வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திங்கள், 21 டிசம்பர், 2020

திருக்குறள் - அதிகாரம் - 118. கண் விதுப்பழிதல்

 


கண்தாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய்

தாம்காட்ட யாம்கண்டது.- 1171

கண்கள் தந்ததே இக்காதல் நோய், அவரைக்கண்டு அழுவதும் கண்ணே

தெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப்

பைதல் உழப்பது எவன்.-  1172

கண்களால் வருவதே காதல் துயர், இதைக் கண்கள் உணர்வதில்லை

கதுமெனத் தாம்நோக்கித் தாமே கலுழும்

இதுநகத் தக்க துடைத்து. - 1173

காதலரைக் கண்டு மகிழ்ந்ததும், காணாமல் அழுவதும் கண்களே      

பெயலாற்றா நீருலந்த உண்கண் உயலாற்றா

உய்வில்நோய் என்கண் நிறுத்து. - 1174

காம நோய்தந்த கண்கள் தாமும் அழமுடியாமல் நீர்வற்றி வறண்டன

படலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றாக்

காமநோய் செய்தஎன் கண். - 1175

கடலினும் பெரிய காமம்தந்த கண்கள் இன்று தூங்காது வருந்துகின்றன

ஓஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண்

தாஅம் இதற் பட்டது. - 1176

எனக்குக் காமத்துயர்தந்த கண்கள் தூங்காது வாடுவது எனக்கு மகிழ்வே

உழந்துழந் துள்நீர் அறுக விழைந்திழைந்து

வேண்டி அவர்க்கண்ட கண். - 1177

பார்த்துப் பார்த்து மகிழ்ந்த கண்கள் இன்று தூங்காது வற்றிப்போகட்டும்

பேணாது பெட்டார் உளர்மன்றோ மற்றவர்க்

காணாது அமைவில கண். - 1178

மனதால் விரும்பாதவரை எண்ணி என் கண்கள் வருந்துகின்றன      

வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை

ஆரஞர் உற்றன கண். - 1179

காதலர் வராவிட்டாலும், வந்தாலும் தூக்கமின்றித் தவிப்பன கண்களே

மறைபெறல் ஊரார்க்கு அரிதன்றால் எம்போல்

அறைபறை கண்ணார் அகத்து. - 1180

பறை போன்றன எம் அழும் கண்கள்! அதனால் பிரிவை ஊரார் அறிவர்

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக