வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வியாழன், 10 செப்டம்பர், 2009

நீங்கள் வாழ்வது நாடா? - UPSC EXAM TAMIL - புறநானூறு - 187

                             

மக்கள் வாழ்வது நாடு!
மாக்கள் வாழ்வது காடு! (மாக்கள்- விலங்குகள்)

மனம் இருப்பதாலேயே மனிதன் ஆனோம். மனிதம் இல்லாவிட்டால் நாம் மாக்கள் தானே!

மாக்கள் வாழ்வது நாடாகுமா..?

சரி நாடு எது என்ற கேள்வியை வள்ளுவரைக் கேட்போம்...

வள்ளுவப் பெருந்தகையே!

நாடு என்பது எது........?




வள்ளுவர்..

சுருக்கமாகச் சொன்னால்,

உறுபசியும் ஓவாப் பிணியும் செறு பகையும்
சேராதியல்வது நாடு (குறள்-734.)

அதாவது மிக்க பசியும், ஓயாத நோயும், அழிவு செய்யும் பகையும் இல்லாததே நாடு.




வள்ளுவர் கருத்துப்படி நம் நாட்டை நோக்கும்போது,

பசி – தலை விரித்தாடுகிறது.
பிணி – ஒரு நோய்க்கு மருந்து கண்டறியும் முன்பே இன்னொரு நோய் வந்து அச்சமூட்டுகிறது.
பகை – இனக்குழு சமூகம் தொடங்கி இன்று வரை ஒவ்வொரு நாடுகளுக்கும் இடையிலான பகை ஓய்ந்தபாடில்லை.

( மாவீரன் அலெக்சாண்டரின் கல்லறையில் எழுதப்பட்ட வாசகம்
உலகமே போதாது என்றவனுக்கு இந்தக் கல்லறை போதுமானதாக இருந்தது.)
சரி ஔவையாரை இதே கேள்வியைக் கேட்போம்..

ஔவையாரே நாடு என்பது எது..?

நாடா கொன்றோ ; காடா கொன்றோ;
அவலா கொன்றோ ; மிசையா கொன்றோ;
எவ்வழி நல்லவர் ஆடவர்,
அவ்வழி நல்லை ; வாழிய நிலனே!


(புறநானூறு-187. ஆண்கள் உலகம்!
பாடியவர்: ஔவையார்
திணை: பொதுவியல் துறை: பொருண்மொழிக் காஞ்சி
(ஆடவரது ஒழுக்கமே உலக மேம்பாட்டிற்கு அடிப்படை என்பது இது. மிகச் சிறந்த செய்யுள்.)

ஔவை நிலத்தை நோக்கிக் கூறுகிறார்..
ஏ! நிலமே..!
நீ ஒன்றில் நாடாகவும்!
ஒன்றில் காடாகவும்!
ஒன்றில் பள்ளமாகவும்!
ஒன்றில் மேடாகவும்!
எப்படி இருந்தாலும்,
ஆடவர் எவ்விடத்தில் நல்லவராக இருக்கிறாரகளோ அவ்விடத்து நீயும் நன்மையுடையதாக இருக்கிறாய்
.

வாழ்வும் தாழ்வும் நிலத்தைப் பொறுத்ததன்று. அந்நிலத்தில் வாழும் ஆடவரைப் பொறுத்தது. நற்பண்பும், நற்செயலும் கொண்ட ஆடவர் நாட்டின் புகழுக்கும் வளத்துக்கும் காரணமாக அமைகின்றனர்.

நல்லோர் இருப்பின் அது நல்ல நிலம்.
தீயோர் இருப்பின் அது தீய நிலம்.




“ தன்னிடத்து வாழ்வோரின் இயல்பல்லது
தனக்கென ஓர் இயல்பும் இல்லாதது நிலம்“


என்கிறார் ஔவையார்.

சங்க காலம் மன்னனையும், ஆண்களையும் முதன்மையாகக் கொண்டு இயங்கியதால் ஆடவர் என்று ஔவையார் குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய சூழலில் (ஒவ்வொரு ஆணும் பெண்ணும்) மக்கள் யாவரையும் குறிப்பதாகவே இக்கூற்று அமைகிறது.

வள்ளுவர், ஒளவையார் ஆகியோரின் கருத்தின்படி நாட்டிற்கான தகுதிகள்.

1. பசியின்றி இருத்தல்
2.நோயின்றி இருத்தல்
3.பகையின்றி இருத்தல்
4.தனி மனித ஒழுக்கத்துடன் இருத்தல்.


1. பசியின்றி இருத்தல்

பசி என்னும் நோய் இல்லாத நாடும். இல்லாத நாளும் இல்லை என்றே எனக்குத் தோன்றுகிறது
சங்க இலக்கியங்கள் கலைஞர்களின் பசி என்னும் நோய் தீர்த்த மன்னனை ' பசிப்பிணி மருத்துவன்'என்று போற்றுகின்றன.

பசியை முழுவதும் ஒழிக்க முடியுமா..?
பசியோடு இருக்கும் ஒருவனுக்கு மீனை உணவாகக் கொடுப்பதை விட அந்த மீனை எப்படி பிடிப்பது என்பதைக் கற்றுக்கொடுங்கள்.
என்பது சீனப்பழமொழி..

எவ்வளவு பெரிய பணக்காரனாக இருந்தாலும் உலகில் உள்ள பசிப்பிணியை முழுவதும் நீக்குவது என்பது இயலாது. பசியோடு இருப்போர் எல்லாம் வாழத் தெரியாதவர்கள். அவர்களுக்கு எப்படி வாழ்வது என்ற சொல்லிக்கொடுப்பதே பெரிய தீர்வாக அமையும். அவர்கள் ஒவ்வொருவருக்கும் நாம் சென்று தனித்தனியாகப் பாடம் நடத்திச் சொல்லிக்கொடுக்க முடியாது.
இன்றைய சூழலில் நிறைய ஊடகங்கள் வந்துவிட்டன.
வாழ் நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில்……?

2.நோயின்றி இருத்தல்...

நல்ல சுற்றம், நல்ல மனநிலை, அளவான உணவு, உடற்பயிற்சி ஆகியனவே நோயற்ற வாழ்வின் அடிப்படைகள்..


3.பகையின்றி இருத்தல்
தீதும் நன்றும் பிறர் தர வாராது என்று எண்ண வேண்டும்...

