வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

செவ்வாய், 15 டிசம்பர், 2020

திருக்குறள் - அதிகாரம் - 115. அலர் அறிவுறுத்தல்

 


அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப்

பலரறியார் பாக்கியத் தால். - 1141

பழிமொழியால் நிற்கும் என்னுயிர். இதை ஊரார் அறியாதது என் வரம் 

மலரன்ன கண்ணாள் அருமை அறியாது

அலர்எமக்கு ஈந்ததுஇவ் வூர். - 1142

என்னவள் அருமையறியாது அலர் தூற்றி எம்காதலை சேர்த்தது இவ்வூர்

உறாஅதோ ஊரறிந்த கௌவை அதனைப்

பெறாஅது பெற்றன்ன நீர்த்து. - 1143

ஊரார் தூற்றும் பழிமொழியால் பெறாத இன்பத்தை பெற்றது போன்றது

கவ்வையால் கவ்விது காமம் அதுவின்றேல்

தவ்வென்னும் தன்மை இழந்து. - 1144

பழிமொழியால் வாழ்கிறது எம் காதல், அஃதின்றி ஏது இன்பம்        

களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம்

வெளிப்படுந் தோறும் இனிது. - 1145

உண்ணும்போதே மயக்கும் கள்! பேசும்போதெல்லாம் இனிக்கும் அலர் 

கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்

திங்களைப் பாம்புகொண் டற்று. - 1146

ஒரே பார்வைதான் நிலவைப் பாம்பு விழுங்கியதுபோல, ஊரே பரவியது

ஊரவர் கௌவை எருவாக அன்னைசொல்

நீராக நீளும்இந் நோய். - 1147

அலரே எருவாக, தாயின் கடுஞ்சொல்லே நீராக வளர்கிறது காதல்

நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கௌவையால்

காமம் நுதுப்பேம் எனல். - 1148

நெய்யால் தீயை அணைக்கமுடியாது! அலரால் காதலைத் தடுக்கமுடியாது

அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம்பு என்றார்

பலர்நாண நீத்தக் கடை. - 1149

அஞ்சாதே என்றவரே நீங்கியபின் அலருக்கு அஞ்சியிருக்கமுடியுமா?  

தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும்

கௌவை எடுக்கும்இவ் வூர். - 1150

ஊரார் தூற்றும் பழிமொழியால்தான் இன்று அவருடன் செல்கிறேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக