Friday, December 2, 2011

!!எப்படியெல்லாம் புரிந்துகொள்கிறார்கள்!!

என் வாழ்வின்..
கிழ்ச்சியான நேரங்கள் நான் பாடம் எடுக்கும் நேரங்கள்.
வகுப்பிற்குள் சென்றுவிட்டால் நானும் மாணவரானது போன்ற உணர்வு வந்துவிடும். அப்படி மகிழ்ச்சியாக பாடம் நடத்திக்கொண்டிருந்தபோது..

ஒருநாள், எடுத்துக்காட்டுக்காக..

கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைத்த வேல் ஏந்தல் இனிது

திருக்குறள்-772
என்ற குறளைச் சொல்லி, இதன் பொருள் என்ன என்று கேட்டேன்.

ஒரு மாணவன் - ஐயா இது திருக்குறளா? என்றான்.
ஒருவன் - ஐயா இதை நான் பேருந்தில் பார்த்திருக்கிறேன் என்றான்.
இன்னொரு மாணவன் - இதன் பொருளை சாலமன் பாப்பையாவிடம்தான் கேட்கவேண்டும் என்றான்.
இன்னொரு மாணவன் - எதுக்குங்கய்யா வம்பு!
நீங்களே சொல்லீடு்ங்களேன் என்றான்.

சரி பாவம் ஆங்கில வழியே படித்துவரும் தமிழ் மாணவர்களுக்கு தமிழ் வேற்றுமொழிதான். அப்படியிருக்கும்போது திருக்குறள் எப்படி அவர்களுக்குத் தெரியும் என்று நினைத்துக்கொண்டு நானே விளக்கம் சொன்னேன..

தம்பி...
ருவர் வேட்டைக்குப் போறாங்கப்பா..
அதில் ஒருவர் போனவுடன் எதிரே ஓடிய முயலை தன் அம்பால் வீழ்த்தி தோளில் போட்டுக்கொண்டு வெற்றிக் களிப்புடன் அம்பேந்தி வருகிறார்.

ன்னொருவர் யானையைத்தான் வேட்டையாடவேண்டும் என்று திட்டமிட்டு்ச சென்றார். யானையையும் நோக்கி அம்பெய்தார். ஆனால் யானை தப்பி ஓடிவிட்டது. அதனால் பிழைத்த தன் அம்பினை ஏந்தி வருகிறார்.

இதுதானப்பா வள்ளுவர் சொல்லும் குறளின் பொருள் என்றேன்.

எத்தனைபேருக்குப் புரிந்தது என்று தெரிந்துகொள்வோம் என்ற எண்ணத்தில்...

அன்பு மாணவர்களே... நான் சொன்ன இந்த வள்ளுவர் கதையில் இருவர் வருகிறார்கள்...

இருவரில் உங்களுக்கு யாரைப் பிடித்தது? 
யாரை நாம் வாழ்க்கை மாதிரியாகக் கொள்ள வேண்டும்? 

என்று கேட்டேன்


முயலைப் பிடித்துவந்தவன் தான் ஐயா என்று பலரும் ஒருமித்த குரலில் சொன்னார்கள்..

திகைப்படைந்த நானோ..
ஏனப்பா அப்படியொரு முடிவை எடுத்தீர்கள் என்றேன்..

அதில் ஒரு மாணவன் எழுந்து..

ஐயா..

இரண்டாமவன் வெறுங்கையுடன் வந்தான்.

முதலாமவனோ ஏதோ வேட்டையாடிவந்தான்.

“கிடைத்ததைக் கொண்டு சிறப்புடன் வாழ்” என்று சொல்வார்களே. அதுபோல முதலாமவன் தான் எங்களுக்குச் சிறந்தவனாகக் காட்சியளிக்கிறான் ஐயா என்றார்.

பிறகு...
நான், தம்பி..

நீ சொல்வதும் சரிதான்.
ஆனால் வள்ளுவர் பார்வையில்
ஆன்றோர், சான்றோர் பார்வையில்,
அனுபவசாலிகளின் பார்வையில் இரண்டாமவன் தானப்பா சிறந்தவன்.

இரண்டாமனின் இலக்கு மிகவும் பெரிதாக இருக்கிறது பார்த்தீர்களா?
இலக்கின்றி இருப்பதா வாழ்க்கை?
இலக்கு நோக்கிய பயணம் தானே சிறந்தது?

