வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஞாயிறு, 8 ஜூலை, 2012

ஓடஓடஓட தூரம் குறையல...


  ஒரு ஊரில் செல்வந்தர் ஒருவர் இருந்தார். அவர் தம் வண்டிக்காரனை அழைத்து,

  நாளை காலை நாம் பக்கத்து ஊருக்கு ஒரு திருமணத்துக்குச் செல்லவேண்டும்திருமணம் காலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது. அதனால் இரவு 3 மணிக்குக் கிளம்பினால் தான் போகமுடியும். நீ இரவு தூங்கிவிடாமல் எழுந்து வண்டியில் மாட்டைக் கட்டிவிட்டு என்னை எழுப்பிவிடு என்று சொன்னார்.

  வண்டிக்காரனும் சரி என்றான்.

  பின் அந்த செல்வந்தர் அந்த வண்டிக்காரனிடம். ஆமாம் எந்த மாடுகளை வண்டியில் பூட்ட இருக்கிறாய்? என்றார்.

  நேற்று அந்த செக்குக்காரரிடம் வாங்கினோமே இருமாடுகள். அவற்றைத்தான் ஐயா என்றான் அந்த வேலைக்காரன்.

  இவரும் சரிப்பா மறந்துடாதே.. தூங்கிவிடாதே என்று எச்சரித்துவிட்டுத் தூங்கச் சென்றுவிட்டார்.

  இவனும் சரியான நேரத்துக்கு எழுந்து மாடுகளைப் பூட்டிவிட்டு மெத்தைகளெல்லாம் போட்டுவிட்டு செல்வந்தரை சரியாக 2.45 மணிக்கு எழுப்பினான்.

  நல்ல தூக்கத்திலிருந்த அவரும் பாதிக்கண்களைத் திறந்துகொண்டு வந்து மீதித் தூக்கத்தை மாட்டுவண்டியிலேயே தொடர்ந்தார்.

  வண்டிக்காரனுக்கும் தூக்கம் கண்களைத் தழுவியது. இருந்தாலும் சமாளித்துக்கொண்டே வந்தான். மாட்டுவண்டி இவர்கள் செல்லவுள்ள முதன்மைச் சாலைக்கு வந்ததும் இவனும் இந்தச்சாலை நேராக அந்த ஊருக்குத் தானே செல்கிறது. நாம் ஏன் விழித்துக்கொண்டே வரவேண்டும். மாடுகள் ஓடும் மணியோசை காதுகளில் கேட்டுக்கொண்டே தானே வருகிறது. மாடுகளின் மணியோசை நின்றால் மட்டும் நாம் விழித்துப்பார்த்தால் போதாதா? என்று தோன்றியது. அதனால் மாட்டுக்காரனும் வண்டியில் அமர்ந்த நிலையிலேயே நன்றாகத் தூங்கிவிட்டான்.

  சிறிதுதூரம் சரியான வழியில் சென்ற மாடுகள், முன்பு தாம் இருந்த செக்குக்காரர்  வீட்டுக்குச் செல்லும் வழிகளைக் கண்டதும் வளைந்து அங்கே சென்றுவிட்டன. சென்ற மாடுகள் இத்தனை ஆண்டுகாலமாகத் தாம் சுற்றிக்கொண்டிருந்த செக்குகளைப் பார்த்ததும். பழைய நினைவுவந்து அந்த செக்கையே விடியவிடிய சுற்றிக்கொண்டிருந்தன.

 1. மாடுகளுக்கு நினைவு நாம் செக்கைத்தான் சுற்றிக்கொண்டிருக்கிறோம் என்று,

 2. வண்டிக்காரனுக்கு நினைவு நம் மாடுகள் விரைவாகவும், சரியான பாதையிலும்தான் சென்றுகொண்டிருக்கின்றன என்று,

 3. செல்வந்தருக்கு நினைவு நாம் திருமணத்துக்கு உரிய நேரத்தில் சென்றுவிடுவோம் என்று..