‘வேர்களை அறுத்தோடும்
நதியின் மீதும் கலகலவென்று பூச்சொரியும்
கரையோரத்துக் கிளைகள்...
அறுத்ததற்குக் கோபமில்லையாம்
நனைத்ததற்கு நன்றியாம்
மரம் சொன்னது :
''இன்னா செய்தார்க்கும்
இனியவை செய்''


என்பார் வைரமுத்து..

ஒரு கண்ணத்தில் அறைந்தால் இன்னொரு கண்ணத்தைக் காட்டு என்றாறாம் இயேசுநாதர்...

எனக்கு வந்த குறுந்தகவல்..

'ஒருவன் உன் மீது கல்லை எறிந்தால்
நீ அவன் மீது பூவை எறி
அவன் மீண்டும் உன் மீது கல்லை எறிந்தால்
நீ பூந்தொட்டியைக் கொண்டு எறி சாகட்டும்...'

இது நகைச்சுவை மட்டுமல்ல
நிகழ்கால உண்மையும் கூட அதுதான்..
எனக்கு ஒரு கண்போனால் என் எதிரிக்கு இரண்டுகண்களும் போக வேண்டும் என்றே எண்ணுகிறோம்.


குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை'-அதனால் முடிந்தவரை பகையின்றி வாழ முயற்சிப்போம்.

4.தனி மனித ஒழுக்கத்துடன் இருத்தல்.

தனி மனித ஒழுக்கம் என்பது ஒரு நாட்டின் நிலையை உயர்த்திக் காட்ட வல்லது.

சான்றாக ஒரு சிறிய கதை,

ஒரு நாட்டில் ஒரு அரசன் இருந்தான். அவன் தன் மக்களிடம் நாளை நம் ஊரிலுள்ள கோயிலில் பாலாபிடேகம் செய்யப் போகிறோம் அதனால் ஒவ்வொருவரும் நம் அரண்மனை முன் உள்ள தொட்டியில் ஒவ்வொரு லிட்டர் பாலை பொழுது விடிவதற்கு முன்னர் ஊற்றி விட வேண்டும் என்றானாம்
அந்த நாட்டிலுள்ள ஒவ்வொருவரும் நாம் ஒருவர் மட்டும் பாலுக்குப் பதிலாகத் தண்ணீரை ஊற்றினால் என்ன தெரியவா போகிறது என்று ஒவ்வொருவரும் பாலுக்குப் பதிலாகத் தண்ணீரை ஊற்றினார்களாம். பொழுது விடிந்து தொட்டியைப் பார்த்தால் ஒரு சொட்டுக்கூட அதில் பால் இல்லையாம்.


இந்தக் கதை வாயிலாக நாம் அறிந்து கொள்ள வேண்டியது....
ஒவ்வொரு தனிமனிதனும் சேர்ந்தது தான் சமூகம்..
ஒவ்வொரு தனிமனிதத் தவறுகளும் அவர் வாழும் சமூகத்தைப் பாதிக்கும் என்பதே!



வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினாராம் வள்ளலார்..
இது பிற உயிரையும் தன்னுயிர் போல எண்ணியதால் வந்த விளைவு..
ஓரறிவிலிருந்து உயிர்கள் உள்ளன..
பிற உயிர்களையும் தன்னுயிர் போல எண்ண முயற்சி செய்வோம்.

மாக்களாக வாழாது மக்களாக வாழ முயல்வோம்
நாம் வாழும் நிலத்தை நல்ல நாடாக்க முயல்வோம்

புதன், 9 செப்டம்பர், 2009

தூங்காத விழிகள் ரெண்டு




துக்கத்தில் கூட வாழ்ந்துவிடலாம் தூக்கமின்றி வாழமுடியாது.
நிறைவேறாத ஆசைகளை கனவாக நிறைவு செய்கிறது தூக்கம்.
• தூக்கத்தில் பாதி ஏக்கத்தில் மீதி இது தான் வாழ்க்கை.
• தூக்கம் உடலுக்கும் உள்ளத்துக்கும் ஊக்கசக்தி.


“உறங்குவதுபோலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு“ – குறள் 339
என்பர் வள்ளுவர்.
ஒவ்வொரு உறக்கமும் ஒரு இறப்பு
ஒவ்வொரு விழிப்பும் ஒரு பிறப்பு என்பதே இதன் பொருள்.

இப்படி தூக்கம் மனித வாழ்வுக்கு அடிப்படைத் தேவையாக விளங்குகிறது.
“மெத்தைய வாங்கினேன்
தூக்கத்தை வாங்கல“
என்று புலம்புவோர் பலரையும் இன்று காணமுடிகிறது. பணத்துக்காக இரவுப்பணி செய்து தூக்கத்தைத் தொலைத்தவர்கள். பணம் வந்தபின்பு உறக்கமின்றித் தவிப்பதைப் பார்க்க முடிகிறது.
கும்பகர்ணனைப் பற்றிச் சொல்லும்போது,
தவம் செய்து “ நித்யத்தவம்“ வாங்கச் சென்றவன், நாரதரின் செயலால் “ நித்ரத்தவம்“ வாங்கி வந்தான். அதனால் தொடர்ந்து ஆறுமாதம் தூங்கினான் என்பார்கள்.

நன்றாகத் தூங்குபவர்களை, இவர்கள் வரம் வாங்கி வந்தவர்கள் என்று பார்ப்போர் சொல்வதுண்டு.
தூக்கம் வருதல் வரம் என்று சொல்லப்படும் அதே சூழலில்,
தூக்கமின்மை சாபம் என்றும் சொல்லப்படுகிறது.

“தூங்காத விழிகள் ரெண்டு
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று
செம்பூ மஞ்சம் விரித்தாலும் பன்னீரைத் தெளித்தாலும்
ஆனந்தம் எனக்கேது அன்பே நீ இல்லாது


அக்கினி நட்சத்திரம் என்னும் திரைப்படத்தில் இடம்பெறும் இப்பாடலை யாவரும் கேட்டிருப்பீர்கள்..

சங்கப் பாடல்களின் தாக்கம் பல திரைப்படப்பாடல்களிலும் காணமுடிகிறது. இத்திரைப்படப் பாடலில்,
இந்தப் பெண்ணுக்கு தூக்கம் வரவில்லை. காரணம் தன் தலைவனின் நினைவு,
மலர் மஞ்சம் விரித்தாலும், அதில் பன்னீரைத் தெளித்தாலும் உறக்கம் வரவில்லை என்கிறாள்.

