வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வெள்ளி, 1 அக்டோபர், 2010

தமிழனா... தமிங்கிலனா?



தமிழன்…..
“சிட்டி“யில் “காலனி“யில் “அப்பார்ட்மென்“டில் “பிளாக்“கில் “ப்ளோரி“ல் “டோர்நம்பரி“ல் குடியிருக்கிறான்.

தமிழன்……
“மம்மி“யும் “டாடி“யும் “அங்கிளு“ம் “ஆன்டி“யும் “பேபி“யும் ரிளேடிவ்“சும் “ப்ரென்ட்சு“மாய் வாழ்கிறான்.

தமிழன்……
“டூத்பேஸ்ட்“டால்“பிரஷ்“ஆல் பல் தீட்டுகிறான்.“ஹேர்ஆயிலை“ “கிரீமை“ தலைக்கு வைக்கிறான்.“பவுடரை“ பேஸ்“கிரீமை முகத்தில் இடுகிறான்.
“ப்ளேடால்“ சேவிங்“ ரேசரால் முகமயிர் மழிக்கிறான். “சர்ட்டை“பேன்டை“ உடலில் அணிகிறான். “சாக்ஸை“சூசை“ காலுக்குப் போடுக்கறான்.

தமிழன்……
“ஸ்டோரீஸ்“ நாவல்ஸ்“ படித்து - “ஸோங்ஸ்“ கேட்டு “டான்ஸ்“ட்ராமா“ பார்த்து - “சினிமா“டிவி“ சுவைத்து மகிழ்கிறான்.

தமிழன்…….
கடையில் “பில்“ கட்டுகிறான். மருத்துவமனையில்“டோக்கன்“ கேட்கிறான்.பேருந்தில் “டிக்கெட்“ கேட்கிறான்.
பால் விற்பனை நிலையத்தில் “கார்டு“ கேட்கிறான்.

தமிழ்நாட்டு வீடுகளில் வெள்ளைக்காரனா திருடவருகிறான்? திருடனை மிரட்ட வீட்டு வாசலில் “Beware Of Dogs" என்று ஆங்கிலத்தில் எழுதிவைத்திருக்கிறான்.

தமிழனா தமிங்கிலனா… காசியானந்தன். பக்-44-45.

இதற்கு இணையான தமிழ்ச் சொற்கள் நானறிந்தவரை...


சிட்டி - நகரம்
காலனி - கூட்டுக் குடியிருப்பு
அப்பார்ட்மென்ட் -அடுக்ககம்
பிளாக் - கட்டிடத்தொகுதி
ப்ளோர் - தளம்
டோர் - கதவு
நம்பர் - எண்
மம்மி - அம்மா
டாடி - அப்பா
அங்கிள் - மாமா
ஆன்டி - அத்தை
பேபி - குழந்தை
ரிளேடிவ் - உறவினர்
ப்ரெண்ட்ஸ் - நண்பர்கள்
டூத்பேஸ்ட் - பற்பசை
பிரஷ் - பல்துலக்கி
ஹேராயில் - தலைக்குத் தேய்க்கும் எண்ணை
கிரீம் - பசை,களிம்பு
பவுடர் - தூள், பொடி
பேஸ் கிரீம் - முகப் பசை
ப்ளேடு - மழிதகடு
சேவிங் - மழிப்பு
ரேசர் - மழிப்புக் கருவி
சர்ட் - சட்டை
பேன்ட் - கால்சட்டை
சாக்ஸ் - காலுறை,மூடணி
சூ - காலணி
ஸ்டோரி- கதை
நாவல் - புதினம்
ஸோங் - பாடல்
டான்ஸ் - ஆடல்
ட்ராமா - நாடகம்
சினிமா - பெரிய திரை
டிவி - தொலைக்காட்சி
பில் - விலைப்பட்டியல்
டோக்கன் - அடையாள அட்டை
டிக்கெட் - பயணச்சீட்டு
கார்டு - அட்டை

வியாழன், 30 செப்டம்பர், 2010

கண் (கலீல் ஜிப்ரான்)



ஒரு நாள் கண் சொன்னது….
நான் இந்தப் பள்ளத்தாக்குகளுக்கு அப்பால் நீலப்பனித்திரை மூடிய மலையினைக் காண்கிறேன். அது அழகாக இருக்கிறதன்றோ!

காது கேட்டது…

சிறிது நேரம் கூர்ந்து கவனித்தபின் சொன்னது….
ஆனால் இங்கே எங்கே இருக்கிறது மலை?
யாதொரு மலையும் இல்லையே?
நான் எதுவும் கேட்கவில்லையே?

பிறகு கை பேசியது…
நான் அதை உணரவோ தொடவோ முயற்சித்தும் என் முயற்சி வீணாகிவிட்டதே! என்னால் எந்த மலையையும் காணமுடியவில்லையே!