 4. பொழுதும் விடிந்தது...

  வண்டிக்காரனும், செல்வந்தரும் இன்னும் தூங்கிக்கொண்டுதான் இருக்கிறார்கள்..

  வண்டிமாடுகளும் செக்கைச் சுற்றிக்கொண்டேதான் இருக்கின்றன.
  மணியோசையும் கேட்டுக்கொண்டே தான் இருக்கிறது.

  அந்தச் செக்குக்காரர் வந்து இந்தக் காட்சியைப் பார்த்து சிரியோ சிரியென்று சிரித்தார். பின் அருகே சென்று அந்த வண்டிமாடுகளை நிறுத்திவிட்டு அந்த செல்வந்தரை எழுப்பி என்னங்க நேற்று ஏதோ திருமணத்துக்குப் பக்கத்து ஊருக்குப் போறேன் என்று சொன்னீங்க. இங்கு வந்து சுற்றிக்கொண்டிருக்கிறீங்க? என்று கேட்டார்.

  நொந்துபோன செல்வந்தார் அந்தவண்டிக்காரனை வேலையைவிட்டு நீக்கிவிட்டார்.

  என்றொரு கிராமியக் கதை உண்டு

  இந்தக் கதையை அப்படியே இன்றைய கல்விநிலையோடு ஒப்பிட்டுப் பாருங்களேன்..


  செல்வந்தர் - பெற்றோர்
  வண்டிக்காரன்- கல்விநிறுவனங்கள், ஆசிரியர்கள்
  மாடு - மாணவர்கள்


  இன்றைய பெற்றோர்கள், தம் பிள்ளைகளை நல்ல கல்வி நிறுவனங்களில் சேர்ப்பதோடு தம்கடமை முடிந்துவிட்டது என நினைக்கிறார்கள்..

  கல்விநிறுவனங்கள் இம்மாணவர்களுக்கு அதிக மதிப்பெண்களோடு பட்டச்சான்றிதழ் கொடுத்தால் போதும் என நினைக்கிறார்கள்

  மாணவர்கள், எல்லோரையும் போல நாமும் தேர்ச்சியடைந்து வேலைகிடைத்தால் போதும் என நினைக்கிறார்கள்...

  அந்த செல்வந்தரோ, வண்டிக்காரனோ, மாடுகளோ தாம் செல்லும் வழி சரிதானா என இடையில் ஒருமுறையாவது விழித்துப்பார்த்திருந்தால் அவர்கள் சரியான நேரத்துக்குத் சரியான இடத்துக்குச் சென்றிருப்பார்கள்.

  அதுபோல..

  இன்றைய மாணவர்கள்....
  கல்விச்சாலை செல்கிறார்கள்..
  படிக்கிறார்கள்..
  பட்டம் பெறுகிறார்கள்..
  வேலைக்குச் செல்கிறார்கள்...

  இவையெல்லாம இவர்கள் விரும்பித்தான் செய்கிறார்களா?
  என எத்தனை பெற்றோர்கள் தம் பிள்ளைகளிடம் கேட்கிறார்கள்?


  மதிப்பெண்ணுக்கு மேல் ஒரு மாணவனை எப்படி மதிப்புக்குரிய மனிதனாக உருவாக்கவேண்டும் என எத்தனை கல்விநிறுவனங்கள் சிந்திக்கின்றன?

  பெற்றோர் படிக்கவைக்கிறார்கள், கல்வி நிறுவனங்கள் சொல்லித்தருகிறார்கள் நம் கடமை படிப்பது என்று மட்டுமே சிந்திக்கும் மாணவர்களில் எத்தனை பேரின் உழைப்பு அவர்களின் குடும்பத்தைக் கடந்து சமூகத்துக்குப் பயன்படுகிறது?

  என இந்தக் கதையோடு இன்றைய கல்வியின் பல்வேறு முகங்களையும் ஒப்பிட்டு நோக்கமுடிகிறது.


