வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சனி, 27 ஜூலை, 2013

தமிழ்ப் புதினங்களின் தோற்றமும் வளர்ச்சியும்.


தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்.
( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு)
முன்னுரை
                உரைநடையில் எழுதப்பட்ட நெடுங்கதையை ஆங்கிலேயர் நாவல் என்பர். நாவெல்லஸ் என்ற இலத்தின் சொல்லின் சிதைந்த வடிவமே நாவல் என்பதாகும்.  தமிழரும் முதலில் இதை நாவல் என்றே அழைத்தனர். பிறகு வடமொழிப்பெயரால் நவீனம் என்றும் அழைத்தனர். பிறகு புதினம் என்று தமிழ்ப்படுத்திக்கொண்டனர். தமிழ் இலக்கிய மரபில் புதினத்துக்கு என தனித்துவமான இடம் உண்டு அதை விரும்பிப் படித்த, படிக்கும் வாசகர்கள் உண்டு. தமிழ்ப்புதினத்தில் ஏற்பட்ட வளர்ச்சிகளை இக்கட்டுரையின் வழிக் காண்போம்.

நாவலின் கட்டமைப்பு
நாவலின் தாயகம் இத்தாலி ஆகும். கதை சூழ்ச்சி, பாத்திரங்கள், உரையாடல் என சிறந்த கட்டமைப்புடன் பொழுதுபோக்கிற்காக மட்டுமின்றி சிறந்த அறக்கருத்தையும் உணர்த்துவதே சிறந்த புதினத்தின் கட்டமைப்பாகும்.

சிறுகதைக்கும் நாவலுக்குமான வேறுபாடு
சிறுகதையே நாவலின் முதல் வளர்ச்சி நிலை என்றும் அதிலிருந்தே நாவல் வளர்ச்சி பெற்றிருக்கவேண்டும் என்றும் ஹட்சன் உரைக்கிறார். சிறுகதை ஒரு சிறிய வட்டத்துக்குள் சுழல்வது. ஆனால் நாவல் மிகப்பெரிய பரப்பளவைக் கொண்டு இயங்குவதாகும். புதினத்தில் நிறைய கதாபாத்திரங்கள், கற்பனைகள், வருணனைகள் வரலாம். 

முதல் மூன்று நாவல்கள்

1.        வேதநாயகம் பிள்ளை எழுதிய “பிரதாப முதலியார் சரித்திரம்“
2.        இராஜம் ஐயர் எழுதிய “கமலாம்பாள் சரித்திரம்“
3.        மாதவையா எழுதிய “பத்மாவதி சரித்திரம்“
நாவல்களின் வகைப்பாடு
நாவல்களை, துப்பறியும் நாவல்,  சமூக நாவல்,வரலாற்று நாவல்,மொழிபெயர்ப்பு நாவல், தழுவல் நாவல்,  வட்டார நாவல் எனப்பல வகைப்படுத்தலாம்.
துப்பறியும் நாவல்
ஆவலைத் தூண்டுவதாகவும், எதிர்பார்ப்பை ஏற்படுத்ததுவதாகவும் இந்நாவல்கள் அமையும். ஆரணி குப்புசாமி முதலியார்,வடுவூர் துரைசாமி ஐயங்கார்,  தமிழ்வானன், பிடி.சாமி, சுஜாதா, பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா ஆகியோர் துப்பறியும் நாவல் எழுதிப் புகழ்பெற்றவர்களாவர். இவர்களுள் இராஜேஸ்குமார் அவர்களின் துப்பறியும் நாவல்களைத் தற்போது தொலைக்காட்சிகளில் குறும்படங்களாக எடுத்து ஒளிபரப்பி வருகிறார்கள்.
சமூக நாவல்
காலந்தோறும் மக்கள் எதிர்கொண்ட சிக்கல்களை எதிரொலிப்பன சமூகப் புதினங்களாகும்.  கொத்தமங்கலம் சுப்பு, ஜெயகாந்தன், நா.பார்த்தசாரதி, மு.வரதராசன்,  அகிலன் போன்றோர் சமூகப் புதினங்களால் மக்கள் மனதைக் கவர்ந்தவர்களாவர். கல்கியின் அலையோசை, தியாகபூமி, மகுடபதி ஆகிய நாவல்களும்,  மு.வரதராசன் அவர்களின் கயமை, அகல்விளக்கு, நெஞ்சில் ஒரு முள், கரித்துண்டு ஆகிய நாவல்களும் சமூக நாவல்களுக்குத் தக்க சான்றுகளாகும்.
வரலாற்று நாவல்
                நேற்றைய செய்தியே இன்றைய வரலாறு என்பர். தமிழக வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு தமிழ்வரலாற்று நாவல்கள் தோன்றின. கல்கி, சாண்டில்யன், விக்கிரமன், ஜெகசிற்பியன், மு.மேத்தா ஆகியோர் வரலாற்று நாவல்களால் புகழ்பெற்றோராவர்.  வரலாற்றுப் புதினத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் கல்கி ஆவார். கல்கி எழுதிப் புகழ்பெற்ற வரலாற்றுப் புதினங்களுள் பார்த்திபன் கனவு, சிவகாமியின்  சபதம், பொன்னியின் செல்வன் ஆகியன குறிப்பிடத்தக்கனவாகும்.
மொழிபெயர்ப்பு நாவல்
                சிறந்த பிறமொழி நாவல்களைத் தமிழில் மொழிபெயர்ப்பதை மொழிபெயர்ப்பு நாவல் என அழைத்தனர். காண்டேகரின் மராட்டிய நாவலை கா.ஸ்ரீஸ்ரீ அவர்கள் மொழிபெயர்த்தார், ஒரிய மொழிக் கதைகளைத் தமிழில் மொழிபெயர்த்ததற்காக தமிழ்நாடன் சாகித்திய அகாதமி விருதுபெற்றுள்ளார்.

தழுவல் நாவல்
                இவ்வகைப் நாவல்கள் தமிழில் பெரிய வரவேற்பைப் பெறவில்லை. டால்ஸ்டாயின் அன்னாகரினாவைத் தழுவி நாராயண துரைக்கண்ணன் சீமாட்டி கார்த்திகாயினி என்ற நாவலை எழுதினார். ரெயினால்சின் நாவலைத் தழுவி மறைமலையடிகள் குமுதவல்லி என்ற நாவலை எழுதினார்.
வட்டார நாவல்
                அந்தந்த வட்டாரப் பேச்சுவழக்குகளையும், பழக்கவழக்கங்களையும் கொண்டு எழுதப்படுவன வட்டார நாவல்களாகும்.சூரிய காந்தனின் “மானாவாரி மனிதர்கள்”, தோப்பில் முகமது மீரானின் “சாய்வு நாற்காலி” ஆகிய நாவல்கள் தக்க சான்றுகளாகும்.
பெண் நாவலாசிரியர்கள்
                பெண் நாவலாசிரியர்களுள் இராஜம் கிருஷ்ணன், சிவசங்கரி, இரமணி சந்திரன், இந்துமதி ஆகியோர் சிறந்த பெண் எழுத்தாளர்களாவர்.
முடிவுரை   
இன்றைய சூழலில் நிறையவே பொழுதுபோக்குக் கருவிகள் வந்துவிட்டன. ஆனால் கடந்த காலத்தில் நாவல் வாசித்தல் என்பது மிகப்பெரிய பொழுதுபோக்காக இருந்தது. அந்த வழக்கம் இந்தக் காலத்திலும் தொடர்ந்து வருவது நாவலின் ஆதிக்கத்தை எடுத்தியம்பும்.


கவிமணி பிறந்தநாள்

       
   கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை (27-07 1876) பிறந்தநாள் இன்று. இவர் தமிழுலகம் நன்கறிந்த கவிஞராவார். (காலம் 1876-1954) இவர், பக்திப் பாடல்கள், இலக்கியம் பற்றிய பாடல்கள், வரலாற்று நோக்குடைய கவிதைகள், குழந்தைப் பாடல்கள், இயற்கைப் பாட்டுக்கள், வாழ்வியல் போராட்ட கவிதைகள், சமூகப் பாட்டுக்கள், தேசியப் பாட்டுக்கள், வாழ்த்துப் பாக்கள், கையறு நிலைக் கவிதைகள், பல்சுவைப் பாக்கள் என பலவகைப்பட்ட பாக்களை எழுதிப் புகழ்பெற்றார்.              
           சிவதாணுப்பிள்ளை-ஆதிலட்சுமி தம்பதியர்க்கு இரண்டு பெண் குழந்தைகளை அடுத்து மூன்றாவதாக தேசிக விநாயகம் பிறந்தார். இரண்டு பெண்களுக்கு பின் பிறந்த ஆண் மகவுக்கு தான் வணங்கும் தேசிக விநாயகரின் பெயரை வைத்தார் சிவதாணுப்பிள்ளை. ஒன்பதாவது வயதில் தன் தந்தையை இழந்தார். எப்.ஏ. படித்த கவிமணி பின் ஆசிரியர் பயிற்சி படித்து தான் படித்த பள்ளியிலேயே ஆசிரியர் ஆனார். உமையம்மை எனும் பெண்ணை 1901 ல் மணம் முடித்தார். நாஞ்சில் நாட்டார் தன் மனைவியை குட்டி, பிள்ளாய் என்று அழைத்து கொண்டிருந்த நாட்களில் கவிமணி தன் மனைவியை தாயி என்று மரியாதையுடன் அழைப்பார். குழந்தைப்பேறு இல்லாத கவிமணி தனது அக்காள் மகன் சிவதாணுவை தனது மகன் போலவே வளர்த்தார். எட்வின் ஆர்னால்டின் 'ஆசிய ஜோதி' யைத் தமிழில் தழுவி எழுதினார். பாரசீகக் கவிஞர் உமர் கய்யாம் பாடல்களைத் தழுவி தமிழில் எழுதினார். ஆராய்ச்சித் துறையிலும் தேசிக விநாயகம் பிள்ளை பல அரிய பணிகளை ஆற்றியிருக்கிறார். 1922-இல் 'மனோன்மணியம் மறுபிறப்பு' என்ற திறனாய்வுக் கட்டுரையை எழுதினார். சென்னை பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேரகராதி உருவாக்கத்தில் மதிப்பியல் உதவியாளராக இருந்தார். கம்பராமாயணம் திவாகரம், நவநீதப் பாட்டியல் முதலிய பல நூல்களின் ஏட்டுப் பிரதிகளைத் தொகுத்திருக்கிறார். 'காந்தளூர்ச்சாலை' பற்றிய ஆய்வு நூலை எழுதினார்.
              24 டிசம்பர் 1940 ல் சென்னை பச்சைப்பன் கல்லூரியில் தமிழவேள் உமாமகேசுவரம் பிள்ளை அவர்கள் கவிமணி என்ற பட்டம் வழங்கினார். 1943 ல் அண்ணாமலை அரசர் ஆத்தங்குடியில் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். பெரும் பொருள் வழங்க முன் வந்தபோது அதை வாங்க மறுத்து விட்டார். 1954 ல் கவிமணிக்கு தேருரில் நினைவு நிலையம் அமைக்கப்பட்டது. அக்டோபர் 2005இல் இந்திய அரசு முத்திரை வெளியிட்டுச் சிறப்பித்தது. இவரது புதினமான மலைக்கள்ளன், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, சிங்களம் ஆகிய ஆறு மொழிகளில் திரைப்படமாக வந்துள்ளது.
இவர் கவிதைகளுள் புகழ்பெற்ற சில வரிகள்

உள்ளத்துள்ளது கவிதை - இன்ப
உருவெடுப்பது கவிதை
தெள்ளத் தெளிந்த தமிழில் - உண்மை
தெரிந்துரைப்பது கவிதை
எனக் கவிதைக்கு இலக்கணம் கூறுகிறார்.
மங்கையராய்ப் பிறப்பதற்கே - நல்ல
மாதவம் செய்திடல் வேண்டுமம்மா 
எனப் பெண்மையைச் சிறப்பித்துப் பேசுகிறார்.
ஓடும் உதிரத்தில் - வடிந்து
ஒழுகும் கண்ணீரில்
தேடிப் பார்த்தாலும் - சாதி
தெரிவதுண்டோ அப்பா 
புத்தர் கூறுவதாக உரைக்கிறார்.

கவிமணியின் நூல்கள்

ஆசிய ஜோதி , (1941)

  • மலரும் மாலையும், (1938)
  • மருமக்கள்வழி மான்மியம், (1942)
  • கதர் பிறந்த கதை, (1947)
  • உமார் கய்யாம் பாடல்கள், (1945)
  • தேவியின் கீர்த்தனங்கள்
  • குழந்தைச்செல்வம்
  • கவிமணியின் உரைமணிகள்

புதன், 24 ஜூலை, 2013

சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்.

தமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்.
             
(கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு)
முன்னுரை
 தமிழர்கள் காலந்தோறும், இராமாயணம், மகாபாரதம், புராணக் கதைகள், கிராமியக் கதைகள், பஞ்சதந்திரக் கதைகள், மரியாதைராமன் கதைகள், தெனாலிராமன் கதைகள், விக்கிரமாதித்தன் கதைகள் என பல்வேறு கதைகளைக் கேட்டு வருகின்றனர். கதைகளின் வழியாக ஒழுக்கநெறிகள் அறிவுறுத்தப்பட்டிருக்கின்றன. அதன் படிநிலை வளர்ச்சியை இக்கட்டுரையில் காண்போம்.
தொல்காப்பியர் கூறும் கதை மரபு
கதை சொல்லும் மரபு தொன்றுதொட்டு இருந்து வந்த வழக்கம் என்பதைத் தொல்காப்பியர்,
                            ‘பொருள் மரபில்லாப் பொய்ம்மொழி யானும்
பொருளோடு புணர்ந்த நகைமொழியானும்’ என்று உரைப்பார்.
சிறுகதைக்கான இலக்கணம்
அரைமணிமுதல் இரண்டு மணிநேரத்துக்குள் படித்து முடிக்கக்கூடியது சிறுகதை என்பர் எட்கார் ஆலன்போ. சுருங்கச் சொல்லுதலும், சுருக்கெனச் சொல்லுதலும் இதன் உத்திகளாகும். அதனால் நீண்ட வருணனைகளுக்கு இங்கு இடமில்லை. குதிரைப் பந்தையம் போலத் தொடக்கமும் முடிவும் சுவைமிக்கனவாக இருத்தல்வேண்டும் என்பர் செட்ஜ்விக். புதினம் புளியமரம் என்றால், சிறுகதை தென்னைமரம் என்பார் இராசாசி. செகாவிவ் என்பவர் தரமிக்க சிறுகதைகளைத் தந்து சிறுகதைப் படைப்புக்கான நோபல் பரிசைப் பெற்றார். .இவரைச் சிறுகதை உலகின் தந்தை என அழைப்பர்.
சிறுகதை தோன்றிய சூழல்
19ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து, தமிழ் இலக்கியத்தின் பரப்பிலும் வடிவத்திலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வந்துள்ளன. அச்சுப்பொறியின் பயன்பாட்டினாலும், ஆங்கில மொழியின் செல்வாக்கினாலும் தமிழ்ச் சிறுகதை வழக்கில் ஒரு பெரும் மாற்றம் ஏற்பட்டது.  வாய்மொழியாக வழங்கி வந்த கதைகள் பல நூல் வடிவில் அச்சுப் பெற்று வெளியிடப்பட்டன.  இவ்வகையில் முதன்முதலில் அச்சில்வந்தது வீரமாமுனிவரின் ‘பரமார்த்த குருவின் கதை’ அதைத் தொடர்ந்து ஈசாப்பின் நீதிக்கதைகள், திராவிட பூர்வகாலக்கதைகள், தெனாலிராமன் கதைகள் போன்றவைத் தமிழில் அச்சாயின.  இதனால் தமிழ்நாட்டில் கதை கேட்பது மட்டுமல்ல படிக்கும் வழக்கமும் அதிகமானது.
தமிழ்ச்சிறுகதையின் முன்னோடிகள்
·         வீராசாமி செட்டியார் (1855) தாம் எழுதிய உரைநடைக் கட்டுரைகளைத் தொகுத்து ‘வினோத ரசமஞ்சரி’ என்று வெளியிட்டார்.
·         வ. வே. சு. ஐயரின் ‘குளத்தங்கரை அரசமரம் சொன்ன கதையை முதன்முதலில் அறிமுகப் படுத்தியது விவேக போதினி ஆகும். இவரே தமிழ்ச் சிறுகதையின் தந்தை என அழைக்கப்பட்டார். ‘குளத்தங்கரை அரசமரம் சொன்ன கதை, மங்கையர்கரசியின் காதல் போன்ற கதைகளில் நிகழ்வு ஒருமை, கால ஒருமை, பாத்திர ஒருமை, உணர்வு ஒருமை என்ற சிறுகதைக்குரிய இலக்கணம் அனைத்தும் ஒருங்கே அமைந்திருப்பதைக் காணலாம்.