இப்போது மூக்கு சொன்னது….
இங்கே எந்த மலையும் இல்லை. நான் அதை உணரவோ,நுகரவோ மோப்பம் பிடிக்கவோ முடியவி்ல்லையே?

பிறகு கண் மறு பக்கம் திரும்பிக்கொண்டது. மற்ற புலன்கள் யாவும் தங்களுக்குள் கூடி கண்ணினுடைய தவறான நம்பிக்கை குறித்துப் பேசிக்கொண்டன.

இந்தக் கண்ணுக்கு ஏதோ ஆகிவி்ட்டது…
ஏதோ ஒன்று இருக்கிறது என்று.


கதை உணர்த்தும் நீதி….



○ ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான நம்பிக்கையிருக்கிறது.
○ அவரவர் அறிவுக்கு எட்டியவரை மட்டுமே அவரவரால் சிந்திக்கமுடிகிறது.
○ நான்கு முட்டாளுக்கிடையே ஒரு புத்திசாலி வாழமுடியாது.

இன்னும் திரும்பத் திரும்பப் படிக்கும் போது புதுப்புது சிந்தனைகளின் திறவுகோலாக இக்கதை இருக்கிறது.

ஞாயிறு, 26 செப்டம்பர், 2010

நம்மால் ஏன் முடியாது?

தொழில்நுட்பம் இன்று எங்கோ சென்று கொண்டிருக்கிறது…………...

² எதிர்காலத்தில் மக்கள் தம்முள் தொடர்பு கொள்ளும் ஒரே மொழியாக இணையம் இருக்கப்போகிறது. நமக்குள் ஏற்படும் மொழிச்சிக்கல்களை சில மென்பொருள்கள் தீர்த்துவிடுகின்றன.

² இந்நிலையில் இணையத்துடன் உறவாட அவரவர் தாய்மொழியே சிறந்த கருவி என்ற சிந்தனை மேலோங்கிவருகிறது.

² ஒவ்வொருவரும் அவரவர் தாய்மொழியிலேயே கணினியை இணையத்தைப் பயன்படுத்தவேண்டும் என்ற விருப்பம் அதிகரித்து வருகிறது.

² கணினியையும், இணையத்தையும் பயன்படுத்த இன்று ஆங்கிலம் தெரிந்திருக்கவேண்டும் என்ற தேவையில்லை.

² தமிழ் மொழியை ஆதரிக்கும் இயங்குதளங்களும் (ஓ.எஸ்), உலவிகளும் (ப்ரௌசர்), தேடு எந்திரங்களும் (கூகுள்….), மென்பொருள்களும் (என்.எச்.எம், அழகி…..) நாளுக்கு நாள் வந்துகொண்டே இருக்கின்றன…

² நாம் பயன்படுத்தும் தட்டச்சுப்பலகையும் தமிழிலேயே இருந்தால் எப்படி இருக்கும்…!!!!!!!!!



சீனம் உலகில் அதிகம் பயன்படும் மொழி. ஏறக்குறைய 1.3 பில்லியன் மக்கள் சீனத்தைப் பயன்படுத்துகின்றார்கள். உலகில் ஐந்தில் ஒருவருக்குச் சீனமே தாய் மொழி. சீனர்களின் வளர்ச்சிக்கு அவர்களின் தாய்மொழிப்பற்றே அடிப்படைக் காரணமாகும். சான்றாகப் பாருங்கள்….

இவர்கள் பயன்படுத்தும் தட்டச்சுக் கருவி கூட அவர்தம் தாய்மொழியிலேயே இருக்கிறது.

²  திராவிட மொழிக்குடும்பத்தின் தாய் மொழி தமிழ்,செம்மொழிகளுள் ஒன்று. தென்னிந்தியாவில் மட்டுமின்றி பல்வேறு நாடுகளிலும்  அதிக அளவில் பேசப்படும் இம்மொழி, துபாய், மலேசியா, தென்னாபிரிக்கா, மொரீசியஸ், பிஜி, ரீயுனியன், டிரினிடாட்போன்ற பல நாடுகளிலும் சிறிய அளவில் பேசப்படுகிறது. 1996-ம் ஆண்டு புள்ளி விவரப்படி உலகம் முழுவதிலும் 8 கோடி 50 இலட்சம் (85 மில்லியன்) மக்களால் பேசப்பட்டு, ஒரு மொழியை, தாய்மொழியாகக் கொண்டு பேசும் மக்களின் எண்ணிக்கை அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்ட மொழிகளின் பட்டியலில், தமிழ், பதினெட்டாவது இடத்தில் உள்ளது.

