
சீத்தலைச் சாத்தனார் இயற்றிய மணிமேகலை
மணிபல்லவத்துத் துயர் உற்ற காதை
மணிபல்லவத்
தீவில் மணிமேகலை
புகார் நகரில் சுதமதி மாதவியிடம்
மணிமேகலை நிலைமையைச் சொல்லி வருந்திக்கொண்டிருந்தபோது, மணிபல்லவத் தீவில்
மணிமேகலை உறக்கம் தெளிந்து எழுந்திருந்தாள்.
ஈங்குஇவள் இன்னண மாக இருங்கடல்
வாங்குதிரை உடுத்த மணிபல் லவத்திடைத்
தத்துநீர் அடைகரைச் சங்குஉழு தொடுப்பின்
முத்துவிளை கழனி முரிசெம் பவளமொடு
விரைமரம் உருட்டும் திரைஉலாப் பரப்பின் 5
ஞாழல் ஓங்கிய தாழ்கண் அசும்பின்
ஆம்பலும் குவளையும் தாம்புணர்ந்து மயங்கி
வண்டுஉண மலர்ந்த குண்டுநீர் இலஞ்சி
முடக்கால் புன்னையும் மடல்பூந் தாழையும்
வெயில்வரவு ஒழித்த பயில்பூம் பந்தர் 10
அறல்விளங்கு நிலாமணல் நறுமலர்ப் பள்ளித்
துஞ்சு துயில் எழூஉம் அம்சில் ஓதி
தத்தும் கடலோரத்தில் அலையில் வரும் சங்குகள் நிலத்தை உழுதுகொண்டிருந்தன. அந்த வயலில் முத்துக்கள்
விளைந்தன. செம்பவளக் கற்களுடன் சந்தனம், அகில்போன்ற மரங்களையும் அலைகள் உருட்டித் தள்ளுவதால் அந்த இடம் மணம்மிக்கதாக
விளங்கியது. ஞாழல் மரம் ஓங்கி உயர்ந்திருந்தது. தாழ்ந்த நீர்நிலைகளில்
ஆம்பலும் குவளையும் கலந்து பூத்துக் குலுங்கின. வண்டுகள் தேன் உண்ண
அந்தப் பூக்கள் மலர்ந்துகொண்டிருந்தன. முடங்கிய காலை உடைய
புன்னை மரமும், மடல் விரியும் தாழை மரமும் வெயிலுக்குப் போட்ட பந்தல் போலக் காணப்பட்டன. மணல் பரப்பு நிலா
வெளிச்சம் போலக் காணப்பட்டது. தான் படுத்திருந்த இடம் முழுவதும் மலர்கள் நிறைந்த ஒரு மலர்ப்படுக்கையைப்போல
மலர்கள் சொரிந்து கிடப்பதைக் கண்டாள் மணிமேகலை.
மணிபல்லவத்
தீவில் மணிமேகலை அலறல்