வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வெள்ளி, 16 ஏப்ரல், 2010

பொய்யே முதலீடு


கையில பை!
கழுத்துல டை!
வாயில பொய்!
இதுவே விற்பனையாளனின் முதலீடு என்ற எண்ணம் கொண்டு வாழும் இன்றைய சூழலில் மனிதர்களுக்கு சுயநலவுணர்வு மேலோங்கியதால் மனிதநலம் பற்றிய கவலை இல்லாமல்ப் போனது.

“பொய், கலப்படம்“ இரண்டும் வணிகத்தின் இரு கண்கள் என்னும் எண்ணம் மேலோங்கியதால் பாதிக்கப்படுவது என்னவோ நுகர்வோர் தான்!

இந்தக்காலத்துல போய் பொய்யெல்லாம் சொல்லாம வியாபரம் செய்யமுடியுமா?
கலப்படம் செய்யமாப் பொழப்பு நடத்தமுடியுமா?

(என்ற வணிகர்களின் புலம்பல் கேட்கிறது.)

“நியாயவிலைக் கடைக்காரருக்குக்
குழந்தை பிறந்தது
எடை குறைவாக“

என்ற கவிதை தான் நினைவுக்கு வருகிறது.

நாமும் ஏமாற்றப்படுவோம் அதனால் நாமாவது யாரையும் ஏமாற்றக்கூடாது!
என்ற சிந்தனை வந்தால் மட்டுமே மனிதநலம் பற்றிய சிந்தனை ஒவ்வொரு மனிதர்களுக்கும் வரும்.

மனித நலம் பாதிக்கப்படும் அளவுக்கு என்ன நடந்தது என்று ஒன்றும் அறியாதது போல கேட்கும் வியாபாரிகளே!

எதில் இல்லை கலப்படம்?
உண்ணும் உணவிலிருந்து,
நோய் நீக்கும் என்று நம்பி உண்ணும் மருந்துப் பொருள்களைக் கூட நீங்கள் விட்டுவைக்கவில்லையே!

o உண்மை பேசி, கலப்படமின்றி நேர்மையாக வணிகம் செய்யவே முடியாதா? அப்படி வணிகம் செய்வோர் உலகில் எங்குமே இல்லையா?

எனக்குத் தெரிந்தவரை நூற்றுக்குப் பத்துப்பேர் நேர்மையாவர்களாகவே இருக்கிறார்கள். நல்லார் அவர் பொருட்டே எல்லோருக்கும் மழை பொழிகிறது என்ற நம்புகிறேன்.

இச்சூழலில், சங்ககால வணிகமுறையில் தமிழர்தம் உயர்ந்த கொள்கை நாம் பெருமிதம் கொள்ளத்தக்தாகவுள்ளது. பத்துப்பாட்டில்,

“நடுவு நின்ற நல் நெஞ்சினோர்
வடு அஞ்சி வாய் மொழிந்து
தமவும் பிறவும் ஒப்ப நாடி
கொள்வதூஉம் மிகைகொளாது கொடுப்பதூஉம் குறைகொடாது
பல்பண்டம் பகர்ந்து வீசும்“

(பட்டினப்பாலை – 207-211)

இவ்வடிகள் இடம்பெருகின்றன. வணிகர்கள், நடு நிலையுடையவர்களாக நல்ல உள்ளத்துடன் இருந்தனர். பொய் சொன்னால் தம் குடிக்கு பழி வரும் என்று அஞ்சி உண்மையே பேசக்கூடியவர்களாக இருந்தனர்.

இவர்கள் தம் பண்டங்களையும், பிறருடைய பண்டங்களையும் வேறுபடுத்திப்பார்க்காமல் ஒப்ப நோக்கி ஆராய்ந்து கண்டனர்.

தாம் கொள்ளும் பொருள்களைத் தாம் கொடுக்கும் பொருளுக்கு மிகுதியாகக் கொள்வதில்லை.
தாம் கொடுக்கும் பொருள்களையும் வாங்கும் பொருள்களுக்குக் குறைவாகக் கொடுப்பதில்லை.