·         செல்வகேசவராய முதலியாரின் அபிநவக் கதைகள் என்ற தொகுப்பு பெரிதும் பாராட்டப் பட்டது.
·         ஆரம்ப காலச் சிறுகதை ஆசிரியர்களுள் மாதவைய்யா குறிப்பிடத்தக்கவர்.  இவரது ‘குசிகர் குட்டிக்கதைகள்’ ஆங்கிலத்திலும் தமிழிலும் வெளியானது. இவர் பிராமணச் சமூகத்தில் காணப்பட்ட குழந்தைத் திருமணம், விதவைகள் பட்ட துயர், வரதட்சனைக் கொடுமை முதலிய சீர்கேடுகளைப் பற்றித் தமது கதைகளின் மூலம் மிக வன்மையாகக் கண்டித்தவர்.
·         மகாகவி சுப்பிரமணிய பாரதியார் வங்காள எழுத்தாளர் இரவீந்திரநாத் தாகூரின் 11 சிறுகதைகளை மொழிபெயர்த்து வெளியிட்டார்.
·         கல்கி அவர்கள் சிறுகதைத் துறையில் கால்வைத்து, புதினங்களால் புகழடைந்து கல்கி இதழைத் தொடங்கினார். இவரது கதைகளில்  கணையாழியின் கனவு, திருடன் மகன் திருடன், வீணை பவானி ஆகிய கதைகள் குறிப்பித்தக்கன.
·         சொ.விருத்தாச்சலம் என்று அழைக்கப்பட்ட புதுமைப்பித்தன் அவர்கள் சிறுகதை மன்னன் என அழைக்கப்பட்டார். கேலியும்,கிண்டலும் கலந்த சமூகச் சாடல் இவரைத் தமிழுலகிற்கு அடையாளம் காட்டியது.சிறுகதைச் செல்வர் என்றும், தமிழ்நாட்டின் மாப்பசான் எனப் போற்றப்பட்டார். இவரது கதைகளில் கயிற்றரவு, சாபவிமோசனம், பொன்னகரம் ஆகியன காலத்தை வென்ற கதைகளாகும்.
·         மௌனி என்ற புனைப் பெயரில் எழுதிய மணி அவர்களைப் புதுமைப்பித்தன் சிறுகதை உலகின் திருமூலர் என்று அழைப்பார்
இதழ்களால் வளர்ந்த சிறுகதை
தமிழ்ச்சிறுகதையில் மலர்ச்சிக்கு களம் அமைத்தது மணிக்கொடி சிற்றிதழாகும். இது         டி. எஸ். சொக்கலிங்கம், ஸ்டாலின் சீனிவாசன் ஆகியோரால் நடத்தப்பட்டது. பின்னர் இதை முழுக்கமுழுக்க சிறுகதை இதழாக பி. எஸ். ராமையா வெளியிட்டார். இதில் புதுமைப்பித்தன், கு.ப.ராஜகோபாலன், ந.பிச்சமூர்த்தி, மௌனி போன்றவர்கள் சிறந்த சிறுகதைகளை எழுதினார்கள். இவர்கள் மணிக்கொடி தலைமுறை என்று சொல்லப்படுகிறார்கள். தமிழின் சிறந்த சிறுகதைகளை எழுதியவர்கள் என்று க.நா.சுப்ரமணியம்,சி. சு. செல்லப்பா, லா.ச.ராமாமிருதம், ஜெயகாந்தன், சுந்தரராமசாமி, கு அழகிரிசாமி,  தி. ஜானகிராமன்], கி. ராஜநாராயணன், மு.வ, அகிலன் போன்றவர்கள் குறிப்பிடப்படுகிறார்கள்.
முடிவுரை
காலத்துக்கு ஏற்ப வளர்ந்து வந்த தமிழ்ச்சிறுகதை இன்றைய அவரசகாலத்துக்கு ஏற்ப ஒருபக்கக் கதை, அரைப்பக்கக் கதை, கால்பக்கக் கதை, மைக்ரோக் கதை என தன் வடிவத்தை மாற்றிக்கொண்டுள்ளது. உலக சிறுகதைகளுக்கு  இணையாக தமிழ்ச்சிறுகதை இலக்கி்யத்தை வளர்தெடுத்த எழுத்தாளர்களைத் தமிழுலகம் என்றும் மறக்காது.