  செக்குமாடும் உழைக்கிறது.. ஆனால் அதன் உழைப்பு பயன்படுகிறதா?

  மாணவர்களும் நன்றாகத்தான் படிக்கிறார்கள்! ஆனால்.. அவர்களின் உழைப்பு அவர்களின் குடும்பத்தைக் கடந்து சமூகத்துக்குப் பயன்படுகிறதா?

                                  
  என்பதுதான் இந்த இடுகை வாயிலாக நான் தங்கள் முன்வைக்கும் வினா.


தொடர்புடைய வினா.


மறைபொருள் தெரிகிறதா

27 கருத்துகள்:

 1. கிராமத்து உவமைக் கதையோடு அழமான விடயத்தை மிக எளிமையாக சொன்னீர்கள்

  ஒழுக்க விழுமியங்கள் அற்ற கல்வி முழுமையானது அல்ல

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒழுக்க விழுமியங்கள் அற்ற கல்வி முழுமையானது அல்ல

   அழகாகச் சொன்னீர்கள் நண்பா.
   வருகைக்கும் மறுமொழிக்கும நன்றிகள்.

   நீக்கு
 2. அருமையான ஒரு கதைமூலம் இன்றைய
  கல்வி நிலையை அப்பட்டமாக புரிய வைத்துவிட்டீர்கள் முனைவரே...
  அத்தனையும் உண்மை....
  இதில் யாரை குற்றம் சொல்ல...
  ஒருவருக்கு ஒருவர் மாற்றி மாற்றி குற்றம் சொல்லிக்கொள்ள
  வேண்டியதுதான். ...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் நிகழ்கால மதிப்பீட்டுக்கும் நன்றிகள் நண்பரே.

   நீக்கு
 3. மிகச்சிறந்த கேள்வி? எளிய கதை மூலம் இன்றைய கல்விச்சூழலை புரியவைத்துள்ளீர்கள்! நன்றி!

  பதிலளிநீக்கு
 4. ரொம்ப ரொம்ப சரிங்க ஐயா, நான் பள்ளியில் படிச்சது உயிரியல் பாடம், கல்லூரியில உங்க மாணவன் தான் கணினி அறிவியல் இப்போது நான் பணி புரிவது வங்கியில என்னத்த சொல்ல சொல்றீங்க ஐயா, இது எதுவுமே ஒன்றோடு ஒன்று தொடர்பு இல்லாததுன்னு எனக்கும் புரியுது ஆனால், ஒட்டு மொத்த சமுதாயமும் கண்களை மூடிக்கொண்டு உலகம் இருண்டு இருக்குனு சொல்லிட்டு இருக்காங்க நான் மட்டும் கண்ணை திறந்து பார்த்தாலோ அல்லது பார்த்துட்டு நாம தான் தப்புன்னு சொன்னாலோ தலையில தட்டி பேச கூடாதுன்னு அதட்டுறாங்க, இந்த சமுதாயத்துல என்னை நான் நிலை நிறுத்திக்க எல்லோர் கூடவும் நானும் சேர்ந்து ஓட வேண்டி இருக்கு ஆனால் இந்த ஓட்டம் எல்லாம் முடிஞ்சா அப்புறம் என்ன நம்ம கிட்ட இருக்க போகுது என்று பார்த்தல் ஒண்ணுமே இருக்காது என்பது என் எண்ணம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இன்றைய கல்விநிலையை மிக அழகாகச் சொன்னீர்கள் மணிகண்டன். தங்களை மறுமொழிவாயிலாக மீண்டும் சந்தித்தமைக்கு மகிழ்ச்சியடைந்தேன்..


   நன்றி.

   நீக்கு
 5. அருமையான கருத்தை முன் வைத்திருக்கிறீர்கள் சார்!