தங்களுக்க வரும் இலாபத்தை நுகர்வோரிடம் வெளிப்படையகப் பேசியே வணிகம் செய்தனர். அதனால் அவர்கள் வணிகத்திலும் சிறந்து செல்வத்திலும் சிறந்தவர்களாக விளங்கினர் என்பதையே இவ்வடிகள் புலப்படுத்துகின்றன.

செவ்வாய், 13 ஏப்ரல், 2010

இயற்கைக்கும் மனிதனுக்குமான 20/ 20



இயற்கைக்கும் மனிதனுக்கும் பன்னெடுங்காலமாகவே போராட்டம் நடைபெற்றுவருகிறது. இயற்கைச் சீற்றங்களிடமிருந்து தன்னைக் காத்துக்கொள்ள மனிதனும். மனிதனிடமிருந்து தம்மைக்காத்துக்கொள்ள இயற்கையும் பெரும் போராட்டமே நடத்தி வருகிறது.

இயற்கையின் மடியில் தவழ்ந்து வளர்ந்த மனிதன் நீர், நிலம், காற்று, தீ, வான் என இயற்கையின் ஐந்து கூறுகளையும் முதலில் கண்டு பயந்தான் அவற்றைக் கடவுளராக்கி வணங்கினான். காலம் செல்லச் செல்ல பக்குவமடைந்தவனாக இயற்கையின் ஆற்றல்களைக் கண்டு அவற்றைத் தம் ஆளுகைக்குட்படுத்த முயன்றான். இயற்கைக்கு இணையாக செயற்கையாக பலவற்றையும் உருவாக்கி இயற்கையைத் தாம் வென்றுவிட்டதாகப் பகல்கனவு கண்டான்.
ஒரு கதை,
'ஒரு மன்னன் தம் நாட்டுக்கு ஞானி ஒருவரை அழைத்துவந்து தம் நாட்டு எல்லைகளைக் காட்டிப் பெருமிதம் கொண்டான். அந்த ஞானியோ எல்லாவற்றையும் பார்த்தபின்னர் சொன்னார்,


வேந்தனே! சென்றமுறை நான் இங்கு வந்தபோது உன்னைப்போலவே உன் தந்தை இதே மன்னைக்காட்டி சொந்தம் கொண்டாடினான். அவன் தந்தையும் உன்னைப் போலவே எண்ணம் கொண்டிருந்தான். ஒன்றை நன்றாகத் தெரிந்துகொள்,


“ இந்த மண்ணை நீ வாங்கவில்லை,

இந்த மண் தான் உன்னை வாங்குகிறது!“



என்றார்.

இயற்கையைத் தம் ஆளுமைக்குக் கொண்டுவர எண்ணிய மனிதன்,

காடுகளை அழித்தான்,

விளைநிலங்களை வாழிடங்களாக்கினான்,

நீர்நிலைகளை அழித்து விற்பனை இடங்களாக்கினான்,



நுனிக்கிளையிலிருந்து அடிக்கிளையை வெட்டுவது போன்ற மனிதனின் அறியாமைச் செயல் யாவற்றையும் தாங்கிய நிலம் தற்போது எதிர்வினைபுரிய ஆரம்பித்திருக்கிறது.


புவி வெப்பமயமாதல்,

பனி உருகி கடல் நீர்மட்டம் உயர்தல்,

குடிநீர் வறட்சி,


நோய் தொற்று,

என இயற்கைக்கும் மனிதனுக்கும் நடக்கும் போராட்டம் காலகாலமாகவே தொடர்ந்து வருகிறது. இச்சூழலில் மனிதன் புரிந்துகொள்ள வேண்டிய இயற்கையின் தத்துவத்தை உணர்த்துகிறது ஒரு புறப்பாடல்.


நீர் பெருக்கெடுத்து மிகுமானால் அதனைத் தடுத்து நிறுத்தும் வலிமையான அரணும் இல்லை!

தீ பெருகி எரிக்குமானால் உலகில் நிலைபெற்ற உயிர்களைக் காக்கின்ற நிழலும் இல்லை!

காற்றுப் பெருகி புயலாக வீசினால் அதனைத் தாங்கும் வலிமையும் உயிர்களுக்கு இல்லை!


