வியாழன், 26 மே, 2011

மொழிபெயர்ப்பாளர் தேவை.


பணி – மனிதனாக இருத்தல்.
அடிப்படைத் தகுதி – மனம் உடையவராக இருக்கவேண்டும்.

பிற தகுதிகள்.

1. இயற்கையைக் காதலிக்கத் தெரிந்திருக்கவேண்டும்.
2. இயற்கையின் மொழிகளைப் புரிந்துகொண்டு எடுத்துச்சொல்லத் தெரிந்திருக்கவேண்டும்.

வயது – குழந்தையாக, குழந்தை மனநிலையுடையவராக இருத்தல் வேண்டும்.(1முதல்100வயது வரை)

சம்பளம்

சிரிப்பு – மகிழ்ச்சி – நீண்டகாலம் வாழும் வாய்ப்பு.

பணிச்சூழல்.

கட்டிடங்களுக்கு வெளியே, வானத்துக்கு கீழே, காற்றுவெளியில்,
காசின் ஓசைகளைக் கடந்து.

விண்ணப்பப் படிவம்.

கீழ்கண்டவை என்ன மொழி என்பதைக் காலியிடங்களி்ல் நிறைவுசெய்க.

பறவைகளின் சிறகசைப்பு -
குயிலின் சோககீதம் -
மயிலின் ஆடல் -
எறும்புகளின் தேடல் -
விலங்குகளின் அச்சுறுத்தல் -
மழையின் சங்கீதம் -
இலைகளின் சலசலப்பு -
பனித்துளிகளின் ஈரம் -
மலர்களின் நறுமணம் -
மலர்களுக்கு வண்டு செய்யும் சொற்பொழிவு -
நட்சத்திரங்களின் கண்சிமிட்டல் -
நிலவின் ஒளி -
வானவில்லின் வண்ணங்கள் -
காலை வானி்ன் புதுப்பொலிவு -
அந்தி வானின் வெட்கம் -
சூரியனின் வெப்பம் -
தீயின் ஓயாப்பேச்சு -
கடற்கரை மண்ணுக்கு அலைதரும் முத்தம் -


இயற்கையின் மொழிதான் என்ன..?

செம்மொழி, பச்சைமொழி, வெள்ளைமொழி..

இப்படி ஏதாவது ஒன்றா..?

தமிழ், வடமொழி, தமிங்கிலம், ஆங்கிலம் இப்படி ஏதாவதா?

(செம்மொழி பற்றி ஓராண்டுகாலம் படித்த மாணவன் தேர்வில் எழுதுகிறான்....

செம்மொழி என்றால் சிவப்பா இருக்கும். இதனைத் தோற்றுவிததவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் என்று..)

மனிதர்கள் பேசும் மொழியால் இயற்கையைப் புலப்படுத்த முடியுமா?

சரி!
இயற்கையின் மொழிகளை முழுதும் உணர்ந்தவர்கள் யார்?

ஓவியரா..?
(இவர் சில கோடுகளையும் வண்ணங்களையும் கொண்டு இதுதான் இயற்கையின் மொழி என்பார்.)

கவிஞரா..?

(இவர் வார்த்தைகளோடு சண்டையிட்டுக்கொண்டிருப்பவர்.
இயற்கை வார்த்தைகளுக்குள் அடங்குமா?)
விஞ்ஞானியா..?

(இவர் சோதனைக் குழாய்களில் அடைத்து வைத்து பகுப்பாய்வு செய்ய இயற்கை என்ன சிறுபொருளா?)

சரி யாரால் தான் இயற்கையை மொழிபெயர்க்கமுடியும்..?
(எனக்குத் தெரிந்தவரை குழந்தைகளால் மட்டுமே இயற்கையை உணரமுடியும், மொழிபெயர்க்கமுடியும்.)

இயற்கையின் மொழி சிரிப்பு.
அதனால் தான் குழந்தைகள் சிரித்துக்கொண்டே இருக்கின்றன.

