வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

புதன், 2 ஜூன், 2010

உன்னைவிட நல்லவன்?


ஒருவர் இறந்த பின்னர் மக்கள் அவரைத் தூக்கிக் கொண்டு ஊர்வலமாகச் சென்றனர். குரு தன் சீடரை அழைத்து,
நீ சென்று இறந்தவர் சொர்கத்துக்குப் போகிறாரா? நரகத்துக்குப் போகிறாரா? என்று பார்த்துவா என்றார்.

திரும்பிய சீடர், குருவிடம் சொன்னார்.

குருவே இறந்தவர் சொர்கத்துக்குத் தான் செல்கிறார் என்று.

குருவைப் பார்க்க வந்த ஒருவர் இதனைப் பார்த்து வியப்படைந்தார்.
ஒருவர் இறந்தபின்னர் சொர்க்த்துக்குப் போகிறாரா? நரகத்துக்குப் போகிறாரா? என்பதைப் பார்க்கமுடியுமா? என்று குருவிடம் கேட்டார்.

குரு சொன்னார்,

ஒருவரின் இறுதி ஊர்வலமே இறந்தவரின் வாழ்க்கைக்கான அடையாளம். அவர் நல்லவரா? தீயவரா? என்பதை அவருக்குப் பின் செல்லும் மக்கள் பேசிச் செல்வர். அவர்கள் இவரைப் பற்றி உயர்வாகப் பேசினால் இறந்தவர் சொர்கத்துக்குப் போகிறார் என்றும், அவரைப் பற்றி இழிவாகப் பேசினால் அவர் நரகத்துக்குப் போகிறார் என்றும் உணர்ந்து கொள்ளலாம் என்றார் குரு.

சொர்க்கம்,நரகம் இரண்டும் மனித நம்பிக்கையின், நெறி்ப்படுத்தும் முயற்சியின் அடையாளங்கள்.

பாரதியார் இறந்த பின்னர் அவர் உடலில் மொய்தத் ஈக்களின் எண்ணிக்கை கூட அவரைப் பார்க்க வந்த மக்களின் எண்ணிக்கை இல்லை!

பாரதியார் நல்லவரா? தீயவரா?

பாரதி சொர்க்கத்துக்குச் செல்வாரா?
நரகத்துக்குச் செல்வாரா?

பாரதி நல்லவர் தான்! அவர் சொர்கத்தில் தான் வாழ்கிறார்.

ஆம் இன்னும் அவரின் சிந்தனைகள் மறையவில்லையே.
மக்களின் மனம் என்னும் சொர்க்கத்தில் தானே அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

இப்படி நல்லவர் தீயவர் என்பதற்கான வரையறை நிலையானதல்ல.

நல்ல பண்புகளைக் கொண்ட ஒருவரை தீயவராக எண்ணுதலும்
தீய பண்புகளைக் கொண்ட ஒருவரை நல்லவராக எண்ணுதலும் இவ்வுலகத்தின் இயல்பு.

ஒருவரின் மரணத்தி்ன் பின்னரே அவர் நல்லவர், தீயவர் என்பதை மக்கள் முழுமையாக ஏற்றுக்கொள்வர்.


கரிகாலன் சேரலாதனைப் போரில் வென்றான்.
சேரலாதன் தன் மார்பில் தைத்த வேல் முதுகு வழியே வந்ததால் புறப்புண் என நாணி வடக்கிருந்தான்.

இருவரில் யார் நல்லவர்?

இதனை உணர்த்துகிறது இப்பாடல்,

நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி,
வளிதொழில் ஆண்ட உரவோன் மருக!
களி இயல் யானைக் கரிகால் வளவ!
சென்று, அமர்க் கடந்த நின் ஆற்றல் தோன்ற
வென்றோய், நின்னினும் நல்லன் அன்றே
கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை,
மிகப் புகழ் உலகம் எய்திப்,
புறப்புண் நாணி, வடக் கிருந்தோனே!


66. புறநானூறு.
பாடியவர்: வெண்ணிக் குயத்தியார்: வெண்ணிற் குயத்தியார் எனவும் பாடம்.
பாடப்பட்டோன்: சோழன் கரிகாற் பெருவளத்தான்.
திணை: வாகை. துறை : அரச வாகை.


நீர் செறிந்த பெரிய கடலில் மரக்கலம் (கப்பல்) செலுத்தியும், அது அசையாதபோது காற்றினை ஏவல் கொண்டு செலுத்தும் வலிமையுடையவனின் வலித்தோன்றலே!

மதங்கொண்ட ஆண்யானையை உடைய கரிகால் வளவனே!

போருக்குச் சென்ற நீ ஆற்றல் தோன்ற வெற்றி கண்டாய்!

புதுவருவாயையுடைய வெண்ணியில் ஊர்ப்புறத்தில் போர்க்களத்தில் மிகப் புகழமைந்த உலகை விரும்பி, புறப்புண்ணுக்கு நாணி வடக்கிருந்தோனுமான பெருஞ்சேரலாதன் உன்னை விட நல்லவன் அல்லவா?


பாடல் உணர்த்தும் கருத்து.


­1. அரசனின் இயல்பு கூறும் அரசவாகை என்னும் புறத்துறை சுட்டப்படுகிறது.