இதே உணர்வினை எடுத்தியம்பும் சங்கப் பாடல்கள் பல,
சான்றாக, குறுந்தொகையில் உறக்கம் வராத தலைவி ஒருத்தியின் புலம்பல்.

சான்று-1

மூட்டு வேன்கொல் தாக்கு வேன்கொல்
ஓரேன் யானுமோர் பெற்றி மேலிட்டு
ஆஅ ஒல்லெனக் கூவு வேன்கொல்
அலமரல் அசைவளி அலைப்பவென்
உயவுநோ யறியாது துஞ்சும் ஊர்க்கே.
28. பாலை - தலைவி கூற்று
-

ஔவையார்.
(வரைவிடை ஆற்றாளாய்க் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.)
எல்லோரும் நன்றாகத் தூங்குகிறார்கள் இந்த தலைவிக்கு மட்டும் தலைவனின் நினைவால் உறக்கம் வரவி்ல்லை. இச்சூழலில் நன்றாகத் தூங்குபவர்களைப் பார்க்கிறாள் தலைவி “ தான் மட்டும் தலைவனின் நினைவால் உறக்கமின்றித் தவிக்க இவர்கள் எல்லாம் எந்தக் கவலையும் இன்றித் தூங்குகிறார்களே. இவர்களுக்கு என் நிலையை எப்படித் தெரிவிப்பேன்.
மூட்டுவேனா?
தாக்குவேனா?
ஆஅ ஒல்லெனக் கூவுவேனா?
என்கிறாள்.
தலைவியின் மனநிலையைப் புலவர் எவ்வளவு அழகாகப் புலப்படுத்தியிருக்கிறார்..
நமக்குத் தூக்கம் வராத சூழலில் யாராவது நன்றாகக் குறட்டைவிட்டுத் தூங்கிக்கொண்டிருந்தால் நமக்கு என்ன தோன்றும்.
சிலர்...
உறங்குபவர்களைப் பார்த்து “ இவர்கள் கொடுத்துவைத்தவர்கள்”
என்று பெருமூச்சு விடுவார்கள்.
சிலர்....
உறங்குவோரின் உறக்கத்தை கலைக்க வேண்டுமே...
ஓங்கி மிதிக்கலாமா....?
ஆஆஆஆஓஓஒஒ என்று ஏதாவது கத்தி எழுப்பலாமா..?
என்றெல்லாம் தோன்றும்.
இன்றும் நமக்குத் தோன்றும் இந்த உணர்வை அழகாகக் காட்சிப்படுத்தியுள்ளார் புலவர்.

சான்று-2


• ‘நள்ளிரவில் நான் கண்விழிக்க
உன் நினைவில் என் மெய்சிலிர்க்க
பஞ்சணையில் நீ முள் விரித்தாய்
பெண் மனதை நீ ஏன் பறித்தாய்
ஏக்கம் தீயாக ஏதோ நோயாக
காணும் கோலங்கள் யாவும் நீயாக’
கோபுர வாசலிலே என்னும் திரைப்படப் பாடலில் இடம்பெறுகிறது இப்பாடல்.
இதே உணர்வைப் பிரதிபலிக்கும் சங்கப் பாடல்...
இதோ....

கேட்டிசின் வாழி தோழி அல்கற்
பொய்வ லாளன் மெய்யுறல் மரீஇய
வாய்த்தகைப் பொய்க்கனா மருட்ட ஏற்றெழுந்து
அமளி தைவந் தனனே குவளை
வண்டுபடு மலரிற் சாஅய்த்
தமியேன் மன்ற அளியேன் யானே.

30. பாலை - தலைவி கூற்று
-கச்சிப்பேட்டு நன்னாகையார்.
(தலைவன் வரைவிடைவைத்துப் பிரிந்து சென்றிருக்கிறான். தலைவியின் ஆற்றாமை கண்ட தோழி ஏன் என்று வினவுகிறாள். அதற்குத் தலைவி “ யான் ஆற்றியிருப்பினும் தலைவன் கனவில் வந்து தொல்லை செய்கிறான் என்று கூறுகிறாள்)
நள்ளிரவில் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தேன் ஒரு கனவு!
அதில் என் தலைவன்!
நடந்தது உண்மை என்றே எண்ணினேன்....
பொய்யை மெய்போலக் கூறுவதில் வல்லவனான என் தலைவன் என்னிடம் இன்பம் நுகருவதற்காக இராக்காலத்தில் வந்து என்னைக் கட்டித்தழுவினான். அது கனவு என்பதை அறியாத நான் எழுந்து என் அருகே அவன் இருக்கிறானா..?
என்று தடவிப்பார்த்தேன்..
வண்டுகளால் உழக்கப்பட்ட குவளை மலர் போல நிலை குலைந்த நான் தனித்து வருந்தி நின்றேன்.. உறுதியாக நான் இரங்கத்தக்கவள் தான். என்று தோழியிடம் புலம்புகிறாள் ஒரு தலைவி.

சான்று-3

• இன்னொரு தலைவி..
நள்ளென் றன்றே யாமம் சொல்லவிந்
தினிதடங் கினரே மாக்கள் முனிவின்று
நனந்தலை உலகமும் துஞ்சும்
ஓர்யான் மன்ற துஞ்சா தேனே. “
6.
நெய்தல் - தலைவி கூற்று
-பதுமனார்.

தலைவனின் நினைவால் உறங்காமல்த் தவிக்கும் தலைவி
நள்ளிரவில் தன் துயரை அறியாது யாவரும் இனிது உறங்குகின்றனர். தன்னை எந்நேரமும் வைதுகொண்டிருக்கும் தாயரும் தூங்கினர். அவர்கள் தன்னைத் திட்டுவதால் மாக்கள் என்றாள்(விலங்கு) வசை மொழி கூறாது உறங்குவதால் இனிது அடங்கினர் என்றாள்.ஓர்யான் மன்றத் துஞ்சாதோளே என்றதால் தன் உயிர்த்தோழியும் தூங்கிவிட்டாள் என்பது புலனாயது. நனந்தலை உலகமும் துஞ்சும் என்றதால் உலகில் உள்ள யாவரும் இனிது உறங்கினர் என்று அறியமுடிகிறது.
இவ்வாறு பகை, நட்பு, நொதுமல் என்று யாவரும் உறங்கத் தான் மட்டும் உறங்காமல்த்தவிக்கிறேனே! என்ற ஏக்கம் இந்தப் பாடலில் தெரிகிறது.

இவ்வாறு இன்றைய திரைப்படப்பாடல்கள் பலவற்றிலும் சங்கப் பாடல்களின் தாக்கத்தைக் காணமுடிகிறது.

செவ்வாய், 8 செப்டம்பர், 2009

துன்பத்தில் இன்பம் காண........


துன்பம் வரும்போது சிரியுங்கள். அந்தத் துன்பத்தை எதிர்த்துப் போராடவல்லது அந்தச் சிரிப்பைத் தவிர வேறு எதுவும் இல்லை
(இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்துஊர்வது அஃது ஒப்பது இல்(குறள்-621)
என்பர் வள்ளுவர்.

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல் தோறும் வேதனை இருக்கும்
வந்த துன்பம் எது வென்றாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை
வாடி நின்றால் ஓடுவதில்லை


எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்“

என்பர் கண்ணதாசன்.
துன்பம் வரும் போது அழுகை தானே வரும்.
சிரிப்பு எப்படி வரும் என்கிறீர்களா..?

நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொண்டால் துன்பத்திலும் சிரிக்க முடியும்.!


நேர்மறை எண்ணங்களுக்கும் – எதிர்மறை எண்ணங்களுக்கும் இடையிலான போராட்டம் தான் நம் வாழ்க்கை.

ஒரு சின்ன கதை...

ஒரு ஊரில் ஒரு (உண்மையான) துறவி இருந்தாராம். அவருக்கென்று ஒரு குடிசை வீடு இருந்ததாம். ஒரு நாள் புயலும் மழையும் அடித்ததில் பல வீடுகளும் சேதம் அடைந்ததாம். அதில் அந்தத் துறவியின் வீடும் ஒன்றாக இருந்ததாம்.

ஒவ்வொருவரும் தம் வீடு போய்விட்டதே என்று அழுது வருந்திக்கொண்டிருந்தார்களாம்.

துறவி மட்டும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தாராம்..
ஊர்மக்களுக்கு ஒரே வியப்பு!!!!!!

அவரிடமே சென்று கேட்டார்களாம்.
ஐயா..
அடித்த புயலில் உங்க வீட்டுக் கூரையே பிய்த்துக் கொண்டு சென்றுவிட்டதே...
உங்களுக்கு வருத்தமாக இல்லையா..? என்று..

அந்தத் துறவி அவர்களிடம் கேட்டாராம்..

ஏன் வருந்த வேண்டும்...? என்று...

துன்பமான இந்த நிகழ்வுக்கு வருத்தம் வராதா என்று மீண்டும் கேட்டார்களாம்..
அதற்குத் துறவி சொன்னாராம்...

“ நான் இதுவரை நிலவை பார்த்து மகிழ வீட்டை விட்டு வெளியே செல்லவேண்டியதாயிருந்தது..
இன்று முதல் அந்தத் தொல்லை எனக்கில்லை..
இனி வீட்டுக்குள் இருந்து கொண்டே நிலவை பார்த்து மகிழ்வேன்“ என்றாராம்.

• ஒரு பெரிய மலையையே தூரத்தில் இருந்து பார்க்கும் போது சிறிய கல்போலத் தான் காட்சியளிக்கும்!
ஒரு சிறிய கல்லைக் கூட கண்ணருகில் வைத்துக் காணும் போது பெரிய மலை போலத்தான் தெரியும்.

• பணம் சம்பாதிப்பதைச் சொல்லித்தர ஆயிரம் பயிற்சி மையங்கள் உண்டு!
எப்படி வாழ வேண்டும் என்பதைச் சொல்லித் தரும் பயிற்சி மையங்கள் குறைவு!

எப்படி வாழ வேண்டும் என்பதை இலக்கியங்கள் வழி நம் முன்னோர்கள் நிறையச் சொல்லிச்சென்றுள்ளனர்.

கலித்தொகையில் ஒரு பாடல்
...

(தலைவன் பொருள் வயிற் பிரிகின்ற காலத்து “ காடு கடியவாயினும் இவ்வகைப்பட்டனவும் உள“ என்று கூறினார்.
அவை காண்டலின் வருவர், எனத் தோழிக்குக் கூறி அதற்கு நிமித்தமும் கூறி ஆற்றுவித்தது.)

தலைவன் பொருள் தேடுவதற்காப் பிரிந்து சென்றிருக்கிறான், அவன் சென்ற பாலை நிலம் மிகவும் கொடுமையானது.
தலைவனின் பிரிவுத் துன்பம் ஒரு பக்கமிருக்க,
பாலை நிலத்தின் கொடுமை இன்னொருபுறமாகத் தலைவியைத் துன்புறுத்துகிறது.

ஆயினும் தலைவி தம் தலைவன் பிரியும் போது சொல்லிச்சென்றதை எண்ணிப்பார்த்து மனதைத் தேற்றிக் கொள்கிறாள்.

தலைவன் பிரியும் போது “ காடு கொடுமையானது தான் ஆயினும் அங்கு இனிய காட்சிகள் பல உண்டு “ என்றான்.

அவன் சொன்ன காட்சிகளை எண்ணிப்பார்த்தும் நிமித்தங்களை நோக்கியும் தலைவி தன்னை ஆற்றுப்படுத்திக்கொள்கிறாள் இதுவே பாடலின் போக்கு...

இனி பாடலுக்குச் செல்வோம்...

தலைவன் பொருள் தேடச்சென்றிருக்கிறான்.
அவன் பிரிவினை ஆற்றாது தலைவி வருந்துவாளே என்று தோழி வருந்துகிறாள்..

தலைவி –
• நம்மிடம் பொருள் வேண்டி வருவோருக்கு இல்லை என்று சொல்லாது கொடுத்தல் வேண்டும்.
• பெரிய பகைகளையெல்லாம் வென்று அடிபணியாதவரை அழித்தல் வேண்டும்.
• முற்பிறப்பில் நம் இருவருக்கும் உண்டான பிணைப்பு நம்மைச் சேர்த்து வைக்கும். என்று,

வாழ்க்கைக்குப் பொருள் இன்றியமையாதது என்பதைத் தான் உணர்ந்து எனக்கும் உணர்த்திச் சென்றார் தலைவர். அவர் விரைவில் திரும்பி வருவார்.