நீர், தீ, காற்றுப் போலவே புகழ்மிகுதியும் உடையவனாய் சினம் மிகுந்து போர் புரிபவன் மாறன் வழுதி. அவன் குளிர்ச்சியான தமிழ்நாடு மூவேந்தர்களுக்கும் பொதுவானது என்பதை ஏற்கமாட்டான். தனக்குமட்டுமே உரியது என்ற கொள்கையுடையவன். அதனால் அவனைப் பணிந்து திறை செலுத்துபவர்கள் அச்சமின்றி வாழலாம், அவனைப் பணியாது திறை செலுத்தாதவர்கள்,


நுண்ணிய பல கறையான்கள் அரிது முயன்று எடுத்த செம்மையான நிறமுடைய புற்றிலிருந்து வெளிப்பட்ட ஈயல் போல ஒருநாள் வாழ்க்கைக்கும் அஞ்சித்திரிவர்.


பாடல் இதோ,

நீர்மிகின், சிறையும் இல்லை; தீமிகின்,

மன்னுயிர் நிழற்றும் நிழலும் இல்லை;

வளிமிகின், வலியும் இல்லை; ஒளிமிக்கு

அவற்றோர் அன்ன சினப்போர் வழுதி,

‘தண் தமிழ் பொது’ எனப் பொறாஅன், போர் எதிர்ந்து,

கொண்டி வேண்டுவன் ஆயின், ‘கொள்க’ எனக்

கொடுத்த மன்னர் நடுக்கற் றனரே;

அளியரோ அளியர், அவன் அளிஇழந் தோரே;

நுண்பல் சிதலை அரிதுமுயன்று எடுத்த

செம்புற்று ஈயல் போல,

ஒருபகல் வாழ்க்கைக்கு உலமரு வோரே!

புறநானூறு -51

பாடியவர்: ஐயூர் முடவனார்! ஐயூர் கிழார் எனவும் பாடம்.

பாடப்பட்டோன்: பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி.

திணை: வாகை. துறை; அரச வாகை.



பாடல் வழி அறியலாகும் செய்திகள்



1.இயற்கையின் முன் மனிதன் என்றுமே குழந்தைதான். இயற்கையின் சீற்றத்துக்கு முன் உயிர்களை முழுவதும் காத்துக்கொள்ளும் கண்டுபிடிப்புகள் இன்னும் மனிதர்களால் கண்டறியப்படவில்லை. அதனால் இயற்கையை அழித்தல் நாம் தற்கொலை செய்துகொள்வதற்குச் சமமானது என்னும் கருத்து உள்ளீடாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

2.இயற்கையின் வலிமையைத் தம்மகத்தே கொண்டவன் மனிதன். அவனால் ஆக்கவும் முடியும் அழிக்கவும் முடியும் என்ற கருத்தை பாண்டியன் வாயிலாக ஆசிரியர் புலப்படுத்துகிறார்.

3.மன்னனின் வெற்றியையும், வீரத்தையும் பாடுவது வாகைத்திணையாகும். இதன் துறைகளுள் அரசவாகை என்பதும் ஒன்று. பாண்டியனின் புகழைப்பாடவந்த ஐயூர்முடவனார் “ இயற்கையை எதிர்க்கும் ஆற்றல் மனிதனுக்கு இல்லை என்று கூறி அதனால் இயற்கையைக் பாதுகாக்கவேண்டும் என்ற கருத்தையும் முன்வைக்கிறார்.“

திங்கள், 12 ஏப்ரல், 2010

நாட்டுப்புறவியல் கருத்தரங்க அறிவிப்பு.






எங்கள் கல்லூரியின் தமிழ்த்துறை சார்பாக சென்ற ஆண்டு நடைபெற்ற செம்மொழி தொடர்பான பன்னாட்டுக் கருத்தரங்கில் 141 பேராளர்கள் கட்டுரையளித்திருந்தனர். கட்டுரைகள் நூலாக்கம் பெற்று வெளியிடப்பெற்றதுடன் கல்லூரி வலைப்பதிவில் இபேப்பர் வடிவிலும் வெளியிடப்பெற்றது. தற்போது நாட்டுப்புறவியல் தொடர்பான தேசிய கருத்தரங்கம் நடத்தத் திட்டமிட்டிருக்கிறோம். மேலும் விவரங்களுக்கு மேலே கொடுத்ததுள்ள அழைப்பிதழை சொடுக்கிப் பெரிதாக்கிப்பார்க்கவும். நாட்டுப்புறவியல் தொடர்பான தரமான கட்டுரைகள் தெரிவுசெய்யப்பட்டு நூலாக்கம் செய்யப்படுவதுடன் இணையத்திலும் பதிவேற்றம் செய்யப்படவுள்ளன என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

செவ்வாய், 6 ஏப்ரல், 2010

முதலில் தோன்றியது நீரா? நிலமா?