(இவ்வலைப்பதிவில் வலது ஓரத்தில் தெரியும் நியோ கவுண்டரில் 100 நாடுகளுக்கு மேல் பார்வையாளர்களின் வருகையைப் பார்க்கமுடிகிறது. உலகு பரவு தமிழர்கள் வாழ்கிறார்கள் என்பதற்கு இத தக்க சான்றாக விளங்குகிறது.)

² இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த  இலக்கிய மரபைக் கொண்டுள்ள தமிழ் மொழி, தற்போது வழக்கில் இருக்கும் ஒருசில செம்மொழிகளில் ஒன்றாகும்.திராவிடமொழிக்குடும்பத்தின் பொதுக்குணத்தினால் ஒலி மற்றும் சொல்லமைப்புகளில் சிறிய மாற்றங்களே ஏற்பட்டுள்ளதாலும்  மேலும் கவனமாகப் பழைய அமைப்புகளைக் காக்கும் மரபினாலும் பழங்கால இலக்கிய நடைகூட மக்களால் புரிந்து கொள்ளும் நிலை உள்ளது. எடுத்துக்காட்டாக, பள்ளிக் குழந்தைகள் சிறுவயதில் கற்கும் அகர வரிசைஆத்திசூடி 1000 ஆண்டுகளுக்கு முன்னர் இயற்றியது. திருக்குறள் ஏறத்தாழ 2000 ஆண்டுகளுக்கு முன் இயற்றியது

இப்படி பல்வேறு சிறப்புகளையும் கொண்ட நம் தாய்மொழியாம் தமிழ்மொழிக்கு தமிழில் தட்டச்சுப்பலகையை வழக்கத்திற்குக் கொண்டுவர நம்மால் ஏன் முடியாது?



மென்பொருள்களில் மட்டுமே வழக்கிலுள்ள தமிழ்த்தட்டச்சுப் பலகைகளை வன்பொருள் பயன்பாடடுக்கும் கொண்டுவருவதால் இன்னும் தமிழ் நுட்பம் வளரும். தமிழர்களின் பயன்பாடு அதிகரிக்கும் என்று கருதுகிறேன்.
(புள்ளிவிவரங்களுக்கு நன்றி விக்கிப்பீடியா)

வெள்ளி, 24 செப்டம்பர், 2010

தீயில் விழுந்த தளிர்.



காலங்கள் மாறினாலும் காதல் மாறுவதில்லை. அதனால் காதலர்களுக்கும் பெற்றோருக்குமான போராட்டங்களும் மாறுவதில்லை..

தமிழர் மரபில் சில பண்பாடுகள் உலகத்துக்கே நாகரீகம் கற்றுக்கொடுத்தவர்கள் நாம் என்பதற்குச் சான்றாக இருக்கின்றன.

அகம், புறம் என வாழ்க்கைக்கு இலக்கணம் வகுத்த ஒரே நாகரீகம் தமிழ்நாகரிகமே ஆகும்.

அகத்தில்,

தலைமக்களின் காதலை களவு, கற்பு என இரண்டாகப் பகுத்தனர்.

இயற்கைப் புணர்ச்சி ( தலைமக்கள் ஒருவரையொருவர் இயல்பாகப் பார்ப்பது)
இடந்தலைப்பாடு ( தலைவியை முன்பார்த்த இடத்தில் மீண்டும் பார்த்தல்)
பாங்கர் கூட்டம் ( தோழனின் துணையால் தலைவியைத் தலைவன் பார்த்தல்)
பாங்கியர் கூட்டம் ( தோழியின் துணையால் தலைமக்கள் சந்தித்தல்)
அம்பல் (தலைமக்களின் காதலை ஊரார் தமக்குள்ளே பேசுதல்)
அலர் (தலைமக்களின் காதலை ஊரார் பலரறிய பேசுதல்)
இற்செறித்தல் (களவினை அறிந்த பெற்றோர் தலைவியைக் காத்தல்)
வரைவு கடாவுதல் (தலைவனைத் திருமணம் செய்துகொள்ளத் தூண்டுதல்)
அறத்தொடு நிற்றல் (காதலை தலைவி தோழிக்கும் தோழி செவிலிக்கும் செவிலி நற்றாய்க்கும் நற்றாய் தந்தைக்கும் புரியவைத்தல்)
உடன் போக்கு (பெற்றோரறியாது தலைமக்கள் அவர்களை நீங்கிச் செல்லுதல்)


இவ்வாறு இன்றும் நிகழும் இது போன்ற காதல் நிகழ்வுகளுக்கு அற்றைக் காலத்தில் அகத்துறைகளில் இதுபோல அழகான பெயரிட்டு அழைத்தனர்.

ஒரு முறை முனைவர் பட்ட வாய்மொழித்தேர்வு நடைபெற்றுக்கொண்டிருந்தது.