மாதிரி வினாக்கள்
இரண்டு மதிப்பெண் வினா
1.        சிறுகதை உலகின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
2.        தமிழ்ச் சிறுகதை உலகின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
ஐந்து மதிப்பெண் வினாக்கள்
3.        புதுமைப்பித்தன் அவர்களின் சிறுகதைப் பணி குறித்து எழுதுக.
4.        தமிழர் மரபில் இருந்த தொன்மையான கதைகள் யாவை?
பத்து மதிப்பெண் வினாக்கள்
5.        தமிழ்ச் சிறுகதை வளர்ச்சியை விளக்கி எழுதுக.

6.        காலந்தோறும் தமிழ்ச் சிறுகதைகளில் ஏற்பட்ட மாற்றங்களை மதிப்பீடு செய்க.

ஞாயிறு, 21 ஜூலை, 2013

தமிழில் ஹைகூ கவிதைகள்

( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) 
முன்னுரை
       தமிழில் புதுக்கவிதைக்குக் கிடைத்த செல்வாக்கு ஹைகூ கவிதைக்கும் கிடைத்தது. ஹைகூ என்பது சப்பானியக் குறும்பா வடிவமாகும். மூன்றடி வசீகரம், சின்னச்சின்ன மின்தாக்குதல்கள், சொற்செட்டு ஆகியன இதன் தனிச்சிறப்புகளாகும்.
ஹைகூவின் தோற்றம்
       பாரத, பௌத்த சிந்தனையில் அரும்பி சீனப் பண்பாட்டில் போதாகி, சப்பானிய அழகுப் பார்வையில் மலர்ந்து மனம் வீசுவது ஹைகூ என்பர் நெல்லை சு.முத்து. “உலகக் கவிதை வடிவங்களிலேயே எனக்கு மிகவும் பிடித்தது ஹைகூதான்“ என்பார் அப்துல் ரகுமான். புதிர்போட்டு விடையளிக்கும் ஒருவகை இலக்கிய விடுகதை சப்பான் மொழியில் “ரெங்கா“ எனப்பெயர்பெறும். சப்பானிய அரண்மனைவாசிகளின் சொல்லரங்க விளையாட்டிலிருந்து தோன்றியதே ஹைகூ என்ற கருத்தும் உண்டு.

கண நேரம் ஒளிர்கிறாய்
மறுகணமே இருள்கிறாய்
சக மின்மினியே (சினோ-ஜோ)

என விடுகதைபோலவும், வினாவிடைபோலவும் ஹைகூ கவிதைகள் அமையும்.
ஹைகூவின் தனிச்சிறப்பு
       புதுக்கவிதைகளுடன் ஒப்பிடும்போது இன்னும் சுறுக்கமாக, நறுக்கென்று இருப்பது ஹைகூவின் தனிச்சிறப்பாகும். “முதலடியானது சாட்டையைக் கையிலெடுக்கும் அமைதியுடனும், இரண்டாவது அடியானது அதை ஓங்கும் நிதானத்துடனும், மூன்றாவது அடி சுழற்றி வீசிய கனத்துடனும் தெறிப்பாக அமையவேண்டும்“ என்பார் நெல்லை.சு.முத்து. உணர்ச்சிக் குறியீடுகளை ஹைகூ கவிஞர்கள் சொற்களால் வெளிப்படுத்தாமல் நிறுத்தற்குறியீடுகளால் வெளியிடுவர் இதற்கு “கிரெஜி“ என்று பெயர்

·         அத்தனையும் தின்றுவிட்டேன்
       ஆ… வயிற்றுவலி
              திருடிய ஆப்பிள்கள்   (ஷிகி)