­2.காற்றினை ஏவல் கொண்டு மரக்கலத்தைச் செலுத்தியும், காற்றில்லாதபோது அதனைத் தம் ஆளுகைக்கு உட்படுத்தி மரக்கலத்தைச் செலுத்தும் சோழரின் மாண்பும்,

வளிதொழில் ஆண்ட உரவோன் மருக!

என்னும் அடிகளால் உணர்த்தப்படுகின்றன. இதனால் பழந்தமிழரின் கடல் வணிகமும், கப்பல் செலுத்தும் அறிவும், ஆற்றலும் புலப்படுகின்றன.

­
3. எல்லா வெற்றியும் வெற்றியல்ல!
எல்லாத் தோல்வியும் தோல்வியல்ல!
ஒவ்வொரு வெற்றிக்குள்ளும் ஒரு தோல்வி உள்ளது!
ஒவ்வொரு தோல்விக்குள்ளும் ஒரு வெற்றியுள்ளது!

என்னும் அறிய வாழ்வியல் தத்துவத்தை இப்பாடல் உணர்த்துகிறது.


4.போரில் வென்ற சோழனின் வெற்றியை விட,

போரில் தோற்றாலும் மானத்துக்கு அஞ்சி உயிரைவிட எண்ணும் சேரலாதன் நல்லவனாகப் புலவர் கண்ணுக்குப்படுகிறான்.

இப்புலவர் சொல்கிறார் கரிகாலனே நீ நல்லவனே!
ஆனால் உன்னைவிட நல்லவன் சேரன்!

என்று.

5.வாழும் போது நம்மை யார்யாரே நல்லவர் என்றும் கெட்டவர் என்றும் சொல்வார்வகள்.

நாமும் நம்மைப் புகழும் போது அகமகிழ்ந்தும், இகழும் போது வருந்தியும் வாடுவோம்.

நாம் நல்லவர் என்பதும் தீயவர் என்பதும் அவர்களின் வார்த்தையிலில்லை.
நாம் வாழும் வாழ்க்கையில் தான் இருக்கிறதே என்னும் வாழ்வியல் நுட்பமே இப்பால் உணர்த்தும் கருத்தாக அமைகிறது.

10 கருத்துகள்:

  1. நல்ல கருத்துக்கள் நண்பரே , அனைவரும் சொர்க்கத்துக்கு போகவேண்டும் என்பதே என்னுடைய எண்ணம் . உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் குணசீலன்,

    அருமையான பகிர்வு.

    ஆனாலும்,

    //பாரதியார் இறந்த பின்னர் அவர் உடலில் மொய்தத் ஈக்களின் எண்ணிக்கை கூட அவரைப் பார்க்க வந்த மக்களின் எண்ணிக்கை இல்லை!//

    இந்த சொல்லாடல் கவிஞர் வைரமுத்து அவர்களின் மிகைப்படுத்தப்பட்ட கற்பனையாக இருக்கலாம். அல்லது அவரது கற்பனை வளத்தை வெளிப்படுத்திக்கொள்ள பயன்படுத்துயதாய் இருக்கலாம்.

    மாகவியை இழிவு படுத்துவது போல் அல்லவா இருக்கிறது அந்த வரிகள்?

    பதிலளிநீக்கு
  3. இவ்வாறு நீங்கள் தொடர்ந்து எழுதவேண்டும் ஆசிரியரே.

    பதிலளிநீக்கு
  4. @சத்ரியன் நண்பரே முழுக்க அப்படி ஒதுக்கிவிடமுடியுமா என்ன?

    வாழும்போது நாம் யாரை முழுவதும் மதித்திருக்கிறோம்?

    பாரதி
    பாரதிதாசன்
    தேவநேயப்பாவாணர்...

    என அவர்களின் வாழ்க்கை அவலத்துக்குரியதாகத் தான் இருந்திருக்கிறது நண்பரே.

    பாரதி பற்றிய வாழ்வியல் தடயங்கள் அவர்பட்ட துன்பத்தைக் காட்சிப்படுத்திக்காட்டுவனவாகவே அமைகின்றன.

    இதை மிகைப்படுத்தல் என என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை,

    என்றாலும் தங்கள் மாறுபட்ட நோக்கு சிந்திக்கச் செய்வதாகவுள்ளது.

    வருகைக்கும் சிந்தனைப் பகிர்வுக்கும் நண்பா.

    பதிலளிநீக்கு
  5. @ஜோதிஜி மகிழ்ச்சி நண்பரே..

    தொடர்ந்து எழுதுகிறேன்.

    பதிலளிநீக்கு
  6. நீண்ட இடைவேளைக்குப் பிறகு தங்கள் வலைத்தளத்துக்கு வருகை தருகிறேன். நல்லதொரு கருத்தை படிக்க நேர்ந்த இன்றைய பொழுதை எண்ணி மகிழ்கிறேன். தொடர்ந்து எழுதுங்கள். நானும் தொடர்ந்து படிக்க முயல்கிறேன்.

    பதிலளிநீக்கு
  7. என் பள்ளிப்பருவத்தில் வந்த எங்கள் தமிழய்யா புலவர் சின்னமாடசாமி அவர்களே வந்து புறநானுற்று பாடல் நடத்தியது போலிருந்தது!!!நண்பரே
    நன்றி

    பதிலளிநீக்கு