நிலவைக் காட்டிக் கூட சோறூட்டமுடிகிறது.
பறவைகளை, விலங்குகளைக் காட்டிக்கூட அழுகையை நிறுத்தமுடிகிறது.

அதனால்...

இந்த மொழிபெயர்ப்பாளர் பணியிடத்துக்கு குழந்தைகள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க விரும்புபவர்கள்..

குழந்தை மனநிலையுடன் சிரிப்பு என்னும் வரைவோலை எடுத்து இயற்கை என்னும் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.

விண்ணப்பிக்க வேண்டிய இறுதிநாள் –ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நொடியும்.


(வெறும் கண்துடைப்புக்காக எத்தனையோ காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்புகளைப் பார்க்கிறோம், விண்ணப்ப படிவங்களை நிறைவுசெய்கிறோம்....

இந்த விண்ணப்ப படிவத்தை நிறைவு செய்வதால்..

1.மனிதர்கள் பேசும் மொழியில் உயர்வு தாழ்வு எதுவுமில்லை என்பதை உணர்வோம்.

2.இயற்கையின் மொழிக்கு முன் மனிதர்பேசும் மொழி எந்தவிதத்தில் உயர்ந்தது என்பதை சிந்திப்போம்

3. மனமுடைய மனிதனாக, இயற்கையைக் காதல் கொண்டவராக வாழ முயல்வோம் என்ற எண்ணம் வரும் என நினைக்கிறேன்)

குறிப்பு - ஒரு நாளில் ஒருமணிநேரமாவது மனிதனாக வாழ முயற்சி செய்வோம்.

16 கருத்துகள்:

 1. வயது – குழந்தையாக, குழந்தை மனநிலையுடையவராக இருத்தல் வேண்டும்.(1முதல்100வயது வரை)
  குழந்தை மனநிலையுடன் சிரிப்பு என்னும் வரைவோலை எடுத்து இயற்கை என்னும் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.

  விண்ணப்பிக்க வேண்டிய இறுதிநாள் –ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நொடியும். //
  so lovably.

  பதிலளிநீக்கு
 2. இயற்கையை இயற்கையாய் எடுத்துரைத்து சிரிப்பின் மகத்துவத்தையும், அது இருப்பிடம் கொள்ளும் குழந்தைகளையும், குழந்தை மனதுடைய மற்றவர்களையும் சிறப்பாய்ச் சொல்லியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 3. ஒரு நாளில் ஒரு மணிநேரமல்ல ஒரு நிமிடமாவது மனிதனாக வாழ முயற்சிப்பார்களா என்பதே சந்தேகம்.

  உங்கள் பதிவுகளில் இப்பல்லாம் நிறைய வித்தியாசம்.வாழ்த்துகள் குணா !

  பதிலளிநீக்கு
 4. அன்பின் மொழி, தென்றலின் வருடல், தாய்மையின் பொலிவு, மழலையின் சிரிப்பு, இயற்கையின் கருணை,பசியாறிய நிறைவு, இறைவனின் ஆசி என இன்னபிற இனியவை கண்டேன் இப்பதிவில் குணா...உண்மையான ஆசிரியரின் மனம் கண்டேன்..குரு..தெய்வம்..

  பதிலளிநீக்கு
 5. @வை.கோபாலகிருஷ்ணன் இடுகையின் இலக்கை சரியாகப் புரிந்துகொண்டமைக்கு நன்றி அன்பரே.

  பதிலளிநீக்கு
 6. @தமிழரசி நீண்ட நாட்களுக்குப் பின்னர் தங்கள் வருகையும் கருத்துரையும் பெருமகிழ்வளிப்பதாகவுள்ளது.

  நன்றி தமிழ்.

  பதிலளிநீக்கு
 7. மாறுபட்ட கற்பனை... மாறுபட்ட கற்பனை.

  பதிலளிநீக்கு