என்று பல்வேறு விளக்கங்கள் சொன்னேன்.

இருந்தாலும் அந்த மாணவர்கள் மனதில் நான் சொன்ன விளக்கங்கள் தேர்வுக்காக எழுதும் பதில்களாகவே அமையும் என்று என் மனம் சொன்னது.

என்றாலும் நான் புரியவைக்கமுடியாத விளக்கத்தை காலம் இவர்களுக்குப் புரியவைக்கும் என்று எண்ணிக்கொண்டேன்.

பாடம் சொல்லிக்கொடுக்கச் சென்று நான் அன்று கற்ற பாடங்கள்.

1.திருவள்ளுவரின் பேச்சு இன்றைய தலைமுறைக்குப் புரியவில்லை.


2.இலக்கியங்கள் வாழ்வைச் செம்மைப்படுத்துவதைவிட மதிப்பெண்களுக்காகவே அதிகம் பயன்படுகின்றன.


3.புரிதல் என்பது புத்தங்களால், ஆசிரியரால் மட்டும் ஏற்பட்டுவிடுவதில்லை.


தொடர்புடைய இடுகைகள்


51 comments:

 1. முயலாமல் கிடப்பதைவிட, முயன்று தோற்பது மேல், என்று எங்கோ படித்த வாசகம் நினைவுக்கு வருகிறது. ஆனால் அதற்க்கு முன்பே வள்ளுவர் இதை உணர்த்திவிட்டார் எனும்போது தமிழ் இலக்கியத்தினை நினைத்து நான் தலை நிமிர்கிறேன். ஆசிரியனும், தகப்பனும் கற்றுக்கொடுக்கும்போது, அவர்கள் கற்றுக்கொள்கிறார்கள். ஆசிரியனின் பணியே, மாணவனை ஒரு மிகச்சிறந்த அனுபத்திற்கு தயார் படுத்துவதுதான். அதை தாங்கள் செம்மையாக செய்து வருவதை நினைத்து, நெஞ்சம் நெகிழ்கிறது. பதிவுக்கு நன்றி அண்ணா!

  ReplyDelete
 2. கிடத்ததைக் கொண்டு வாழ்ந்தால் வாழ்வில் முன்னேற முடியாது.

  ReplyDelete
 3. உலகு பயன் சார்ந்தும் பொருள் சார்ந்தும்
  போய்க்கொண்டிருப்பதால் மாணவர்களின்
  எண்ணம்தான் சரியெனப் படுவதுபோலப் படும்
  வேறு வழியில்லை
  மனம் கவர்ந்த அருமையான பதிவு
  தொடர வாழ்த்துக்கள்
  த.ம 3

  ReplyDelete
 4. நல்ல பதிவு, படம் செம அழகு

  ReplyDelete
 5. மாணவர்கள் சரியாகப் புரிந்து கொள்ளும்படி வழிகாட்டுதல் ஆசிரியரின் கடமை. அழகாக எடுத்துச் சொல்லியிருக்கிறீர்கள். மாணவர்கள் நிச்சயம் புரிந்து கொண்டிருப்பார்கள். குடியின் கொடுமையை விளக்க, ஒரு பாட்டில் சாராயத்தில் புழுக்களைப் போட்டு, இதிலிருந்து என்ன தெரிகிறது என ஒரு ஆசிரியர் கேட்க, சாராயம் குடித்தால் வயிற்றிலுள்ள புழுக்கள் எல்லாம் சாகும் என்று தெரிகிறது சார் என மாணவர்கள் சொன்னதாக நான் படித்திருக்கிறேன். மாணவ உலகம் அத்தகைய குறும்புகள் நிறைந்தது. பின்னாளில் உணர்ந்து கொள்வார்கள் முனைவரையா...

  ReplyDelete
 6. லட்ச்சியத்தில் தோற்றாலும் ... லட்சியம் என்ற ஒன்று இருந்து அதற்காக போராடினான் அல்லவா அது வாழ்வில் நெஞ்சை நிமிர்த்திகொள்ளும் வாழ்க்கை... மிக அழகாக பாடம் நடத்தியுள்ளீர்கள்...

  ReplyDelete
 7. இலக்கு முக்கியம் என்பதை விட கிடைத்ததே மேல் என்ற அர்த்தமே முதலில் புரிந்து கொள்ளப்படுகிறது. அதனால் மாணவர்கள் அந்த பதிலை சொன்னார்கள். பிறகு உங்கள் சரியான விளக்கம் தெளிவு படுத்தியது. பகிர்வுக்கு நன்றி.


