வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

செவ்வாய், 22 டிசம்பர், 2020

திருக்குறள் - அதிகாரம் - 119. பசப்பு பருவரல்


நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென்

பண்பியார்க்கு உரைக்கோ பிற. - 1181

காதலரின் பிரிவை ஏற்றேன். இப்பசலையை யாரிடம் கூறுவேன்      

அவர்தந்தார் என்னும் தகையால் இவர்தந்தென்

மேனிமேல் ஊரும் பசப்பு.- 1182

காதலர் தந்தார் என்ற உரிமையுடன் என் உடல் பரவுகிறது பசலை

சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா

நோயும் பசலையும் தந்து. - 1183

அழகும், நாணமும் கொண்டு அவர், காமமும், பசலையும் தந்தார்     

உள்ளுவன் மன்யான் உரைப்பது அவர்திறமால்

கள்ளம் பிறவோ பசப்பு. -1184

அவரைப்பற்றியே பேசுகிறேன், நினைக்கிறேன், இருந்தும் வந்தது பசலை

உவக்காண்எம் காதலர் செல்வார் இவக்காண்என்

மேனி பசப்பூர் வது. - 1185

அதோ! காதலர் என்னைப் பிரிகிறார், இதோ! என்மேல் படர்கிறது பசலை

விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன்

முயற்கற்றம் பாரக்கும் பசப்பு. -1186

விளக்கில்லா இடத்தில் இருள் போல, அவரில்லா இடத்துப்படரும் பசலை

புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில்

அள்ளிக்கொள் வற்றே பசப்பு. -1187

அவரைத் தழுவிப் பிரிந்தேன், உடனே விரைந்து பரவியதே பசலை

பசந்தாள் இவள்என்பது அல்லால் இவளைத்

துறந்தார் அவர்என்பார் இல். -1188

பசலை கொண்டாள் என்பார் உண்டு! பசலை தந்தார் என்பார்

இல்லை பசக்கமன் பட்டாங்கென் மேனி நயப்பித்தார்

நன்னிலையர் ஆவர் எனின். -1189

காதலர் நலமுடனிருப்பாரென்றால் இப்பசலை இப்படியே இருக்கட்டும் 

பசப்பெனப் பேர்பெறுதல் நன்றே நயப்பித்தார்

நல்காமை தூற்றார் எனின். -1190

காதலரை ஊரார் திட்டாவிட்டால், பசலையும் மகிழ்ச்சி தருவதுதான்  

 

திங்கள், 21 டிசம்பர், 2020

திருக்குறள் - அதிகாரம் - 118. கண் விதுப்பழிதல்

 


கண்தாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய்

தாம்காட்ட யாம்கண்டது.- 1171

கண்கள் தந்ததே இக்காதல் நோய், அவரைக்கண்டு அழுவதும் கண்ணே

தெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப்

பைதல் உழப்பது எவன்.-  1172

கண்களால் வருவதே காதல் துயர், இதைக் கண்கள் உணர்வதில்லை

கதுமெனத் தாம்நோக்கித் தாமே கலுழும்

இதுநகத் தக்க துடைத்து. - 1173

காதலரைக் கண்டு மகிழ்ந்ததும், காணாமல் அழுவதும் கண்களே      

பெயலாற்றா நீருலந்த உண்கண் உயலாற்றா

உய்வில்நோய் என்கண் நிறுத்து. - 1174

காம நோய்தந்த கண்கள் தாமும் அழமுடியாமல் நீர்வற்றி வறண்டன

படலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றாக்

காமநோய் செய்தஎன் கண். - 1175

கடலினும் பெரிய காமம்தந்த கண்கள் இன்று தூங்காது வருந்துகின்றன

ஓஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண்

தாஅம் இதற் பட்டது. - 1176

எனக்குக் காமத்துயர்தந்த கண்கள் தூங்காது வாடுவது எனக்கு மகிழ்வே

உழந்துழந் துள்நீர் அறுக விழைந்திழைந்து

வேண்டி அவர்க்கண்ட கண். - 1177

பார்த்துப் பார்த்து மகிழ்ந்த கண்கள் இன்று தூங்காது வற்றிப்போகட்டும்

பேணாது பெட்டார் உளர்மன்றோ மற்றவர்க்

காணாது அமைவில கண். - 1178

மனதால் விரும்பாதவரை எண்ணி என் கண்கள் வருந்துகின்றன      

வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை

ஆரஞர் உற்றன கண். - 1179

காதலர் வராவிட்டாலும், வந்தாலும் தூக்கமின்றித் தவிப்பன கண்களே

மறைபெறல் ஊரார்க்கு அரிதன்றால் எம்போல்

அறைபறை கண்ணார் அகத்து. - 1180

பறை போன்றன எம் அழும் கண்கள்! அதனால் பிரிவை ஊரார் அறிவர்

 


