வியாழன், 26 மார்ச், 2009

மனதில் நின்ற நினைவுகள்நம் வாழ்வில் நம்மைச் சுற்றி நிறைய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.நூல்கள் வாயிலாகவும்,ஊடகங்கள் வாயிலாகவும் பல கருத்துக்கள் நம்மை வந்தடைகின்றன.என்றாலும் சில கருத்துக்கள் மட்டுமே நம் மனதில் நங்கூரமிட்டுப் பதிந்துவிடுகின்றன.அந்த அடிப்படையில் என்னில் பதிந்த சில பதிவுகளை இனி இலக்கிய,இணையப்பதிவுகளுக்கு இடையே தரவுள்ளேன்.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் தமிழுலகம் நன்கறிந்த பாடலாசிரியர் ஆவார்.அவர் திரைப்படப் பாடலாசிரியராக முயற்சி செய்து கொண்டிருந்த போது மிகுந்த வறுமை நிலையில் இருந்தாராம்.சில தயாரிப்பாளர்கள் தரும் சிறு தொகையை ஊதியமாகப் பெற்று தம் வாழ்க்கையை ஓட்டி வந்தாராம். இந்த நிலையில் ஒரு தயாரிப்பாளரிடம் பாடல் எழுதிக்கொடுத்தாராம்.அந்தப் பாடலாசிரியர் அதற்கான ஊதியத்தை உடனே தராமல் நாளை, நாளை என நாட்களைக் கடத்தி வந்தாராம்.பசியோடு அடுத்த வேளை உணவுக்குக் கூட வழியில்லாதபோது, அந்தத் தயாரிப்பாளரைப் பார்த்து பணம் பெறச் சென்றாறாம்.இவர் வருவதைப் பார்த்த தயாரிப்பாளர் தம் வீட்டின் உள்ளே இருந்து கொண்டு கவிஞரைக் காத்திருக்கச் சொல்லி தன் உதவியாளரிடம் கூறி அனுப்பினாராம். பட்டுக்கோட்டையார் ஒரு சிறு காகிதத்தில் ,ஒன்றை எழுதி மேசையின் மீது வைத்துவிட்டுச் சென்றாறாம்.அதனைப் படித்துப் பார்த்த தயாரிப்பாளர் சற்றும் தாமதிக்காது,விரைந்து சென்று கவிஞரைப் பார்த்து பணத்தைக் கொடுத்து நடந்த தவறுக்கு வருத்தம் தெரிவித்துக் கொண்டாராம்.அந்த அளவுக்கு அவர் என்ன எழுதினார் தெரியுமா?


"தாயால் பிறந்தேன்
தமிழால் வளர்ந்தேன்
நாயே நேற்றுன்னை
நடுதெருவில் சந்தித்தேன்
நீ யாரடா என்னை நில்லென்று சொல்வதற்கு"


என எழுதியிருந்தாராம்.இதைப்படித்த தயாரிப்பாளர்.இந்த வறுமை நிலையிலும் இவரிடம் இருக்கும் மனவலிமையும்,தமிழ்ச்செறுக்கும் கண்டு வியந்து போனார்...........என்ற கருத்து ஏனோ என் மனதை விட்டு அகல மறுக்கிறது. பணமே வாழ்க்கை என வாழும் மாக்கள் மத்தியில் இது போன்ற மனித எடுத்துக்காட்டுகள் நம்மை செம்மையாக வாழத் தூண்டுபவையாக இருக்கின்றன என்றால் அது மிகையாகாது.

7 கருத்துகள்:

 1. நான் பட்டுக்கோட்டையை பாட்டுக்கோட்டையாக்கியவனின் ஊர் அருகில் பிறந்தவன் என்பதில் மகிழ்சிக்கொள்கின்றேன்... ஆனால் தற்பொழுது இது மாதிரி கவிஞர் எழுதியிருந்தால் அல்லக்கை கூட்டத்தைவிட்டு விரட்டியிருப்பான் பணப்பெருச்சாளி!
  அருமையாண சம்பவத்தை தெருவித்ததற்கு நன்றி

  பதிலளிநீக்கு
 2. நண்பரே பார்த்தேன்... படித்தேன்... ரசித்தேன். இன்னும் அவர் குறித்து நிறைய எழுதலாம் என்று எண்ணுகிறேன்.... பார்க்கலாம்.

  பதிலளிநீக்கு
 3. நல்ல பகிர்வுங்க.... எனக்கு பிடித்த கவிஞர்... அவரைப்பற்றி நான் எழுத வேண்டும் என்ற எண்ணம் அதிகம் உள்ளது....

  பதிலளிநீக்கு
 4. முடிந்தால் கவிஞர் வைரமுத்துவிற்கு சுட்டியை மின்னஞ்சல் செய்யுங்கள்

  பதிலளிநீக்கு
 5. @ஆ.ஞானசேகரன் தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றிகள் நண்பா

  மனமுள்ளவன் தான் மனிதன்
  மானமுள்ளவன் தான் மனிதன்

  என்பதை வாழ்ந்துகாட்டியவர் பட்டுக்கோட்டையார்..

  நீங்கள் சொல்வதுபோல இன்றைய கவிஞர்கள் அறிந்துகொள்ளவேண்டிய வாழ்வியல்தான் இவர் வாழ்வியல்!

  பதிலளிநீக்கு