  வாசிக்க:
  லஞ்சம் தர பணத்துக்கு பதிலா இப்படியுமா? வீடியோ இணைப்பு

  ReplyDelete
 8. நல்ல பதிவு
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 9. இலக்கு இல்லாத வாழ்க்கை, உபயோகம் இல்லை... உங்கள் மாணவர்கள் ஒரு நாள் பதிவுலகில் காலடி எடுத்து வைக்கும் பொழுது புரிந்து கொள்வார்கள்

  ReplyDelete
 10. படம் ரொம்ப அழகாக இருக்கு நண்பரே

  வாழ்வில் குறிக்கோள் உள்ளவர் அதனை அடைய பாடுபட்டு லட்சியம் எட்டுவர்

  சிலர் கிடைத்தது போதும் என்று வாழ்வில் ஒரு வட்டம் போட்டு வாழ்வர்

  பதிவிற்கு நன்றி நண்பரே

  த.ம 8

  ReplyDelete
 11. மூன்று பாடங்களை நானும் கற்றுக்கொண்டேன்..

  ReplyDelete
 12. திருக்குறள் போன்ற வாழ்வியல் இலக்கியங்கள் வெறும் தேர்வில் மதிப்பெண் பெருவதற்காக மட்டுமே மாணவர்களால் மனனம் செய்யப் படுவதாக மட்டுமே இருந்து வருகிறது...

  பகிர்வுக்கு நன்றி... நண்பரே...

  ReplyDelete
 13. இங்க மாணவர்கள் மிகவும் புத்திசாலிகள்

  ReplyDelete
 14. கடைசியாகச் சொன்ன மூன்றும் ரத்தினங்கள்.

  ReplyDelete
 15. // இலக்கியங்கள் வாழ்வைச் செம்மைப்படுத்துவதைவிட மதிப்பெண்களுக்காகவே அதிகம் பயன்படுகின்றன.//

  உண்மைதான் சகோ. வேதனையான விஷயம்.

  ReplyDelete
 16. நீங்கள் சொல்வது சரி தான். இன்றைய தலைமுறை, திருக்குறளை வெறும் மதிப்பெண்களுக்காகவே பயன்படுத்துகிறார்கள்.

  ReplyDelete
 17. சரியாய்ச் சொன்னீங்க முனைவரே! இதற்கு மாற்றுவழி தான் என்னவோ?

  ReplyDelete
 18. மரத்தில் இருக்கும் பலாக்காயைவிட கையில இருக்கும் கலாக்காயே(வேர்கடலை)மேல் என மாணவர்கள் நினைத்திருப்பார்கள்.
  வாழ்க வளமுடன்
  வேலன்.

  ReplyDelete
 19. கற்பிப்பதும்,கற்றுக்கொள்வதும் ஓர் இனிமை நிறைந்த வாழ்வுமுறைதான்/

  ReplyDelete
 20. பாடம் சொல்லிக்கொடுக்கச் சென்று நான் அன்று கற்ற பாடங்கள்

  அருமையாகச் சொன்னீர் முனைவரே!
  சில நேரங்களில் வாழ்க்கையில் சில அனுபவங்கள் இப்படித்தான்!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 21. "திருவள்ளுவரின் பேச்சு இன்றைய தலைமுறைக்குப் புரியவில்லை."
  அப்பட்டமான உண்மை சார். என்னுடைய ஆசிரியரைப் பற்றித் தான் நேற்று ஒரு பதிவு எழுதி உள்ளேன்.பகிர்விற்கு நன்றி சார்.
  நம்ம தளத்தில்:

  "அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா? - பகுதி 1"

  ReplyDelete
 22. "திருவள்ளுவரின் பேச்சு இன்றைய தலைமுறைக்குப் புரியவில்லை."...

  இது ஓரளவு உண்மை என்றாலும், அதன் காரணத்தை நாம் அறிய வேண்டும்...

  முதலில், தற்போதைய கல்வி முறை மாணாக்கரின் அறிவினையும் ஆர்வத்தையும் வளர்ப்பதை விட, மதிப்பெண்கள் பெற வைப்பதையே விரும்புகிறது...