தோழி

பொருள் தேடச்சென்ற அவர் தாம் தேடச்சென்ற பொருள் முற்றிய பின்னர் தானே திரும்பி வருவார்.

தலைவி-
இல்லை அவர் அந்நிலத்தில் இடைச்சுரத்தில் காணும் காட்சிகள், அவரை மேலும் செல்லாது திரும்பி வரச்செய்யும்.

தோழி-
அக்கொடிய நிலத்தில் அப்படியென்ன காட்சிகனைக் காண்பார்?

தலைவி-

• காடுகள் நெருப்புப் போன்ற வெம்மையினால், பாதங்கள் பொறுக்கும் அளவின்றி இருக்கும் என்றார் தலைவர்,
அக்காட்டிடத்தே, துடியினைப் போன்ற அடியினைக் கொண்ட யானைக்கன்று, தாயும் தந்தையும் உண்ணவேண்டும் என்று கருதாது சிறிதளவு உள்ள நீரையும் கலக்கும். அந்தக் கலங்கிய நீரையும், முதலில் பிடியுண்ணுமாறு ஊட்டிப் பின்னரே களிறு உண்ணும் என்றார்.
• காடுகள் இலைப் பசுமை நீக்கி சென்றோரை வருத்தும் தன்மையுடையனவாக இருக்கும் என்றார்.
அக்காட்டிலே, ஆண்புறாக்கள், தம்மீது அன்பு கொண்ட பெண்புறாக்கள் வெம்மையில் வாடக்கூடாது என்று கருதி தம் சிறகை விரித்து ஆற்றும் என்றும் உரைத்தார்.
• சூரியனின் வெம்மையால் மூங்கி்ல் வாடும்படி இருக்கும் அந்நிலத்தில் செல்வோர் மிகவும் துன்புறுவர்.
அந்நிலத்தில் கலைமான், நிழலின்றி வருந்தும் பெண்மானுக்கு தன் நிழலை அளிக்கும் என்றும் உரைத்தார்.
தோழி-
இந்தக் காட்சிகள் போதுமே...
இவற்றில் ஏதாவது ஒன்றை அவர் பார்த்தாலும், உன் நினைவு வந்து அவர் திரும்பி வந்து விடுவாரே.

தலைவி-
ஆம்! அது மட்டுமல்ல பல்லியும் நம் வீடடில் நல்ல நேரத்தில், நல்ல இடத்தில் ஒலித்தது. அவ்வொலி அவரின் வருகையை அறிப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது.எனது கண்ணும் இடப்பக்கம் துடிக்கிது இது நல்ல நிமித்தம் தானே..?

தோழி-
ஆம். தலைவர் விரைவில் திரும்பி வருவார். இந்த நிமித்தங்கள் கூட அவரின் வருகையையே சுட்டுகின்றன.




இதுவே பாடலின் பொருள்.
பாடல் இதோ........

அரிது ஆய அறன் எய்தி அருளியோர்க்கு அளித்தலும்,
பெரிது ஆய பகை வென்று பேணாரைத் தெறுதலும்,
புரிவு அமர் காதலின் புணர்ச்சியும் தரும்' எனப்
பிரிவு எண்ணிப் பொருள் வயின் சென்ற நம் காதலர்
வருவர்கொல், வயங்கு இழாஅய்! வலிப்பல், யான்; கேஎள் இனி:

'அடி தாங்கும் அளவு இன்றி, அழல் அன்ன வெம்மையால்,
கடியவே, கனம் குழாஅய்! காடு' -என்றார்; அக்காட்டுள்,
துடிஅடிக் கயம்தலை கலக்கிய சின் நீரைப்
பிடி ஊட்டிப், பின் உண்ணும் களிறு, எனவும், உரைத்தனரே;

'இன்பத்தின் இகந்து ஒரீஇ, இலை தீந்த உலவையால்,
துன்புறூஉம் தகையவே காடு' -என்றார்; அக்காட்டுள்,
அன்புகொள் மடப் பெடை அசைஇய வருத்தத்தை
மென் சிறகரால் ஆற்றும் புறவு, எனவும், உரைத்தனரே;

'கல் மிசை வேய் வாடக் கனை கதிர் தெறுதலான்,
துன்னரூஉம் தகையவே காடு' - என்றார்; அக்காட்டுள்,
இன்நிழல் இன்மையான் வருந்திய மட பிணைக்குத்
தன் நிழலைக் கொடுத்து அளிக்கும் கலை, எனவும், உரைத்தனரே.


என ஆங்கு,
இனை நலம் உடைய கானம் சென்றோர்
புனை நலம் வாட்டுநர் அல்லர்; மனை வயின்
பல்லியும் பாங்கு ஒத்து இசைத்தன;
நல்எழில் உண் கண்ணும் ஆடுமால், இடனே“


கலித்தொகை -11


இப்பாடலில்,

பாலை நிலமோ மிகவும் துன்பத்தைத் தருவது, என்பதும் உற்று நோக்கினால் மனதுள் இன்பத்தை விளைவிக்கும் காட்சிகளும் அங்கு உண்டு என்பதை உணரலாம்.
• தலைவனின் பிரிவு ஆற்றாலாகத் துன்பத்தை விளைவிப்பது ஆயினும் தலைவி வாடி நிற்கவில்லை மாறாகத் தன்னைத் தானே தேற்றிக்கொள்கிறாள். நேர்மறையான எண்ணங்களை நினைத்து தலைவர் விரைவில் திரும்பி வருவார் என்று நினைக்கிறாள்.
• பல்லி கத்துதல், தம் கண் இடப்பக்கம் துடித்தல் ஆகியன சிலருக்கு மூடத்தனமாகத் தோன்றினாலும். மனதைத் தேற்றிக்கொள்ள இது ஒரு நல்ல உத்தியாகவே தோன்றுகிறது.