ஆய்வி்ன் தலைப்பு “ இற்செறித்தலும் உடன்போக்கும் “ என்பதாகும். வினாநேரத்தில் நான் ஒரு வினாவை….

இற்செறித்தல் என்றவொன்றிருக்கும்போது உடன்போக்கு தேவையா? என்று கேட்டேன்…

ஆய்வு மாணவரால் பதிலளிக்கமுடியாத சூழலில் எனது நெறியாளர் சொன்னார்….


“இற்செறித்தல்“ பெற்றோரின் கடமை உடன்போக்கு காதலரின் “திறமை“ என்று..


சரி சங்ககாலச் சூழல் ஒன்றைப் பார்ப்போம்.

தோழி தலைவியிடம்….

நீ குன்றுகளையுடைய நாட்டின் தலைவனோடு, உடன்போக்கில் செல்ல உடன்பட்டமையால், யான் அவனிடம் கூறி அவனை அழைத்துக் கொண்டுவந்தேன். அவன் உன்னுடன் செல்லத் தயாராகக் குறியிடத்து வந்து நின்றான்.

நின் கைகளும், கால்களும் தளர்ந்து மெலிய தீயுற்ற தளிரைப்போல நாணத்தால் உள்நடுங்கி “இன்றைய பொழுது கழிவாதாகுக“ என்று கூறுகிறாய்….!

இந்நிலையில் நான் என்ன செய்வது………..?

என்று கேட்கிறாள்.

தலைவியின் உயிர் அவளை உடன்போக்குக்குச் (தலைவனுடன்) செல்ல
தூண்டியது!

அவளுடைய நாணம் (ஒழுக்கம் காரணமாக வரும் வெட்கம்) தீ உறு தளிர் போல நடுங்கி அதனைத் தவிர்க்க முற்பட்டது.


தோழியோ தலைவியிடம் நாணத்தைவிட கற்பு மேலானது என்பதை அறிவுறுத்தி அதற்குத் தயங்கும் தலைவியிடம் தன்னால் வேறு என்ன செய்ய இயலும் என்று வினவுவதாக இப்பாடல் அமைகிறது. பாடல் இதோ..

நீ உடம்படுதலின், யான் தர, வந்து,
குறி நின்றனனே, குன்ற நாடன்;
‘இன்றை அளவைச் சென்றைக்க என்றி;
கையும் காலும் ஓய்வன ஒடுங்கத்
தீ உறு தளிரின் நடுங்கி,
யாவதும், இலை, யான் செயற்கு உரியதுவே.


குறுந்தொகை 383. பாலை

படுமரத்து மோசி கீரன்

உடன்போக்கு நேர்வித்து வந்த தோழி நாணால் வருந்தும் தலைமகளை நாணுக்கெடச் சொல்லியது.

இப்பாடலின் வழி..

² அகத்துறையொன்று விளக்கம் பெறுகிறது.

² உடன்போக்குச் செல்ல எண்ணிய தலைவி பின் தீயில்பட்ட தளிர்போல நடுங்குவது தமிழ்பண்பாட்டின் அடையாளமாக உணரமுடிகிறது. மரபை மீறிச்செல்கிறோமே என்ற அச்சம் காரணமாகவே தலைவியின் உடல் நடுக்கம் அமைகிறது.



வியாழன், 23 செப்டம்பர், 2010

ஒரு துளி கண்ணீர்.


ஒரு துளி கண்ணீர்.


² உலகில் மிகப்பெரிய செல்வம்……………….?
நமக்காக ஒருவர் சிந்தும் கண்ணீர்!
அடுத்தவருக்காக நாம் சிந்தும் கண்ணீர்!

உண்மையான அன்பிருந்தால் மட்டுமே இந்தச் செல்வம் கிடைக்கும்.



² பள்ளிக்கூடம்.


போகவேண்டிய நாளில் போக மனமில்லை!
போகமுடியாத நாளில் போகத்துடிக்கிறது மனம்!

பள்ளிக்கூடத்துக்கு!


² ஒலி அளவு


பேச்சின் ஒலி அளவை அதிகரிப்பதைவிட,
பேச்சின் ஆழத்தை அதிகப்படுத்தினால் மதிப்பு உயரும்.

“நாணயங்கள் தான் ஓசை எழுப்பிக் கொண்டேயிருக்கும்!
ரூபாய் நோட்டுகள் அதிகம் ஓசை எழுப்புவதில்லை!!!


² கடவுள்

இன்று பசியால் வாடும் மக்களுக்கு
உணவு கொடுக்காத கடவுள்…

நாளை சொர்க்கமே கொடுப்பதானாலும்….

அப்படியொரு கடவுள் தேவையில்லை!!!