வியாழன், 17 டிசம்பர், 2020

திருக்குறள் - அதிகாரம் - 117. படர் மெலிந்திரங்கல்


 

மறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க்கு

ஊற்றுநீர் போல மிகும். - 1161

இறைக்க இறைக்க நீர் ஊரும், மறைக்க மறைக்க காதல் பெருகும்    

கரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய் செய்தார்க்கு

உரைத்தலும் நாணுத் தரும். - 1162

இக்காதல் நோயை மறைக்கவோ, அவரிடம் உரைக்கவோ முடியாது   

காமமும் நாணும் உயிர்காவாத் தூங்கும்என்

நோனா உடம்பின் அகத்து. - 1163

காமமும், நாணமும் என் உடலையும், உயிரையும் வருத்தும்

காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும்

ஏமப் புணைமன்னும் இல். - 1164

காமம் என்ற கடலைக் கடக்க காதலன் என்ற படகுதான் இல்லை

துப்பின் எவனாவர் மன்கொல் துயர்வரவு

நட்பினுள் ஆற்று பவர். - 1165

நட்பிலே துன்பம் தருபவர், பகையில் என்ன செய்வாரோ

இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால்

துன்பம் அதனிற் பெரிது. - 1166

காமம் கடல் போன்றது, அதுதரும் துன்பமோ கடலைவிடப் பெரியது   

காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன்

யாமத்தும் யானே உளேன். - 1167

நள்ளிரவிலும் காம வெள்ளத்தில் நீந்தி கரையைக் காணவில்லை      

மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திரா

என்னல்லது இல்லை துணை. - 1168

யாவரும் தூங்க இந்த இரவுக்கு நான் மட்டுமே துணையானேன்

கொடியார் கொடுமையின் தாம்கொடிய இந்நாள்

நெடிய கழியும் இரா. - 1169

காதலரின் பிரிவுத்துயரை விட, இந்த நீண்ட இரவு கொடுமையானது

உள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர்

நீந்தல மன்னோஎன் கண். - 1170

என் உள்ளத்தைப் போல், கண்களும் அவருடனிருந்தால் அழமாட்டேன்

புதன், 16 டிசம்பர், 2020

திருக்குறள் - அதிகாரம் - 116. பிரிவாற்றாமை


 

செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்

வல்வரவு வாழ்வார்க் குரை. - 1151

செல்லாவிட்டால் என்னிடம் கூறு, பிரிவதென்றால் வாழ்பவரிடம் கூறு

இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும்

புன்கண் உடைத்தால் புணர்வு. - 1152

அவருடன் சேர்ந்திருந்தாலும் பிரிவாரே என்ற அச்சமே மிகுகிறது     

அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும்

பிரிவோ ரிடத்துண்மை யான்.- 1153

பிரியேன் என்ற சொல்லை நம்பாதே! அறிவுடையாருக்கும் பிரிவுண்டு

அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல்

தேறியார்க்கு உண்டோ தவறு. - 1154

பிரியமாட்டேன் என்றவர் பிரிந்தால், நம்பியவர் மேல் என்ன தவறு?  

ஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல் மற்றவர்

நீங்கின் அரிதால் புணர்வு. - 1155

காதலர் பிரிந்தால் பின்னர் சேருவது கடினம்

பிரிவுரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிதவர்

நல்குவர் என்னும் நசை.- 1156

பிரிவைத் தெரிவிக்கும் கல்நெஞ்சமுடையவர் பின் சேருவது கடினம் 

துறைவன் துறந்தமை தூற்றகொல் முன்கை

இறைஇறவா நின்ற வளை. - 1157

தலைவனின் பிரிவை, கழன்றுவிழும் என் முன்கை வளையே காட்டும்

இன்னாது இனன்இல்ஊர் வாழ்தல் அதனினும்         

இன்னாது இனியாரப் பிரிவு. -1158

உறவினர் பிரிவைவிட, காதலர் பிரிவு கொடுமையானது

தொடிற்சுடின் அல்லது காமநோய் போல

விடிற்சுடல் ஆற்றுமோ தீ. - 1159

தொட்டால்தான் சுடும் தீ, நீங்கினாலே சுடும் காமம்

அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப்

பின்இருந்து வாழ்வார் பலர். -1160

பிரிவுத்துயரைப் பொறுத்து வாழ்பவர் பலர்

செவ்வாய், 15 டிசம்பர், 2020

திருக்குறள் - அதிகாரம் - 115. அலர் அறிவுறுத்தல்

 


அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப்

பலரறியார் பாக்கியத் தால். - 1141

பழிமொழியால் நிற்கும் என்னுயிர். இதை ஊரார் அறியாதது என் வரம் 

மலரன்ன கண்ணாள் அருமை அறியாது

அலர்எமக்கு ஈந்ததுஇவ் வூர். - 1142

என்னவள் அருமையறியாது அலர் தூற்றி எம்காதலை சேர்த்தது இவ்வூர்

உறாஅதோ ஊரறிந்த கௌவை அதனைப்

பெறாஅது பெற்றன்ன நீர்த்து. - 1143

ஊரார் தூற்றும் பழிமொழியால் பெறாத இன்பத்தை பெற்றது போன்றது

கவ்வையால் கவ்விது காமம் அதுவின்றேல்

தவ்வென்னும் தன்மை இழந்து. - 1144

பழிமொழியால் வாழ்கிறது எம் காதல், அஃதின்றி ஏது இன்பம்        

களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம்

வெளிப்படுந் தோறும் இனிது. - 1145

உண்ணும்போதே மயக்கும் கள்! பேசும்போதெல்லாம் இனிக்கும் அலர் 

கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்

திங்களைப் பாம்புகொண் டற்று. - 1146

ஒரே பார்வைதான் நிலவைப் பாம்பு விழுங்கியதுபோல, ஊரே பரவியது

ஊரவர் கௌவை எருவாக அன்னைசொல்

நீராக நீளும்இந் நோய். - 1147

அலரே எருவாக, தாயின் கடுஞ்சொல்லே நீராக வளர்கிறது காதல்

நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கௌவையால்

காமம் நுதுப்பேம் எனல். - 1148

நெய்யால் தீயை அணைக்கமுடியாது! அலரால் காதலைத் தடுக்கமுடியாது

அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம்பு என்றார்

பலர்நாண நீத்தக் கடை. - 1149

அஞ்சாதே என்றவரே நீங்கியபின் அலருக்கு அஞ்சியிருக்கமுடியுமா?  

தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும்

கௌவை எடுக்கும்இவ் வூர். - 1150

ஊரார் தூற்றும் பழிமொழியால்தான் இன்று அவருடன் செல்கிறேன்

திருக்குறள் - அதிகாரம் - 114. நாணுத் துறவுரைத்தல்

 


காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம்

மடலல்லது இல்லை வலி.- 1131

காதல் நிறைவேறாதவர்களுக்கு மடலன்றி வேறு துணையில்லை   

நோனா உடம்பும் உயிரும் மடலேறும்

நாணினை நீக்கி நிறுத்து. - 1132

அவள் பிரிவைத் தாங்காது, வெட்கத்தைவிட்டு மடலேறத் துணிந்தேன்

நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன்

காமுற்றார் ஏறும் மடல். - 1133

காமம் வந்தால் நாணமும், நல்லாண்மையும் நீங்கிவிடும்            

காமக் கடும்புனல் உய்க்குமே நாணொடு

நல்லாண்மை என்னும் புணை. -  1134

நாணம், நல்லாண்மை என்ற படகுகளை காமவெள்ளம் அழித்துவிடும்

தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு

மாலை உழக்கும் துயர்.  1135

மடலும், மாலை மயக்கமும் தந்தாள் அவள்

மடலுர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற

படல்ஒல்லா பேதைக்கென் கண். - 1136

அவள் பிரிவால் இரவிலும் மடலூர்தலை நினைக்கிறேன் 

கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப்

பெண்ணின் பெருந்தக்க தில். - 1137

கடலளவு காமத்திலும் மடலேறாத பெண்னின் பெருமைக்கு நிகரேது  

நிறையரியர் மன்அளியர் என்னாது காமம்

மறையிறந்து மன்று படும். - 1138

நெஞ்சுறுதி இல்லாதார் காமம் ஊரறிய வெளிப்படும்

அறிகிலார் எல்லாரும் என்றேஎன் காமம்

மறுகின் மறுகும் மருண்டு. - 1139

பலரும் அறியவில்லை என்றெண்ணி பொதுவில் வெளிப்படும் காமம் 

யாம்கண்ணின் காண நகுப அறிவில்லார்

யாம்பட்ட தாம்படா ஆறு. - 1140

காமத்தின் துயர் அறியாதவர்கள், காமவயப்பட்டாரைக் கண்டு நகைப்பர்