இலக்கியங்கள் மனிதர்களைப் பண்படுத்தவே தோன்றின. நம் முன்னோர் இவ்விலக்கியங்களின் வழியாக அவர்தம் அனுபவங்களை நமக்குத் தந்து சென்றுள்ளனர். நம் அறிவோடு அவர்தம் அனுபவமும் சேரும் போது நம் வாழ்வு இனிக்கும். அதனால் அவ்விலக்கியங்களைப் படிக்கும் போது நம் வாழ்வில் நேரும் துன்பங்களிலும் இன்பம் காணமுடியும்.

திங்கள், 7 செப்டம்பர், 2009

நீங்கள் உயிருடன் இருக்கிறீர்களா..?



இது என்ன கேள்வி?
நாம் உயிரோடு தானே இருக்கிறோம் என்கிறீர்களா..?

சங்க இலக்கியத்தி்ல் குறுந்தொகைப் பாடலைப் படித்துப் பார்த்த பின்னர் சொல்லுங்கள்....


(தலைமகன் பொருள்வயிற் பிரிந்த வழி ஆற்றால் எனக கவன்ற தோழிக்கு, அவர் பிரிய ஆற்றேனாயினேனல்லன்; அவர் போன கானத்துத் தன்மை நினைந்து வேறுபட்டேன் என்று கிழத்தி சொன்னது.)


தோழி : தலைவர் பொருள்தேடச் சென்றுவிட்டார்....
உன்னைப் பார்த்தால் பாவமாக இருக்கிறது. அவரின் பிரிவை நீ எவ்வாறு ஆற்றுவாயோ..?

தலைவி : அவரது பிரிவைக் கூட ஒருவாறு எண்ணி ஆற்றிக்கொள்வேன்.அவர் சென்ற கானத்தை எண்ணித் தான் என் மனம் மேலும் வருந்துகிறது.

தோழி : அட! வியப்பாக இருக்கிறதே. தலைவரின் பிரிவைக் கூட ஆற்றிக்கொள்ளும் மனப்பக்குவம் உனக்கு வந்துவிட்டதா..?

தலைவி : ஆம். தலைவர் பிரிவை எண்ணி முதலில் மிகவும் வருந்தினேன். அவரோ “ உள்ளது சிதைப்போர் உளர் எனப்படார்“ என்று என்னைத் தேற்றிவிட்டார்.

தோழி : அது என்ன உள்ளது சிதைப்போர் உளர் எனப்படார்..?

தலைவி : அதாவது நம் பெற்றோர் சேர்த்துவைத்த செல்வத்தை
சிதைத்து செலவு செய்வோர் உயிரோடு உள்ளவராகக் கருதுவது நம் தமிழர் மரபில் இல்லையே! அதுதான்..

தோழி : நம் பெற்றோர் சேர்த்துவைத்த செல்வத்தை செலவு செய்வதற்கு நமக்குத் தானே உரிமையிருக்கிறது. நாம் செலவு செய்யாவிட்டால் வேறு யார் அந்தச் செல்வத்தைச் செலவு செய்வது....?

தலைவி : நம் பெற்றோர் சேர்த்த செல்வத்தை நாம் செலவு செய்யும் போது, நமக்கு உழைக்கும் வாய்ப்பு இல்லாது போகிறது. மேலும் அந்த செல்வத்தின் மதிப்பை நாம் உணராமல்ப் போகிறோம். அதனால் தான் நம் முன்னோர்கள் நாம் செல்வத்தின் மதிப்பை நன்கு உணர்ந்து கொள்ளவேண்டும் என்று விரும்பி “ உள்ளது சிதைப்போர் உளர் எனப்படார்“ என்று சொல்லிச்சென்றனர்.

தோழி : அட!

தலைவி : பெற்றோர் சேர்த்த செல்வத்தைச் செலவு செய்வோர் உயிருள்ளவராக மதிகக்கப்பட மாட்டார்கள் என்பதையும்,
பொருள் இல்வாழ்க்கைக்கு அடிப்படைத்தேவை என்பதையும்,
பொருளின்றி வாழ்வது இரந்து உயிர்வாழ்வதை விட இழிவானது என்பதையும் தலைவர் சொன்னவுடன் நான் ஒருவாறு அவரின் பிரிவைத் தாங்கிக்கொண்டேன்
..

தோழி : நம் முன்னோரின் உயர்ந்த கொள்கையையும், அதை மதித்த நம் தலைவரையும், தலைவனின் எண்ணத்துக்கு மதிப்பளித்த உன்னையும் எண்ணும் போது மிகவும் பெருமையாகவுள்ளது.!

தலைவி : எனது கவலையெல்லாம் அவர் சென்ற வழியை எண்ணித்தான்..?

தோழி : ஆம்.! கொடுமையான நிலம் தான் பாலை.
குடிக்க தண்ணீர் கூட கிடைக்காதே..

தலைவி : ஆம்! எமனைப் போன்ற கொடிய வேற்படையை உடைய மறவர், வழிச் செல்வோரைக் கொல்வர். அவ்வாறு இறந்த வழிச்செல்வோர் உடல்கள் மிக்க நாற்றம் உண்டாகும் வரை உண்பதற்காகப் பருந்துகள் காத்திருக்கும். இத்தகையை, நெடிய, பழமையான இடையீடுகள் பலவற்றையும் கொண்ட நீரில்லாத நிலம் பாலை..!
அங்கு சென்ற நம் தலைவர் நல்லபடியாகத் திரும்பி வர வேண்டும்.

தோழி : அஞ்சாதே தலைவர் நல்லபடியாகத் திரும்பி வருவார்.



பாடலின் பொருள் இதுதான். பாடல் இதோ,
283. பாலை - தலைவி கூற்று

உள்ளது சிதைப்போர் உளரெனப் படாஅர்
இல்லோர் வாழ்க்கை இரவினும் இளிவெனச்
சொல்லிய வன்மை தௌியக் காட்டிச்
சென்றனர் வாழி தோழி யென்றும்
கூற்றத் தன்ன கொலைவேல் மறவர்
ஆற்றிருந் தல்கி வழங்குநர்ச் செகுத்த
படுமுடை பருந்துபார்த் திருக்கும்
நெடுமூ திடைய நீரில் ஆறே.