பூமியைப் படைத்தது சாமியென்றும் சாமியைப் படைத்தது பூமியென்றும் காலகாலமாகப் பேசிவந்த பேச்சுக்களுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க எண்ணிய இன்றைய அறிவியலாளர்கள், பூமிக்கு அடியே ஆழத்தில் ஹீலியம் தூண்களை மோதவிட்டு உயிரினங்களின் தோற்றத்தையும், படிநிலை வளர்ச்சியையும் காணமுற்பட்டு அதில் பெருமளவு வெற்றியும் கண்டிருக்கிறார்கள்.
“பிக் பேங்“ என்னும் மாவெடிப்புக் கொள்கையின்படி சுமார் 10மில்லியன் காலத்திற்கு முன்னர் அண்டம் முழுவதும் இருளால் நிறைந்திருந்தது. எங்கும் பரவியிருந்த ஹைட்ரஜன் நெருப்புக்கோளமானது, பல மில்லியன் நெருப்புக்குமிழ்களை உமிழ்ந்துகொண்டிருந்தது. இந்த நெருப்புப் பந்தின் வெப்பநிலை எல்லை மீறியபோது வெடித்துச்சிதறியது.
நெருப்புக்கோளத்திலிருந்து வெடித்துச்சிதறிய துண்டங்கள் அண்டம் முழுவதும் தூக்கியெறியப்பட்டு தொடர்ந்து எறிந்துகொண்டே இருந்தன. அப்படியெறியப்பட்ட துண்டங்களில் ஒன்று தான் நம் பூமியும் ஆகும். சில மில்லியன் ஆண்டுகாலம் எறிந்தபின்னர் குளிரத்தொடங்கி நீராவி நீராக மாற்றம் பெற்று குளிரடையத்தொடங்கியது. நீர்ப்பரப்பு கடலானது. எரிமழையும்,பெருங்காற்றும் தொடர்ந்து சீறிக்கொண்டே இருந்தன. கடலின் நீர்ப்பரப்பு ஆவியாகி மேகங்களாகப் படிந்து பின் மழையாகப் பொழிந்து பருவ இயந்திரம் செயல்பட ஆரம்பித்தது. நெருப்பிழம்பின் ஒரு பகுதி நிலமானது. நிலத்தின் உட்பகுதி நெருப்புப் பிழம்பாகவே உள்ளது. நீர்வாழ் உயிரி, இருநில உயிரி, நிலவுயிரி, விலங்கு, பறவை என உயிர்கள் ஓரறிவு முதல் ஆறறிவு வரை படிநிலை வளர்ச்சி பெற்றன.

நிலம், நீர் இரண்டில் முதலில் தோன்றியது நீர் என்ற உண்மையை இதன் வழி அறியமுடிகிறது. இக்கருத்தை வழியுறுத்துமாறு பல நுட்பமான செய்திகளைச் சங்கப்பாடல்களில் காணமுடிகிறது. “முதுநீர்“ என்று கடலைக் குறிக்கும் சொல் பழந்தமிழரின் அறிவியல் அறிவை எண்ணி வியக்குமாறு உள்ளது.

நிலம் தோன்றும் முன்னர் தோன்றிய பழமையான நீரையுடைய கடலின் அலைகள் தழுவும், பறவைகள் ஒலிக்கும் கடற்கறைச் சோலையில்,
தலைவனைப் பார்த்தது முதல் நீங்கும் வரை கண்கள் அவனைப் பார்த்து மகிழ்ந்தன!
அவனுடன் இனிது பேசியபோது செவிகள் அவன் குரலைக் கேட்டு மகிழ்ந்தன!
தலைவனைச் சேர்ந்தவழி அழகுபெற்றும், பிரிந்தவழி வேறுபட்டும் காட்டும் உடலின் பண்புகளே எண்ணி வியப்புறத்தக்கன! என்று தலைவி தன் வியப்பைத் தோழியிடம் வினவுவதாக இவ்வகப்பாடல் அமைகிறது. பாடல் இதோ,

இது மற்று எவனோ-தோழி! முது நீர்ப்
புணரி திளைக்கும் புள் இமிழ் கானல்
இணர் வீழ் புன்னை எக்கர் நீழல்
புணர்குறி வாய்த்த ஞான்றைக் கொண்கற்
கண்டனமன் எம் கண்ணே; அவன் சொல்
கேட்டனமன் எம் செவியே; மற்று-அவன்
மணப்பின் மாண்நலம் எய்தி
தணப்பின் ஞெகிழ்ப எம் தட மென் தோளே?
குறுந்தொகை 299. நெய்தல் (வெண்மணிப் பூதி)

காட்சிக் கலப்பினால் கண்களும்,
கேள்வியனுபவத்தால் செவிகளும், நலம் பெற்றன ஆயினும் அவை எப்போதும் அடக்கமாக இருக்கின்றன.
காண்பது கேட்பது என்னும் இருநிலைகள் இன்றியும் தோள்கள் அவன் சேர்ந்தபோது அழகுற்றும் பிரிந்தபோது வேறுபட்டும் தன்னிலையைப் புறத்தாருக்குப் புலப்படுத்துகின்றனவே என வருத்தத்துடன் வியப்பும் எய்துகிறாள் தலைவி.


பாடல் வழி அறியாலகும் செய்திகள்.

1. ‘முதுநீர்’ என்று கடலைக் குறிக்கப் பயன்படும் இச்சொல் நிலத்துக்கு மூத்தது நீர் என்னும் அறிவியல் உண்மையை உணர்த்துவதாகவும், பழந்தமிழரின் அறிவியலறிவைப் பறைசாற்றுவதாகவும் விளங்குகிறது.

2. தலைவனைச் சேர்ந்போது நலம் பெற்ற கண்ணும் செவியும் அமைதியாக இருக்க உடல் மட்டும் ஏன் கூடலிலும், பிரிதலிலும் வேறுபடுகிறது? என்ற தலைவியின் கேள்வி காதலால் படும் துன்பத்தை மேலும் அழகுறச் சொல்வதாக அமைகிறது.

வெள்ளி, 2 ஏப்ரல், 2010

மிளகுக்கு இணையா தங்கம்?





தங்கத்துக்குக் கிடைக்கும் மதிப்பு இன்று சில மனிதர்களுக்குக் கூடக் கிடைப்பதில்லை.

சங்ககாலத்தில் வணிகம் செய்யவந்த யவணர்கள் பெரிய மரக்கலங்களில் தங்கத்தைக் கொண்டு வந்து அதனை விலையாகத்தந்து மிளகை அள்ளிச்சென்றுள்ளனர்.அற்றைக் காலந்தொட்டே தமிழர்கள் தங்கத்துக்கு அடிமையாக இருந்திருக்கின்றனர். ஆனால் யவணர்கள் மிளகின் மருத்வகுணம் அறிந்தே மிளகை அள்ளிச் சென்றுள்ளனர்.

பாடல் சான்று இதோ..

அகநானூறு 149. பாலை

[தலைமகன் தன்நெஞ்சிற்குச் சொல்லிச் செலவழுங்கியது]

சிறுபுன் சிதலை சேண்முயன் றெடுத்த
நெடுஞ்செம் புற்றத்து ஒடுங்கிரை முனையில்
புல்லரை இருப்பைத் தொள்ளை வான்பூப்
பெருங்கை எண்கின் இருங்கிளை கவரும்
5. அத்தம் நீளிடைப் போகி நன்றும்
அரிதுசெய் விழுப்பொருள் எளிதினிற் பெறினும்
வாரேன் வாழியென் நெஞ்சே சேரலர்
சுள்ளியம் பேரியாற்று வெண்நுரை கலங்க
யவனர் தந்த வினைமாண் நன்கலம்
10. பொன்னொடு வந்து கறியொடு பெயரும்
வளங்கெழு முசிறி ஆர்ப்பெழ வளைஇ
1அருஞ்சமங் கடந்து படிமம் வவ்விய
நெடுநல் யானை அடுபோர்ச் செழியன்
கொடிநுடங்கு மறுகில் கூடல் குடாஅது
15. பல்பொறி மஞ்ஞை வெல்கொடி உயரிய
ஒடியா விழவின் நெடியோன் குன்றத்து
வண்டுபட நீடிய குண்டுசுனை நீலத்து
எதிர்மலர்ப் பிணையல் அன்ன இவள்
அரிமதர் மழைக்கண் தெண்பனி கொளவே.
-2எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார்