  பதிலளிநீக்கு
 6. நல்ல உதாரணத்தோடு விளக்கி இருக்கிறீர்கள். மாணவர்களுடைய உழைப்பு இந்த சமுதாயத்திற்கு பயன்படவில்லை என்ற கசப்பான உண்மையை உணர வைக்கும் பதிவு.
  இன்றைய மாணவர்கள் செக்கு மாடுகள்-நன்றாகப் படித்தாலும் மக்கு மாடுகள்தான்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் மதிப்பீட்டுக்கும் நன்றி நண்பரே.
   மாணவர்களின் குறைகளை எண்ணிப்பார்க்கும் இவ்வேளையில் பெற்றோர், கல்விநிறுவனங்களின் குறைகளையும் எண்ணிப்பார்ப்பது நம் கடமை நண்பரே..

   நீக்கு
 7. இன்றையக் கல்வித் திட்டத்தினால் எவருக்கும் பயனில்லா நிலையை வெகு பொருத்தமான உவமையுடன் எளிதில் விளங்கச் சொல்லிவிட்டீர்கள். இதைப் படித்தாவது விழிப்புணர்வு உண்டாகுமா மக்களுக்கு? ஏட்டுப்படிப்பு மட்டுமே வாழ்க்கையில்லை என்பதையும், தன்னம்பிக்கை, சுய கட்டுப்பாடு, நேர்மை, மனித நேயம், தோல்வி கண்டு துவளாமை போன்ற வாழ்க்கைப் பாடங்களிலும் தேர்ச்சி பெறுதல் அவசியம் என்பதையும் வளரும் பருவத்திலேயே பிள்ளைகளின் மனதில் விதைக்கவேண்டியது பெற்றவர் மற்றும் ஆசிரியர்களின் கடமை என்பதையும் அழகாய் உணர்த்தும் பதிவு. மிகவும் நன்றி முனைவரே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஏட்டுப்படிப்பு மட்டுமே வாழ்க்கையில்லை என்பதையும், தன்னம்பிக்கை, சுய கட்டுப்பாடு, நேர்மை, மனித நேயம், தோல்வி கண்டு துவளாமை போன்ற வாழ்க்கைப் பாடங்களிலும் தேர்ச்சி பெறுதல் அவசியம் என்பதையும் வளரும் பருவத்திலேயே பிள்ளைகளின் மனதில் விதைக்கவேண்டியது பெற்றவர் மற்றும் ஆசிரியர்களின் கடமை

   தங்கள் ஆழமான புரிதலுக்கும், அறிவுறுத்தலுக்கும் நன்றி கீதா.

   நீக்கு
 8. கதை சொல்லிக் கருத்தை பதிய வைத்தீர்கள்.
  நன்று

  பதிலளிநீக்கு
 9. அருமையான கேள்வி முனைவர் ஐயா.
  எனக்கு தமிழ் தான் விருப்பப் பாடம். ஆனால் பிரென்சு தான் படிக்க வேண்டும் என்ற கட்டாயம். படித்தேன். உப்பில்லாப் பண்டத்தை உருட்டி உருட்டி முழுங்குவது போல்... ஓர் அளவிற்குமேல் யோசித்தேன். எனக்கென்ன சுரணையில்லையா... உப்பில்லாமல் சாப்பிடுகிறோமே என்று... சரி இதுவரை சாப்பிட்டது போதும் என்று எனக்கு விருப்பமானதைச் சாப்பிட்டு மனம் நிறைந்தேன்.

  இருப்பினு்ம் நீங்கள் சொன்னது போல் செக்குமாட்டு வாழ்வுதான் பழக்கப் படுத்தபட்டுவிட்டது....

  பதிலளிநீக்கு
 10. மிகச் சரியான ஒப்பீடு. பகிர்வுக்கு நன்றி .

  பதிலளிநீக்கு
 11. மிகச் சிறந்த கேள்வி...சமூக நலனுக்கோ,தனி மனித ஒழுக்கத்திற்கோ உதவாத ஒரு கல்வி முறையை நாம் பின்பற்றி வருகிறோம் என்பதை நன்கு உணரச் செய்தது இந்தப் பதிவு.நன்றிகள் பல.

  பதிலளிநீக்கு