-பாலை பாடிய பெருங்கடுங்கோ



இப்பாடல் வழியாகப் பல அரிய கருத்துக்களை அறிந்து கொள்ள முடிகிறது.
o பகுத்துண்டு வாழ்தல் வேண்டும்.
o நம் முன்னோர் சேர்த்துத் தந்த பொருள்களை போற்றிக்காப்பது ஒன்றே நம் கடன். அதனைச் செலவு செய்ய நமக்கு உரிமை கிடையாது. அவ்வாறு செலவு செய்தால் நாம் உயிருள்ளவராக மதிக்கப்பட மாட்டோம்.
o பொருளின்றி வாழ்தல் இரந்து வாழ்தலை விடவும் இழிவானது.
o நாம் உழைத்து,அதில் கிடைக்கும் செல்வத்தையே நாம் பயன்படுத்தி, அடுத்தவருக்கும் உதவி செய்யப் பயன்படுத்த வேண்டும்.
o பாலை நிலம் மிகவும் கொடுமையானது அங்கு வழிப்பறி செய்யும் கள்வர் வழிச்செல்வோரைக் கொன்று அவர்களின் பொருளை வவ்வி வாழ்வதை இயல்பாகக் கொண்டிருந்தனர்.


போன்ற பல கருத்துக்களை இப்பாடல் வழி அறிந்து கொள்ள முடிகிறது. இந்தப் பாடலைப் படிக்கும் போது நான் உயிருடன் இருக்கிறேனா?
என்று எண்ணிப் பார்க்கத்தோன்றியது.
உங்களுக்கு..?

நட்சத்திர இடுகை.




தமிழ் மணம் திரட்டியில் இந்த வார நட்சத்திரமாகத் தேர்வு செய்யப்பட்டமைக்காக மிகவும் மகிழ்கிறேன்.
பெருமிதம் கொள்கிறேன்
உவகையடைகிறேன்.
• வலைப்பதிவில் எழுதத் தொடங்கிய காலங்களில் எனது பதிவை எந்தத் திரட்டியிலும் இணைக்கவில்லை. “தமிழ்மணம்“ என்னும் திரட்டி குறித்த அறிமுகமும், பயன்பாடுகளும் குறித்து தமிழ்க்கொங்கு ஐயா கணேசன் அவர்களின் வாயிலாகவே அறிந்தேன். அவர்களை இவ்வேளையில் நன்றியுடன் எண்ணிப்பார்க்கிறேன்.
• எனது பதிவை தமிழ்மணத்தில் இணைத்தபிறகு பல நாடுகளிலிருந்தும் பார்வையாளர்கள் வந்தனர். இதுவரை 77 நாடுகளிலிருந்து பார்வையாளர்கள் வருகை தந்துள்ளனர். தமிழ்மணம் வாயிலாக இதுவரை 609 பார்வையாளர்கள் வந்துள்ளனர். ஒரே நாளில் 30 நாடுகளிலிருந்து பார்வையாளர்கள் எனது பதிவைப் பார்வையிட்டனர். அப்போது தான் நான் தமிழ்மணம் திரட்டியின் மதிப்பை அறிந்தேன். அன்றுமுதல் தமிழ்மணம் திரட்டியைப் பெருமதிப்புடன் பார்க்க ஆரம்பித்தேன். தமிழ்மணத்தில் எனது பதிவு இடம்பெறுவதையும், மறுமொழிப்பெட்டியில் எனது பதிவு வெளிவருவதையும் பார்த்து மகிழ்ந்தேன். இவ்வேளையில் என் பதிவை மதித்து என்னை இந்தவார நட்சத்திரமாக்கியுள்ளமை எனது எழுத்துக்களை ஊக்குவிப்பதாகவும், என்னை மேலும் எழுதத் தூண்டுவதாகவும் அமைகிறது.
• நான் வலைப்பதிவு எழுத ஆரம்பித்து இரண்டு ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. திரும்பிப் பார்க்கிறேன். 120 இடுகைகள் 660 கருத்துரைகள் பல்வேறு இணையதளங்களில் 20 கட்டுரைகள் ஆகியன மட்டுமே எஞ்சி நிற்கின்றன. சங்க இலக்கியம் , இணையதளத் தொழில்நுட்பம் ஆகிய பொருள்களில் நான் எழுதிய கட்டுரைகளை உலகத்தமிழர்களுக்குக் கொண்டு சென்றதில் தமிழ்மணம் திரட்டிக்குப் பெரும்பங்கு உண்டு. இத்திரட்டி வாயிலாக வந்த பார்வையாளர்கள் எனக்களித்த கருத்துரைகள் எனது எழுத்துக்களை மேலும் செம்மைப்படுத்திக்கொள்ள அடிப்படையாக அமைந்தன.
• திரட்டியில் இணைத்தல், சமர்ப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களைத் தமிழ்மணம் குழுவினர் உடனுக்குடன் மின்னஞ்சல் வழியே தீர்த்துவைத்தனர். அதனால் இவ்விணையதளத்தின் மீது நான் கொண்ட மதிப் அதிகரித்தது.
• பிற திரட்டிகளுக்கு முன்னோடியாகவும், பல புதுமைகளைப் புகுத்திவரும் திரட்டியாகவும், குறிப்பாகத் தமிழுக்கு முதன்மை தரும் திரட்டியாகவும் திகழும் தமிழ்மணத்தில் என்னை இந்த வார நட்சத்திரமாக தேர்வு செய்தமைக்குக் குழுவினருக்கு மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

செவ்வாய், 1 செப்டம்பர், 2009

தீம்புளிப்பாகர்




கணவன் – என்ன பாயசம் கிண்ட சொன்னா களி கிண்டி வைச்சிருக்க.
மனைவி – நான் என்னங்க செய்வேன்..!
உங்க பையன் தான் அணில் சேமியா வாங்கி வரச் சொன்னா வேற ஏதோ சேமியா வாங்கி வந்துட்டான் அதாங்க இப்படி ஆயிருச்சு..

என்ற உரையாடலை தமிழக வானொலிகளில் யாவரும் கேட்டிருப்பீர்கள்..

மனைவி – நீதிபதி ஐயா இவருக்கிட்ட இருந்து எனக்கு விவாகரத்து வாங்கிக் கொடுத்திருக்கய்யா...

நீதிபதி – ஏம்மா...?

மனைவி – இவரு நேற்று என்னை விசம் வைச்சுக் கொல்லப் பார்த்தாருய்யா....

நீதிபதி – ஏம்பா...? உன் மனைவி சொல்றது உண்மையா..?

