Tuesday, September 13, 2011

அஃறிணை பேசுகிறேன்..மழையோடு தன்னை
நிறம் மாற்றிக் கொள்ளும்
மண்ணுக்குத் தெரிந்திருக்கிறது
சேர்ந்து வாழ வேண்டும் என்று..

நிலத்தை விட்டுச் சென்றாலும்
மீண்டும் நிலத்தையே சேரும்
நீருக்குத் தெரிந்திருக்கிறது
நன்றி மறக்கக் கூடாது என்று..

தன்னோடு சேர்ந்த எதையும்
தனதாக்கும் தன்மைகொண்ட
நெருப்புக்குத் தெரிந்திருக்கிறது
அச்சமின்றி வாழவேண்டும் என்று..

இளம் தென்றலாகவும்
பெரும் புயலாகவும் வீசும்
காற்றுக்குத் தெரிந்திருக்கிறது
சாதிப் பாகுபாடு பார்க்கக்கூடாது என்று..

எங்கும் அலைந்து திரியும்
மேகங்களுக்குத் தெரிந்திருக்கிறது
இவ்வுலகில் எதுமே நிலையில்லாதது என்று..

பூத்துச் சிரிக்கும்
மலருக்குத் தெரிந்திருக்கிறது
இந்த மணித்துளி மீண்டும் வராது – அதனால்
வாழும்போதே சிரித்துக்கொள்ள வேண்டும் என்று..

ஊர்ந்து செல்லும் எறும்புக்குத்
தெரிந்திருக்கிறது..
சோம்பல் என்பது நம்மைச் சுற்றி
நாமே கட்டிக்கொள்ளும் கல்லறை என்று...


பறந்து திரியும் பறவைக்குத்
தெரிந்திருக்கிறது நேற்றைய உணவும்
நாளைய உணவும் இன்றைய பசியைத் தீர்க்காது என்று..

சண்டையிட்டாலும்
தன் கூட்டத்தைத் தேடும்
விலங்குகளுக்குத் தெரிந்திருக்கிறது
இனத்தோடு வாழவேண்டும் என்று..

எல்லாம் தெரிந்தாலும்
எதையுமே பின்பற்ற முடியாததால் இன்றுமுதல்
நான் அஃறிணை!!

சிந்திக்கத் தெரியாவிட்டாலும்
நிலம், நீர், தீ, காற்று, வான், தாவரங்கள், ஊர்வன, பறப்பன, விலங்குகள் ஆகியன இன்றுமுதல் என் இலக்கணப்படி உயர்திணைகள்!!


இப்ப சொல்லுங்க நீங்க

உயர்திணையா? அஃறிணையா?

34 comments:

 1. அருமை. உயர்திணையா... அஃறிணையா... காற்றாய, நீராய், நெருப்பாய், மேகமாய், பறவையாய், விலங்காய் - வாழ்ந்து பார்த்து தான் சொல்ல வேண்டும்.

  ReplyDelete
 2. என்னவோர் சிந்தனை.... அதைக் கவிதையாய் வடித்த விதம்.... ஹேட்ஸ் ஆஃப் முனைவரே....

  ReplyDelete
 3. அழகான கவிதைக்குள் ஆழ்ந்த சிந்தனை! சோம்பல் என்பது நம்மைச் சுற்றி நாமே கட்டிக்கொள்ளும் கல்லறை. இதைவிடப் பொருத்தமாய் வேறெந்த உவமையும் இருக்கமுடியாது. பறவைகள் அறிந்த செய்தியாய் பறைந்தது மிக அருமை. ஒவ்வொரு அஃறிணையும் உணர்த்தும் வாழ்வியலை அழகிய கவிதையாக்கி அகம் உணர்த்தும் உம்மை அஃறிணையென்பதும் முறையோ? உங்கள் தயவால் இவற்றில் ஓரளவேனும் கைக்கொண்டு வாழ்ந்து உயர்வோம் உயர்திணையாய்!

  வாழ்க்கையை வாழ்வதைப் பொறுத்தது அஃறிணையும் உயர்திணையும். வெறுமனே வேடிக்கைப் பார்த்திருந்தால் அதன் பெயர் வாழ்க்கையா? கேள்வி கேட்டு சிந்திக்கவைக்கிறீர்கள். சுய அலசலுக்கு ஓர் முன்னோடி. நன்றி முனைவரே.

  ReplyDelete
 4. சிந்தனையில் மனிதர்கள் உயர்தினைதான். செயல்
  என்று வரும் போது தான் அறினையாகிறான்.