தலைவியைப் பிரிந்து பொருளீட்ட எண்ணும் தலைவன் தன் தலைவியின் மென்மையையும் சுரவழியின் கொடுமையையம் நீள நினைந்து தன் பயணத்தைத் தவிர்த்தான் இதற்கு செலவழுங்குதல் என்று பெயர். இவ்வகத்துறையை விளக்கும் பாடலில் சங்ககாலத்தமிழரின் வணிகமுறையைப் பற்றி தெளிவான விளக்கம் பெறமுடிகிறது.

சிறிய புன்மையான கறையான் நீண்ட நாள் முயன்று எடுத்த உயரமான சிவந்த புற்றிலிருக்கும் புற்றாம் பழஞ்சோற்றை பெரிய கையினையுடைய கரடிகளின் பெருங்கூட்டம் அகழ்ந்தெடுத்து உண்ணும். அதனைதத் தின்று வெறுக்குமானால் அருகிலிருக்கும் இருப்பையின் வெண்மையான மலர்களை உண்ணும்.

எனது நெஞ்சமே அத்தகைய சுரவழியைக் கடந்து போய் நாம் பொருளீட்டிவருதல் வேண்டும்.

சுள்ளி என்னும் பெயர் கொண்டு பேரியாறு சேர அரசர்க்கு உரியதாகும். அவ்வழகிய ஆற்றின் வெண்ணிற நுரை சிதறுமாறு, தொழில்சிறப்புடைய யவணர்கள் கொண்டு வந்த நல்ல மரக்கலம் பொன்னைக் கொண்டுவந்து விலையாகத் தந்து மிளகை அள்ளிச்செல்லும். அத்தகைய வளம் பொருந்திய முசிறி என்னும் பட்டினத்தை,

வலிமையான யானைகளையும் வீரமும் வாய்ந்த பாண்டியமன்னன் ஆரவாரம் தோன்ற வென்று அங்கிருந்த பொன்னாலான படிமத்தைக் கவர்ந்து சென்றான்.

அச்செழியனின் கொடிகள் அசைந்தாடும் வீதிகளைக் கொண்ட கூடல் நகரின் மேற்கே பல புள்ளிகளைக் கொண்ட மயில் கொடி தோன்றும் இடைவிடாத விழாக்கள் நடக்கும் திருப்பரங்குன்றம் அமைந்துள்ளது. அக்குன்றத்தில் வண்டுகள் மொய்க்கும் ஆழமான சுனையில் மலர்ந்த குவளை மலர்கள் இரண்டு ஒன்று சேர்ந்து இருந்தமைபோல நானும் தலைவியும் இருந்துவந்தோம். இப்போது தலைவியின் செவ்வரி படர்ந்த செருக்குடைய குளிர்ந்து கண்கள் நீர்க்கொள்ள அரிய சுரங்ளைக் கடந்து ஈட்டத்தக்க பொருளை எளிதாகப் பெற்றாலும் நான் இவளை நீங்கிப் பிரிந்து வரமாட்டேன் என்று தன் நெஞ்சுக்குச் சொல்கிறான் தலைவன்.

பாடல்வழி அறியலாகும் கருத்துக்கள்.

1. யவணர்க மிளகைப் பெறுவதற்காக தங்கத்தை விலையாகக் கொடுத்த சங்ககால வணிகமுறை புலனாகிறது.

2.மிளகின் மருத்வ குணம் அறிந்தே யவணர்கள் மிளகைப் பெற்றுச் சென்றிருக்கவேண்டும் என்று எண்ணமுடிகிறது.

3.செலவழுங்குதல் என்னும் அகத்துறை உணர்த்தப்படுகிறது.