கணவன் – நீங்களே சொல்லுங்கையா..?
இவ மட்டும் என்ன ரசம் வைச்சுக் கொல்லப் பார்த்தா..
அது மட்டும் சரியா..?

இது நகைச்சுவை மட்டுமல்ல பல வீடுகளில் இன்று இது போன்ற காட்சிகள் நடைபெற்று வருகின்றது என்பது உண்மைதான்..


ஒரு நோயாளியை மருந்து பாதி குணப்படுத்துகிறது என்றால்
அந்த மருந்து தன்னைக் குணப்படுத்தும் என்ற நம்பிக்கைதான் மீதி நோயைக் குணப்படுத்துகிறது.
அது போல உணவு சுமாராக இருந்தாலும் ,

அதை அன்புடன் பரிமாறும் போது அதன் சுவை மேலும் அதிகரிக்கும்.“

உறவுகளுக்குள் அன்பு குறைந்து போனதால் உணவின் சுவையும் குறைந்து போனது. அன்பு
குறைந்து போனதற்கு ஆயிரம் காரணங்களைச் சொல்லலாம் ஆயினும் பணத்தை மட்டுமே இலக்காகக் கொண்ட எந்திரத்தனமான வாழ்க்கையும் ஒரு முக்கியமான காரணமாக அமைகிறது.
எந்திரம் போல நாம் வாழ்வதால் பாராட்டத் தவறிவிடுகிறோம்.

பாயசத்தைக் களி போலக் கிண்டிய மனைவியிடம்...
கணவன் – பரவாயில்லையே இது கூட நன்றாகத் தான் உள்ளது. புதுவிதமான சுவையுடன் உள்ளது என்று சொன்னால் மனைவி அடுத்தமுறை பாயசம் செய்யும் போது நன்றாகச் செய்ய முயற்சியாவது செய்வாள்..

பாராட்டு ஒரு செயலை மேன்மைப்படுத்துகிறது இது உளவியல் ஒப்பிய உண்மை.


சங்க இலக்கியத்தில் ஒரு காட்சி.

(கடி நகர் சென்ற செவிலித்தாய் நற்றாய்க்கு உரைத்தது.)

தலைவி இல்லறம் நடத்தும் சிறப்பினை, நேரில் கண்டறிந்த செவிலி நற்றாய்க்கு உரைப்பதாக இப்பாடல் அமைகிறது.

தலைவி தலைவனுக்காக திறமையாக உணவு சமைக்கிறாள். அதனை உண்ட தலைவன் தலைவியை மனம் நிறையப் பாராட்டுகிறான். தலைவன் தன்னைப் பாராட்டுகிறான் என்பதால் தலைவி செருக்குக் கொள்ளவில்லை. மாறாக அவன் பாராட்டை மனதிற்குள் எண்ணி மகிழ்கிறாள். இக்காட்சியைக் கண்ட செவிலி, உவந்து நற்றாயிடம் தெரிவிக்கிறாள். பாடல் இதோ...

முளி தயிர் பிசைந்த காந்தள் மெல் விரல்,
கழுவுறு கலிங்கம், கழாஅது, உடீஇ,
குவளை உண்கண் குய்ப்புகை கழுமத்
தான் துழந்து அட்ட தீம் புளிப் பாகர்
இனிது எனக் கணவன் உண்டலின்,
நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே.

(கூடலூர் கிழார்,167. குறுந்தொகை.)


பாடலின் பொருள்,

நன்றாகக் காய்ச்சிய பாலை, உறை ஊற்றிப் பெற்ற கட்டித் தயிரை, காந்தள் மலரைப் போன்ற மெல்லிய விரல்களால் பிசைகிறாள், அவ்விரல்களால் தான் உடுத்தியிருந்த தூய ஆடையில் துடைத்துக் கொண்டாள். அதனால் அழுக்கான அவ்வுடையைத் துடைக்காமல் உடுத்தியிருந்தாள்.

தாளிக்கத் தெரியாமல் தாளிக்கிறாள் அதனால் குய்யென்னும் புகை அவள் கண்களில் படிகிறது.
இவ்வாறு அரிது முயன்று புளிப்புச் சுவையையுடைய குழம்பினைத் தானே சமைத்தாள்.

தான் செய்த தீம்புளிப்பாகர் (பாகற்காய் குழம்பு) என்னும் குழம்பைத் தன் கணவனுக்கு இட்டு அவன் உண்பதைப் பார்த்து மகிழ்ந்தாள்.

உணவின் சுவையோடு அவளின் முயற்சியையும் நன்கு உணர்ந்த தலைவன் மகிழ்ந்து “இனிது“ என்று பாராட்டுகிறான்.
தலைவன் பாராட்டிவிட்டானே என்று தலைவி செருக்குக் கொள்ளவில்லை. அகத்தில் மனமகிழ்வு கொண்டாள் என்பதை அவளின் ஒளிபொருந்திய நெற்றியே வெளிப்படுத்தியது. அதுவும் உளவியலை நன்கு அறிந்தவர்கள் மட்டுமே தலைவியின் மனவுணர்வை அறிந்து கொள்ளும் வகையில் இருந்தது.

தலைவி வீட்டில் இருக்கும் போது எந்த வேலையும் செய்யாது செல்லமாக வளர்ந்தவள். திருமணத்துக்குப் பின்பு தன் கணவனுக்காக அரிது முயன்று உணவு சமைப்பதும், அதனைத் தலைவன் உண்டு இனிது என்று மகிழ்ந்து பாராட்டுவதும் கண்ட செவிலி, பெருமகிழ்ச்சி கொண்டாள். அதனை நற்றாயிடம் தெரிவித்தாள். இதுவே பாடலின் பொருள்.

இன்றைய சூழலில் அவசர வாழ்க்கையில், அவசர உணவு முறைக்கு மாறிவிட்ட நம்மில் சிலருக்கு,
சமைத்தல் என்பதும் – அதுவும்
மனைவி சமைத்தல் என்பதும் – அதுவும்
சுவையாக சமைத்தல் என்பதும்
வியப்பான ஒன்றாகவே இருக்கும்.
மாறாக சுவை குறைவான உணவும் அன்புடன் பரிமாறப்படும் போது சுவை கூடும் என்பதும், பாராட்டும் போது உணவின் தரம் மேம்படும் என்பதும் அவர்கள் உணர்ந்தால் ,
உணவு விசமாகாது!!
விசம் உணவாகும்.!!!