·         எனக்கு வயசாகக் கூடாது
                                 சே… கேட்டீர்களா,அதோ
                                புதுவருட மணியோசை  (ஜோகுன்)                     
தமிழகத்தில் ஹைகூ
        ஹைகூ கவிதைகள் உலகளவில் செல்வாக்குப் பெறத்தொடங்கியதும் தமிழகத்திலும் அறிமுகமானது. ஹைகூவை மின்பா, துளிப்பா, மின்மினிக் கவிதைகள், சிந்தர், நறுக் கவிதைகள், வாமனக் கவிதைகள்  எனப் பல பெயரிட்டு அழைத்தனர். பாரதியார் எழுதிய “சப்பானியக் கவிதை“ என்ற கட்டுரை ஹைகூவின் முதலாவது தமிழ் அறிமுகமாகும். சப்பானியக் ஹைகூ போன்றதே நம் திருக்குறள் என்பார் பாரதியார். பாரதிக்குப் பிறகு பல ஆண்டுகள் தமிழில் ஹைகூ பற்றி யாரும் சிந்திக்கவில்லை. 1966ல் கணையாழி இதழில் சுஜாதாவின் சில மொழிபெயர்ப்பு ஹைகூகவிதைகள் வெளிவந்தன. பாரதிதாசனின் குயில் ஏட்டிலும் ஹைகூ கவிதைகள் வெளிவந்தன. 1987ல் டாக்டர் லீலாவதியின் “ஜப்பானிய ஹைகூ“ ன்ற முதல்
மொழிபெயர்ப்புத் தொகுதி வெளிவந்தது.
ஹைகூ எழுதிய தமிழ்கவிஞர்
1.        அப்துல் ரகுமானின் பால்வீதி என்ற கவிதைத் தொப்பில் ஐந்து சிந்தர்பாக்கள் (ஹைகூ) இடம்பெற்றன.
2.        அமுதபாரதியின் புள்ளிப்பூக்கள்.
3.        அறிவுமதியின் “புல்லின் நுனியில் பனித்துளி“
4.        கோ.வசந்தகுமாரின் “சொந்த தேசத்து அகதிகள்“
5.        தமிழன்பனின் சூரியபிறைகள்

மேற்கண்ட கவிஞர்களின்  ஹைகூ கவிதைகள் புகழ்பெற்றவையாகும்.

சான்று..

எப்போதும் மத்தாப்பு                  கல்லால்பட்ட வலியைச் சொல்லவே
கொளுத்தி விளையாடுகிறது             கரைவரை செல்கின்றன
மலையருவி – கழனியூரன்            நீரின் வளையங்கள் -அமுதபாரதி
முடிவுரை
ஹைகூக் கவிதைகளை இன்று பல இதழ்களும் வெளியிடுகின்றன. ஹைகூ கவிதைகளைத் தமிழர்கள் எழுதுவதிலோ, புரிந்துகொள்வதிலே எந்தச் சிக்கலும் இல்லை. தமிழ் இலக்கிய வரலாற்றில் ஹைகூ கவிதைகளுக்கென்று தனித்துவமான இடம் உண்டு. என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

மாதிரி வினா

இரண்டு மதிப்பெண் வினா
1.      ஹைகூவின் வேறு பெயர்கள் யாவை?
2.      ரெங்கா என்பது யாது?

ஐந்து மதிப்பெண் வினா
3.      நெல்லை.சு.முத்து அவர்கள் ஹைகூகவிதையைப் பற்றிக் கூறும் கருத்து யாது?,
4.      தமிழில் வெளிவந்த ஹைகூ கவிதைகள் தொகுப்புகள் சிலவற்றைக் கூறுக.

பத்து மதிப்பெண் வினா
5.      தமிழில் ஹைகூ கவிதையின் தோற்றம் மற்றும் வளர்ச்சி பற்றி விளக்கி எழுதுக.

6.       ஹைகூ கவிதைமரபை வளர்த்த தமிழ்க்கவிஞர்கள் பற்றி ஒரு கட்டுரை எழுதுக.                           

தமிழ் வளர்க்கும் சீனர்கள்


                   தமிழகத்தில் ஒலிபரப்பாகும் வானொலிகளில் கூட பிறமொழி கலவாத அழகியதமிழில் நிகழ்ச்சிகளைக் கேட்கமுடிவதில்லை. நம் நிகழ்ச்சித் தொகுப்பாளர்களெல்லாம் ஏதோ காலில் சுடுதண்ணீர் ஊற்றியதுபோலவும், விமானத்தைப் பிடிக்கக் கிளம்புபவர்கள் போலவும் அவசர அவசரமாக தமிங்கிலத்தில் பேசிக்கொண்டிருக்கிறார்கள். சீனாவிலிருந்து ஒளிபரப்பாகும் சீன வானொலி அழகிய தமிழில் நிகழ்ச்சிகளை ஒலிபரப்பி வருகிறது என்ற செய்தியைக் கேட்க்கும்போது மனதுக்கு மிகவும் நிறைவாக உள்ளது. இந்தத் தொகுப்பாளர்கள் தம் பெயர்களையும் அழகிய தமிழில் மாற்றிககொண்டனர் என்ற செய்தி மேலும் வியப்பளிப்பதாகவுள்ளது.