இன்றைய சூழலில் கல்வியின் பரப்பு எந்த அளவுக்குஅதிகரித்துள்ளதோ..
அந்த அளவுக்கு அறியாமையின் பரப்பும் விரிவடைந்துள்ளது!
கடவுள் – பேய் – ஆவி – பிசாசு – மூடநம்பிக்கைகள் ஆகியன இன்னும் தானே நம்மிடம் உள்ளன..
சிந்தித்தபோது...
கல்வி மனிதனை விலங்கிலிருந்து வேறுபடுத்திக் காட்டியது!
பணம் குறித்து சிந்தித்தபோது..
கல்வி மனிதனை விலங்காக்கியது!
குடும்பச் சூழல், வறுமை, அறியாமை எனப் பல காரணங்கள் சொல்லப்பட்டாலும்..
கல்வி கற்போர் விழுக்காடு இன்னும் ஏற்றத்தாழ்வுடனேயே இருந்துவருகிறது.
கல்வி வணிகமாகிவிட்ட இந்தச் சூழலில் கல்வி கற்று அறிவை வளர்த்துக்கொள்ளவேண்டும் என்ற எண்ணத்தில் பலரும் கல்விச்சாலைகளில் சேர்வதில்லை..
கல்வி பணம் ஈட்டும் ஒரு தொழில் என்ற எண்ணத்திலேயே பலரும் முதலீடு செய்கின்றனர்..
கல்வி குறித்த இதுபோன்ற பல சிந்தனைகள் நமக்கிருந்தாலும்..
சங்ககாலத்தில் கல்வி குறித்த சிந்தனை எவ்வாறு இருந்தது என்று காண்பதாக இவ்விடுகை அமைகிறது..
இச்சூழலிலும்..
“கல்விச் சிறப்புடையவனையே குடும்பம், அரசு, சமூகம் மதிக்கும்“ என்பதை வலியுறுத்தும் பாடல் ஒன்று..
தம் ஆசிரியருக்கு ஒரு துன்பம் வந்தபோது உடன் சென்று அதனைத் தீர்ப்பதற்குத் துணைநிற்க வேண்டும்.
மிகுதியான பொருளை அவருக்குக் கொடுத்தாவது கல்வி கற்றல் வேண்டும்.
அவரை வழிபடுவதற்கு வெறுப்படையக் கூடாது..
இவ்வாறெல்லாம் செய்து ஒருவன் எப்படியாவது கல்வி கற்கவேண்டும்.
கல்வி கற்றல் அவ்வளவு நன்மை தரக்கூடியதாகும்.மேலும்..
ஒரு தாய் வயிற்றில் பிறந்த இருவருள்ளும் அந்தத் தாய்
மூத்தவனை விட கல்வி கற்றிருந்தால் இளையவன் மீது பற்றுடையவளாக இருப்பாள்.அதுமட்டுமின்றி..
ஒரு குடியில் பிறந்த பலருள்ளும் மூத்தவனை வருக என்று அழைக்காமல் அவருள்ளே அறிவுடையோனையே வருக வருக என்று அழைத்து அரசனும் அவன் காட்டும் வழியில் நடப்பான்.
வேற்றுமை தெரிந்த கீழ்க்குல மக்களுள் ஒருவன் கற்று வல்லவனாயின் மேற்குலத்துள் ஒருவனும் இவன் கீழ்க்குலத்தான் என்று எண்ணாமல் கல்வியின் பொருட்டு அவனிடம் சென்று வழிபட்டு வேண்டி நிற்பான். அதனால் எவ்வகையில் பார்த்தாலும் கல்வி சிறப்புடையதாகும்.
"உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே!
பிறப்போரன்ன உடன்வயிற்றுள்ளும்
சிறப்பின் பாலால் தாயும் மனம் திரியும்
ஒரு குடிப் பிறந்த பல்லோருள்ளும்
முத்தோன் வருக என்னாது அவருள்
அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்
வேற்றுமை தெரிந்த நாற்பா லூள்ளும்
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்
மேல் பால் ஒருவனும் அவன் கண்படுமே"
(புறநானூறு-183)
திணை – பொதுவியல்
துறை – பொருண்மொழிக்காஞ்சி
பாடியவர் – பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்.
உயிருக்கு உறுதி தரும் பொருளான கல்வியால் வரும் சிறப்புக்களை உரைப்பதால் இப்பாடல் பொருண்மொழிக் காஞ்சியானது.
பாடல் வழியே..
1. போருக்கு முன்னுரிமை தந்த சங்ககாலத்திலேயே கல்விக்கும் அவர்கள் முன்னுரிமை தந்தார்கள் என்பது புலனாகிறது.
2. மன்னன் எவ்வழியோ குடிகள் அவ்வழி என்பர். அதுபோல இப்பாடல் பாடிய மன்னனின் சிந்தனை சங்ககாலக் கல்வி நிலையைப் படம்பிடித்துக்காட்டுவதாக உள்ளது.
3. குடும்பம், அரசு, சமூகம் என மூன்று நிலைகளிலும் மதிப்புப் பெற வேண்டுமானால் கல்வி கற்கவேண்டும் என்ற சங்ககால சிந்தனை இன்றைக்கும் தேவையானதாக இருக்கிறது.
4. கற்றுத் தரும் குருவுக்குத் தரவேண்டிய மதிப்பை இப்பாடல் அழகாகப் பதிவு செய்துள்ளது.
ஒப்புநோக்கத்தக்க திருக்குறள்
உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றும் கற்றார்
கடையரே கல்லா தவர்
(அதிகாரம்:கல்வி குறள் எண்:395)
சொற்பொருள்
உறுபொருள் - மிகுதியான பொருள்
முனியாது - வெறுக்காது
பிற்றை நிலை - வழிபாட்டு நிலை
ஆறு - நெறி
வேற்றுமை - வேறுபாடு
நாற்பால் - நான்கு வருணம்
தொடர்புடைய இடுகைகள்..