  தமிழ் செய்யுள் ஒன்றின் பொருள் உணர்ந்த ஒரு மாணவன், அதனைத் தன் பாணியில் விவரிப்பதைத் தேர்வுகள் ஆதரிப்பதில்லை.. புத்தகத்தில் இருப்பதைக் கக்கவே விரும்புகிறன...

  பெரும்பாலன ஆசிரியர்கள் திருக்குறளுக்கு கோனார் உரையைத் தான் சுட்டிக்காட்டுகிறனரே தவிர,பரிமேழலகர் உரையையோ, எளிமையான மு.வ அவர்களின் உரையையோ அவர்களுக்குக் காட்டுவதில்லை..

  பரிமேழலகர் உரையும் செய்யுள் வடிவில் இருப்பதால், புரிந்து கொள்ளுதல் கடினம் என்று கூறுகிறனர்.

  இலக்கணங்கள் நடத்தும் போது, தொடர்புடைய நன்னூல்/ தொல்காப்பிய வரிகளைச் சொல்லி நடத்துபவர்கள் எத்தனை
  பேர்?

  'முயலாகிய கோனார் உரையைப் படி.. மதிப்பெண் பெற போதும்!! யானையாகிய இலக்கிய உரைகள் கடினம்.. அவற்றைப் படித்து எழுதினாலும் முறையே மதிப்பெண்கள் கிட்டா!!' என்கிற பொது கருத்தும் அவர்கள் இலக்கு முயலை நோக்கியே இருப்பதற்கான காரணங்களுள் ஒன்று தானே!!
  (இப்படிக்கு ஒரு மாணவன்)

  பி.கு:
  இதற்கு நீங்கள் விதிவிலக்காக இருக்கலாம்...
  எனது பத்தாம் வகுப்பு தமிழ் ஐயாவும் விதிவிலக்கு.. அவர் தான் எனக்குள் தமிழ் ஆர்வத்தைத் தூண்டிய விளக்கு!!

  என் கருத்துகள் உங்களைப் புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்!

  ReplyDelete
 23. அருமையான பதிவு!

  ReplyDelete
 24. @விச்சுஅறிவுறுத்தலுக்கு நன்றி விச்சு

  ReplyDelete
 25. @கணேஷ்எடுத்துக்காட்டிற்கு நன்றிகள் ஐயா

  ReplyDelete
 26. @suryajeevaஅழகாகச் சொன்னீர்கள் நண்பா.

  ReplyDelete
 27. @ராஜா MVSவருத்தத்துக்குரிய ஒன்றுதான் நண்பா.

  ReplyDelete
 28. @முனைவர்.அ.சின்னதுரைஇந்த நிலை மாற ஆசிரியர்கள் பெரும்பங்கு ஆற்றவேண்டும் முனைவரே..

  பாடத்துக்கு அப்பாற்பட்டு மாணவர்களுக்குத் திருக்குறளின் மேல் ஒரு ஈர்ப்பு ஏற்பட நாம் துணைநிற்கவேண்டும்..

  ReplyDelete
 29. @வேலன்.தங்கள் புரிதலுக்கு நன்றி வேலன்.

  ReplyDelete
 30. @புலவர் சா இராமாநுசம்தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி புலவரே

  ReplyDelete
 31. @ஆளுங்க (AALUNGA)மாணவர் மனநிலையை நன்கு உணர்ந்து ஆழமான விளக்கவுரை தந்தமைக்கு நன்றிகள் அன்பரே..


  தாங்கள் குறிப்பிடுவது மறுக்கமுடியாத உண்மை..

  சிந்திப்போம்.

  ReplyDelete
 32. "இவரெல்லாம் திருக்குறள் எழுதலைன்னு யார் அழுதா?" இது எனது படிக்கும் காலத்திய (மனப்பாட பகுதிக்கு பயந்து) மன நிலை. ஆனால் இப்போது விழுந்து வணங்கி கும்பிடுகிறேன். தலையில் வைத்து கொண்டாடுகிறேன். குழந்தைகள் தானே, குறும்பானவர்கள். வளரும் போது எல்லாம் மாறும்.

  ReplyDelete
 33. @ரசிகன்தங்கள் வருகைக்கும் அனுபவப் பகிர்வுக்கும் நன்றி நண்பரே

  ReplyDelete
 34. நல்ல பதிவு. எங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி

  ReplyDelete