  ReplyDelete
 5. //
  இளம் தென்றலாகவும்
  பெரும் புயலாகவும் வீசும்
  காற்றுக்குத் தெரிந்திருக்கிறது
  சாதிப் பாகுபாடு பார்க்கக்கூடாது என்று..
  //

  ஆனால் மனிதன் இன்னும் சாதி பார்கிறான்

  ReplyDelete
 6. //எல்லாம் தெரிந்தாலும்
  எதையுமே பின்பற்ற முடியாததால் இன்றுமுதல்
  நான் அஃறிணை!!//
  நீங்க மட்டுமல்ல நாங்களும்தான்..

  ReplyDelete
 7. அடித்துச் சொல்கிறேன் நான் உயர்திணை.. confidence boss

  ReplyDelete
 8. கவிதையும் நன்றே
  கேள்வியும் நன்றே
  கற்பனை அன்றே
  காண்பதும் இன்றே
  புவிதனில் நடப்பன
  புகன்றவை படைப்பென
  செவிவழி கேட்டிட
  செவ்விய கேள்விகள்
  சீர்மிகு சிந்தனை
  செப்பினீர் முனைவரே
  உண்மை உண்மை
  ஒவ்வொரு வரியும்
  திண்மை ஆயின்
  அஃறிணையும் நாமே

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 9. எத்திணையும் இல்லை,வெறும் திண்ணை!

  ReplyDelete
 10. முனைவரே அருமையான கவிதை, இன்று தான் முதன்முறையாக இலக்கிய மனம் வீசும் உங்கள் வலைபக்கத்திற்கு வருகிறேன்!!

  தொடர்வேன் இனியும்!!

  ReplyDelete
 11. சரியாகச் சொன்னால் அதாக முயன்று கொண்டிருக்கிற இது
  மனம் தொட்ட பதிவு.த.ம.10

  ReplyDelete
 12. சிந்தனை வரிகள்...
  படிப்பவரை சிந்திக்க தூண்டும் வரிகள்....

  ஓரறிவு ஐந்தறிவு அப்படின்னு நாம நினைக்கும் பக்‌ஷிகள், விலங்குகள் இவையெல்லாம் நமக்கு பாடம் கற்பித்துவிட்டது உங்களின் இந்த கவிதை வரிகள் மூலமாக...

  நிலம் நீர் காற்று நமக்கு எப்படி எல்லாம் வளத்தை அளிக்கிறது.. மாறாக நாம இயற்கையை அழிப்பதில் முன்னோடியாக நிற்கிறோம்...

  மனிதன் எப்படி இருந்தால் சிறப்புறுவான் என்று அருமையாக சொல்லவைத்த வரிகள் இவை... இவை இனி அக்றிணையாக எப்படி என்னால் எடுக்கமுடியும்? மனிதன் ஆறறிவு படைத்தவன் சிரிக்க முடிந்தவன் சிரிக்க வைப்பவன் சிந்தித்து செயல்படுபவன் சிந்திக்கவைப்பவன் இப்படி மனிதனை பலவிதமாக உயர்த்தி வைத்திருக்கிறோம்.. ஆனால் மனிதனோ தன் கீழ்த்தரமான செயல்களால் குறிப்பிட்டுள்ள இவை எல்லாவற்றையும் விட தன் தரம் தாழ்ந்து உயர்திணையில் இருந்து அஃறிணையாகிவிடுகிறான்...

  மனிதன் போற்றப்படுவதும் தூற்றப்படுவதும் தன் செயல்களாலும் வார்த்தைகளாலும் மட்டுமே என்பதை நச் நு இங்கே கவிதை வரிகளால் அசத்தலா சொல்லிட்டீங்கப்பா...

  அன்பு வாழ்த்துகள் குணசீலா...

  ReplyDelete
 13. அற்புதம். மனிதன் ஐந்தறிவுள்ளவனாகி விட்டான். பறவைகள் எமக்கு ஆசான்கள். நிச்சயமாக நாம் ஆறறிவு உள்ளவர்கள் என்று நாம் தானே சொல்லுகின்றோம். பறவைகள், விலங்குகள் எம்மைப் பற்றி என்ன விளக்கம் வைத்திருக்கின்றனவோ? வாயில்லா ஜீவராசிகள் மௌனம் கலைத்தால் எப்படியெல்லாம் எமது குட்டு வெளிப்படும் என்று எமக்கே தெரியாது. வாழ்த்துகள்

  ReplyDelete
 14. //இப்ப சொல்லுங்க நீங்க

  உயர்திணையா? அஃறிணையா?//

  இதுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை..

  உங்கள் கவிதை மிக அருமை,,

  ReplyDelete
 15. நல்ல வாழ்க்கைக்கான சிந்தனையை தூண்டும் அருமையான கவிதை...

  வாழ்த்துகள் நண்பரே...

  ReplyDelete
 16. எல்லாம் தெரிந்தாலும்
  எதையுமே பின்பற்ற முடியாததால் இன்றுமுதல்
  நான் அஃறிணை!!

