

புறம் சார்ந்த தூதுக்குச் சான்றாக இப்பாடல் அமைகிறது. சங்க காலத்தில் பெண்டிரும் தூது சென்றமை இப்பாடல் வழி அறியமுடிகிறது.

(அவன் தூது விட, தொண்டை மானுழைச் சென்ற ஔவைக்கு அவன் படைக்கலக் கொட்டில் காட்ட, அவர் பாடியது.)

அதியமான்(அரசன்) – ஔவை (புலவர்) நட்பைத் தமிழுலகம் நன்கறியும்.
ஒருமுறை, தொண்டைமான் என்னும் மன்னன் அதியனை எதிர்த்து போரிட எண்ணினான்.

அதியனோ மாவீரன்,
தொண்டைமான் தன் வீரத்தை அறியாது அழியப்போகிறானே என்று அதியனுக்கு வருத்தம். அதனால், ஔவையாரைத் தொண்டைமானிடம் தூதாக விட்டான்.

தூது சென்ற ஔவையார், அங்கு தொண்டைமானைப் புகழ்ந்தும், அதியனை இகழ்ந்தும் பாடியதே இப்பாடல்..
பாடலின் உட்பொருளை அறிந்த தொண்டைமான் அதியனுக்கு அஞ்சி போரைத் தவிர்த்தான்...

வஞ்சப்புகழ்ச்சி அணிக்குத் தக்க சான்றாக இப்பாடலைக் கொள்ளலாம்.

புறநானூற்றில் 95 வது அமைந்துள்ள இப்பாடல் வாள் மங்கலம் என்னும் துறையில் அமைந்துள்ளது..
இனி பாடலை உரையாடல் வழிக் காண்போம்,

தொண்டைமான் : வாருங்கள் புலவரே...
தமிழுக்குத் தொண்டு செய்யும் புலவரே தங்கள் வருகை எனக்கு மிகவும் மகிழ்வளிப்பதாக உள்ளது...

ஔவையார் : எனக்கும் மகிழ்ச்சி மன்னா...

தொண்டைமான் : அதியனின் நாட்டிலிருந்த தாங்கள் வந்திருக்கிறீர்கள்..
எனது வீரம், படை பலம் ஆகியவற்றைத் தாங்கள் அறிந்து கொள்ளுவது அவசியமாகும்...
வாருங்கள்...
பாருங்கள்.......
எனது படைக்கருவிகள் எவ்வளவு புதிதாகவும் கூர்மையாகவும் உள்ளன.............?


ஔவையார் : ஆம் நீ சொல்வது உண்மை மன்னா..... !

தொண்டைமான் : எப்படி இருக்கிறது எனது படைக்கருவிகள்...

ஔவையார் : இக்கருவிகள் மயிலின் தோகையால் அழகு செய்யப்பட்டு மாலை சூட்டப்பட்டு, நெய் பூசப்பட்டு, காவலையுடைய அகன்ற மாடத்தில் உள்ளன..
பார்ப்பதற்கே மிகவும் அழகாக உள்ளது.


தொண்டைமான் : சரியாகச் சொன்னீர்கள்...
அதியனின் படைக்கருவிகளை விட எனது படைக்கருவிகள் எவ்வளவு புதியன, கூர்மையானவை என்பதைத் தாங்கள் சரியாகப் புரிந்து கொண்டீர்கள்....!

ஔவையார் : ஆம் மன்னா...

உனது படைக்கருவிகளைப் போல அதியனின் படைக்கருவிகள் இல்லை. அவனுடைய கூரிய நுனியுடைய வேல் முதலான அவைதாம் பகைவரைக் குத்துதலால் பிடியும் நுனியும் சிதைந்து கொல்லனது பணிக்களரியில் எந்நாளும் கிடக்கின்றன.

தொண்டைமான் : அதியனின் வீரம் உணர்ந்தவனாக அவனோடு போரிட எண்ணிய எண்ணத்தை மாற்றிக்கொண்டான்...

ஔவையார் பாடலின் உட்பொருள்...

ஔவையார் பாடலின் பொருள் மேலோட்டமாகப் பார்த்தால் தொண்டைமானைப் புகழ்வது போலவும் அதியனை இகழ்வது போலவும் அமையும்.

தொண்டைமானின் படைக்கலங்கள் அழகுற விளங்குகின்றன என்னும் புகழ்ச்சிக்கு.......

நீ அதிகம் போர்க்களம் காணாதவன்....
ஆனால் அதியன் போர்க்களத்தில் தான் எந்நாளும் இருப்பவன்...


உனது கருவிகள் மாலை சூட்டப்பட்டு அழகாகக் காட்சியளிக்கின்றன. ஆனால் அவன் எந்நாளும் போர் புரிவதால் அவனது படைக்கருவிகள் யாவும் கூர்மையின்றி கொல்லன் களரியில் தான் கிடக்கும் என்பதே உட்பொருளாக அமைகிறது.

இந்த ஆழமான உட்பொருளை தொண்டைமான் உணர்ந்தமையால் அதியனோடு போரிட எண்ணிய எண்ணத்தை மாற்றிக் கொண்டான்.

இப்பாடல் வழி புறத்தூது மரபினையும், வாள்மங்கலம் என்னும் புறத்துறையையும் அறியமுடிகிறது..

புகழ்வது போல இகழும் வஞ்சப்புகழ்ச்சி அணி அழகாக விளக்கம் பெறுகிறது.