  ReplyDelete
 17. //சிந்திக்கத் தெரியாவிட்டாலும்
  நிலம், நீர், தீ, காற்று, வான், தாவரங்கள், ஊர்வன, பறப்பன, விலங்குகள் ஆகியன இன்றுமுதல் என் இலக்கணப்படி உயர்திணைகள்!!//

  ஒவ்வொருவருக்கும் உண்மை உணர்த்தும் வரிகள் முனைவர் அவர்களே.

  நன்றியுடன்
  சம்பத்குமார்

  ReplyDelete
 18. முனைவர் ஆ.மணிSeptember 14, 2011 at 9:35 PM

  சிந்திக்க்க வேண்டிய செய்தி. நன்று.

  ReplyDelete
 19. //எல்லாம் தெரிந்தாலும்
  எதையுமே பின்பற்ற முடியாததால் இன்றுமுதல்
  நான் அஃறிணை!!//
  நீங்க மட்டுமல்ல நாங்களும்தான்..

  ReplyDelete
 20. அன்புநிறை முனைவரே,
  இரண்டு நாட்களாக விமானப் பயணத்தில் இருந்ததால்
  என்னால் இங்கே வரமுடியவில்லை.

  இன்றைய பதிவு...
  மனிதனை மனிதனாக்கச் செய்யும் அனைத்துமே
  இங்கே தோற்றுபோய் இதோ ஐந்தறிவுக்கும் கீழுள்ளவைஎல்லாம்
  உயர்திணை ஆகிவிட
  நாமோ இன்று அஃறிணையாய்

  சிந்திக்க வேண்டிய அழகிய கருத்து சுமந்து வந்த பதிவு

  அன்பு முனைவரே
  என் கடைசி பதிவுக்கான உங்கள் கருத்தை எதிர்பார்த்தேன்
  உங்களை அங்கெ அன்புடன் அழைக்கிறேன்.

  http://ilavenirkaalam.blogspot.com/2011/09/blog-post_13.html

  ReplyDelete
 21. னல்ல சிந்தனை..னல்ல பதிவு

  ReplyDelete
 22. பறந்து திரியும் பறவைக்குத்
  தெரிந்திருக்கிறது நேற்றைய உணவும்
  நாளைய உணவும் இன்றைய பசியைத் தீர்க்காது என்று..
  அருமையான வரிகள் . . .அருமையான கவிதை. . .

  ReplyDelete
 23. உங்களின் அறிவுக்கு அளவே இல்லை நண்பரே

  ReplyDelete
 24. கூடன்குளம் அணு உலைக்கு எதிரான இந்த பதிவையும் படிங்க

  4-வதுநாள் உண்ணாவிரதம்.127 உயிர்களை காப்பாற்றுங்கள்!!!

  ReplyDelete
 25. வருகைக்கு நன்றி நண்டு
  நன்றி தமிழ் உதயம்
  மகிழ்ச்சி வெங்கட்
  நன்றி கீதா.

  ReplyDelete
 26. அழகாகச் சொன்னீர்கள் மரியம்மாள்
  உண்மைதான் இராஜா.
  தன்மதிப்பீடு செய்துகொண்டமைக்கு மகிழ்சி இராம்வி.
  மகிழ்ச்சி சூர்யஜீவா
  தன்மதிப்பீடு செய்துகொண்டமைக்கு நன்றிகள் புலவரே

  ReplyDelete
 27. தங்கள் தொடர்வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றிகள் மஞ்சு.

  உண்மைதான் சந்திரகௌரி.
  நன்றி ரியாஷ்
  மகிழ்ச்சி இராஜா

  ReplyDelete
 28. மதிப்பீட்டிற்கு நன்றி சபரி
  கருத்துரைக்கு நன்றி சம்பத்
  வருகைக்கு நன்றி முனைவர் மணி
  புரிதலுக்கு நன்றி மாயஉலகம்
  கருத்துரைக்கு நன்றி மகேந்திரன்

  ReplyDelete
 29. வருகைக்கு நன்றி சமந்தா
  கருத்துரைக்கு நன்றி பிரணவன்
  கருத்துரைக்கு நன்றி சதீஷ்

  ReplyDelete
 30. மிக பொருத்தமான வரிகளை பயன்படுதிருக்கீங்க
  யார் படித்தாலும் ஒரு நிமிடமாவது சிந்திக்க வைக்கிற வரிகள்
  அனால் ஒருவேளை ஆறறிவு இருந்தால் இயற்கையும்/ விலங்குகளும் மனிதனை போல் தான் நடந்து கொள்ளுமோ என்னமோ?

  ReplyDelete
 31. இருக்கலாம் என்எஸ்கே..

  ஆழ்ந்த புரிதலுக்கும்
  கருத்துரைக்கும் நன்றிகள்.

  ReplyDelete